இதயம் வலிக்கும் ஒரு இடப்பெயர்வு....!

எமது வாழ்வில் ஒரு பெரும் சோகத்தை தந்தது, 1995 இன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்வு. ஒக்ரோபர் 30, வலிகாமம் வலிகளை தாங்கிக் கொண்டு ஒரு இரவுக்குள் தென்மராட்சிக்குள் இடம்பெயர்ந்தது. வார்த்தைகள் கொண்டு இதனை வடித்துவிட முடியாது. அனுபவித்தவன் ஒவ்வொருவனும் ஒரு பெருமூச்சோடு அதனை நினைவு கூர்ந்து கொள்வான். 'சூரியக்கதிர்’ என்ற ஒரு இராணுவ நடவடிக்கை யாழ். தீபகற்பத்தினை விழுங்க ஆரம்பித்தது. மிகச்செறிவான எறிகணைகள்....! பலமான வான் தாக்குதல்கள்...!! கவச வாகனங்களின் குண்டு உமிழ்தல்...!!! என குடாநாடு அதிர்ந்த வண்ணமே இருந்தது. இதன் உச்சக்கட்டமாக நடந்ததுதான் அந்த பாரிய இடப்பெயர்வு. இன்று இலகுவாக 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. எத்தனை மாற்றங்கள். அதனை விட இப்போது எத்தனை கொடிய வலிகள்.

எல்லா இடத்திலும் பதட்டம். எல்லோர் முகத்திலும் கலக்கம். இப்படியான பல இடப்பெயர்வுகளை முன்னரே சந்தித்திருந்தாலும் இது ஒரு வித்தியாசமாக இருந்தது. காரணம் ஒரு சொற்ப பொழுதுக்குள் எல்லோரும் அகதியாக்கப்படுகிறோம் என்ற ஆதங்கம் தெரிந்தது. ஒரு இரவுக்குள் யாழ். குடாநாட்டின் வலிகாம பிரதேச மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து தென்மராட்சிக்குள் புகுந்தனர். ஏறத்தாழ அனைத்து மக்களும் ஊரோடின் ஒத்தோடு என புறப்பட்டே விட்டனர். தேடிய சொத்துக்கள், பரம்பரை பரம்பரையாக கட்டிக்காத்த முதுசங்கள், சொந்த வீடு, காணி, வயல், தோட்டம், கால்நடைகள் எல்லாம் கண் முன் தெரியவில்லை. அரக்கர் கூட்டத்தின் கைகளில் அகப்படக்கூடாது என்பதும், எறிகணைகளுக்குள் அகப்பட்டு அநியாயமாக சாகக் கூடாது என்பதும் உடைமைகள் பற்றி எண்ண முடியாமல் போய்விட்டது. கையில் அகப்பட்டவற்றுடன் புறப்பட வேண்டிய ஒரு சூழல். ஆண்டாண்டு காலமாக வசித்த பூமியை விட்டு கணப்பொழுதில் அகல வேண்டிய ஒரு இக்கட்டான நிலை. இருந்தும் புறப்பட்டே தீரவேண்டும் என்பதால் அனைவரும் அகன்றனர்.

தென்மராட்சிப் பிரதேசத்துக்குள் நுழைய இரண்டு பாதைகள் மட்டுமே. அதுவும் பெரிய அளவில் இல்லை. இரண்டு வாகனங்கள் சமாந்தரமாக போக முடியும். இடையில் கடல் நீரேரிகள். அந்த சாலையில் பாலங்கள் வேறு. இலட்சக்கணக்கான மக்கள் இரவோடிரவாக புறப்பட்டனர். கால்கள் போகும் பாதையில் பயணம். இருளும் சூழ்ந்து கொண்டு விட்டது. எங்கே போகிறோம் என்பது தெரியாது. என்ன செய்யப்போகிறோம் என்பது தெரியாது. எமக்கு என்ன நிகழப்போகிறது என தெரியாது. கர்ப்பினி, நிறைமாதக் கர்ப்பினி, கைக்குழந்தை, சிறுவர், இளைஞர்கள், வயது வந்தவர்கள், முதியவர்கள்....என எல்லோரும் ஏதிலிகள் போல் நடந்தனர்.

"பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது
போகும் இடமறியாமல் - இங்கே
சாகும் வயதினில் வேரும் நடக்குது
தங்கும் இடம் தெரியாமல்............”

என்ற வரிகளை இங்கே தவிர்க்க முடியவில்லை. செம்மணி சுடலை தாண்டியவர்களில் சில பேரிற்கு நாவற்குழி சவக்குழியானது. கைதவறி விடப்பட்ட முதியவர்கள் நீரூள் மூழ்கினர். இருட்டுக்குள் எதுவும் தெரியவில்லை. பாதை எது தண்ணீர் எது என்று எண்ணுவதற்குள் சிலரது வாழ்வு முடிந்து விடுகிறது. ஒரு பத்து மீற்றர் தூரம் நடக்க ஒரு மணி நேரக் காத்திருப்பு. வாகனங்களும் அதற்குள்ளே. அழுகுரல்கள், அய்யோ, கடவுளே, என்ற ஓசைகள் தான் எங்கும். தரையில் தமிழனின் அவலம் கண்டு வானமும் கண்ணீர் சொரிந்தது... ! அது தாகமாக இருந்தவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. குடைகளில் தண்ணீரை ஏந்தி குழந்தைகளுக்கு பருக கொடுத்தனர். அண்ணாந்து வாய் திறந்து ஆகாயம் தந்த நீர்த்துளிகளை குடித்து பசி முடித்தனர். நினைத்துப் பார்க்க முடியாத அவலம். ஆனால் அந்த மழையும் மக்களை வதைத்ததாகவே தோன்றுகிறது. தெப்பமாக நனைந்து விறைத்து போனது பலரது உடல். குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. பசிக்கு உணவில்லை. ஒரு வெட்ட வெளிக்குள் நின்றது போன்ற உணர்வு.

கைதடிச் சந்தி தாண்டியதும் ஒவ்வொருவரும் கிடைக்கின்ற இடங்களில் இருந்தனர். மரத்தடி, கோவில், பாடசாலை, சனசமூக நிலையம், உறவினர் வீடு, வீதியோரம் என கால் கடுக்க நடந்தவர்கள் களைப்பாறினர். ஆனால் பின்னர் அதுவே அவர்களின் நிரந்தர குடியிருப்பு பிரதேசங்களாக மாறிவிட்டன. மாளிகை வீடுகளில் இருந்தவர்கள் எல்லாம் மரநிழலில் இருந்தனர். கணப்பொழுதில் வாழ்வின் தத்துவம் விளங்கியது. ஒரு இரவில் எல்லாம் நடந்து முடிந்தது. அடுத்தடுத்த நாட்களில் எஞ்சியிருந்தவர்களும் வெளியேறினர். தமக்கான இடங்களை ஓரளவு தெரிவு செய்தபின்னர் மீண்டும் சென்று சில பொருட்களை எடுத்துவந்தனர். பலவீடுகளில் 50 பேர் 60 பேர் என இருந்தனர். இவை எல்லாம் 5 பேர் வாழ்ந்த வீடு. ஆனால் எல்லோரையும் தாங்கி நின்றது. குழந்தைகளும் முதியோருமே அவதிப்பட்டனர். படுக்கை விரிப்புகள், சாரம் (லுங்கி), சாக்கு, சேலை என்பன கூரைகள் ஆகின. முட்கள், குப்பை, சுகாதாரம் பற்றி எந்தவித கவலையுமின்றி இடம்பெயர்ந்த வாழ்வு தொடங்கியது. வழிமாறி உறவினர்களைத் தேடி அலைந்தவர்களின் அவஸ்தை சொல்லிமாளாது. பெற்றோரை தவறவிட்ட குழந்தைகள். முதியவர்களைத் தவறவிட்ட உறவினர்கள். இன்னார் அவரைத்தேடுகிறார். அவர்கள் இவர்களைத்தேடுகிறார்கள
அறிந்தவர்கள் தகவல் தரவும் என ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்தும் அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். பத்திரிகைகள் கூட ஒரு வாரம் கழித்தே வெளிவந்தது. கடைகளில் சாமான்கள் இல்லை. இருந்தவை கூட பதுக்கப்பட்டது.

முதல் இரண்டு மூன்று வாரங்களுக்கு உணவு என்பது பெரிய பிரச்சினையாகவே இருந்தது. உணவுப் பொருட்கள் இல்லை. இருந்தாலும் சமைப்பதற்கு பாத்திரங்களோ அல்லது வசதிகளோ இருக்கவில்லை. முதல் நாள் மாலைப் பொழுதிலேயே சனம் வெதுப்பகங்களுக்கு (பேக்கரி) முன்னால் காத்திருக்க தொடங்கிவிடும், அடுத்தநாள் காலை விற்க இருக்கும் பாண் வாங்குவதற்கு. அதுவும் ஒருவருக்கு ஒரு இறாத்தல் (450கிராம்) அல்லது அரை இறாத்தல். சில பொதுமக்கள், தன்னார்வ ஊர் அமைப்புகள், ஆலயங்கள் தாமாக முன்வந்து சமைத்த உணவுகளை பொதிகளாக்கி வழங்கினர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயம் சுதாரிப்பதற்கு நீண்ட காலம் எடுத்தது. அதன் பின்னரே ஓரளவு நிலைமைகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மீண்டும் 1996 ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்துக்குள் காலடி எடுத்து வைத்தோம். ஆனால் அதற்குள் நிறைய பட்டு விட்டோம். படித்து விட்டோம். முகத்தில் அறைந்தது போல் சில யதார்த்தங்களை ஏற்றுக் கொண்டோம். காலம் நிறையவே கற்றுத்தந்தது. சில மனிதர்களை அடையாளம் காட்டியது. சில மனித வேடம் தாங்கிய ஜீவன்களை அடையாளம் காட்டியது. செம்மணி கடக்கும் போது அதிலே இடப்பெயர்வின் போது இறந்தவர்களின் கனமான நினைவு வந்தது. ஆனால் அதே செம்மணிக்குள் யாழ்ப்பாணம் திரும்பிய பின் நடந்த அந்த படுகொலைகளும் புதைகுழிகளும் என்றென்றும் உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிக்கொண்டே இருக்கும்.

இன்றளவும் நாம் சந்தித்த இடப்பெயர்வுகள், அவலங்கள் என நிறைய இருந்தாலும் இந்த வலிகாமத்தின் வெளியேறல் ஒரு சரித்திர புள்ளியே. ஒரு இரவுக்குள் சுமார் 4.5 லட்சம் மக்கள் வெளியேறியது என்பது அராஜகப் பிடிக்கு எதிரான ஒரு கிளர்ச்சியே. அன்று 1995 ஒக்ரோபர் 30 ந்திகதி வெளியேறிய எத்தனையோ மக்கள் இன்னமும் சொந்த ஊர் போகவில்லை. தாய் மண்ணில் சாகாமல் வாழ்வை முடித்தவர்கள் பலர். காலங்கள் மாறும். ஆனால் அது தந்த வடுக்கள் மாறாது.

நன்றி : கேடுகுவேலி
Share on Google Plus

About முல்லைப்பிளவான்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment