காலத்தால் அழியாத காவிய நாயகர்கன் லெப் கஜன்


தமிழீழம் என்ற சொல்லுக்கு விடைகண்டு தமிழரின் வரலாற்றை புரட்டியவர்கள், அரசியலாக இருந்த தமிழீழத்தை, எம்கண்முன்னே காட்டி மறைந்தவர்கள், காலத்தால் அழியாதவர்கள், தமிழீழத்தின் கலங்கரை விளக்குகள், வாழ்கின்ற எம் முன் மறைந்து நிற்கின்ற இவர்களின் நினைவை அழிப்பதற்கு ஆக்கிரமிப்பாளர் முயன்றால் அது நிச்சயம் தோற்றுப்போகும்.
உண்மை, சத்தியம், உரிமை என்றும் அழியாது.வரலாற்றைப் புதைத்து அதன்மேல் வாழ நினைப்பவர்கள் ஒரு போதும் வரலாற்றில் நிலைக்கமாட்டர்கள்.
விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் பல மூத்த மாவீரர்களை மட்டக்களப்பு மண் பெற்றிருக்கின்றது. இவர்கள் ஒவ்வொருவருடைய போராட்டமும், பல வரலாற்று நிகழ்வுகளை எமக்குத் தந்துள்ளது.
வீரத்துடன், தன்மானத்துடன் இவர்கள் போர்க்களத்தில் நின்றதைப் பார்க்கின்றபோது இவர்களின் இழப்பு எமக்கு பேரிழப்பாக அமைந்ததை நாம் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.
அழகரத்தினம் மணிவண்ணன் ( லெப்.கஜன்) மட்டக்களப்பு நகரத்தின் மத்தியபகுதியில் புளியந்தீவு என்னுமிடத்தில் 19 .06 . 1960 அன்று பிறந்தார். இவருடைய தாயார் ஜீவானந்தம் அழகரத்தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார ஊழியராக பணியாற்றியிருந்தார்.
இவர் 1984 .10 மாத காலப்பகுதியில் விசேட சிங்கள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறுக்கே வளைந்து, நெளிந்து ஓடுகின்ற வாவியினால் இயற்கை வனப்புடன் அழகாக காட்சியளிக்கும் தமிழரின் சொந்த பூர்வீக நிலமாகவும் விளங்குகின்றது.
வாவியினால் சூழ்ந்துள்ள புளியந்தீவிற்குள் நுழைவதற்கு ஏனைய பகுதிகளிலிருந்து கோட்டமுனை பாலத்தினூடகவே செல்லமுடியும். புளியந்தீவில்தான் மாவட்டத்தின் ஆயர் இல்லம், போதனா வைத்தியசாலை, பிரபல்யமான தேசிய கல்லூரிகள், மாவட்ட ஆட்சியர் செயலகம், நீதிமன்றம், பொது விளையாட்டு மைதானம்,பேரூந்து நிலையம், உட்பட கல்வி ,நீர்ப்பாசனம், மாநகரசபை போன்றவற்றின் பணிமனைகளும் அமைந்து ,த்தீவிற்கு சிறப்பைக் கொடுக்கின்றது.
தீவின் மத்தியில் உயரமான பகுதியில் அமைந்திருக்கின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயமும் அதனையண்டிய மக்களின் வாழ்விடங்களும் பழமையை எமக்கு பறைசாற்றுகின்றது. இவ்வாலயத்தின் அருகாமையில் மணிவண்ணனின் (லெப். கஜன்) வீடும் அமைந்துள்ளது.
இத் தீவில் அரசியலோடு இணைந்ததாக தீவிரமாக பல இளைஞர்கள் செயல்பட்டபோதும் போராளியாக களமிறங்கியவர்களில் ஒருவரும் இத்தீவில் முதல் மாவீரராக வரலாற்றில் பதிவானவரும் லெப். கஜன் என்றே எமக்கு எடுத்துக் கூறக்கூடியதாக இருக்கின்றது.
1983 ம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்ரீலங்காவின் தலைநகர் உட்பட பல பகுதிகளில் தமிழின அழிப்பு நடவடிக்கையை மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் சிங்கள அரசியல் வாதிகள் மேற்கொண்டனர்.
ஒவ்வொரு மாவட்டத்தலைநகரிலும் நேரம் குறித்து சிங்களக் காடையர்கள் தமிழின அழிப்பை நடத்தியதிலிருந்து சிங்கள அரசியல் வாதிகளின் பங்கை எம்மால் உறுதியாகத் தெரிவிக்கமுடியும்.
இதனால் எல்லா இடங்களிலும் தமிழர்களின் பள்ளிக்கூடங்கள் தமிழ் ஏதிலிகள் தங்குமிடங்களாக மாறின. தமிழர்கள் இலங்கைத் தீவில் தங்களின் வாழ்வுரிமை பற்றி வாய் திறக்கக்கூடாது. என்ற அடிப்படையில் மேற்கூறியவற்றை சிங்கள அரசு செய்து முடித்ததனால் “கறுப்பு ஜுலை” என்று இன்னும் எம் மக்களால் நினைவு கூரப்படுகின்றது.
ஆக்கிரமிப்பு மூலம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி, சொந்த மண்ணில் தமிழர் சிறுபான்மையராக வாழும் நிலையை உருவாக்குவதன் மூலம் தமிழ்த் தேசிய இனம் தன்னாட்சியுரிமையுடைய இனம் என்பதை இல்லாமல் செய்வதற்கு திட்டங்களை செயல்படுத்திய சிங்கள அரசு இனஅழிப்பு நடவடிக்கை மூலம் பயத்தை உண்டு பண்ணுவதற்கு தீவு தழுவிய இனக்கலவரத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தமிழ் இளைஞர்கள் மேலும் தீவிரமானர்கள். தமது கைகளில் ஏந்தப்படும் போர்கருவி எமது மக்களைப் பாதுகாக்கும் என்பதில் அசையாத நம்பிக்கையும் கொண்டிருந்தனர்.
தமிழீழமெங்கும் இளைஞர்களின் எழுச்சி சிங்கள அரசுக்கு பெரும் சவாலாக மாறியது மட்டக்களப்பில் பல இடங்களிலிருந்து தமிழ் இளைஞர்கள் ஒன்றினைவை ஏற்படுத்தினர்.
இவ்வாறு சில இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கியதுதான் “கிழக்கின் குழு” இக் குழுவில் லெப். கஜன், லெப். பயஸ், கப்டன் முத்துசாமி உட்பட பலர் இணைந்திருந்தனர். இக் குழுவினர் ஆயுதங்களைப் பெற்றுக் கொள்வதற்காக முதல் நடவடிக்கையொன்றை திட்டமிட்டனர்.
புளியந்தீவில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட கோட்டையினுள் மாவட்ட செயலகம் இயங்குகின்றது இச் செயலகத்தினுள் ஒரு மறைவிட அறையில் பல வேட்டைத்துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்த இக்குழுவினர் மிகவும் சிறந்த முறையில் திட்டமிட்டு அனைத்து துப்பாக்கிகளையும் அங்கிருந்து கைப்பற்றினர்.
இச் செயலில் லெப். கஜன் அவர்களின் பங்கு முக்கியமாகவிருந்தது. அதுமட்டுமல்லாமல் மட்டக்களப்பு மாவட்ட பெருந்தெருக்கள் திணைக்களத்தின் களஞ்சிய அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வெடிக்க வைக்கும் சாதனம் (exploder) ஒன்றையும் எடுத்தனர்.
இக் குழுவினரின் சிந்தனையில் போர்க் கருவியினாலே தமிழ்மக்களைப் பாதுகாக்கமுடியும் என்ற உறுதி ஒவ்வொருவருடைய மனதிலும் ஆழமாகப் பதிந்ததனால் தங்களின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தினர். விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைவதற்கு முன்பே லெப். கஜன் போன்றோர்கள் தங்கள் பாதையைத் தீர்மானித்து விட்டனர்.
பெரிய பலமான அமைப்பை தமிழீழமெங்கும் இணைந்ததாக உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, தமிழ் மக்கள் விடுதலையைப் பெறமுடியுமென்ற நிலையில் உறுதிதளராத, இலக்குத் தவறாத விடுதலைப் பயணத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும்,அதன் தலைவர் பிரபாகரன் அவர்களையும் தேர்ந்தெடுத்தனர்.
இதனால் 1983 ம் ஆண்டு இறுதிப்பகுதியில் விடுதலைப் புலிககள் இயக்கத்துடன் மோகன் என்று அழைக்கப்படும் மணிவண்ணன் இணைந்து கொண்டார்.
குடும்பத்தில் ஒரு மகனான மணிவண்ணன் உறவினர்கள், அயலவர்களுடன் மிகுந்த பாசத்துடன் பழகும் பண்பான இளைஞராகவும் அவ்வூர் மக்களால் மதிக்கப்பட்டார்.
தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கியதுடன் இலத்திரனியல் உபகரணப் பொருட்கள் திருத்துவதிலும் திறமையானவராக இருந்தார்.
சைவப்பற்று, தமிழ்ப்பற்றுடன் வாழ்ந்து அனைவருக்கும் உதவிபுரியும் ஒருவராக காணப்பட்ட மணிவண்ணன், பொதுநலத்தோடு சார்ந்த புனிதமான விடுதலை இயக்கத்தோடு இணைந்து கொண்டது தவிர்க்க முடியாதது.
புளியந்தீவில் இருந்து முதல் புறப்பட்டாலும், ஒரு பண்பான, எல்லோராலும் விரும்பப்பட்ட ஒரு இளைஞரை போராளியாகப் பெற்றதிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கமும், மட்டக்களப்பு மக்களும் பெருமை கொண்டனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இந்தியாவில் நடந்த மூன்றாவது பாசறையில் பயிற்சியைப் பெற்றுக்கொண்ட லெப்.கஜன் தாயகம் நோக்கிய பயணத்தில் முதல் கால்வைத்தது தமிழீழத்தின் யாழ்ப்பாண மண்ணில்.
காலத்தின் ஒரு பதிவாக, வரலாற்றில் சாதனை வீரராக, தலைவரின் அன்புத் தம்பியாக விளங்கிய தளபதி கேணல் கிட்டு அவர்களின் திட்டமிடலிலும், கட்டளையிலும் தகர்க்கப்பட்ட யாழ் சிங்கள காவல் நிலைய அழிப்பிலும் லெப். கஜன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
அக்காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் அழிக்கப்பட்ட சிங்கள காவல் நிலையங்களில் யாழ் காவல் நிலையம் ஆளணி கூடியதாகவும், தமிழின அழிப்பில் ஈடுபட்ட சிங்களக் காவலர்களைக் கொண்டதாகவும் அமைந்திருந்தது. தளபதி கிட்டு தமிழீழத்தின் தாக்குதல் தளபதியாக 1984 ம் ஆண்டு காலப்பகுதியில் செயல்பட்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் மீட்கப்பட்ட தமிழர் நிலமாகவும் யாழ்ப்பாணம் இருந்ததற்கு தளபதி கிட்டு முக்கிய காரணமாகவிருந்தார்.
விடுதலைப் போரின் எழுச்சியிலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலமாக யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பட்டிலிருந்ததை குறிப்பிட முடியும். தமிழீழத் தனியரசின் நிருவாகச் செயல்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட இடமாகவும் இது அமைந்திருந்தது.
யாழ்ப்பாண சிங்கள காவல் நிலையத் தாக்குதல் நடந்த வேளையில் மக்களுக்கும் போராளிகளுக்கும் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தவிடயம் என்னவென்றால், இரண்டு இடங்களில் தளபதி கிட்டு அவர்கள் ஒரேநேரத்தில் நிற்பதான செய்தி, இச் செய்திக்குரிய விளக்கத்தை பின்பு எம்மால் அறியக்கூடியதாகவுமிருந்தது.
லெப். கஜன் அவர்களும், தளபதி கிட்டு அவர்களும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருந்ததனால் அச் செய்தி எங்கும் பரவியிருந்தது.
இப்பொழுது லெப்.கஜன் அவர்களின் உருவமைப்புப் பற்றி அனைவரும் விளங்கிக் கொள்ளக் கூடியதாகயிருக்கும். இவ்வாறான ஓர் போராளி சிறந்த, திறமையானவராக இருந்ததை எண்ணுகின்றபோது விடுதலைப் பயணத்தில் நீண்டகாலம் பயணித்திருக்க கூடாதா என்று எண்ணத் தோன்றுகிறது.
தாய் மண்ணில், பிறந்த மண் நோக்கிய பயணத்தில் போராளிகள் நின்றபோது லெப்.கஜன் அவர்களும் இணைந்திருந்தார். கைக்குண்டுத்தாக்குதல், சிங்கள காவல் நிலைய தாக்குதல், கண்ணிவெடித் தாக்குதல், சிங்கள, இராணுவக் காப்பரண்கள் தாக்குதல், சிறிய முகாம் தாக்குதல், வழிமறிப்புத் தாக்குதல்,இராணுவ முகாம் தாக்குதல், இராணுவத்தளத் தாக்குதல், கடலில் தாக்குதல், விமானக் குண்டுத் தாக்குதல் என விடுதலைப்போரில் தாக்குதல் விரிவாக்கத்தை ஏற்படுத்திய விடுதலைப் புலிகள் இயக்கம் இழந்த தாய் நாட்டை மீட்டெடுத்து தனியரசு நிறுவியதை வரலாற்றில் பார்த்திருக்கின்றோம்.
இவ்வாறு எமது தேசிய விடுதலை இயக்கம் வளர்வதற்கு அடித்தளமாகவிருந்தவர்கள் லெப்.கஜன் போன்றவர்கள் என்றால் மிகையாகாது. அடிமைப்பட்டு, அடங்கிப் போய்க்கிடந்த தமிழர்களை தட்டியெழுப்பியவர்கள், உறுதிதளராத வீரம் எம்மை விடுதலைபெற்றவர்களாக மாற்றியமைக்கும் என்பதில் அச்சமின்றி களத்தில் நின்றவர்கள்.
எம்மண் பெற்றெடுத்த மூத்த மாவீரர்கள். இவர்களுக்கு நாம் தலை வணங்குகின்றோம். வீரம், மானம் என்பவை ஒவ்வொரு தமிழருக்கும் தமது இரண்டு கண்களுக்கும் ஒப்பானவையாகும். 
இவ்வகையில் வாழ்ந்து, இ களமாடி வீழ்ந்தவர்கள் எப்போதும், எந்த இடத்தில் பிறந்தாலும், எந்த இடத்தில் வாழ்ந்தாலும், தமிழீழத் தாய் மண் என்ற அடிப்படையில் போராட்டத்தில் கலந்து நின்றவர்கள் அநேகமாக முழுத் தாய் நாட்டிலும் இவர்களின் வீரம் வெளிப்பட்டது.

லெப்.கஜன் தனது விடுதலைப் பயணத்தில் தமிழீழத் தலைநகர் அமைந்துள்ள திருகோணமலை மாவட்டத்தில் தடம்பதித்த வேளையில் அங்கு நடந்த பாரிய தாக்குதலில் பங்குகொண்டார்.
அக்காலத்தில் தமிழீழத்தில் எந்த இடத்தில் தாக்குதல் நடந்தாலும் எல்லா மாவட்டத்தையும் சேர்ந்தவர்களும் பங்கு கொள்ளுவார்கள். இப்படித்தான் குச்சவெளி என்னும் கடற்கரை ஊரில் சிங்கள அரசினால் அமைக்கப் பட்டிருந்த காவல்நிலையம் மீதான தாக்குதலும் நடந்தது.
நன்றாக வேவுபார்க்கப்பட்டு எடுத்த தகவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திட்டமிடலில் லெப். கேணல் சந்தோசம் அவர்களின் தலைமையில் இழப்புக்களின்றி வெற்றிகரமாக முடிந்த இத் தாக்குதலில் சிறப்பான அம்சம் என்னவெனில் குச்சவெளி கடக்கரையில் சிங்கள கடற்படை முகாமும் இருந்தது.
இத் தாக்குதலின்போது காவல்நிலையத் தாக்குதலுக்கு உதவியாகப் புறப்பட்ட கடற்படையினர் வரமுடியாதவாறு தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆர்.பி.ஜி உந்துகணைத் தாக்குதலினால் திணறிய கடற்படையினர் முகாமுக்கு திரும்பினர்.
ஏராளமான ஆயுதங்கள் அள்ளப்பட்டும் பல காவல் துறையினரும் அழிக்கப்பட்டனர். வெற்றிகரமாக சிங்கள காவல் நிலையங்கள் அழிக்கப்படுகின்ற போராட்ட வளர்ச்சியை இத்தாக்குதலின் மூலம் பெற்றிருந்தனர். மூத்த மாவீரர்களாக இனங்காணப்படுகின்ற பலர் இவ்வாறான தாக்குதலிலும் ஈடுபட்டு சாவிலும் சரித்திரம் படைத்தனர்.
இவர்கள்தான் தமிழீழத்தை காத்து நின்ற எமது காவல் தெய்வங்களாகும். வாழ்வு மேம்பாட்டிற்காக போராட்டத்தை பயன்படுத்தியவர்களுக்கு மத்தியில் மூத்த மாவீரர்களான இவர்கள் வாழ்வை அர்ப்பணித்து விடுதலைப் போராட்ட இயக்கத்தை விருட்சமாக வளர்த்தெடுத்தனர்.
இத்தாக்குதலில் லெப். கேணல் குமரப்பாஇ மேஜர் அப்துல்லா, தளபதி அருணா போன்ற முன்னணி வீரர்களும் ஈடுபட்டனர்.சிங்கள கடல்படைமுகாம் அருகிலிருந்தும் அவர்கள் வெளிவர முடியாதவாறு தடுத்து நிறுத்தி தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய மூத்த மாவீரர்களின் வீரம் தேசியத் தலைவருக்கு நம்பிக்கையைக் கொடுத்திருந்தது.
1985 ம் ஆண்டு காலப்பகுதியில் மூதூர்ப் பகுதியின் தளபதியாக மூத்த மாவீரர் மேஜர் கணேஷ் பணியிலிருந்தார். தேசியத் தலைவரினால் மிகவும் விரும்பப்பட்டவர்களில் கணேஷ் அவர்களும் ஒருவராவர். கந்தளாய் என்னும் ஊரைச் சேர்ந்தவர். பல குறிப்பிடத்தக்க வீரமான நிகழ்வுகளை, நாம் இன்று நினைவு கூருமளவுக்கு அன்று செய்திருந்தார்.
இவருடைய வேண்டுகோளின்படி பிறந்த மண் நோக்கிய பயணத்திலிருந்த லெப். கஜன் மூதூரில் தங்கியிருந்த காலத்தில் மூதூர் தளபதி கணேஷ் அவர்களின் திட்டமிடலில் ஒரு கண்ணிவெடித் தாக்குதல் பட்டித்திடல் என்ற பழந்தமிழர் ஊரில் நடந்தது.
இத் தாக்குதலில் கண்ணிவெடி வெடிக்கச் செய்யும் ஆளியை அழுத்தி துல்லியமாக, குறித்த நேரத்தில் தாக்குதல் வெற்றிகரமாக அமையவும், இத் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்ட படையினரிடமிருந்து போராட்ட வரலாற்றில் கனரக ஆயுதமான 303 L.M.G பெற்றுக் கொண்டதற்கு காரணமாகவிருந்த லெப். கஜன் பாராட்டுக்குரியவரானார்.
இக்காலத்தில் மட்டக்களப்பில் உணர்வுமிக்க இளைஞர்கள் குழுவாக இணைந்து அரசுக்கெதிரான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இதில் வர்க்கஇ மத வேறுபாடுகளின்றி இளைஞர்கள் களத்தில் குதித்தனர்.
தமிழ் மக்களின் தமிழ் தேசிய இனத்தின் பாதுகாப்பும், விடுதலையும் தங்களின் இலட்சியம் என்றடிப்படையில் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். இந்தவரிசையில் சில இளைஞர்கள் இணைத்து உருவாக்கியதுதான் “நாகபடை” ஆகும்.
இப்படையில் செயல்பட்ட முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த, ஓட்டமாவடியை பிறப்பிடமாகக் கொண்ட ஜுனைதீன் என்னும் பெயருடன் அழைக்கப்பட்டு, பின்பு தேசிய விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து 30.11.1985 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப். ஜோன்சன் அவர்களை எண்ணிப் பார்க்கின்றோம்.
லெப் ஜோன்சன் விடுதலைப் புலிகளின் இந்தியாவின் மூன்றாவது பாசறையில் பயிற்சி பெற்று தாய்நாடு திரும்பி மட்டக்களப்பில் செயல்பாட்டில் இருந்த வேளையில் திம்பு பேச்சுவார்த்தை யுத்த நிறுத்தத்தின்போது ஆயித்தியமலை என்ற ஊரில் வைத்து ஏறாவூர் சிங்கள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இவர் யார் என்று தெரிய வந்தபோது ஸ்ரீலங்காவின் பெரிய இராணுவ முகாமான பனாகொடையில் தடுத்து வைத்தனர். அங்கிருந்து தப்பியோட முயற்சி எடுத்தபோது இராணுவத்தினரால் சுடப்பட்டு வீரச்சாவு அடைந்தார்.
இவ்வாறு மட்டக்களப்பில் விடுதலைக் களத்தில் நிமிர்ந்து நின்ற இளைஞர்கள் பலர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டனர் என்பதைப் பதிவு செய்யகின்றோம்.
விடுதலைப் புலிகள் ஆரம்ப காலத்தில் மட்டக்களப்பு வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள காடுகளில் தங்கியிருந்தனர். ஏறாவூர் சிங்கள காவல் நிலையத் தாக்குதல் முடிவடைந்த பின்னர் சிங்கள அதிரடிப் படையினரின் நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டன.
விடுதலைப் புலிப் போராளிகளும் தமது தங்குமிடங்களை மாவட்டத்தின் பல இடங்களுக்கு விரிவுபடுத்தினர். மடடக்களப்பு வாவிக்கு மேற்கு புறமாக அமைந்துள்ள வயல்சார்ந்த சிற்றூர்கள், மாவட்டத்தின் பெருநிலப் பரப்பாகும்.
இப் பெருநிலப்பரப்பில் தமிழரின் பூர்வீகத்துடன் தொடர்புபட்ட தான்தோன்றிஸ்வரர் ஆலயமும் கொக்கட்டிச்சோலை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. எமது வரலாற்று பாரம்பரிய தாயகத்தை இவை எமக்கு உணர்த்துகின்றது.
இன்று இருக்கின்றது போல ஒரு நாடாக சிங்களவர்களின் ஆட்சியில் எமது தாய்நாடு உட்பட்டு இருந்ததாக எந்த வரலாறும் கூறவில்லை மாறாக அன்னிய ஆக்கிரமிப்புகளுக்கு முன்பு எமது தாய்நாட்டை நாமே ஆட்சிசெய்து வாழ்ந்தோம் என்பதுதான் உண்மையான ஒன்றாகும்.
இப் பகுதியில் வவுணதீவு வட்டத்தில் குறிஞ்சாமுனை என்ற ஊரை அண்டிய வயல் சார்ந்த காட்டுப்பகுதியில் லெப்.கஜன் போராளிகளுடன் தங்கியிருந்தார்.
இக்காலத்தில் அவ்வூர் மக்களால் மிகவும் விரும்பப்பட்ட போராளியாக வாழ்ந்தது மாத்திரமல்லாமல் தன்னுடன் இணைந்திருந்த போராளிகள் அனைவரும் அம்மக்களால் விரும்பப்படுமளவுக்கு சிறந்த பொறுப்பாளராக காணப்பட்டார்.
இந்த வட்டத்திலுள்ள அனைத்து ஊர்களும் சிறியதாக இருந்தபோதும் போராளிகளை நேசிக்குமளவுக்கு லெப். கஜன் அவர்களின் வருகை அமைந்திருந்தது. அக் காலத்தில் வாழ்ந்த மக்கள் லெப்.கஜன் அவர்களின் நினைவுகளை இன்னும் பகிர்ந்து கொள்ளுகின்றனர்.
மக்களின் விடுதலைக்காக களத்தில் நின்ற மாவீரர்கள் மக்களால் மதிக்கப் பட்டதற்கு சுயநலமற்ற போராளி வாழ்க்கையே சான்றாக அமைந்தது.
லெப்.கஜன் மட்டக்களப்பு மண்ணில் கால்பதித்திருந்த வேளையில் இவரிடமிருந்த வீரம் இருமடங்கானது வாகரையில் இருந்து ரோந்து செல்லும் சிங்கள இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலுக்கு திட்டமிட்டனர்.
காயன்கேணி என்னுமிடத்தில் வைத்து 17.08. 1985 அன்று குமரப்பா தலைமையில் நடந்த இத் தாக்குதலில் லெப். கஜன் கண்ணி வெடி வெடிக்கச் செய்து தாக்குதலை ஆரம்பித்து வைத்தார். இத் தாக்குதலில் முன்னணி வீரமறவர்கள் சிலர் வெளிப்பட்டனர்.
மட்டக்களப்பு தாண்டவன் வெளியைச் சேர்ந்த லெப். கலா (ச.ஜெயராஜ்), கல்லடியைச் சேர்ந்த லெப்.ரவிக்குமார் (நாகேஷ் யோகராஜா) இருவரும் சண்டைக்கான வீரர் என தளபதியால் அடையாளப்படுத்தப்பட்டனர்.
மட்டக்களப்பு ஏறாவூர் ஊரில் சிங்கள காவல்நிலையம் மீதான தாக்குதல் குழுவில் ஈடுபட்டு 02 . 09 . 1985 அன்று நடந்த தாக்குதலில் லெப். கஜன் முன்னணி வீரர்களில் ஒருவராக தளபதியால் இனங்காணப்பட்டர்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் குறுகியகாலம் தாய்மண்ணில் போராளியாக நின்ற லெப். கஜன் மாங்கேணி இராணுவ முகாம் தாக்குதலுக்கு செல்லும் வழியில் கிரான் வடமுனை சாலையில் புலிபாய்ந்தகல் என்னும் ஊருக்கருகாமையில் கோராவெளி என்னும் ஊரில் கப்டன் . ஜிம்கலி அவர்களின் பொறுப்பில் இருந்த விடுதலைப் புலிகளின் மறைவிட முகாமில் தங்கியிருந்த வேளையில் 27 . 06 .1986 அன்று அதிகாலையில் சிங்கள இராணுவத்தினரின் சுற்றி வளைப்புத் தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.
இவருடன் கப்டன் ஜிம்கெலி (சின்னப்பிள்ளை நடராசா), உட்பட வீரவேங்கை சிந்து (சித்திரவேல் ஜெயாஜ்) கிரான், வீரவேங்கை.சரவணன் (பிள்ளையான் சௌவுந்தரராஜன்) கிரான், வீரவேங்கை கங்கா (நாகலிங்கம் கங்காதரன்) கிரான், வீரவேங்கை குமார் (வில்லியம் அருள்நாதன்)ஏறாவூர், வீரவேங்கை லோகேஷ் (நவரத்தினம் லோகேந்திரராஜா) முறக்கொட்டன்சேனைஇ, வீரவேங்கை ரவி (பொன்னையா தருமராஜா) கறுவாக்கேணி வாழைச்சேனை, வீரவேங்கை சைமன் (மயில்வாகானம் மாதவன்) கிரான், வீரவேங்கை ரொஷான் (ஐயாத்துரை அமிர்தநாதன்) மயிலியதனை யாழ்ப்பாணம் ஆகிய பத்து போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
மட்டக்களப்பு நகர் புளியந்தீவு மண் பெற்றெடுத்த வீரப்புதல்வன் லெப்.கஜன் (மணிவண்ணன்) அவர்களினால் அந்த மண் பெருமை கொள்கின்றது. அந்த மண்ணில் வாழ்கின்ற தமிழர்கள் இவரின் தன்னலமற்ற தாய்மண் பற்றை நினைத்து பெருமிதம் கொள்கின்றனர். காலத்தால் அழியாத காவிய நாயகர்களின் வரிசையில் லெப் கஜன் இணைந்து கொண்டார்.
எழுகதிர் 


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment