இந்தியாவுக்கும் இலங்கைக்கு மிடையில் ஏற்பட்டுள்ள ஒருமுறுகல் விடயம் தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகர் அஷோக் கே காந்தா கொழும்பு இந்திய தூதரகத்தில் இடம் பெற்ற இந்தியாவின் 65 ஆவது சுதந்திர தினவிழாவின் போது உரை நிகழ்த்துகையில் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் கருத்து வெளியிட்டார்.
இலங்கை அரசுடன் எமக்கு பிரச்சினைகள் உண்டு. நாங்கள் நட்புரிமை கொண்ட அண்டை நாடுகள் என்ற முறையில் தீர்த்துக் கொள்ள முயன்று வருகிறோம் என்று உயர் ஸ்தானிகர் கூறினார். இந்திய சமூகத்தவர்கள், ராஜதந்திரிகள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், இந்திய பாதுகாப்புப் படை உறுப்பினர்கள், இலங்கை பிரஜைகளான இந்திய வம்சாவளியினர் மற்றும் அந்நாட்டு ஊடகத்துறையினர் என்று பலரும் கூடியிருந்த நிகழ்வில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
முன்னரும் இப்படியான நிகழ்வுகளில் முன்னாள் இந்திய ஸ்தானிகர்கள் உரைகள் நிகழ்த்தியிருக்கிறார்கள். அவை கடுமையானவையாகவும் சில சமயம் கருத்துச் செறிவுடையவையாகவும் இருந்ததுண்டு. ஆனால் காந்தா நாட்டின் சுதந்திர தின விழாவில் இந்தக் கருத்தை ராஜதந்திரமான முறையில் வெளியிட்டிருப்பதானது முன்னொரு போதும் நடைபெறாதது கவனத்துக்குரியதுமாகும்.
இந்திய ஸ்தானிகர் காந்தாவின் இந்தச் செய்தியானது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசுக்கு மிகத் தெளிவாகவே உறைத்துள்ளது. அரசின் உயர்மட்ட அளவுக்கு அதன் பிரதிபலிப்புகள் சென்றுள்ளன. அதன் மீது ஆழமான பகுப்பாய்வு விவாதங்களும் நடைபெற்றுள்ளன.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் பற்றி என்னதான் வெளியில் நல்லவைகள் கூறப்பட்டாலும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் புதிய மட்டத்திலான கீழ் நிலைக்குச் சரிந்துவிட்டன.
கடைசியாக ஏற்றப்பட்ட வைக்கோல் துண்டுதான் ஒட்டகத்தின் முதுகை முறித்தது என்று கூறப்படும் பழமொழிக்கு ஒப்பாகக் கொழும்பில் இந்தியாவுக்கு வழங்கப்படுவதற்காக இருந்த காணித்துண்டு ஒன்று இப்பொழுது சீனாவுக்கு வழங்கப்பட்டிருப்பதே முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது.
இது தொடர்பான இந்தியாவின் கடுமையான எதிர்ப்பு புதுடில்லியிலுள்ள எமது ஸ்தானிகர் பணிமனையில் மட்டுமன்றி கொழும்பிலும் வெளிநாட்டமைச்சிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை வெளிநாட்டு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
287 பேர்ச் காணித்துண்டு இப்பொழுது ஷோவாலங் அன்ட் ஹெட்ஜஸ் பிஎல்சி நிறுவனத்துக்குரியது. இது சொத்து அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனமாகும்.
இது 162 வருடங்கள் பழமையான இந்த நிறுவனம் லீ ஹெட்ஜஸ் அன்ட் கொம்பனி லிமிட் நிறுவனத்தின் இணை நிறுவனமாக இருந்து வருகின்றது. புதுடில்லியிலுள்ள இந்திய வெளியுறவு அமைச்சுக்குப் புதுடில்லியிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவாசம் அழைக்கப்பட்டு இதுபற்றிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
கொள்ளுப்பிட்டியில் ஷோவாலங் அன்ட் ஹெட்ஜஸ் பிஎல்சி நிறுவனத்துக்குரிய காணியில் ஒரு துண்டைப் பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி வழங்குவதில் இலங்கை வெளியுறவு அமைச்சு கால தாமதம் காட்டி வருவது தொடர்பாக இந்தியாவின் கடும் அதிருப்தி அவருக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இந்தியா எவ்வாளவு பாரதூரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்பது புதுடில்லியிலும் கொழும்பிலும் அந்த நாடு ஆட்சேபனைகளை வெளிப்படுத்தியிருப்பதில் இருந்து புரிந்துகொள்ளலாம்.
பல வாரங்களாக ஷோ வாலங் அன்ட் ஹெட்ஜஸ் பிஎல்சி நிறுவனத்தின் நிர்வாக சபை அதிபர் எஸ்.றிச்சார்ட் வாமதேவனுடன் ஸ்தானிகர் காந்தா குறித்த காணி குறித்து பேச்சு நடத்தி வந்துள்ளார். டுப்ளிகேஷன் வீதி முன்பக்கமாக இந்திய கலாசார மண்டபம் ஒன்று கட்டுவதற்காக ஒரு துண்டு காணியைப் பெற்றுக் கொள்வதற்காக இந்தப் பேச்சுகள் இடம்பெற்று வந்துள்ளன. இந்த நோக்கத்தில் இந்தக் காணியை ஒரு பேர்ச் ஏழு மில்லியன் ரூபா வீதம் பெற்றுக் கொள்வதற்குப் பேச்சு வார்த்தைகள் முடிக்கப்பட்டிருந்ததாக இந்தியாவின் வாதமாகும்.
இவ்வாறு இலங்கையில் வெளிநாட்டு தூதரகம் ஒன்று காணி வாங்குவதானால் வெளியுறவு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இதனால் இந்திய ஸ்தானிகரம் வெளியுறவு அமைச்சின் அனுமதிக்கு விண்ணப்பம் செய்திருந்தது. நடைமுறையிலுள்ள வழக்கமான செயற்பாடுதான் இது என்று ராஜதந்திரிகள் தெரிவிக்கிறார்கள்.
ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக வெளியுறவு அமைச்சு மௌனமாக இருந்து வந்துள்ளது என்று இந்தியா கூறுகிறது. எதுவித பதிலும் கிடைக்கவில்லை. அதேசமயம் சீன நிறுவனமான சைனா நேஷனல் ஏரோ ரெக்னொலொஜி இம்போர்ட் அன்ட் எக்ஸ்போர்ட் கேப்பரஷேன் என்ற நிறுவனம் அதன் பிரதான பணிமனையை இந்தக் காணியில் கட்டிக் கொள்வதற்கு வெளியுறவு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
டுப்ளிகேஷன் வீதியை நோக்கியுள்ள காணியில் 60 பேர்ச்சஸ் வழங்குவதற்கான ஏற்பாடாகும். இது சீனா அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் ஒன்றாகும் இது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடத்தப்பட்ட போரின்போது இராணுவ மற்றும் தொடர்புடைய உதவிகளை இந்த நிறுவனம் வழங்கியிருந்தது.
ஆனால் இதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு வித்தியாசமான விளக்கதைக் கொடுத்துள்ளது. ஷோவாலங் அன்ட் ஹெட்ஜஸ் நிறுவனத்துக்குரிய காணியில் ஒரு பகுதியை விற்பதற்கு எடுக்கப்பட்ட முடிவானது முழுக்கவும் அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட உரிமையாளர்களின் தீர்மானம் என்று பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதில் எந்த வகையிலும் அரசு பங்களிப்பு வகிக்கவில்லை. தனிப்பட்ட உரிமையாளர்களிடம் சீன நிறுவனம் அந்தக் காணியை வாங்கியிருப்பதால் அவர்கள் அதற்கு உரிமையாளராகிறார்கள். அந்த வகையில் அவர்களுக்கு அதிகாரபூர்வ அனுமதி கிடைத்துள்ளது என்று அந்த அதிகாரி கூறினார். ஆனால் இந்த விளக்கம் எதுவும் இந்திய கவலையைப் போக்கியிருப்பதாகத் தெரியவில்லை. இந்தியா இன்னமும் கவலையிலேயே இருக்கிறது என்பதையே காந்தாவின் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.
இந்தியா கொழும்பிலும் புதுடில்லியிலுமாக ராஜதந்திர முறையில் இரு ஆட்சேபனைகளைச் சமர்ப்பித்திருப்பதன் பின் விளைவுகள் குறித்து அரசின் தலைவர்கள் கடந்த வாரம் முழுவதும் ஆலோசனைகள் நடத்தியிருந்தார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவுதான் இந்தியாவுடனான இரு தரப்பு உறவுகளைக் கையாளும் மூவர் குழு அங்கு செல்வதை தாமதப்படுத்துவதாகும்.
இந்தக் குழுவில் இருப்பவர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியவர்களாவர். இவர்கள் மூவரும் அடுத்த மாதம் புதுடில்லிக்குச் செல்வதாக முடிவெடுக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் மூன்று மாகாண சபைகளின் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் அவர்களின் பயணம் தாமதப்படுத்தப்பட்டிருப்பதாகப் புதுடில்லியிலுள்ள இலங்கை ஸ்தானிகர், இந்திய வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்துள்ளார். நவம்பர் முதலாம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டம் நடைபெறவிருப்பதையொட்டி இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவுகளை அபிவிருத்தி செய்து கொள்வதற்காக இவர்களின் பயணம் ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அப்பொழுது உலக நாடுகள் தொடர்பான பருவகால ஆய்வுகள் நடைபெறவிருக்கின்றன. இந்த ஆய்வுக் குழுவுக்கான உறுப்பு நாடுகளைச் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையே தன் விருப்பப்படி தெரிவு செய்து இருந்தார் என்பது தவறாகும்.
ஆய்வுக் குழுவுக்கான மூன்று உறுப்பு நாடுகளும் சீட்டிழுப்பின் மூலமே தெரிவு செய்யப்படுகின்றன. சபை இலங்கை தொடர்பாக நடத்தும் விவாதங்களை அவதானித்து அவர்கள் சபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அவ்வாறு சீட்டிழுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட நாடுகள் இந்தியா, ஸ்பெயின் மற்றும் பெனின் என்பனவாகும். சபையில் தீர்மானங்கள் எடுக்கப்படும்போது இந்த அறிக்கை ஒரு வழிகாட்டியாக அமையும்.
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகள் முறுகு நிலை அடைவதற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியன் ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கியிருந்த ஒரு பேட்டியையும் காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. கடந்த மார்ச் மாதம் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்குப் பின்னர் முதல் தடவையாக இந்தியா பற்றி ராஜபக்ஷ வாய்திறந்து குறை கூறியிருந்தார். அது இந்திய மத்திய அரசுக்கு ஒரு இறுக்கமான செய்தியை வழங்குவதாக இருந்தது.
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் தமது ஆதரவை வழங்கி வந்திருக்குமானால் மனித உரிமைகள் சபையில் ஒரு தீர்மானம் இலங்கைக்கு எதிராக வந்திருக்கமாட்டாது என்று அவர் கூறியிருந்தார். தீர்மான வாசகத்தை தணியச் செய்வதற்கு இந்தியா உதவி புரிந்துள்ளது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்தியா அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருந்தது தொடர்பான ரைம்ஸ் ஒப் இந்தியா கேள்விக்கு ஜனாதிபதி அளித்திருந்த பதில் வருமாறு:அந்தத் தீர்மானத்திலிருந்து நாம் விலகிச் செல்வதுதான் இனி நல்லது. நல்லெண்ணங்களும் நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கவையே. ஆனால், இந்தியா எம்முடன் இருந்திருக்குமானால் கால அவகாசம் வேண்டும் என்ற எமது கோரிக்கையை இந்தியா ஆதரித்திருக்குமானால் யாருக்குத் தெரியும் அப்படி ஒரு தீர்மானமே வந்திருக்காது. இந்தப் பிரதேசம் இந்தியாவை எதிர்நோக்கி நிற்கின்றது.
அண்டை நாடுகளுடன் தான் நடந்து கொள்ளும் முறை சரியா? இல்லையா? என்பதை இந்தியா நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார்.
சண்டே ரைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி விமரிசனத்திலிருந்து ஒரு பகுதி
நன்றி- உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment