திமுக இன்னமும் காங்கிரஸ் கட்சி மற்றும் சிறிலங்கா அரசு இணைந்த கூட்டுக்குள் சிக்கிகொண்டுள்ளதாகவே மக்கள் எண்ணுவதும் அவர்களின் தீர்மானம் முக்கியத்துவம் பெறாமைக்கான காரணமாகலாம்.
தெற்காசியாவிலே இந்திய துணைக்கண்டத்திலே அமைந்துள்ள தமிழ் நாடு அடுத்த இருபது ஆண்டுகளுக்கு மிக முக்கியமான இடத்தை வகிக்க இருப்பதை பல்வேறுவகை காரணிகள் எடுத்துக் கூறுகின்றன.
இதில் முக்கியமாக ஈழத்தமிழர்களது பிரச்சனை மிக முக்கிய பங்கை வகிக்கவிருப்பதை அண்மையிலே வோசிங்டனிலிருந்தும் தெற்காசியாவிலிருந்து வெளிவரும் அறிக்கைகளும் அறிஞர்களது உரைகளும் குறிப்பிடுகின்றன.
கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மத்திய அரசை ஆளும் காங்கிரஸ் கட்சியும், அன்று தமிழ்நாடு மாநில ஆட்சியிலிருந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சித் தலைமையும் தமது வெற்றியை தக்க வைத்து கொள்ளும் கபட நோக்குடன் செயற்பட்டனர்.
சில பத்து கடல் மைல்களுக்கு அப்பால் தமது சொந்த தமிழ் சகோதரர்கள் இனப்படுகொலைக்குள் உள்ளாவதை நயவஞ்சகமாக இவர்கள் மறைத்து விட்டதாக தமிழ் நாட்டு மக்கள் மனக்கோபம் கொண்டிருந்தனர்.
இதன் பக்கவிளைவாக கடந்த தமி்நாடு சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எதிர்கட்சி நிலைக்கே வரமுடியாதபடி துடைத்தெறியப்பட்டது. இதனைத்தெடர்ந்து அதன் எதிராளிகட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பெருவெற்றி பெற்று கொண்டது.
இவ்வேளையில் இன்னும் பதினெட்டு மாதங்களில் மீண்டும் இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வர உள்ளது என்பதை சொல்லப்படாத மறைமுக ஆயத்தபடுத்தல்களின் ஆரம்பமும், விழாக்களும் விவாதங்களும்; ஊக்குவிப்பு திட்டங்களும்; கட்டியம் கூறி நிற்கின்றன.
இந்த மறைமுக ஆயத்தப்படுத்தல்களில் தமிழ் மக்களை இனஉணர்வு சூட்டிலிருந்து தணிய வைப்பது திசை திருப்புவது அல்லது அதே சூட்டை சாதகமாக்கி கொள்வது என்பதே தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளின் எதிர்கால தந்திரங்களாக இருக்க முடியும்.
இந்த மூன்று வகைத் தந்திரங்களையம் கொண்ட சந்தர்ப்பவாத கட்சிகள் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டு மக்களால் உருவாக்ககூடிய பல்வேறு தாக்கங்களை கையாளும் நிலைக்கு செல்லலாம். தமிழ் நாட்டை நோக்கியதான மத்திய மாநில கட்சிகளின் கையாள்கைகள் தமிழ் நாட்டின் முக்கியத்துவத்தை மேலைத்தேயங்கள் கண்டு கொள்ள உதவியாக உள்ளன.
முன்பு ஈழத்தமிழர்களுக்கு எதிராக தனது சுய நலன்களை மையமாக வைத்து செய்த பிழைகளை மறைக்க இது வரை இரண்டு மாநாடுகளை தி மு க கட்சியும் அதன் தலைமையும் நடாத்தி விட்டன.
கடந்த முறை பதவியில் இருந்த காலத்தில ஜுன் 2010ல் உலகத்தமிழ்ச் செம்மொழி மகாநாடு என்ற பெயரில் நடாத்திய மகாநாட்டிற்கு பிற்பாடு தி மு க ஆட்சியை தமிழ் நாட்டு மக்கள் தேர்தலில் கவிழ்த்தனர். தமிழர்களை கொன்றொழித்து விட்டு தமிழுக்கு மகாநாடு எடுப்பது எந்தவகையில் நியாயம் என்பது தமிழ்நாடு ஈழ ஆதரவாளர்களது கேள்வியாக இருந்தது.
இதனால் தமிழ்நாடு தமிழர்களை திருப்திப்படுத்த வேண்டிய அதிகப்படியான தேவை தற்போது திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏற்றாற்போல் ஈழத்தமிழர்கள் குறித்த சில முன்னகர்வுகளை தமிழ் நாட்டு மக்களிடையே கொண்டு செல்ல வேண்டிய தேவை திமுக தலைமைக்கு ஏற்றட்டு உள்ளது.
ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமை மகாநாடு என்ற பெயரில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சற்று இறுக்கமாக தீர்மானங்களை போட வேண்டிய நிலைக்கு வந்துள்ளதை இந்த மகாநாட்டு தீர்மானங்கள் கோடிட்டு காட்டுகின்றன.
ஆனால் ஏற்கனவே தமிழ் நாட்டு சட்ட சபையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவினால் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா அரசு மீது அனைத்துலக நாடுகள் விசாரனை நடாத்த வேண்டும், சிறிலங்கா அரசு மீது உலக நாடுகள் பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் இன்னமும் திமுகவின் டெசோ மாநாட்டினை விடவும் சக்தி வாய்ததாகவே உள்ளன.
தமிழ் நாட்டிலே ஓர் அரசியல் ஆளும் உரிமை கொண்ட சக்தி ஒன்றினால் கொண்டு வரப்பட்ட அந்த இத்தீர்மானமானது ஈழ ஆதரவுச் சக்திகளைக்கூட ஒருவகை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டிருந்தது. இதனை பல்வேறு பேட்டிகளிலேயே அந்தந்த இயக்கத் தலைவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.
திமுகவின் டெசோ மாநாட்டு தீர்மானம் அதிமுக அரச தீர்மானத்தை போல் அந்த அளவிற்கு புகழ் பெறாதமைக்கு அதன் காலத்திற்கு தகுந்தவாறு உறுதியான நிலை எடுதக்காததே முக்கிய காரணமாகத் தெரிகிறது.
அதாவது ஐநா சபையின் வேண்டுகோளுக்கு அமைய வரையப்பட்ட தீர்மானம் வெளிவந்ததன் காலப்பகுதியிலேயே தமிழ்நாட்டு அரசின் தீர்மானமும் வந்திருந்தது. ஆனால் டெசோமாநாட்டில் திமுகவின் தீர்மானம் பொதுசன வாக்கெடுப்பிற்கும் அனைத்துலக விசாரனைக்கும் அழைப்பு விடுத்தாலும் திமுகவின் மீதான மக்களின் முன்னைய அனுபவம் அத்தீர்மானத்தின் மீது எவ்வித வியப்பையும் ஏற்படுத்தவில்லை என்றே கொள்ளலாம்.
திமுக இன்னமும் காங்கிரஸ் கட்சி மற்றும் சிறிலங்கா அரசு இணைந்த கூட்டுக்குள் சிக்கிகொண்டுள்ளதாகவே மக்கள் எண்ணுவதும் அவர்களின் தீர்மானம் முக்கியத்துவம் பெறாமைக்கான காரணமாகலாம்.
ஏனெனில் தமிழ் நாட்டில் ஒரு மாநாட்டை திமுக நடாத்துவதும், இதற்கு எதிராக கொழும்பிலே ராஜபக்ச தொண்டர்கள் கருணாநிதிக்கு கொடும்பாவி எரிப்பதும், கொழும்பு பத்திரிகைகள் ஆரவாரிப்பதும், தொடர்ந்து இந்திய மத்திய அரசு தமிழ் நாட்டு நடவடிக்கைகள் சிறீலங்காவின் உள்விவிவகாரங்களில் தலையிடுவதாக உள்ளது என்று மிரட்டுவதும், அடுத்து கருணாநிதியை அவரது வாரிசுகளின் தெலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் மாவீரனாக்குவதும் எல்லாம் முன்னைய அரசியல் நாடகங்களில் கண்ட காட்சிகளும் வசனங்களும் தான்.
மேலைத்தேய நாடுகளின் முதலீடுகளை நாடி நிற்கும் தமிழ் நாட்டு வேலை வாய்ப்புகள் தமிழ் நாட்டின் சமூக பொருளாதார அரசியல் வாழ்வு, தொழில் நுட்பம் பயிற்சிநுட்பம் ஆகியவற்றை வேகமாக மாற்றி வருகின்றன. ஏனைய வட மாநிலங்களுடன் தமிழ் நாடு பொருளாதார முதலீட்டு வாய்புகள் கடும் போட்டியில் உள்ளது. சாதாரண மக்களின் வாழ்ககைத்தரம் வேகமாக முன்னேறிவருகிறது.
ஒருசில துறைகள் ஒருசில மாவட்டங்களில் வளர்ந்து வரும் பொருளாதாரத்துடன் ஈடு போட்டு வளர முடியாது இருந்தாலும் முதலாளித்துவ பொருளாதார பொறிமுறைக்குள் அவையாவும் சிக்கி தமது இடத்தை நிரப்ப வேண்டிய நிலை ஏற்படும் என்பது பல பொருளியல் ஆய்வளர்களின் கருத்தாக இருக்கிறது.
அதேவேளை தமிழ் நாட்டு மக்களின் வளர்ச்சியும் தொழில்நுட்பமும் தொலைதொடர்பு வளர்ச்சியும் இந்தியாவின் மொழிசார் மாநிலங்களிற்கு இடையிலான பொருளாதார வளர்ச்சிப் போட்டி நிலையும் சேர்ந்து ஈழத்தமிழர் நிலைக்கு அப்பால் இனஉணர்வையும் இழுத்து கொண்டே செல்கிறது என்பது சமூகவியலாளர்களின் கருத்தாயுள்ளது.
இந்த இரு ஆய்வறிக்கைளின் அடிப்படையில் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் ஏற்பட்ட பாரிய மாற்றம் சில உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளாகவே தெரிகிறது.
தனது அயல்நாடுகளுடனான சவால் குறித்த போக்கில் மாற்றங்களை கொண்டு வரவேண்டிய நிலையை வெளியுறவுத்துறை ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர் என்றால் அல்லது ஐநா மனித உரிமைகள் சபையில் சிறீலங்காவுக்கு ஏற்றாற் போல் அல்லாமல் இந்தியா ஒரு முக்கிய மாறுபட்ட நிலையை எடுக்க வேண்டி ஏற்பட்டது என்றால் இதற்கு இந்திரா காங்கிரஸ் தமிழ்நாட்டில் கண்ட பின்னடைவு முக்கிய காரணமெனலாம்.
கொழும்பிலே இந்திய, அமெரிக்க நாடுகளின் அண்மைய போக்குகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறன. பல நாட்டு இராசதந்திரிகள் வரவழைக்கப்பட்டு புதிய சிந்தனை குழுக்கள் உருவாக்கப்பட்டு இவ்ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறன. இங்கே பொதுவாக எல்லா ஆய்வாளர்களும் பரிந்துரை செய்யும் விடயம் என்னவெனில் சிங்கள அரசு தற்போது மிக கவனத்தில் கொள்ளவேண்டியது தனிஈழச் சிந்தனைக்கட்டு மானங்களை உடைப்பதும் தமிழ்நாட்டு மக்களை ஈழத்தமிழர் விடயங்களில் தலையிடாது கண்காணிப்பதும் தான் என்பதாகும்.
கடந்த கால அனுபவங்களில் இருந்த நோக்குவோமானால் தமிழ்நாட்டு மக்களை ஈழத்தமிழர் பிரச்சனைகளில் இருந்து திசை திருப்புவதாகவே இனிவரும் காலங்கள் அமையவுள்ளது என்பதுதான் உண்மை.
லோகன் பரமசாமி.
நன்றி - 'புதினப்பலகை'
0 கருத்துரைகள் :
Post a Comment