"நோர்த் ஈஸ்டன் மன்திலி" என்ற சஞ்சிகையில் கட்டுரை எழுதியமைக்காகவும் அந்தப் பத்திரிகையை நடத்துவதற்கு நிதி திரட்டியமைக்காகவும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட பத்திரிகையாளர் திஸநாயகத்துக்கு இருபது வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது.
ஆனால், அதே விடயத்தை ஒட்டிக் கைதுசெய்யப்பட்டு, அதே மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அந்தப் பத் திரிகையின் வெளியீட்டாளருக்கு எதிரான வழக்கை மட்டும் இடைநடுவில் அரசு விலக்கி, வாபஸ் பெற்றுக்கொண் டமையை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்.
இரண்டு வழக்குகளும் வெவ்வேறான நீதிமன்றங்களில், வெவ்வேறு நீதிபதிகளுக்குக் கீழ் நடத்தப்பட்டவை. அந்த வழக்குகளை நடத்திய நீதிமன்றங்கள் மீதோ அல்லது நீதிப திகள் மீதோ குறை கூறும் நோக்கம் ஏதும் எமக்குக் கிடையாது.
ஆனால் இந்த இரு வழக்குகளின் போக்கும் தீர்ப்பும் இலங் கையின் சட்ட முறைமைகளில் இருக்கும் குளறுபடிகளை ஓட் டைகளை குழப்பங்களை அப்படியே அப்பட்டமாக வெளிப் படுத்தி நிற்கின்றன என்பது கண்கூடு. அதுவும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் இலங்கையில் குறிப்பாகத் தமிழர்களுக்கு எதிராக திணிக்கப்பட்டிருக்கும் சட்ட விதிக ளில் உள்ள குளறுபடித்தனத்தை மிக வெளிப்படையாக அம் பலப்படுத்தி நிற்கின்றன இந்த இரு வழக்குகளின் முரண்பாடு களும் என்பதில் சந்தேகமே இல்லை.
வெளியீட்டாளர் யஸீகரனை விடுதலை செய்த நீதிபதி, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்குப் போது மான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என்று குறிப்பிட் டிருக்கின்றார்.
ஆக, யஸீகரன் தடுப்புக்காவலில் இருந்த சமயம், பொலி ஸாருக்கு வழங்கினார் என்று கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலம் உண்மையில் அவரால் சுயமாக விரும்பி வழங்கப்பட்டதா என் பது குறித்து கொழும்பு மேல்நீதிமன்றம் "வொயர் டயர்" விசா ரணை நடத்திக் கொண்டிருக்கையில், இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கான அடிப்படைகள் இல்லை என்று திடீரெனத் தெரிவித்து வழக்கை வாபஸ்பெற்று யஸீகரனை அரசுத் தரப்பு விடுவித்திருக்கின்றது.
இதில் எங்கோ இடிக்கின்றது என்பது அப்பட்டமாகப் புரிகின்றது.
ஏற்கனவே, மேற்படி சஞ்சிகையில் வெளியான கட்டுரை அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதோடு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் தண் டிக்கப்படக்கூடிய குற்றம் எனக் கொழும்பு மேல்நீதிமன்றம் ஒன்று தீர்மானித்து முடிவு செய்து, அதனடிப்படையில் அதை எழுதியவருக்கு இருபது ஆண்டுகாலச் சிறையும் விதித்த நிலையில் அந்த விடயம் சட்டப் பதிவாகவும், முன்மாதிரியாக வும் ஆகிவிட்டது.
இந்நிலையில், அந்தக் கட்டுரையை பிரசுரித்த வெளியீட்டாளர் யஸீகரனே என்பதை வெளிப்படுத்துவதற்கு யஸீகர னின் ஒப்புதல் வாக்குமூலத்தில்தான் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுத் தரப்புக்கு இல்லை.
அந்த விடயத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைத்து நிரூபிப் பதற்கு அரசுத் தரப்புக்கு ஆதாரங்கள் இல்லை என்று கூறு வதை யாருமே நம்பவும் மாட்டார்கள்.
தண்டனைக்குரிய கட்டுரையை வரைந்தவருக்கு என்ன குற்றப் பொறுப்பு உண்டோ, அதே குற்றப் பொறுப்பு அதைப் பிரசுரித்த வெளியீட்டாளருக்கும் உண்டு என்பதும் மறுக்கப்பட முடியாததாகும்.
ஆகவே, பத்திரிகையாளர் திஸநாயகத்தைக் கைதுசெய்து, தடுப்புக் காவலில் வைத்து, அவரிடம் இருந்து பெற்ற வாக்கு மூலத்தை அவருக்கு எதிரான சாட்சியமாகக் காட்டி அவருக்கு இருபது ஆண்டு கால சிறைத்தண்டனை பெற்றுக்கொடுத்த இலங்கையின் சட்டத்துறை, அதே திஸநாயகத்துடன் கைது செய்யப்பட்டு அதேயளவு காலம் தடுத்துவைக்கப்பட்டு, தான் வழக்குத் தொடர்ந்த யஸீகரனை மட்டும் இப்படித் திடுதிப் பென விடுதலை செய்வதற்கு நீதிமன்றத்திடம் சிபார்சு செய் தமை ஏன் என்ற ஒரு கேள்வி எழுகின்றது.
அதுவும் தம்மையும், மனைவியையும் கைதுசெய்து, தடுத்து வைத்திருந்து, சித்திரவதை செய்தார்கள் எனக் குறிப்பிட்டு அந்தச் சட்டவிரோதச் செயற்பாடுகளை ஆட்சேபித்து யஸீகரனும் அவ ரது துணைவியாரும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், உயர்நீதிமன்றத்தால் விசார ணைக்கு ஏற்கப்பட்டு, அது பற்றிய விசாரணை ஆரம்பமாவ தற்கு நான்கு தினங்களுக்கு முன்னர், மேல்நீதிமன்றத்தில் யஸீ கரனுக்கு எதிரான வழக்கு இப்படித் திடீரென வாபஸ் பெறப் பட்டிருக்கின்றது.
அதுவும் மேற்படி பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் தாங்கள் மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் குற்ற வழக்கைத் தாங்கள் வாபஸ் பெறு கின்றார்கள் என்ற உறுதிமொழியைக் காலையில் உயர்நீதிமன் றத்தில் அரசுத் தரப்பினர் தெரிவித்து, அந்த உறுதி மொழியின் பேரில் தமது அடிப்படை உரிமை மீறல் மனுக்களை யஸீகரனும் மனைவியும் உயர்நீதிமன்றத்தில் விலத்திக் கொண்ட நிலையில்
மாலையில் மேல்நீதிமன்றத்தில் யஸீகரனுக்கு எதிரான வழக்கை அரசுத் தரப்பு தான் அளித்த வாக்குறுதிப்படி வாபஸ் பெற்றிருக்கின்றது.
இவற்றையும் உயர்நீதிமன்றத்தில் யஸீகரன் தாக்கல்செய்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் அவர் சார்பில் சமர்ப்பிக்கப் பட்டுள்ள சட்ட மருத்துவர்களின் அறிக்கைகளில், யஸீகரன் தடுப்புக் காவலில் தாக்கப்பட்டமை தொடர்பான அடிகாயங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளமையையும்
கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, உயர்நீதிமன்றத்தில் விவகாரம் விபரீதமாக முன்னர் அதை சமாளிப்பதற்காகப் பேரம் பேசும் எத்தனமாக இரு பக்க வழக்கு வாபஸ் விடயங்களும் அரங்கேறி உள்ளன என்றே கொள்ளத் தோன்றுகின்றது.
அது எப்படியிருந்தாலும், ஒரே விடயத்துக்காக கட்டுரை எழுதியவரை இருபது வருடம் சிறையில் அடைத்துவிட்டு, அக் கட்டுரை அடங்கிய பத்திரிகையைப் பிரசுரித்தவரை தடுப்புக் காவலில் வைத்து, வழக்கும் தாக்கல் செய்த பின்னர் அரை வழியில் திடீரென விடுவிப்பது என்பது ஒரு வகையில் குளறு படி. மறுவகையில் மேற்படி பத்திரிகையாளர் தொடர்பில் காட் டப்படும் பாரபட்சம், ஓரவஞ்சனையும் கூட.
உண்மையில் திஸநாயகத்துக்கு நீதி கிடைப்பது எப்படி என்பதுதான், நேற்று முன்தினம் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப் படையில் அரங்கேறிய நாடகங்களின் பின்னர் பொதுவாக எழும் கேள்வியாகும்.
நன்றி: யாழ் உதயன் ஆசிரியர் தலைப்பு
0 கருத்துரைகள் :
Post a Comment