தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தனது இராணுவ நடவடிக்கைகள் மூலம் முறியடிக்கப்பட்டு, முழு அளவில் வெற்றி காணப்பட்டாயிற்று என்று கொழும்பு கடந்த மே நடுப்பகுதியில் அறிவித்து ஐந்து மாதங்களாகிவிட்டன.
இனி என்ன என்ற குழப்ப நிலைமை தமிழர்கள் மத்தியில் அது உள்நாட்டிலும் சரி, புலம்பெயர் நாடுகளிலும் சரி தொடர்ந்து நீடிக்கின்றது. யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு புத்திசாலித்தனமாக உசிதமான வழியைப் பின்பற்றுவதே இன்றைய நிலையில் தமிழர்களைப் பொறுத்தவரை சிறந்த தாகும். வெறும் எழுச்சிப் பேச்சுகளும், புரட்சிக்கொள்கை விளக்கங்களும், சாத்தியமற்ற பிரகடனங்களும் தனித்துப் பயன்தரப் போவதில்லை. அவை இச்சமயத்தில் பொருத்தமற் றவை; அர்த்தமற்றவையும் கூட.
நொந்து போயிருக்கும் தமிழினத்துக்கு தென்னிலங்கை யின் நிரந்தர அடிமையாகுவதே சிறந்த வழி என்று வழிப் படுத்தும் பலர் நம் மத்தியில் இரட்சகர்களாகத் தோற்றமளிக்கத் தொடங்கிவிட்டார்கள். அத்தகையோர் மும்முரமாகச் செயற்படவும் ஆரம்பித்துவிட்டனர்.
இச்சமயத்தில், உண்மையில் தமிழ் மக்களை இங்கு வழி நடத்த வேண்டிய பொறுப்புடையவர்கள் தூங்கிக்கிடந்தால் அல்லது அப்படிப் பொறுப்போடு செயற்படுபவர்களை உள் நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் எமது விமர்சனங்கள் மூலம் பாதிப்புற வைத்து அவர்களின் செயற்பாட்டுக்குத் நாமே குந்தகம் விளைவிப்போமானால் கடைசியாக "குரங்கு அப்பம் பகிர்ந்த கதையாக" தெற்கின் சூறையாடலுக்குத் தமி ழினம் நிரந்தரமாகப் பலியாகி விடுவது தவிர்க்க முடியாத தாகிவிடும்.
ஆகவே, தென்னிலங்கைக்கு சாமரம் வீசி, அதில் அரசி யல் நடத்தும் வகை சார்ந்த அரசியல்வாதிகளை விட்டு விட்டு, தமிழர்களுக்காக அவர்களின் நியாயமான உரிமைக ளுக்காக அர்ப்பணிப்புடனும், திடசங்கற்பத்துடனும் செயற்பட வேண்டிய வேளை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சக்திகளுக்கு வந்தாயிற்று. அதைப் புரிந்து கொண்டு அவை செயற்படவேண்டும். அப்படி அவை செயற்படுவதற்கு மற்றையோர் இடமளித்து ஒத்துழைக்கவேண்டும் அவற்றுக்கு வீண் தொல்லைகளைக் கொடுத்து விபரீதங் களை ஏற்படுத்துவதை விடுத்து.
புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்தியபோது புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் பங்களிப்பை சரிவர இன்னும் சொல்லப்போனால் அளவுக்கு அதிகமாக வழங்கினார்கள் என்பது உண்மையே. அது காலத்தின் தேவையாக இருந்தது.
ஆனால், இன்றைய நிலையில் அவர்கள் உருப்படியாக பயனுள்ள வகையில் இலங்கையின் வடக்கு, கிழக்கில், தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில் தங்களின் இரத்த உற வுகளான தமிழ் மக்கள் அவர்களின் நியாயமான அபி லாஷைகள் நிறைவு செய்யப்பட்டுக் கௌரவமாக வாழ் வதற்குத் தாம் எத்தகைய முறையில் செயற்படவேண்டும் என்பது குறித்து ஒரு சுய பரிசோதனை செய்து பார்க்க வேண் டியவர்களாக இருக்கின்றனர்.
சிலர் "நாடு கடந்த தமிழீழ அரசு" என்கின்றனர். மற்றும் சிலர் "உலகத் தமிழர் பேரவை" என்கின்றனர். வேறு சிலர் இந் தியாவுடன் இணைந்து போகக் கூடாது என்கின்றனர். மற்றும் சிலர் வேறு வழியில்லாததால் இந்தியாவுக்குப் பணிந்து இயன் றதைச் சாதிப்போம் என்கின்றனர். இதுபோன்ற வேறு சில வழி காட்டல்களும் பிரேரிக்கப்படுகின்றன. இவை குறித்தெல் லாம் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் கடும் வாதப் பிரதி வாதங்கள் நடக்கின்றன. சாடல்களும், விமர்சனங்களும் சூடு பறக்கின்றன. தனிப்பட்ட விமர்சனங்களும் அபவாதங்களும் கூட நீடிக்கின்றன.
அவை எவையும் தவறு என்றோ, பிழை என்றோ குறை கூறும் அருகதை தாயகத்தில் உள்ள நமக்கு உண்டு என்று நாம் கருதவில்லை. அதேசமயம், இலங்கைத் தமிழர்களின் எதிர்காலப் பயணமும், இலக்கும் எத்திசையில் அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் புலம் பெயர்ந்த தமிழர் களுக்கு இருக்கும் கணிசமான உரிமையையும், பாந்தயத்தை யும் கூட நாம் யாரும் கேள்விக்கு உட்படுத்தவும் முடியாது.
ஆனால், ஒரு விவகாரம் உண்டு. அவர்கள் இவ்விடயத் தில் எதைச் செய்வதானாலும் எதைக் கூறுவதானாலும் அதற்கு முன்னர் களத்தில் தமிழ் மக்களின் தாயகத்தில் உள்ள நிலைமைகளை, அங்கு செய்யக்கூடியவற்றை, செய்ய முடியாதவற்றை எல்லாம் ஒருதடவை சீர்தூக்கிப்பார்த்து, அள விட்டு, வரையறை செய்து, தமது தீர்மானங்கள், முடிவுகளின் போது அந்த அம்சங்களுக்கும் முக்கிய இடமளித்து கருமமாற் றுவது மிக அத்தியாவசியமானதாகும்.
புலம்பெயர் தமிழர்கள் ஐக்கியப்பட்டு வலிமையாக இருந்தாலும் கூட, தாயகத்தில் அதனுடன் சேர்ந்தியங்கும் வலி மையான அரசியல் ஆதரவு சக்தி அதற்கு இல்லாவிட்டால் அந் தப் புலம்பெயர் தரப்புகளால் அதிகம் சாதித்துவிட முடியாது.
அதேசமயம், தாயகத்தில், தமிழர் தரப்பில், தமிழர்களைத் தெற்குக்கு அடிமையாக விடாமல் வழிநடத்தக்கூடிய தரப் புகள் அரசியல் வலுப்பெற்றாலும் கூட பலம்மிக்க தென் னிலங்கை அரசின் அசைக்கமுடியாத வலிமைக்கு முன்னால் புலம் பெயர் தமிழர்களின் வலுவான ஆதரவின்றி அந்த அரசியல் சக்திகளாலும் ஏதும் சாதித்துவிட முடியாது.
இதுதான் இன்றைய யதார்த்த நிலை.
ஆக, புலம்பெயர் தரப்புகள் கொள்கை, கோட்பாடு, இலட் சியம்,இலக்கு, தரப்பு, அணி என்று கூறிக்கொண்டு தமக்குள் பிணக்குப்பட்டு நிற்பதை விட முதலில் வேற்றுமைகளைக் களைந்து ஐக்கியப்பட வேண்டும். அதேசமயம் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவையோ, நம்பிக்கையையோ கொண் டவை எனக் கூறக்கூடிய தரப்புகள் தாயகத்தில் அரசியல் சத்தி யாக இங்கு எழுச்சி பெறவேண்டும். அவை தம் மண்ணிலிருந்து தமது மக்களுக்காகச் செயற்படக்கூடிய தகுதியும் துணிச்சலும் கொண்டவையாகவும் இருக்கவேண்டும்.
இத்தகைய பரஸ்பர நலனோக்கு அடிப்படையில் புலம் பெயர் தமிழர்களும், தமிழர் தாயகத்தின் அரசியல் சக்திகளும் ஒன்றிப்பதே இன்றைய நிலையில் ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச வாய்ப்பையேனும் தந்து நிற்கும் என்பது உறுதி.
சம்பந்தப்பட்டோர் புரிந்துகொண்டு, தம்மை சரியான நெறியில் வழிப்படுத்திக் கொண்டால் சரி.
நன்றி : யாழ் உதயன் ஆசிரியர் தலைப்பு
0 கருத்துரைகள் :
Post a Comment