கைநழுவிப் போன இலங்கையின் இரட்சகர்


இந்திய அரசியலில் இருந்து கொண்டே ஜனாதிபதி மஹிந்தவுக்கும் அவரது அரசுக்கும் முகர்ஜி வழங்கிய உதவி ஒத்தாசை சாதாரணமான ஒன்றல்ல. மஹிந்த தலைமையிலான இன்றைய அரசு அரசியல் ரீதியான சிரமங்களை எதிர்நோக்கிய அநேக சந்தர்ப்பங்களில், அவற்றில் தலையிட்டு மஹிந்த அரசைக் காப்பற்றியவர் இந்தப் பிரணாப் முகர்ஜி.
 
 மஹிந்தவின் அரசுக்கும், பிரணாப் முகர்ஜிக்குமான இந்த நெருங்கிய பிணைப்பின் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் ஆச்சரியம் அளிக்கும் பல தகவல்கள் கிட்டும்.விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை மஹிந்தவின் அரசு ஆரம்பித்த வேளை அதற்கு இந்தியாவின் பி.ஆர் நிறுவனத்தின் உதவியைப் பெற்றுக் கொள்ள ஆரம்பித்தது.
 
 போர் காரணமாக வீழ்ச்சி கண்ட இலங்கையின் நற்பெயரை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கிலான முயற்சியே அது. அந்தவேளை குறிப்பிட்ட பி.ஆர் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்டவர்."தாஸ்' என அழைக்கப்பட்ட ஒரு பெண்மணி ஆவார்.
 
குறிப்பிட்ட "தாஸ்' என்ற அந்தப் பெண்மணிக்கும் பிரணாப் முகர்ஜிக்குமிடையே அரசியல் ரீதியில் தொடர்பு நிலவி வந்தது. விரும்பிய எந்த வேளையிலும் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துக் கலந்துரையாட அந்தப் பெண்மணி வாய்ப்புப் பெற்றிருந்தார். அரசியல் ரீதியில் பிரணாப் முகர்ஜி மேற்கொள்ளும் தீர்மானங்கள் குறித்து அழுத்தம் மேற்கொள்ள இலங்கை அரசு "தாஸ்' என்ற அந்தப் பெண்மணியின் உதவியைப் பெற்றுக்கொண்டது. இலங்கையின் அரசியல் நிலையில் கடும் சிக்கல்கள் நிலவிய வேளைகளில், இந்திய அரசியலில் முக்கிய பாத்திரமேற்றுச் செயற்பட்ட பிரணாப் முகர்ஜியின் ஆதரவை ஈட்ட இலங்கை அரசு "தாஸ்' என்ற அந்தப் பெண்மணியூடாக முகர்ஜியுடன் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டது.
 
இலங்கை அரசு அந்தவிதம் பிரணாப் முகர்ஜியுடன் நெருக்கமான அரசியல் தொடர்புகளை பேணியமை, அந்த வேளையில் இந்திய ராஜதந்திர மட்டத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு ஆரம்பித்த போர் தொடர்பாக இந்திய அரசு, இலங்கை அரசுக்குச் சார்பாக மென்போக்கைக் கைக்கொள்வதாக விமர்சனங்கள் வெளிவந்தன. அந்த விடயத்தில் இந்தியா இறுக்கமான நிலைப்பாட்டைக் கடைக்கொள்ள வேண்டுமெனவும், இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகமூடாக இலங்கை அரசு மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமெனவும் விமர்சனங்கள் மேற்கொள்ளப்பட்டன.
 
இந்தியாவின் அந்த மென்போக்கு நிலைப்பாடு பின்னர் இந்தியாவுக்குக் கடும் சிக்கலை ஏற்படுத்துமெனவும் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினர்.இலங்கை அரச படைகள், பிரபாகரனைப் போரில் முற்றாகத் தோற்கடிக்கும் ஒரு நிலை உருவான வேளையில் தமிழ் நாட்டின் அரசியற் தலைவர்கள் போரை நிறுத்த வழிவகை செய்யுமாறு இந்திய மத்திய அரசுக்கு அழுத்தத்தின் மேல் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.
 
அந்தவேளை தமிழ் நாட்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி, போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்தி எப்படியாவது பிரபாகரனைக் காப்பாற்றுமாறு வலியுறுத்தியதுடன், தவறினால் மத்திய அரசுக்கான தமது கட்சியின் ஆதரவை விலக்கிக் கொள்ளப்போவதாக மத்திய அரசை மிரட்ட ஆரம்பித்தார். கருணாநிதியின் அத்தகைய மிரட்டல், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்குப் போன்றே ஜனாதிபதி மஹிந்தவையும் அசௌகரியத்துக்கு உள்ளாக வைத்தது.
 
அந்த வேளையிலும், மஹிந்தவின் இரட்சகராகச் செயற்பட்டவர் இந்த பிரணாப் முகர்ஜியே. உடனடியாகவே தமிழ் நாட்டுக்குச் சென்ற அவர், கொதிப்புடனிருந்த கருணாநிதியைச் சாந்தப்படுத்துவதில் வெற்றிகண்டார். தமது ராஜதந்திர அணுகுமுறையால், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு நிலைப்பாட்டிலிருந்த கருணாநிதியை மெல்ல மெல்ல அந்த  நிலைப்பாட்டிலிருந்து கீழிறங்க வைப்பதில் வெற்றியும் கண்டார்.
 
கருணாநிதியின் தீவிர விடுதலைப் புலிகள் ஆதரவு நிலையிலிருந்து அவரை மாற்றியதன் மூலம் பிரணாப் முகர்ஜி, இந்திய இலங்கை அரசுகள் எதிர்நோக்க நேர்ந்த சிக்கலின் முடிச்சை அவிழ்த்து வைத்து, இரு நாட்டு அரசுகளும் ஆசுவாசப்பட வழி ஏற்படுத்திவைத்தார். அந்தச் சம்பவத்தின் பின்னர், மஹிந்தவுக்கும் தெரியும் விதத்திலேயே அந்த விடயத்தில் தலையிட்டு கருணாநிதியின் வாயை  முகர்ஜி அடைத்தார் என்றொரு கதை இந்திய ராஜதந்திர வட்டாரங்களில் அடிபட்டது.
 
ஆனால் கருணாநிதியினதும் தமிழ் நாட்டினதும் ஆக்ரோஷ உணர்வலைகள் அத்துடன் குறைந்து விடவில்லை. நந்திக் கடல் பகுதியில் இலங்கை அரச படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு, எதுவுமே செய்ய இயலாத நிலை பிரபாகரனுக்கு ஏற்பட்டபோது, தமிழ் நாடு மீண்டும் கிளர்ந்தெழுந்தது. பல தரப்புக்களும் பிரபாகரனையும், தமிழ்ப் பொதுமக்களையும் இந்திய அரசு காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென பலதரப்பட்ட விதங்களில் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன. அந்த வேளையிலும் மஹிந்தரின் இரட்சகராகச் செயற்பட்டவர் இந்தப் பிரணாப் முகர்ஜியே.
 
இறுதிப் போரின் இறுதிநாள்களில், இலங்கை அரச படைகள் போரில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மட்டா எனவும், தாக்குதல் தவிர்ப்பு வலயமொன்றைப் பிரகடனப்படுத்தி, போரின் போது பொதுமக்கள் பாதிக்கப்படாத விதத்தில் இலங்கை அரசு செயற்படுமெனவும் கூறி, தமிழ் நாட்டில் உருவான உணர்வலைகளை ஒருவாறு அமைதியடைய வைத்தவர் இந்தப் பிரணாப் முகர்ஜியே. இத்தகைய தமது இராஜதந்திர நகர்வுகள் மூலம், இலங்கை அரசபடைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரைத் தொடர்ந்து முன்னெடுக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க பிரணாப் முகர்ஜியால் முடிந்தது.
 
ஆளும் காங்கிரஸ் கட்சியின் இரு பெரும் பலமிக்க தூண்களான சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்குத் தாம் வழங்கிய உறுதிமொழிக்கமைய பிரணாப் முகர்ஜியால் இந்த ராஜதந்திர செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்தது. போரில் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டிய பின்னர் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மஹிந்த உரிய தீர்வொன்றை வழங்குவார் எனவும், சர்வதேச ரீதியில் இந்திய அரசுக்கு ஆதரவாக அவர் செயற்படுவார் என்பதுமே சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங்குக்கு பிரணாப் முகர்ஜி வழங்கிய அந்த உறுதிமொழியாகும்.
 
கடைசியில் இலங்கை அரச படைகளால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். ஓராண்டு, ஈராண்டு எனக் காலமும் ஓடி மறைந்தது. ஆனால் மஹிந்த, பிரணாப் முகர்ஜி மூலம் இந்தியாவுக்கு வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படுவதாகத் தோன்றவில்லை.
ஜனாதிபதி மஹிந்த தமக்கு வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படாததை மஹிந்தவுக்கு நினைப்பூட்ட இந்திய அரசால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டவரும் இந்தப் பிரணாப் முகர்ஜியே தான்.
 
இலங்கைக்கு வந்து, ஜனாதிபதி மஹிந்தவுடன் தாம் மேற்கொண்ட முதற்சுற்றுப் பேச்சின் முடிவில் மஹிந்த தமது உறுதிமொழியை நிறைவேற்றத் தயாராயில்லை என்பதைப் பிரணாப் முகர்ஜி தெளிவாகப் புரிந்து கொண்டார். மஹிந்த மீது அவர் அதுவரை வைத்திருந்த நம்பிக்கையும் மரியாதையும் தவிடு பொடியாகிப் போக நேர்ந்தது. அதைத் தொடர்ந்து, ராஜதந்திர மட்டத்தில் இந்தியா, இலங்கை அரசு மீது சுமத்திய குற்றச்சாட்டு இலேசானதொன்றல்ல. தாஸின் பி.ஆர் நிறுவனமூடாக இலங்கை, இந் திய அரசை ஆட்டிப்படைக்க முயல் கிறது என்பதே அந்தக்குற்றச்சாட்டு.
 
இலங்கை மீதான இந்திய அரசின்  அதிருப்தி நிலை, பிரணாப் முகர்ஜியின் அரசியல் வாழ்க்கையிலும் திருப்பமொன்றை ஏற்படுத்தி வைத்தது. பிரணாப் முகர்ஜி, வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்து தூக்கப்பட்டு, நிதி அமைச்சுப் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பலன், பிரணாப் முகர்ஜிக்கு இலங்கையுடனிருந்த நெருக்கமான தொடர்பு மெது மெதுவாகக் குறைவடைய நேர்ந்தது.
 
இந்திய அரச உயர்பீடம், விடயத்தை அத்துடன் கைகழுவி விட்டு விடவில்லை. இலங்கை தொடர்பில் அதுவரை தான் கடைக்கொண்டு வந்த மென்போக்கு நிலைப்பாட்டை இந்திய அரசு படிப்படியாகக் கடும்போக்கு நிலைப்பாடாக ஆக்கிக் கொண்டது. கடந்த மார்ச் மாத ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையை ஆதரித்ததன் மூலம் அது இந்திய அரசால் வெளிப்படையாகவே இலங்கைக்கு உணர்த்தப்பட்டது. 
 
வாக்குறுதியைக் கைவிட்டு ஏமாற்றியதற்காக என்ன செய்வோம் என இருந்து பாருங்கள் என இந்தியா, இலங்கை அரசுக்கு விடுத்த அபாய எச்சரிக்கையாக அது கொள்ளத்தக்கது.பிரணாப் முகர்ஜி  அண்மையில் இந்தியாவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். அவரது நியமனம் குறித்து பலதரப்பட்ட சர்ச்சைகள் வெளிவந்த போதிலும், 2014 ஆம் ஆண்டில் இடம் பெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலை கருத்திலெடுத்தே, தூரநோக்குடன் சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜியை புதிய ஜனாதிபதியாகியுள்ளார்.
 
தொழில் துறையிலோ, அரசியலரங்கிலோ சிறப்பாகச் செயற்பட இயலாத அளவுக்கு முதுமைக்கு உள்ளாகும் ஒருவரை, அல்லது அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டியவரென அரசியல் பின்புல நோக்குடன் தாம் கருதும் ஒருவரையோ தான் ஆளும் அரச தரப்பு தனது சார்பாக தேர்தலில் நிறுத்துவதுண்டு. பெரும்பாலும் ஆளும் தரப்பு வேட்பாளரே வெற்றியீட்டி ஜனாதிபதியாகத் தேர்வாவதும் வழமையானதொன்றே.
 
பெரும் பணிப் பொறுப்பு எதுவுமின்றி, தமது அரசியல் வாழ்வின் ஓய்வு நிலையை ஜனாதிபதி என்ற பதவியுடன் கழிக்க நேர்ந்துள்ள நிலையில், இனிமேலும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் மஹிந்த வினதோ, அல்லது அவரது தலைமையிலான அரசினதோ இரட்சகராகத் தொடர்ந்து செயற்பட இயலப் போவதில்லை.

தமிழில் : வியெஸ்ரி, 
மூலம்: மவ்பிம
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment