எப்பொழுது சிங்கள தேசத்துடன் சேர்ந்து வாழமுடியாதென்று தமிழர்கள் தீர்மானித்தார்களோ அல்லது எப்பொழுது சிங்களதேசம் தமிழர்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆழவும் அழிக்கவும் ஆரம்பித்ததோ அப்பொழுதிலிருந்தே இந்த நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை ஈழவிடுதலையை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனினதும் இதயங்கள் சுதந்திர தாகத்தோடுதான் துடித்துக்கொண்டிருக்கின்றன. இதை ஆரம்பித்து வைத்தது தமிழர்கள் அல்ல சிங்களவர்கள். இப்போது சுமார் அறுபது வருடங்களைத்தாண்டி முழுமையான அறவளி அரசியல் போராட்டத்தையும் ஆயுதப்போராட்டத்தையும் கண்டு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
எல்லாப் பாதைகளும் றோமுக்கே என்றது போல எல்லாச் செயற்பாடுகளும் சுதந்திர தமிழீழம் நோக்கிய தாக அமையவேண்டியிருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது தனிய ஒரு தேசத்தின் விடுதலைக்காண போராட்டம் மட்டுமல்ல. ஒரு தொண்மை மிக்க இனத்தின் கௌரவத்திற்கான போராட்டம். மூத்த மொழிகளில் ஒன்றினது இருப்பிற்கான போராட்டம். ஐனநாயக முகமூடி தரித்திருக்கும் பல அரச பயங்கரவாதங்களை அம்பலப்படுத்தும் போராட்டம். சட்டம் மனிதவுரிமை மனிதநேயம் சிறுவர் உரிமையென முழக்கமிடுவோரின் மனச்சாட்சிகளை தட்டிக்கேட்கும் போராட்டம் என பல பரிமாணம் பெற்றுத் தொடர்கின்றது.
ஈழவிடுதலைப் போராட்டத்தின் முக்கிய பங்காளிகள் தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் ஈழத்தமிழர்களே ஆனாலும் இதில் உலகின் எல்லாத்திசைகளிலும் வாழும் தமிழர்களிற்கும் பொறுப்பு உண்டு. உண்மையான பல்லின மனித உரிமை ஆர்வலர்களிற்கு கரிசனை உண்டு.
சிக்கலடைந்திருக்கும் உலக பொருளாதார நலன்களிலும் பன்முகப்பட்டுவரும் சமூக கலாச்சார பின்னணியிலும் தமிழின எதிரிகளின் திட்டமிட்ட நடவடிக்கைகளினாலும் தமிழினம் விடுதலைப்பயணத்தில் உலகில் எந்தவொரு இனமும் சந்தித்திராத சவாலை சந்திக்கவேண்டியிருக்கின்றது. உலகிற்கு புதியதொரு வராலாற்றையும் பல பாடங்களையும் கற்பிக்கவேண்டிய பொறுப்பை காலம் தமிழர் கைகளில் நம்பி ஒப்படைத்திருக்கின்றது.
“ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு பூர்வாங்கத்திட்டமோ குறிப்பிட்ட கால எல்லையோ இருக்கமுடியாது”. துளிநிலம் கூட இல்லாத யூத இனம் சுமார் முன்னூறு வருடங்கள் போராடி தங்களுக்கான தாயகத்தை உருவாக்கினார்கள் என்பது வரலாறு. ஆனால் தேவையேற்படின் ஐந்நூறு வருடங்கள் வேண்டுமானாலும் போராடி தமது தாயகத்தை மீட்பார்கள் என்பது, தமிழ் இனம் இந்த உலகத்திற்கு சொல்லவேண்டிய அவசியமான அவசரமான செய்தி.
இங்கு ஐநூறு வருடங்கள் வேண்டுமானாலும் என்று சொல்வது அத்தகைய மனவலிமையையும் தூரநோக்கையும் குறிப்பிடுவதற்கேயாகும். ஏனெனில் இலக்கு தெளிவாகத் தெரியும் விடுதலைப்பயணத்தில் இருள் என்று ஒன்று இருக்கவே முடியாது. இருப்பின் அதன் பெயர் குறைந்த வெளிச்சமே.
ஒரு வியட்னாமிய இராணுவத்தளபதியம் அமெரிக்க இராணுவத்தளபதியும் போரிற்குப் பின்னர் ஒருமுறை சந்தித்துக்கொண்டபொழுது “நடைபெற்ற யுத்தத்தில் எல்லாம் நாங்கள் தான் வென்றோம்” என கொஞ்சம் ஆணவத்தோடு கூறினார் அந்த அமெரிக்கத் தளபதி. அப்போது “யுத்தங்களில் நீங்கள் வென்றது உண்மை ஆனால் வியட்னாம் அமெரிக்கா யுத்தத்தில் வியட்னாம் தானே வென்றது” என்று நிதானமாக கூறினார் அந்த வியட்னாமிய இராணுவத்தளபதி.
இன்றைய நிலையில் இந்த உரையாடல் முக்கியமான பல செய்திகளைத் தமிழினத்திற்குச் சொல்லி நிற்கின்றது. எத்தனை யுத்தங்களில் எங்களைத் தோற்கடித்தாலும் தமிழீழத்திற்கான யுத்தத்தில் இறுதியில் வெல்லவேண்டியது விடுதலைக்காகாப் போராடும் நாங்களே. அதற்கு ஆட்பலத்திற்கும் ஆயுத பலத்திற்கும் அப்பால் நிறைந்த மனவலிமை எமக்கு வேண்டும். ஒவ்வொரு தமிழனும் தன்னளவில் தன் தேசத்திற்கு தான் என்ன செய்யப்போகின்றான் என்ற தெளிந்த சிந்தனை வேண்டும்.
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஒரு அமெரிக்க இராணுவத்தளபதி பதிவு செய்கின்றார். ஒரு வியட்னாமிய போராளியை கைது செய்து கட்டி வைத்து சித்திரவதை செய்து கொண்டிருக்கின்றார். முகத்தில் பலமாக அடித்து விட்டுக் கேட்கின்றார் “இப்ப எப்படி இருக்கின்றது உன்னுடைய சுதந்திரம்” என்று. அதற்கு “நீ அடித்தது வலிக்கிறது ஆனாலும் சுதந்திரம் இனிப்பாய்தான் இருக்கின்றது” என்கிறான் அந்தப் போராளி. கோபமடைந்த தளபதி மீண்டும் பலமாக முகத்தில் தாக்க பற்கள் எல்லாம் நிலத்தில் விழுந்து இரத்தம் வழிந்தோடும் நிலையில் அதே கேள்வியை மீண்டும் கேட்கின்றான். அதற்கு “இப்போது முன்பைவிட வலிக்கின்றது. ஆனாலும் எனது தாய்நாட்டின் சுதந்திரம் என்பது எனக்கு இனிப்பாய்த்தான் இருக்கின்றது” என்கின்றான் அந்தப் போராளி. இப்போது மிகவும் கோபமடைந்த இராணுவ அதிகாரி அவனை கடுமையாகச் சித்திரவதை செய்துவிட்டு நிறைய பணமும் பொருளும் தருவதாயும் காட்டித்தரும்படியும் கேட்கின்றான். அதற்கு அவன் “இந்த அற்ப ஆசைகளுக்கெல்லாம் ஆசைப்பட்டு என்னுடைய தாய்மண்ணைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்” என்கின்றான். இப்போது கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற இராணுவ அதிகாரி கெட்டவார்த்தைகளால் திட்டிவிட்டு “இப்போது உண்ணைச் சுடப்போகின்றேன் அநியாயமாகச் சாகப்போகின்றாய் இரகசியத்தை சொல”; எனக்கேட்கின்றான். அப்போது அந்த போராளி “நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீ என்னைச் சுட்டுவிடுவாய் என்பது எனக்கு நன்கு தெரியும் ஆனாலும் உண்ணால் என்னை வெல்ல முடியாது” என உறுதியாகக் கூறினான். கோபமடைந்த இராணுவ அதிகாரி அவனைக்கொன்றுவிடுகின்றான். ஆனாலும் ஒரு போராளியின் மன உறுதியின் முன்னால் தான் தோற்று விட்ட குற்ற உணர்ச்சி அவனைத்தினமும் வாட்டியது. இதையே பின்னாளில் அந்த இராணுவ அதிகாரி பதிவு செய்கின்றார்.
இங்கு நாங்கள் என்ன செய்தாலும் எதிரி எங்களை என்ன செய்வான் என்ற தெளிவும் உயிரைவிட பெரிதான தேசப்பற்றும் ஒவ்வொரு தமிழனிற்கும் அவசியமாகின்றது. ஈழவிடுதலையை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனும் பணத்திற்கோ பொருளிற்கோ விலைபோகாதவர்களா தாய்நாட்டிற்காக எத்ததைய சவால்களையும் எதிர்கொள்ளும் மனநிலை உள்ளவர்களாக விளங்கவேண்டும். சிங்கள தேசமோ சர்வதேச சுயநலவாதிகளோ தமிழர் மனங்களை வெல்லாத வரை தமிழர்களை தோற்கடிக்கவே முடியாது.
ஈழப்போராட்டத்தின் விரைவான வெற்றி என்பது அதன் தொடர்ச்சியிலும் நாம் சம்பாதிக்கும் நண்பர்களினது எண்ணிக்கையிலும் எதிரியையும் அவன் செய்யும் சூழ்ச்சிகளையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியத்திலும் பிரதானமாக தங்கியுள்ளது.
விடுதலைக்கு முதல்ப்படி விழிப்புத்தான். தமிழீழ விடுதலையை நேசிக்கும் அன்பானவர்களே! இன்றைய நிலையில் தமிழ் இனம் மிகுந்த மனச்சிக்கலுக்குள் சிக்குண்டிருக்கின்றது. இதிலிருந்து விடுபடுவதும் பொய்ப் பரப்புரைகளை முறியடித்தல் என்பதும் எதிர்வரும் ஒவ்வொரு வினாடியிலும் பின்னப்படும் சதிவலைகளை அறுத்தெறிந்து உண்மைகளை பகுத்தறிந்து எதிரிகளை எதிர்கொண்டு பயணிக்கவேண்டியதும் மிகவும் முக்கியத்துவமானது.
இந்நிலையில் சிங்களதேசமும் தமிழ் இனவிரோதிகளும் கூட்டாக இணைந்து தமிழ் இன மொழி மற்றும் கலாச்சார பண்பாட்டு அழிப்பு நடவடிக்கையை மெல்ல மெல்ல அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.
நாம் ஈழத்தமிழர்களாக இருந்தாலும் சரி தமிழ்நாடு, கர்நாடகாத் தமிழர்களாக இருந்தாலும் சரி மலேசியா மற்றும் வேறுநாடுகளைச்சேர்ந்த தமிழர்களாக இருந்தாலும் சரி உலகெங்கிலும் எத்திசையில் வாழ்ந்தாலும் நாமெல்லாம் தமிழரே! சிங்கள தேசமும் தமிழ் இன எதிரிகளும் தமிழினத்திற்கு விடும் சவால்கள் என்ன? அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றோம்?
தொடரும்
அன்புடன்
கீர்த்திகன்
keerththikan@gmail.com
0 கருத்துரைகள் :
Post a Comment