இனப்பிரச்சினையை ஒட்டிய ஆயுதப் போராட்டத்தில் இறுதி வெற்றியை ஈட்டியாகி விட்டது என்று கூறிவரும் பின்புலத்தில் இப்போது அரங் கேறும் அசிங்கங்களை தென்னிலங்கை பௌத்த, சிங்களப் பேரினவாதத்தின் அட்டகாசப் போக்கைதமக்கே உரித்தான நாசூக்கான சொல் லாடல்களில் சிறுபான்மை இனத்தவர் களின் தலைவர்கள் வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
இந்த வரிசையில், வடக்குகிழக்குத் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகத்தின் மீது, இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பேரினவாதக் குடியேற்ற ஆக்கிரமிப்பு எவ்வாறு தனது வலையை விரிக்கிறது என்பது குறித்து தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம் பந்தனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹஸனலி எம்.பியும் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் மிக முக்கியமானவையாகும்.
"பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் நிமித்த காரணி களாக ஆரம்பத்தில் தமிழையும், பின்பு தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய நிலங்களையும் அடையாளப்படுத்திக்கொண்ட பெருந்தேசியக் கடும்போக்குவாதிகள், தங்களது போருக்கு ஒத்துழைப்புத் தராத அனைவர் மீதும் "துரோகிகள்' என்ற முத்திரையைக் குத்தினர்.
"தொடர்ச்சியாக வளர்ந்து வந்த இன முரண்பாடானது யுத்தத்தின் பரிணாமத்தைத் திடீரென்று பெரும்பான்மை யினரின் புனிதப் போராகவும், சிறுபான்மையினரின் தேசத் துரோகமாகவும் மாற்றியமைத்துவிட்ட பரிதாபமான நிலைமை எப்போது நீங்குமோ தெரியவில்லை.
"யுத்தத்தின் முடிவில் தமக்குக் கிடைத்த பரிசுப் பொருள் களில் ஒன்றாகத் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய நிலங் களும் அடங்கிவிட்டன என்ற போக்கினை அவர்களிடம் (தெற்கு மக்களிடம்) நாம் காண்கிறோம். அதனை நிரூபிப் பது போன்று அவசரமாக அரங்கேறும் சம்பவங்கள் கிழக்கில் கட்டவிழ்ந்து அச்சமூட்டுகின்றன.''
இப்படி வேதனையுடன் நாடாளுமன்றத்தில் நொந்து கொண்டிருக்கின்றார் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹஸனலி. அதுமட்டுமல்ல, கிழக்கில் அண்மைக்காலத்தில் பெருந்தேசியத் தீவிரப்போக்கு சக்திகளால் சூறையாடப் பட்டு, அபகரிக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட முஸ்லிம் களின் தாயக நிலம் பற்றிய விடயங்களைப் புள்ளி விவரக் கணக்கோடு விஸ்தாரமாக அம்பலப்படுத்தியிருக்கின்றார் அவர்.
அரசுத் தரப்பின் உதவியுடன் திருகோணமலை உள் ளிட்ட கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறுபான் மைச் சமூகத்துக்குச் சொந்தமான காணிகளும் அரச காணி களும் பெரும்பான்மையினத்தவர்களுக்குச் சட்டவிரோதமான முறையில் கைமாறுகின்றமை குறித்தும்
இதன்மூலம் கிழக்கில் சிறுபான்மையின் பாரம்பரிய உரிமையும், தனித்துவமும் சிதறடிக்கப்பட்டு, அது பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறித்தும்சம்பந்தன் எம்.பியும் நாடாளுமன்றத்தில் விலா வாரியாக எடுத்துரைத்திருக்கின்றார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை அரசுத் தரப்பு உதட்டள வில் மறுத்தாலும்மறைத்தாலும்கூட களயதார்த்தம் அப்படி அட்டூழியம் அரங்கேறுவதை உறுதிப்படுத்துகின்றது என்பது சர்வதேச சமூகத்துக்கே நன்கு தெரிந்த விடயம்தான்.
நீதியான தீர்வு, நியாயமான உரிமைகளுடன் கூடிய கௌரவ வாழ்வு ஆகிய நேர்மையான அபிலாஷைகளை முன்வைத்துப் போராடிவரும் தமிழ் பேசும் சமூகத்தின் போராட்டத்துக்கான அடிப்படையான விழுமியமாக இருப்பது அவர்களின் தனித்துவ இன அடையாளம்தான் என்பது வெளிப்படை.
அந்தத் தனித்துவ இன அடையாளத்தின் அடிப்படை களை இலக்குவைத்துத் தாக்கியழித்துச் சிதைப்பதன் மூலம், அந்த இனத்துவ அடையாளத்தின் மீது கட்டியெழுப்பப் படும் உரிமைப் போராட்டத்தை உரிமைக் கோரிக்கையை நீர்த்துப்போக வைத்து தகர்த்து அழிக்கலாம் என்பது பேரினவாத ஆட்சிப்பீடத்தின் திட்டம்; நோக்கு; இலக்கு எல்லாமே.
அவ்வாறு தமிழ் பேசும் மக்களின் இனத்துவ அடை யாளத்தைப் பறைசாற்றி நிற்கும் பிரதான காரணிகளுள் ஒன்று அவர்களின் பாரம்பரிய தாயகம்; தொடர்ச்சியான நிலப் பிரதேசங்களையும் கொண்ட புவியியல் கட்டமைப்பு. அந்தத் தாயகத் தனித்துவ எண்ணக்கருவை சிதைக்கும் திட்டத்துடனேயே தந்திரோபாயத்துடனேயே இத்தகைய பெரும்பான்மை இனக்குடி@ய்ற்றங்கள், ஆட்சிப் பீடத்தின் ஆசீர்வாதத்துடன் திட்டமிடப்பட்ட முறையில் முன்னெடுக்கப் படுகின்றன.
1987இல் இந்திய அரசின் அழுத்தத்தின் பேரில், இலங்கை இந்திய ஒப்பந்த ஏற்பாடுகளுக்கு அமைய அரசமைப்புக்கும் 13ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. நாட்டின் உயர் சட்டமான அரசமைப்பில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, உள்வாங்கப்பட்டு, சட்ட அந்தஸ்தும் அதற்கு வழங்கப் பட்டுள்ளது.
சட்டத்தில் உள்ள அந்த ஏற்பாடுகளின்படி அதுவும் அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களில் உள்ள காணிகள் மீதான அதிகாரமும், மாகாணப் பொலிஸ் மீதான அதிகாரமும் மாகாண சபைக்கே பொறுப்பானதாகும்.
எனவே, திட்டமிடப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன என்று தமிழர் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் மட்டத்திலிருந்து பலத்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை, அதன் காணிகள் மீதான உரிமையும் அதிகாரமும் கிழக்கு மாகாண சபைக்கே உரியதாகும்.
அரசமைப்புக்குச் செய்யப்பட்ட பதின்மூன்றாவது திருத் தத்தின் பிரகாரம், கிழக்கு மாகாண சபைக்கென உரித்தான காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் போன்றவற்றை அதற்கு வழங்காமல் மறுத்துக்கொண்டு, தனது பேரினவாதக் குடியேற்ற ஆட்சிச் சிந்தனையைக் கிழக்கில் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது அரசுத் தலைமை.
இந்த ஜனநாயக அநாகரிகத்தனம் அட்டூழியம் பற்றிய தகவல் சர்வ தேச சமூகத்துக்குச் சமர்ப்பணம்.
நன்றி : யாழ் உதயன் அசிரியர் தலைப்பு
0 கருத்துரைகள் :
Post a Comment