கருணாநிதியின் 'டெசோ' மாநாடு - ஈழத்தமிழர்கள் கருத்து என்ன? : ஆனந்தவிகடன்


காலம் கடந்து கருணாநிதி கையில் எடுத்திருக்கிறார் 'டெசோ’ அமைப்பை. அதன் சார்பில் நடத்தப்படுகிறது ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு. அது என்னவிதமான விளைவுகளை உருவாக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஈழத் தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்? 




சேசுராஜ், முன்னாள் போராளி. (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) 

''ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து, அதன் தொடர்ச்சியாக ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவித்தபோது, நான் வெள்ளான் முள்ளிவாய்க்காலில், தற்காலிகமாக மருத்துவமனை ஆக்கப்பட்டிருந்த ஒரு பாடசாலையின் தரையில் காயப்பட்டு அரைகுறை சுயநினைவுடன் படுத்துக்கிடந்தேன். அந்தச் சிறிய பாடசாலையில் சுமார் 100 வரையான காயப்பட்ட போராளிகளும் 500 வரையான காயப்பட்ட பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம் எங்கும் வியாபித்து இருந்தது. ஷெல் அடி காதைப் பிளந்தது. மருத்துவமனையில் சரியான மருந்துகள், மருத்துவ ஆளணி இல்லாமல் மருத்துவர்கள் திணறிக்கொண்டு இருந்தனர். 

அன்றைய பொழுதில் கடைசி நம்பிக்கையாக கருணாநிதியை நம்பிக்கொண்டு இருந்தனர் எங்களில் பலர். அந்த அவல நிலையிலும் வானொலிப் பெட்டியின் முன் குந்தி இருந்தனர். கருணாநிதி அறிவித்ததாக 'போர் நிறுத்தப்பட்ட அறிவிப்பு’ வானொலியில் வந்த கணத்தில் மக்கள் அதனை முழுவதும் நம்பினார்கள். எங்கும் சந்தோஷ மயம். அனைத்தையும் இழந்துவிட்ட அந்த நிலையில் அவர்கட்கு கருணாநிதி மீட்பராகத் தெரிந்தார். தேவதூதராகத் தென்பட்டார். ஆனால், நடந்தது எல்லாம் நாடகம் என்பதை ஜந்து நிமிடங்களுக்குள் நான் உணர்ந்துகொண்டேன். அன்றுதான் வழமையைவிட ஷெல் அடி அதிகமாக இருந்தது. நாங்கள் ஏமாற்றப்பட்டோம். 

நான் தலைவர் பிரபாகரனிடம் பற்றுக்கொண்டு போராட்டத்தில் இணைந்துகொண்டவன். தமிழீழம் என்பதுதான் எமது ஒற்றை நம்பிக்கையாக இருந்தது. அந்த நம்பிக்கை பொய்த்துப்போனதுகூட எனக்கு வலிக்கவில்லை. உடம்பில் தெம்பு இருந்தவரை நான் போராடினேன் என்கிற ஆத்ம திருப்தி இருக்கிறது எனக்கு. ஆனால், நாங்கள் நம்பிய ஒருவரால் ஏமாற்றப்பட்டோம் என்பதை இன்று வரை எம்மால் ஜீரணிக்க முடியவில்லை!'' 

ஸ்ரீதரன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு. 

''நாங்கள் 60 வருட காலம் போராடிப் பார்த்துவிட்டோம். இன்றைக்கு எங்கள் எதிர்காலம் சம்பந்தமாக எந்தவிதமான நம்பிக்கையும் அற்று இருக்கிறோம். இத்தகைய சூழலில் எமக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமை இந்தியத் தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் உண்டு. இப்போது உள்ள நிலையில் அவர்களால் மாத்திரம்தான் ஈழத் தமிழர்களின் மேலான அடக்குமுறையைச் சர்வதேசத்துக்குக் கொண்டுசெல்ல முடியும். 

இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. தலைவர் கருணாநிதி நடத்தும் மாநாட்டு அழைப்பை நாங்கள் எதிர்கொள்கிறோம். சொந்த விருப்புவெறுப்புகளை விடுத்துப் பார்த்தால் அவர் இந்தியாவின் குறிப்பிடத்தக்க தலைவர். அவர் பின்னால் பெரும் தொண்டர் படையணி உள்ளது. அவரை நாங்கள் புறக்கணிக்க முடியாது. ஆனால், அவரிடம் உளச் சுத்தியான ஈழ ஆதரவு இருக்கும் என நம்பும் அளவு நான் முட்டாள் அல்ல. ஈழத் தமிழர்கள் அனைவருமே கருணாநிதியின் மேல் மிகப் பெரிய கோபத்திலும் வெறுப்பிலும் உள்ளார்கள். ஈழத்தில் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது ஆட்சியில் இருந்தவர் அவர். ஈழப் போரை நிறுத்த வேண்டிய தார்மீகக் கடமை அவருக்கு இருந்தது. ஆனால், அவர் அதைச் செய்யவில்லை; சோனியா காந்திக்கு விசுவாசமாக இருந்தார். புலிகள் மீதும் பிரபாகரன் மீதும் கடும் வெறுப்பில் அவர் இருந்தார். அந்த வெறுப்பை புலிகள் தோற்றுக்கொண்டிருந்தபோது அவர்கள் மேல் காட்டினார். ஆனால், புலிகளின் தோல்வி, ஈழத் தமிழர்களின் தோல்வி என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. அவர் எதுவும் செய்யாமல் இருந்திருந்தாலே ஈழத் தமிழன் அவரை மன்னித்து இருப்பான். ஆனால், உண்ணாவிரதம் எனும் நாடகத்தை நடத்திவிட்டு, 'ஈழத்தில் போர் முடிந்துவிட்டது’ என அவர் ஒரு பொய்யான தகவலை உலகத்துக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் சொல்லி தமிழ்நாட்டிலே ஏற்பட்ட மக்களின் எழுச்சியை நயவஞ்சகமாக அடக்கினார். அதை நாம் எப்படி மறப்பது?'' 

சயந்தன், ஈழ எழுத்தாளர்: 

''ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் - குறிப்பாக தி.மு.க-வின் தற்போதைய நடவடிக்கைகளை - ஒருவிதமான விரக்தி, ஏமாற்றம், ஏளனம், கோபம் எனக் கலவையான உணர்வுகளின் ஊடாகத்தான் பார்க்கிறார்கள். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களை விடுத்துப் பார்த்தாலும்கூட, இறுதி யுத்தத்தில் சிக்குண்டவர்கள், உறவுகளை இழந்து தவித்தவர்கள், இன்னமும் சொந்த வாழிடங்களுக்குத் திரும்ப முடியாது அவலப்படுவோர் அனைவரிடத்திலும் கலைஞர் மீதான ஆற்றாமையும் கோபமும் வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவுக்கு உள்ளது. நம்பிக் கெட்ட சனங்களின் உணர்வுகள் அவை. 

ஈழ விவகாரமும் தமிழகத் தேர்தல் அரசியலில் ஒரு முக்கியக் கூறாகப் பார்க்கப்படுவதால், அவரவர் வசதிப்படி நடனம் ஆடுகிறார்கள். அந்த ஆட்டத்தில் 'டெசோ’வும் ஒன்று. சற்றே புத்தி தெளிவுள்ள ஒருவனால்கூட இதனை அடையாளம் கண்டுகொள்ள முடியும். காலங்காலமாகத் தமது சொந்த மீனவர்கள் சுடப்படுவதைக்கூட நிறுத்த முடியாதவர்கள், இப்படி எல்லாம் கூத்தடிக்கும்போது, யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் உள்ள ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது 

'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.’ '' 

வழிமூலம்: ஆனந்தவிகடன் 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment