தீபாவளி(லி)........!
துன்பத்தை சகிக்க முடியாத வருணன்
கண்ணீரை வடித்ததால்
வெள்ளமாகியது கூடாரங்கள்!
வழிந்தோட, வாய்க்கால் வெட்டிவிட்ட நான்! களைப்பில்
தேனீர் தருவாளா? என மனைவியைப்பார்க்க!
விறகெடுத்து வைத்த திசைபார்த்தாள் - மௌனமாக!
அதுவும் மழைநீரில் குளித்து
மண்ணுடுப்பு உடுத்தியிருக்க
தலைகவிண்டேன் மௌனமாக!
உடுத்த உடுப்பில்லை
குளிக்க தண்ணியில்லை
குடிதண்ணீருக்காய் வரிசையில்
இருக்கிற அரிசியையும் பருப்பையும் சமைக்க
விறகு எடுக்க போவதென்றாலும்
கொன்றுவிடுவார்களோ என்றபயம்
என் நிலைமையை புரிந்து மகன்
தண்ணீரைக்குடித்துவிட்டு
சேற்றுக்கு மேலே 'ரென்ரை' போட்டு சுருண்டு படுத்தான்
என்ன செய்வதென்று தெரியாத
மனைவியின் முகத்தில் கண்ணீர் துளிகள்
என்ன செய்யலாமென்று வெளியில் வந்தேன்
என்போல குடும்பத்தலைவர்களும்
கூடாரத்துக்கு வெளியில் சிந்தனைகளுடன்
செய்வதறியாது...!
வழக்கமான தீபாவளி(லி)கள்
நீண்டகாலமாய்!
ஒன்று மட்டும் வித்தியாசம்
குண்டுச்சத்தங்களில்லை
மனங்களில் பயம்
அடைபட்ட மிருகங்களைப்போல
முட்கம்பி சிறைகளிற்குள்
இந்த வருடமும் விடிவில்லை
தீப ஒளி நாளிலும் ஒளியைத்தேடி!!!
//......இந்த வருடமும் விடிவில்லை
ReplyDeleteதீப ஒளி நாளிலும் ஒளியைத்தேடி!!! ....//
இதுதான் நிஜம்..ஏக்கங்கள் வலிகளாக இன்னமும் தொடர்கிறது....!என்றுதான் எமக்கு விடிவோ...!!!
என் பக்கத்து வீட்டில் அப்போதுதான் ஒரு பணக்காரர் குடிவந்திருந்தார்..அப்போதைய காலங்களில் எங்கள் குடும்பம் நடுத்தர வர்க்கத்துக்கு சற்று கீழ்தான் இருந்தது..மாச சம்பளத்தை எதிர்பார்த்துதான் பிழைப்பு ஓடியது..நான் 4வது வகுப்பில் படித்து கொண்டிருந்தேன்..சற்றும் பக்குவம் இல்லாத மனது. கண்ணால் காண்பதையெல்லாம் ஆசைப்படும் வயது..வீட்டில் நிலையைப் பற்றியெல்லாம் யோசிக்கும் பக்குவமில்லை எனக்கு..
ReplyDeleteஅன்றைக்கு தீபாவளி ஆதலால், எங்கள் வீட்டில் தகுதிக்கு ஏற்றார் போல் எனக்கு வெடி வாங்கி குடுத்திருந்தனர்..நானும் சீனி வெடி, லஷ்மி வெடி என்று வெளியில் சென்று வெடித்துக் கொண்டிருந்தேன்..வெடித்து முடித்து விட்டு திண்ணையில் சென்று உக்கார்ந்து வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தேன்..சரமாரியாக வெடி வெடிக்கவே ஆவலாய் பார்த்தால் , எதிர்த்த வீட்டு பணக்கார வீட்டுப் பையன்..விதவிதமான வெடிகள்..ஆயிரக்கணக்கில் வாங்கியிருப்பார்கள் போலும்..புத்தாடை அணிந்து கொண்டு கை நிறைய வெடிகள்..முகம் நிறைய புன்னகை..நிமிடத்திற்கு ஒரு வெடி..அனைத்தும் காஸ்ட்லி..என் மனம் ஏங்கிப் போனது.
என் மனத்தைப் புரிந்து கொண்டோ என்னமோ என்னை அழைத்தான். மனம் நிறைய சந்தோசத்தோடு சென்றேன்..
“ராசா..எங்க வீட்டில எவ்வளவு பொம்மை கார் இருக்கு தெரியுமா.. வந்து பாரேன்..”
அந்த பொம்மைகளைப் பார்க்கும்போது ஆசையாக இருந்தது..நினைத்தாலும் அந்த உயர்ரக பொம்மை கார்களை வாங்க முடியாது..அனைத்து ஆட்டோமடிக் கார்கள்..எனக்கு பற்றிக் கொண்டு வந்தது..நேராக அம்மாவிடம் ஓடினேன்..
“அம்மா..எனக்கும் எதிர்த்த வீட்டுப் பையன் வைச்சிருக்குற மாதிரி கார் வேணும்..” அடம்பிடிக்க ஆரம்பித்தேன்..அம்மாவுக்கு புதிதாய் இருந்தது..நான் இதுபோல எப்போதும் அடம் பிடிப்பவனல்ல..
“ராசா..அதெல்லாம் விலை ரொம்ப ஜாஸ்திப்பா..அப்பா வந்தவுடனே உனக்கு ஒரு நல்ல பொம்மைக்கார் வாங்கித்தர சொல்லுறேன்..”
“அதெல்லாம் எனக்கு வேண்டாம்..எனக்கு இப்பயே அந்த மாதிரி கார் வேணும்..” தரையில் புரண்டு அழுகிறேன்..அப்போது கூட அம்மாவுக்கு கோவம் வரவில்லை..
“வேணான்டா கண்ணு..அந்த கார் 2000 ரூவாடா..நம்ம ஒரு மாசம் சம்பாதிக்கிறதே அவ்வளவுதான்டா..”
எந்த சமாதானமும் என் தலையில் ஏறவில்லை..அம்மாவாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை..என் மனம் முழுதும் இயலாமை ஆக்ரமிக்க., கோபத்தோடு கொல்லைப்புறம் ஓடினேன்..அங்கு ஒரு சிறிய கிணறு ஒன்று இருக்கும், ஆளை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணிரோடு….பொம்மை கார் ஒன்று வாங்கித்தர முடியாத குடும்பத்தில் நான் ஏன் இருக்க வேண்டும்..இந்த கேள்வியே மனம் முழுவதும் ஆக்ரமித்திருந்தது..அப்படியே கிணற்றில் விழுந்தேன்..
“அய்யோ..எம்பிள்ளை கிணத்துக்குள்ள விழுந்துட்டானே..யாராவது வந்து காப்பத்துங்களேன்..”
என் அம்மா குரல் மட்டும் சன்னமாக கேட்டது..யார் யாரோ வந்தார்கள்..ஒன்றும் என் காதில் விழவில்லை..கண் முழித்துப் பார்த்தால் வீட்டில் நடு அறையில் இருந்தேன்..என்னை சுற்றி பக்கத்து வீட்டுக்காரர்கள்..
“ராசா..கண் முழிச்சிட்டியேடா..ஒரு நிமிசத்துல என் உசிரை போயிடுச்சுடா…”
ReplyDeleteஅம்மா கதறிக் கொண்டே என்னைக் கட்டிக் கொண்டார்கள்..என் உடம்பில் இருந்த தண்ணீரை விட அம்மா கண்களில் அதிகம் இருந்தது..
“என்னை விடுங்க..எனக்கு அந்த காரு வேணும்…நான் திரும்பவும் கிணத்துல விழப்போறேன்..” ஒட முயற்சி பண்ணினேன்..அம்மாவால் இதற்கு மேல் முடியவில்லை..என் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார்கள்..இதுவரை என் அம்மா என்னை அப்படி அறைந்ததில்லை..ஆனால் ஒன்று கவனித்தேன்..அந்த அறையில் சுத்தமாக கோபமில்லை..அய்யோ..கிணற்றில் விழுந்துவிடுவானோ என்ற பயமே இருந்தது..அறையும்போது கூட எனக்கு வலிக்க கூடாது என்றே அறைந்த மாதிரி இருந்தது…..
பக்கத்து வீட்டுக்காரர்கள் அம்மாவை சமாதானம் செய்தார்கள்..கிணற்றில் விழுந்த வலியிலும், பொம்மைக் கார் கிடைக்காத ஆற்றாமையிலும் தூங்கிப் போனேன்..உடம்பு முழுவதும் வலியில் அப்படி ஒரு தூக்கம்..காலையில் கண் முழித்துப் பார்த்தால்..பக்கத்து வீட்டுப் பையன் வைத்திருந்தார் போலவே ஒரு பொம்மை கார்..அப்படியே அதை எடுத்து நெஞ்சில் அணைத்துக் கொண்டேன்..அதை எடுத்து கீழே வைத்து அழுத்தி தள்ளி விட்டேன்..என் மனம் போலவே அதுவும் சந்தோசத்தில் சென்று சுவற்றில் முட்டியது..
“அம்மா..அம்மா..எப்பம்மா கார் வாங்கின..சூப்பர்மா..எப்படிப் போகுது தெரியுமா…நான் இப்பயே பக்கத்து வீட்டுக்காரங்கிட்ட காட்டிட்டு வர்றேன்..”
சொல்லி பதிலுக்கு காத்திராமல் ஓடினேன்.”நானும் கார் வைத்திருக்கிறேன் தெரியுமா..எங்க அம்மா வாங்கிக் குடுத்தது” வாய் வலிக்க கத்தினேன்..உண்மையான ஒரு காரே என் கையில் கிடைத்தது மாதிரி இருந்தது… முடிந்த அளவுக்கும் காரை ஓட்டி விளையாண்டு கழித்தேன்..தூசி கூட ஒட்டக் கூடாது என்று அடிக்கடி சட்டை நுனியால் துடைத்தேன்..
“ராசா..வா..வந்து சாப்பிட்டு விளையாடலாம்..”
அம்மா அழைத்தார்கள்..அப்போது கூட கார் கிளம்பி போவது போலவே, பொம்மைக் காரை தரையில் தேய்த்துக் கொண்டே வீடு நோக்கி ஓடினேன்..
தட்டை முன் வைத்து விட்டு அம்மா சமயலறைக்கு உணவு எடுக்க சென்றார்கள்..எனக்கு சாப்பாடு எல்லாம் முக்கியமாக தோணவில்லை..என் கண் முழுவதும் காரின் மேலேயே இருந்தது..அம்மா அதைக் கவனித்திருக்க வேண்டும் போல..
”ராசா..சாப்பாடை சாப்பிட்டு அப்புறம் விளையாடலாம்..முதல்ல சாப்பிடு..நல்ல பிள்ளைல்ல..”
சொல்லிவிட்டு குனிந்து பரிமாற ஆரம்பித்தார்கள்..அப்போதுதான் கவனித்தேன் அம்மாவை…நேற்று அணிந்திருந்த தங்கத்தால் ஆன தாலி சங்கிலி காணாமல் போய் தாலிக்கயிறு தொங்கி கொண்டிருந்தது,,..பரிமாறும்போது எப்போதும் சிணுங்கி கொண்டே இருக்கும் இரண்டு தங்க வளையலுக்குப் பதில் பிளாஸ்டிக் வளையல்கள் மாறி இருந்தது…
வணக்கம் மனிதன்
ReplyDeleteஇயல்பான நடையுடைய நல்ல வரிகள்
மிக்க மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்