ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின்போது முள்ளிவாய்க்காலில் வைத்து தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்த அன்று, 2009 மே 17-ம் நாள், நாங்கள் மறைந்துவிட்ட ஆருயிர் நண்பர் அசுரனுக்கு நாகர்கோவில் நகரிலே அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தோம். அந்த ஒருநாள் நிகழ்வின் அங்கமாக “தமிழரின் எதிர்காலம்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தினோம். நிகழ்காலம் இருண்டு கிடந்ததால், எதிர்காலம் பற்றி ஏக்கத்தோடு விவாதித்துக் கொண்டிருந்தோம். அதேபோல 2012-ம் ஆண்டு மே 17 அன்றும் இடிந்தகரையில் “தமிழரின் எதிர்காலம்” என்ற தலைப்பில் ஒருநாள் மாநாடு நடத்தினோம். இந்தத் தலைப்பின் அவசியம், அவசரம் பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.
இன்றைய உலகில் மக்களின் நிலைத்து நிற்றல் (survival), சுகவாழ்வு (wellbeing), அடையாளம் (identity), சுதந்திரம் (freedom) அனைத்துக்கும் ஓர் அரசையே சார்ந்து நிற்கும் நிலை இருக்கிறது. இந்தக் கடமைகளை திருப்திகரமாக அரசுகள் செய்கின்றனவா என்பது ஒரு பெரிய விவாதப் பொருள். ஆனாலும் அரசுதான் இந்த நான்கு விடயங்களையுமே கவனித்து வருகிறது, கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பது உண்மை. அரச அரவணைப்பு இல்லாத குர்து மக்கள், பாலஸ்தீனர்கள் போன்றோர் படும்பாடு உலகறியும். உலக நாடுகளனைத்திலும் வாழும் சிறுபான்மைத் தமிழர் எல்லாம் அந்தந்த நாடுகளின் முக்கிய நீரோட்டத்தோடு நீந்திச்சென்று வாழ்வைக் கழிக்கின்றனர். அதிக அளவில் தமிழர் வாழும் இரண்டு பகுதிகளை தனியாக எடுத்து அலசுவோம்.
ஈழத் தமிழர் ஈவு இரக்கமற்ற இனவெறி பிடித்த சிங்கள அரசிடமும், இந்தியத் தமிழர் சமத்துவ உணர்வற்ற, சந்தேக நோய் பிடித்த, இந்துத்துவ, சாதீய, இந்தி வெறி அரசிடமும் சிக்கியிருக்கிறோம். நமக்குள் மக்கள் எண்ணிக்கையில் அதிகமானோர் இந்தியத் தமிழர்களாய் இருந்தாலும், தமிழர் என்ற செருக்கும், திமிரும், உணர்வும் பெற்றோர் ஈழத் தமிழர்கள்தான். தமிழர் என்ற அடையாளத்தை உயர்த்திப் பிடிப்பவரும் அவர்கள்தான். அபரிமித சக்தி வாய்ந்த ஒரே ஒரு பெரும்பான்மை சமூகத்தை தன்னந்தனியாய் எதிர்கொண்டு நிற்கும் ஈழத் தமிழர்களின் சமூக, பொருளாதார, அரசியல் யதார்த்தம் பல சிறுபான்மை சமூகங்களை உள்ளடக்கி நிற்கும் இந்திய யதார்த்தத்திலிருந்து மிகவும் மாறுபட்டது. ஒரு குழுவைக் கண்டு அச்சமுறும் நிலை இங்கில்லை. ஆனால் பலருடன் புழங்கி, மழுங்கி, புழுங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் புரிதலும், தெளிவும் இல்லாமல் பரிதவிக்கிறோம். இப்படி ஒரு திருப்புமுனையில் நிற்கும் நமது இனத்தின் எதிர்காலம் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்?
எதிர்காலவியலும் தமிழரும்:
முதலில் எதிர்காலம் அல்லது வருங்காலம் பற்றி தெளிவடைவது இன்றியமையாதது. நமது தமிழ் சமூகத்தில் எதிர்காலம் பற்றிய ஆர்வம், அக்கறை மிகவும் அதிகம். சாதகம், கைரேகை, எண் கணிதம், குறி கேட்டல், கிளி சோதிடம், இராப்பாடிக்காரன் பாட்டு, பூ வைத்தல், பூசை வைத்தல், காவல் தெய்வங்கள் அருள்வாக்கு என எத்தனையோ வழிகளில் புரியாத எதிர்காலத்தை கணிக்க கடிதில் முனைகிறோம்.
குடும்பத்தில் ஒருவரின் எதிர்காலம் மற்றவர்களின் எதிர்காலங்களோடு பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை நாம் துல்லியமாக உணர்ந்திருக்கிறோம். வீட்டில் புதிதாக ஒரு குழந்தை பிறந்தால், அதன் சாதகத்தை கணித்து, தாத்தா சாகப்போகும் வயது, மாமன் பார்க்கப் போகும் வேலை, சித்தியின் திருமணம் என அனைத்தையும் அறிய முல்கிறோம். துல்லியமாக அறிய முடியாத, நமது கட்டுக்குள் முழுமையாக அடங்காத, மனம்போல மாற்றிக்கொள்ள முடியாத எதிர்காலத்தை இறை நம்பிக்கை, பிரார்த்தனை போன்ற ஆன்மீக வழிகளில் அளந்துவிட, அடக்கிவிட, அமைத்துக் கொள்ள அதீத முயற்சிகள் எடுக்கிறோம்.
எதிர்காலம் என்பது இனிவரவிருக்கும் நாட்களுக்குள் ஒளிந்து கிடக்கிறது என்று அனுமானித்துக்கொண்டு அதை எப்படியாவது முன்கூட்டியேத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் நாம் புரிந்துகொள்கிறோம். முன்னரே தயாரிக்கப்பட்டத் திரைப்படம் ஒன்றின் அடுத்தக் காட்சி போல, எதிர்காலம் தன்னியக்கமாக வரும் என்று நம்புகிறோம். தலைவிதி, கர்மவினை, தெய்வச் செயல் என்பன போன்ற மூட நம்பிக்கைகளால் எதிர்காலம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுவிட்டது என உறுதி பூணுகிறோம். இது தவறான அணுகுமுறை.
மலையேறும்போது நாமே நமது பாதையை வகுத்துக் கொள்வது போல, கடலோடும்போது நாமே நமது படகின் போக்கை நிர்ணயித்துக் கொள்வது போல, எதிர்காலத்தை நமது எண்ணங்களால், சிந்தனைகளால், விருப்பு வெறுப்புகளால், தெரிவுகளால், திட்டங்களால், செயல்பாடுகளால் நாமே அமைத்துக் கொள்கிறோம் என்பதுதான் உண்மை. நம் எதிர்காலம் இன்னொருவரின் கணிப்பிற்கு கட்டுப்பட்டுக் கிடக்கவில்லை; நமது கைகளில் பத்திரமாக இருக்கிறது. அதை நாமே தேர்ந்து, தெளிந்து, தெரிவு செய்துகொள்ள முடியும் என்ற அடிப்படையில் நாம் பார்க்கத் துவங்கவேண்டும். இதுதான் அறிவியல் ரீதியான அணுகுமுறை. அறிவியல் பூர்வமாக எதிர்காலத்துக்குள் ஓரளவு எட்டிப்பார்க்க முடியும், பெருமளவு நாம் விரும்பும் எதிர்காலத்தை நம்மால் அமைத்துக்கொள்ளவும் முடியும் என்பது அண்மைக்கால அறிவு. எதிர்காலவியல் எனும் பாடமே இன்று பிறப்பெடுத்து, வளர்ந்தோங்கி, ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.
ஒரு தனி மனிதனின் எதிர்காலம் அவளது கைகளில் இருப்பதுபோல, ஓர் மனிதக் குழுவின் எதிர்காலம் அந்தக் குறிப்பிட்ட மக்களின் கைகளில் இருக்கிறது. ஒரு தனிமனிதன் தனது எதிர்காலத்தை சோதிடர், சாமியார் போன்ற இன்னொருவரிடம் கொண்டு அடகு வைத்துவிட்டு, அவர் சொல்வது போலக்கேட்டு கெட்டுக் குட்டிச்சுவராவது போல, ஒரு மனிதக் குழுவும் ஒரு தவறானத் தலைவனையோ, ஒரு கண்ணியமற்றக் கட்சியையோ நம்பி ஏமாந்துபோக முடியும், போகிறார்கள்.
‘எங்கேப் போகிறோம்’ எனும் இலக்கு இல்லாமல் ‘எங்கோப் போகிறோம்’ என அலைந்து திரியும் பயணி வழியிலே குழம்பிப் போகிறான்; வம்புகளில் மாட்டிக் கொள்கிறான். வருங்கால சிந்தனையற்ற, தயாரிப்பற்ற வாழ்வு எப்படி சிதைந்து போகும் என்பதை வள்ளுவர் தெளிவாகச் சொல்கிறார்:
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
ஒரு தீங்கு வருவதற்கு முன்னரே காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை தீயின் முன் வைக்கப்பட்ட துரும்புபோல அழிந்து விடும். அதேபோல, இலக்கு இன்றி வாழும் சமூகமும் எங்கேயும் போகாது. தேக்க நிலையிலேயே சிக்கி, செய்வதறியாது திகைத்து, தவறானவர்களைத் தலைவர்களாகக் கொண்டு தகைமை இழந்துவிடும், தவறி விழுந்துவிடும். வள்ளுவர் சொல்கிறார்:
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
தீரா இடும்பை தரும்.
ஒருவர் ஆராய்ந்து பார்க்காமல் மற்றவரைத் தெளிந்து கொண்டால், அஃது (அவருக்கு மட்டும் அல்லாமல்) அவருடைய வழிமுறையில் தோன்றியவர்களுக்கெல்லாம் துன்பத்தைக் கொடுக்கும். ‘வருவது’ குறித்தும், ‘வருங்கால தலைமுறைகள்’ பற்றியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே சிந்தித்திருந்தவர்கள் தமிழர்கள். அண்மைக்கால புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்கூட எதிர்காலம் பற்றி ஏக்கத்தோடு சிந்திக்கிறார்:
என்னருந் தமிழ்நாட்டின் கண்
எல்லோரும் கல்விகற்றுப்
பன்னறும் கலைஞானத்தால்,
பராக்கிரமத்தால், அன்பால்,
உன்னத இமமலைபோல்
ஓங்கிடும் கீர்த்தி எய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?
எல்லோரும் கல்விகற்றுப்
பன்னறும் கலைஞானத்தால்,
பராக்கிரமத்தால், அன்பால்,
உன்னத இமமலைபோல்
ஓங்கிடும் கீர்த்தி எய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?
நமது தமிழினம் இன்று ஒரு திருப்புமுனையில் நிற்கிறது திக்குத் தெரியாமல் கைகளைப் பிசைந்துகொண்டு திணறிக்கொண்டிருக்கிறோம். நாம் எங்கே நிற்கிறோம், எங்கே போகப் போகிறோம், எங்கே போக விரும்புகிறோம் என்பவை பற்றி சிந்தித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நமது நிலைத்து நிற்றல் (survival), சுகவாழ்வு (wellbeing), அடையாளம் (identity), சுதந்திரம் (freedom) அனைத்தும் இந்திய, இலங்கை அரசுகளின் கைகளில் இருக்கின்றன. தமிழக முதல்வரின் அண்மைக்கால அங்கலாய்ப்புகளைப் பார்க்கும்போதே இந்தியத் தமிழரின் இடைஞ்சல்கள் பற்றி அறிய முடியும்; உண்மை நிலை இன்னும் பல மடங்கு மோசமானது. சிங்கள இனவாத அரசின் அடக்குமுறைகளை, அத்துமீறல்களைப் பார்க்கும்போது ஈழத் தமிழரின் இன்னல்கள் பற்றிப் புரியமுடியும்.
இரு தரப்புத் தமிழருமே நம் மண்ணை, நீரை, காற்றை, கடலை, கடல் உணவை, இயற்கை வளங்களை, எதிர்கால சந்ததிகளை, வாழ்வாதாரங்களை, வாழ்வுரிமைகளை இழந்துவிடும் அபாயத்தில் இருக்கிறோம். ஆனால் நம்மில் ஒரு சிலரோ தமது கடைந்தெடுத்த சுயநலத்தால், தம்முடைய லாபத்தை மட்டும் பார்த்துக்கொண்டு, இனநலத்தை காவுகொடுக்க முனைகின்றனர். எடுத்துக்காட்டாக, இந்தியத் தமிழராகிய நாம் கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள் தமிழர் எதிர்காலத்துக்கு ஏற்றதல்ல என்று எதிர்க்கும்போது, நம்மில் சிலர் “நமக்கு மின்சாரம் கிடைத்தால் போதும், நம் சந்ததிகள் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன” என்று சிந்திக்கின்றனர், செயல்படுகின்றனர். வீரமும் விவேகமும் கொண்ட ஈழத் தமிழர் விடுதலைக்காகப் போராடும்போது, அவர்களில் சிலர் அமைச்சர் பதவி கிடைத்தால் போதும் எனும் ஈன வாழ்வை விரும்புகின்றனர். இந்த துரோகிகளைத் தள்ளிவைத்துவிட்டு, தமிழரின் எதிர்காலம் பற்றி சிந்திப்போம். ஒளிமயமான எதிர்காலம்: முதலில், இரு துருவ நிலைகளை அடையாளப் படுத்துவோம். இடது கோடியில் உலகிலேயே எங்கும் இல்லாத, ஏற்றத் தாழ்வுகளற்ற, சமத்துவ சமதர்மம் மிக்க, அநியாயங்களே இல்லாத, அற்புதமான கனவு சமுதாயமாக இருப்போம் எனும் ஆசை. வலது கோடியில் இப்போது இருப்பதை விட மோசமாகி, அடிமைத்தனம் மிகுந்து, அநியாயங்கள் மலிந்து, நாசமாகி, நலிவடைந்து போவோம் எனும் பயம். இவ்விரு துருவங்களுக்கிடையே பல சாத்தியமான, சாசுவதமானக் காட்சிக்கூறுகளை நாம் நமது மனக்கண்ணின் உதவியுடன் கண்டறியலாம்.
ஈழத்தை எடுத்துக் கொண்டால் ஈழக் குடியரசு அமைந்து நம் தொப்புள்கொடி உறவுகள் சுதந்திரமாக வாழ்வது ஒரு துருவமாகவும், இன்னும் அடிமைப்பட்டு மேலும் துன்பப்பட்டுப் போவது இன்னொரு துருவமாகவும் கொள்ளப்படலாம். இனவாத சிங்கள அரசால், அந்த அராஜகவாதிகளால் இடைநிலைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. ஒருங்கிணைந்த இலங்கையில் ஒட்டுக் குடித்தனம் நடத்தலாம்; இந்தியாவை முன்மாதிரியாகக் கொண்டு வடக்கு, கிழக்கு மாநிலங்களில் கையாலாகாத முதல்வர்களை காட்சிப்பொருளாக வைத்துக் கதையை ஓட்டலாம் என்றெல்லாம் வேறு தெரிவுகளைத் தேடுவது வீண் வேலை. காலம் தவறிவிட்டதால், கசப்புகள் பெருகிவிட்டதால், உணர்வுகள் தடித்துவிட்டதால், பிரிந்து வாழ்வதுதான் இரு சமூகங்களுக்குமே சிறந்ததாக இருக்கும். அப்படி முகிழ்க்கவிருக்கும் ஈழக் குடியரசு எப்படி இருக்கும், தன்னகத்தே இருக்கும் முஸ்லீம்கள் போன்ற சிறுபான்மையினரை எப்படி கௌரவமாக, பாதுகாப்பாக நடத்தும் என்பவற்றையெல்லாம் பற்றி கனவு காண்பதுதான் ஈழத் தமிழர்கள் செய்யவேண்டிய எதிர்காலவியல் நடவடிக்கையாக அமையும்.
தமிழகத்தைப் பொருத்தவரை, தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்பது ஆசையாகவும், ஈழம் போன்ற நிலைக்குள் தள்ளப்படும் அபாயம் பயமாகவும் இரு துருவ நிலைகளாக அமையும். விடுதலைப்பெற்று வாழ்வது, அடிமைப்பட்டுக் கிடப்பது எனும் இரு துருவ நிலைகளுக்கிடையே என்னனென்ன நிலைகள் இருக்க முடியும்? ஒன்று, இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் சுதந்திரம் பெற்ற நாடுகளாக மாறி ஐரோப்பிய கூட்டமைப்பு (European Union), அல்லது ஆசியான் (ASEAN) அமைப்பு போன்று ஒன்றாய்ச் சேர்ந்து சம்மேளனமாக (confederation) வாழ்வது. இரண்டு, “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி” என்ற அடிப்படையில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA) போல ஒரு கூட்டமைப்பாக (federation) இயங்குவது. மூன்று, இப்போதிருக்கும் இந்தி-இந்து-இந்துஸ்தான் எனும் குரல்வளையை நெரிக்கும், பன்மைத்தன்மையை வெறுக்கும், ஒருமை தேசத்துக்குள் (uni-state) புழுங்கிக்கொண்டே வாழ்ந்து தொலைப்பது. நான்கு, இன்னும் மோசமான இந்தி(ய) ஏகாதிபத்தியத்தின், இந்துத்வா பாசிசத்தின் கீழ் ஓர் இந்து ஹிட்லர் கைகளில் சிக்கிச் சீரழிவது. இந்த தொடர்நிலைகளுக்கு (continuum) வெளியேயும் பல நிலைகளைக் கண்டுணர முடியும். எடுத்துக்காட்டாக, வடதமிழகம், தென்தமிழகம் என தமிழகமே இரண்டாகப் பிரியலாம். விடுதலைக்கு முன்னிருந்த சிற்றரசுகளாக, சமஸ்தானங்களாக, ஜமீன்களாக தமிழகமே சிதறுண்டு போகலாம்.
மேற்கண்ட காட்சிக்கூறுகளில் எது விரும்பத்தக்கது, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பதை முடிவுசெய்வது எதிர்காலவியலின் இரண்டாவது நிலை. அந்த உற்றதோர் எதிர்காலத்தை எந்த வருடத்துக்குள் அடைய விரும்புகிறோம் என ஒரு கால நிர்ணயம் செய்துகொள்வது அவசியம். எடுத்துக்காட்டாக, நமது உன்னதத் தமிழகம் 2025-ம் ஆண்டுக்குள் கைகூடவேண்டும் என நாம் இலக்கு நிர்ணயிக்கலாம்.
மூன்றாவதாக, அந்த எதிர்கால கனவு நனவாக எந்தெந்த காலக் கட்டத்தில் என்னனென்ன செய்து முடிக்கவேண்டும் என்பதை பின் நோக்கி நடந்துவந்து (backcasting) குறித்துக் கொள்வோம். அதாவது 2024, 2020, 2018, 2015, 2013 போன்ற வருடங்களுக்குள் என்னனென்னப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என திட்டமிட்டுக் கொள்வோம். அந்தத் திட்டத்தின் அடிப்படையில் இப்போது 2012-ம் வருடம் நாம் என்ன செய்யத் துவங்கவேண்டும் என்பதை தீர்மானித்துவிட்டு, அந்த வருங்கால கனவுப் பயணத்தை நாம் தொடங்கலாம்.
இந்த எதிர்காலவியல் முயற்சிக்கு, கனவு காண்பது என்பது மிகவும் முக்கியம். நாம் எதை அடையவேண்டும் என உண்மையாக, ஆழமாக, தீவிரமாக நினைக்கிறோமோ, விரும்புகிறோமோ, ஆசைப்படுகிறோமோ அதை நிச்சயம் அடைவோம். அதற்கான அடிப்படை ஆதாரம்தான் கனவு. கற்பனை (imagination), கனவு (dream), பகற்கனவு (day dream), மிகுபுனைவு (fantasy), மனக்கண் பார்வை (envisioning), மனத்தோற்றம்/படிமம்/உருவம் (imaging), பிரமை/தோற்ற மயக்கம் (hallucination) எனப் பல வடிவங்களில் வனப்பான வருங்காலத்தை தகவமைக்கும் பார்வை அமையலாம். அது எவ்வளவுக்கு எவ்வளவு ஆழமானதாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கைகூடும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது.
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது,
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது.
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது.
எனும் பிரபலமான திரைப்படப் பாடலை அனைவரும் கேட்டிருக்கிறோம்.
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்.
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்,
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்.
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்.
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்,
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்.
இப்படி எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒரு நிகழ்வைப்பற்றி ஒருவர் ‘இப்போது, இங்கே’ நிகழ்காலத்தில் ஆழமாகக் கனவு கண்டுகொண்டிருக்கிறார். இதைப் போலவே மகாகவி பாரதியார் தான் அடைய விரும்பும் எதிர்காலத்தை எவ்வளவு தெளிவாக, விரிவாக, அழகாகக் கற்பனை செய்து, தன் மனக்கண் முன்னால் நிறுத்திக் கனவு காணுகிறார் பாருங்கள்:
காணி நிலம் வேண்டும் – பராசக்திகாணி நிலம் வேண்டும்; - அங்குத்தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்துய்ய நிறத்தினவாய் - அந்தக் காணி நிலத்திடையே - ஓர் மாளிகைகட்டித் தரவேண்டும்; - அங்குக்கேணியருகினிலே – தென்னைமரம்கீற்று மிளநீரும் பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்பக்கதிலே வேணும்; - நல்லமுத்துச் சுடர்போலே – நிலாவொளிமுன்பு வரவேணும்; அங்குக்கத்துங் குயிலோசை - சற்றே வந்துகாதிற் படவேணும்; - என்றன்சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்தென்றல் வரவேணும். பாட்டுக் கலந்திடவே - அங்கே யொருபத்தினிப் பெண்வேணும்; - எங்கள்கூட்டுக் களியினிலே – கவிதைகள்கொண்டு தரவேணும்; - அந்தக்காட்டு வெளியினிலே; - அம்மா! நின்றன்காவலுற வேணும்; என்றன்பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்பாலித் திடவேணும். இப்படி திரும்ப திரும்ப, தெள்ளத் தெளிவாக உயிரோட்டத்துடன் கனவு காணும்போது, ஆழ்மனம் இதை உள்வாங்கி உயிர்ப்பிக்கிறது. இதுதான் எதிர்காலவியல் முயற்சி, பயிற்சி.
தமிழரின் எதிர்காலம்:
ஈழத் தமிழர் தமிழ் ஈழம் அமைத்துக்கொண்டு தன்னிறைவோடு வாழ வழிவகைகள் செய்துகொள்ளட்டும். நிச்சயமாக அவர்கள் செய்துகொள்வார்கள். அதற்கானத் திறனும், தகுதியும் அவர்களுக்கு இருக்கிறது. கவலைப்படவேண்டிய நிலையில் இருப்பவர்கள் தமிழகத் தமிழர்கள்தான். நமக்கு உகந்த அரசியல் அமைப்பைத் தேர்ந்துகொள்வோம். அதை அடைவதற்கு இன்றே, இப்போதே கனவு காணத் தொடங்குவோம். அதன் ஓர் அம்சமாக நமது வரலாற்றைத் தெரிந்துகொள்வோம். பிளேட்டோ (Plato) முதல் நேட்டோ (NATO) வரை பேசும் ஐரோப்பிய வரலாறும், ஆரியர் படையெடுப்பு முதல் ஆங்கிலேயர் ஆதிக்கம் வரை பேசும் இந்திய வரலாறும் அறிந்துகொள்வோம். ஆனால் தமிழர்களாகிய நாம் யார், நமது முன்னோர்கள் யார், அவரது வெற்றிகள்/தோல்விகள், சாதனைகள்/வேதனைகள், பெருமைகள்/சிறுமைகள், பலங்கள்/பலவீனங்கள் என்னென்ன என்றெல்லாம் சமநிலையோடு, முதிர்ச்சியோடு, ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அறிந்துகொள்வது அவசியம். மதவாதம், சாதீயம், நிலப்பிரபுத்துவம், ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், முதியோராதிக்கம், ஊழல், சுரண்டல், வளம் அழிப்பு, வருங்காலம் பேணாமை போன்ற கொடுமைகள், பிரச்சினைகள் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை, புத்தகங்களைத் தேடிப்பார்த்துப் படிப்பது, தெரிந்து கொள்வது முக்கியம்.
பொருளாதாரம் பற்றிப் பொதுவாகவும், தமிழகப் பொருளாதாரம் பற்றி ஆழமாகவும் அறிந்துகொள்வது மிக முக்கியம். “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” எனும் வள்ளுவர் கூற்று முற்றிலும் உண்மை. ஆனால் பொருள் மட்டுமே உலகம் இல்லை என்பதையும் இந்த உலகமயமாதல் பேராசைச் சூழலில் நாம் புரிந்திருக்கவேண்டும். வளர்ச்சி என்றால் என்ன, வடக்கத்திய நாடுகளின் வளர்ச்சி சித்தாந்தத்தின் கேடுகள் என்ன, முன்னேற்றம் என்ற பெயரில் வந்துசேரும் பொல்லாங்குகள் என்ன, நமது வாழ்வாதாரங்களைக் காத்திட வேண்டியத் தேவை என்ன, நம் மக்களுக்கு எப்படி வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது, எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதற்கு முன்னால் அடிப்படைத் தேவைகளையாவது அவசரகதியில் கொடுப்பது எப்படி என்றெல்லாம் சிந்தித்து செயல்பட்டாகவேண்டும்.
தமிழ் கலாச்சாரம், இலக்கியம், இயல்-இசை-நாடகம் எனும் மும்மை, சமய நம்பிக்கைகள், சாதி-மதக் குளறுபடிகள், பெண் விடுதலை, தலித் மக்கள், ஆதிவாசிகள், மீனவர்கள் விடுதலை என அனைத்து விடயங்கள் பற்றியும் நாம் விலாவாரியாகப் பேச வேண்டும், அலச வேண்டும். தினமணி நாளிதழ் தனது யூலை 30, 2012 தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு கருத்து கவனிக்கத் தக்கது: “தமிழகத்தின் கோயில் சிலைகள் எதுவுமே ஆவணப்படுத்தப்படவில்லை. இத்தகைய கலைப்பொக்கிஷங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வே நமக்கு அண்மையில் ஏற்பட்டதுதான். தமிழனின் பெருமையைத் தமிழன் உணராமல் வாழ்ந்து வருவதற்கு இதுவும் ஒரு சான்று.” நமது பலத்தை நாம் அறியாமல் இருக்கும்போது, பிறர் நம் பல்லைப் பிடித்து பார்ப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது. ஜல்லிக்கட்டு, எருதாட்டம் போன்ற நமது கலாச்சாரத்தின் வீர விளையாட்டுகளுக்குக்கூட உச்சநீதிமன்றத்தில் அனுமதி வாங்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். எது நல்லது, எது கெட்டது என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் நாமே தவிர, மற்றவர்கள் அல்ல. நல்லவற்றை தக்கவைத்துக்கொண்டு, அல்லவற்றைத் தூக்கி எறிவது நமது பொறுப்பு. இதில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது. “பழையன கழிதலும், புதியன புகுதலும்” பற்றி தமிழர்களாகிய நாம் நன்றாகவே அறிவோம்.
இப்படி நம் வாழ்வின் அனைத்து அம்சங்கள் பற்றியும் அலசி, ஆராய்ந்து, வருங்காலத் தேவைகளையும் கருத்திற்கொண்டு, ஓர் “ஒளிமயமான எதிர்கால” தமிழகத்தை மனக்கண்ணில் நிறுத்தி, தமிழர்கள் கனவு காணத் துவங்குவது காலத்தின் கட்டாயம்.
- சுப.உதயகுமார் ( koodankulam@yahoo.com)
நன்றி - கீற்று
0 கருத்துரைகள் :
Post a Comment