கருணாநிதியின் தமிழீழக் கனவும் தமிழரின் கசப்பான உண்மைகளும்


அண்மையில் திமுக தலைவர் கருணாநிதி மீள உயிர்கொடுத்த தமிழீழ ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) மாநாடு, இன்று சென்னையில் நடக்கிறது. தமிழீழத்துக்கு ஆதரவு கோரி - தமிழர்களுக்கு தனிநாடு அமைக்க இந்தியாவின், உலகத்தின் ஆதரவைத் திரட்டுவதற்காக இந்த மாநாட்டை நடத்தப் போவதாக கருணாநிதி முன்னதாக அறிவித்திருந்தார். ஆனால் மத்திய அரசின் அழுத்தங்களை அடுத்து, இது ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு மற்றும் அதன் நோக்கம் தொடர்பான வாதப்பிரதிவாதங்களும், சர்ச்சைகளும் பல வாரங்களாக நீடிக்கின்றன. இருந்தாலும் இதனை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் திமுக உறுதியாக உள்ளது. 


திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இந்த மாநாட்டை விரும்பாத போதும், இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கத்தையே மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை வந்தபோதும், டெசோ மாநாட்டை நடத்துவதில் இருந்து கருணாநிதி பின்வாங்கவில்லை. அத்துடன், இலங்கை தமிழர் பிரச்சினைக்கு, ஒரேவழி தமிழர்களுக்கென தனிநாடு அமைப்பது தான் என்று அடிக்கடி அவர் கூறிவருகிறார். கருணாநிதி மட்டுமல்ல, அவரையும் அவரது டெசோ மாநாட்டையும் எதிர்க்கின்ற பலரும் கூட இன்னமும் தமிழீழம் பற்றி அதிகம் பேசுவதைக் காணமுடிகிறது. 



முப்பதாண்டுகளாக நீடித்த தனிநாடு அமைப்பதற்கான ஒரு நீண்டபோர் ஓய்ந்து மூன்றாண்டுகள் கழித்து – மீண்டும் தனிநாட்டுக் கோரிக்கை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் ஒரு வித்தியாசம், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனிநாட்டுக் கோரிக்கை பற்றியெரியத் தொடங்கியது இலங்கையில். இப்போது இந்த விவகாரம் பற்றத் தொடங்கியுள்ளது, இலங்கைக்கு வெளியே. இலங்கையைப் பிரித்து தமிழீழம் அமைப்பது சாத்தியப்பாடான விடயமா என்று கருணாநிதியோ அல்லது இந்த விவகாரத்தை வலியுறுத்தும் வேறு எவருமோ, சிந்தித்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு சிந்தித்திருந்தால், களத்தின் யதார்த்தத்தை புரிந்து கொண்டிருந்தால், கருணாநிதி இந்தக் காரியத்தில் இறங்கியிருந்திருக்கமாட்டார். 



இலங்கையில் தமிழீழத்தைப் பிரித்து – தனிநாட்டை உருவாக்குவதற்கான எத்தகையதொரு அடித்தளமும் தற்போது இல்லை என்பதே உண்மை. 



அடுத்து, இன்றைய புவிசார் அரசியல் புறச்சூழல் தமிழீழத்தை உருவாக்குவதற்கான சாதகத்தன்மையைக் கொண்டுள்ளதா என்பது இன்னொரு விவகாரம். 



1970 களில் இருந்து, தமிழீழத் தனிநாட்டை அமைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பல இயக்கங்கள் இருந்தன. பின்னர், பல இயக்கங்கள் அந்தக் கொள்கையில் இருந்த நழுவிக்கொள்ள, விடுதலைப் புலிகள் இயக்கம் தனித்து நின்று தலைமை தாங்கியது. இப்போது இலங்கையில் விடுதலைப் புலிகளும் இல்லை. ஒரு சிறுநிலப்பரப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான கட்டமைப்பும் கூடத் தமிழரிடம் கிடையாது. இதைவிட, புலிகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தமிழீழப் போராட்டத்தை வெளிப்படையாக முன்னெடுத்துச் செல்லத்தக்க எந்தவொரு அரசியல் இயக்கமும் இலங்கையில் இல்லை. அப்படி எந்த அமைப்பும் இலங்கையில் செயற்படக் கூடிய சூழ்நிலையும் கிடையாது. இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன. தமிழீழம் கோரும் போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு, அந்தக் கோரிக்கையை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்லத்தக்க அமைப்பு ஒன்று மிகவும் முக்கியம். அத்தகைய அமைப்பு ஒன்று இல்லாமல் ஒருபோதும், அந்தக் கோரிக்கையை வலுப்படுத்த முடியாது. 

அதைவிட, தமிழ்நாட்டிலோ, அல்லது ஏனைய வெளிநாடுகளிலோ இருந்து கொண்டு தமிழீழத் தனிநாட்டுக் கோரிக்கையை வலியுறுத்துவதும் குரல் எழுப்புவதும் அவ்வளவாக எடுபடாது. விடுதலைப் புலிகள் பலமாக இருந்தபோது கூட, ஒரு கட்டத்தில் தமிழீழக் கோரிக்கை என்பது புலிகளின் விருப்பமாகவே சர்வதேசத்தினால் பார்க்கப்பட்டதேயன்றி, தமிழ்மக்களின் அரசியல் அபிலாசையாக அது பார்க்கப்படவில்லை. அந்தளவுக்கு புரிதல் குறைபாடு ஒன்று காணப்பட்டது. தனிநாட்டுக் கோரிக்கையை இலங்கையில் உள்ள தமிழ்மக்கள் வலியுறுத்தும் போது தான், அதனை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ளும். முன்னரைப் போன்று, இந்தக் கோரிக்கையும், அதற்கான எந்தவொரு வழியிலான போராட்டமும் இலங்கையில் வலுப்பெறாத சூழலில், சர்வதேசம் இதுபற்றிக் கண்டுகொள்ளவே மாட்டாது. அடுத்து, தற்போதைய புவிசார் அரசியல் புறச்சூழல், தமிழீழத் தனிநாட்டை அமைக்க சாதகமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இன்றைய உலக அரசியல் சூழலில் உலகில் புதிய நாடுகளின் பிறப்பை எந்தவொரு நாடும் விரும்பாத சூழலே உள்ளது. இதற்கு தமிழீழம் ஒருபோதும் விதிவிலக்காகி விடமுடியாது. 



உலக வல்லரசான அமெரிக்காவும், பிராந்திய வல்லரசான இந்தியாவும், இலங்கை பிளவுபடுவதற்கோ, அல்லது தமிழீழத் தனிநாடு உருவாவதற்கோ ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அண்மையில் இந்திய உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கையில் தமிழீழம் அமைவது இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்தானது என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவும் கூட இலங்கை பிளவுபடுவதை விரும்பவில்லை என்று பலமுறை தெளிவாக கூறிவிட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியுடன் புதிய புதிய நாடுகளை உருவாக்கும் காலத்துக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. பனிப்போர் காலத்து சூழல் இப்போது இல்லை. வல்லரசுகளின் அப்போதைய இரு துருவ நிலை தனிநாடு கோரிய ஆயுதப் போராட்டங்களுக்கு சாதகமாக இருந்தது. இப்போது அந்தநிலை இல்லை. இப்போது, பொருளாதார ரீதியான நலன்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. நீதி, நியாயம், உரிமைகள் எல்லாம் அதற்கு அடுத்தபட்சம் தான். 

இலங்கையில் உள்ள தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையில் நியாயம் இருப்பதை, உணர்ந்தாலும் கூட, அதை உலகம் ஏற்காது. தமிழீழம் உருவாவதை அண்டை நாடான இந்தியாவே, தனது இறைமைக்கு ஏற்படும் ஆபத்தாக பார்க்கும் போது, ஏனைய நாடுகள் அதனை அங்கீகரிக்காது. உலக நாடுகளின் நிலைப்பாடுகள், தமிழீழம் கோரும் போராட்டத்துக்கு சாதகமானதாக இல்லை என்பதே உண்மை. இத்தகையதொரு புறச்சூழலில், இலங்கையில் தமிழருக்கெனத் தனிநாட்டை கருணாநிதியாலோ அல்லது வேறொருவராலோ தற்போதைக்கு உருவாக்கிவிட முடியாது. தமிழருக்கென தனிநாடு ஒன்றை உருவாக்கும் போராட்டம் வெற்றி பெறுவதற்காக இருந்த வாய்ப்புகள், 2009 மே 18ம் திகதியுடன் கருகி விட்டன. அதற்காக, தமிழீழம் என்பது செத்துப் போன கனவு என்ற இலங்கை அரசின் கருத்துடன் ஒத்துப்போக முடியாது. தமிழீழம் அமைவதை – தமக்கென தனிநாடு அமைவதை பெரும்பாலான தமிழர்கள் வெறுக்கமாட்டார்கள் என்பதே உண்மை. 


தமிழீழத்தை அமைப்பதற்கான நடைமுறைச் சாத்தியமான சூழல் ஒன்று இல்லாத நிலையில்- இதற்குத் தலைமை தாங்குவதற்கான ஒரு தலைமைத்துவம் இல்லாத நிலையில், இந்தக் கோரிக்கை மிகப் பலவீனமான நிலையில் உள்ளதாகவே கருதவேண்டும். இதுமட்டுமன்றி தனிநாட்டுக் கோரிக்கையை வெளிப்படையாக வலியுறுத்தும் மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்டமைப்பும் கிடையாது. இவை ஒன்றுமேயில்லாமல், வெறும் கையால் முழம் அளக்க ஆசைப்படுகிறார் கருணாநிதி. தமிழீழம் என்பது தமிழர்களின் அபிலாசையாக இருந்தாலும் கூட, அதை அமைப்பதற்கான புறச்சூழல் சாதகமாக அமைய வேண்டியது அவசியம். அது இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்ற பாடத்தை கற்று இப்போது தான் மூன்று ஆண்டுகளாகின்றன. கருணாநிதிக்கு வேண்டுமானால் இது மறந்து போயிருக்கலாம். ஆனால், அவ்வளவு இலகுவில் அந்தக் கசப்பான பாடத்தை தமிழர்களால் மறந்து போக முடியாது. 

இன்போ தமிழ் குழுமம் 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

2 கருத்துரைகள் :

  1. ஈழ்த்திற்கு உண்மையாகப் பாடு படுபவர்கள் பெயருக்காகவோ, புகழுக்காகவோ எதுவும் செய்வதில்லை ! யார் பாராட்டுகின்றார்கள், யார் எதிர்க்கின்றார்கள் என்பது பற்றியும் கவலைப் படுவதில்லை.
    அவர்களால் முடிந்ததைத் தொடர்ந்து செய்து கொண்டுள்ளார்கள்.
    தமிழன் ஒவ்வொருவரும் அடுத்தவரைக் குறை சொல்லும் முன் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டால் ஈழம் கிடைப்பது உறுதி !

    இணையத்தில் வெறும் வார்த்தைகளை வாரி வழங்கும் " மேல் தாவிகள்" கொஞ்சம் பெரிய கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்த்துக் கொள்ள மிக்க அன்புடன் வேண்டுகின்றேன்.

    வாருங்கள், முடிந்தால் வந்து உழைப்பவர்களுடன் சேர்ந்து ஒரு துரும்பையாவது எடுத்துப் போடுங்கள், வர வேற்போம் ! நன்றி சொல்வோம் !

    ReplyDelete
  2. விடுதலைப்புலிகளின் கால கட்டத்தில் ஆயுதம் தாங்கிய ராணுவத்திறனுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது.அரசியல் சார்ந்த நகர்வுகளாக பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றாலும் அவை தோல்வியில் முடிந்தன.கிளிநொச்சி நிருபர்கள் கூட்டம் கூட விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு பற்றிய அரசியல் வெளிப்பாடாகவே இருந்தது என்ற போதிலும் தொடர் உலக ஊடக ஒருங்கிணைப்பு இல்லை.

    இன்று ஆயுதப்போராட்டம் மரணித்துப் போனாலும் கூட தமிழீழம் குறித்த தேவையாக இலங்கை அரசின் போர்க்குற்றங்கள்,தமிழ் கலாச்சாரத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சிகளாய் புத்த விகாரங்கள்,சிலைகள்,பூகோள மக்கள் தொகையை மாற்றும் முயற்சிகள் இவற்றிற்கும் மேலாக சம உரிமையற்ற அரசியல் சட்டம் என பல காரணங்கள் இருக்கின்றன.

    முன்பு மக்கள் சார்ந்த போராட்டக்குரல்கள் ஒலிப்பதற்கு மாறாக நிலத்தில் குரல் கொடுக்க இயலாத ராணுவ சூழலில் புலம்பெயர்ந்தோர் மற்றும் தமிழக குரல்கள் ஒலிக்கின்றன.இருக்கும் ஒரே முக்கிய பிரச்சினை இணைந்து குரல் கொடுக்க இயலாமல் தனித்தனி தீவுகளாய் குரல்கள் எழுவதாலும்,இலங்கை அரசின் வலுவான போருக்குப் பின்பான ராணுவ நிலையாலும் தமிழீழம் சாத்தியமா என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது.

    பொருளாதார ரீதியான சுயநலன்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் இருந்த போதிலும் இப்போதைய,இனியுமான சீனாவின் இலங்கை மீதான ஆளுமை இந்தியாவின் இறையாண்மையை மாற்று வழியில் பரிசோதிக்கும் சூழல்களும் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.இலங்கையின் தற்போதைய சூழல் சீனா,பாகிஸ்தான்,இலங்கை கூட்டு முயற்சிகளுக்கும்,இந்தியாவிற்கான எதிரான சூழலை உருவாக்கும் என்பதையெல்லாம் இந்தியா யோசிக்காமல் இருக்காது.இலங்கை அரசு இந்தியா மீது கொள்ளும் நட்பை பொறுத்தும்,விரோத போக்கை பொறுத்தும் களநிலைகள் அமையும் சாத்தியங்கள் இருக்கின்றன.

    மக்களாட்சி ஜனநாயக வழியில் தமிழகத்தின் குரல் முக்கியமான ஒன்று என்பதால் தமிழகத்தின் குரலை புறக்கணித்து விட்டு மத்திய அரசு தொடர்ந்து செயல்பட இயலாது.

    மறுபடியும் டெசோ கலைஞர் கருணாநிதியின் இன்னுமொரு கரும்புள்ளியா அல்லது செய்த தவறுக்கான பிராயச்சித்தமாக அமையப்போகிறதா என்பதை வரும் காலம் மட்டுமே சரியாக சொல்லும்.

    தொடர்ந்து எழும் தமிழீழ குரலைப்பொறுத்தும் அல்லது சோர்ந்து போய் சம உரிமை இல்லாமல், இருப்பதோடு வாழ்ந்து பார்ப்போம் என்ற தெம்பில்லாத மனநிலையைப் பொறுத்தும் கள நிலைகள் சாதகமாக இல்லையென்ற தற்போதைய உலக அரசியல் சார்ந்து சிந்திப்பதைப் பொறுத்தும் எதிர்கால தமிழீழ கனவு அமைவதும்,சிதைவதும் நிகழும்.


    ReplyDelete