இந்தியா ஈழத் தமிழருக்கு உதவுமா?


இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நிதி உதவிகளை நேரடியாக அந்த மக்களிடமே வழங்குவது குறித்து இந்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி உதவியை வைப்பில் இடுவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசின் ஊடாக இந்தியாவால் வழங்கப்படும் உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சரியாகச் சென்றடையாத காரணத்தால் இந்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்காக இந்தியா வீடமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல உதவிகளை அறிவித்திருந்தது. இந்த உதவி நிதியை இலங்கை அரசு சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. 
 
இந்த நிலையில் நேரடியாகவே நிதி உதவிகளை வழங்குவது குறித்து இந்தியா ஆலோசித்து வருகிறது. தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களின் நெருக்கீடும் இதற்குக் காரணமாக அமைகின்றது.
 
 ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் வெற்றி பெறுகிறதோ இல்லையோ ஈழத்தமிழர் விடயத்தில் இந்திய அரசு ஒரு சில செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான உந்துதலை ஏற்படுத்தியுள்ளது.
 
 அதில் ஒன்றுதான் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ முன்வந்தது எனலாம். 
ஈழத்தமிழர் பிரச்சினையில் தீர்வு விடயம் தொடர்பாகச் செயற்படாமலேயே தனது இராஜதந்திர நகர்வை மேற்கொண்டு வருகிறது. ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியா தொடர்ந்து மோசமான நிலைப்பாடுகளையே எடுத்துள்ளது.
 
 முதல் தடவையாக ஈழத்தமிழர் விடயத்தில் ஒரு சேவையை இந்தியா செய்ய முன்வந்துள்ளது. அந்தச் சேவை முழுமையாக இடம்பெற்ற பின்புதான் இந்தியா பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியும். அதுவரையில் இந்தியாவை எதிர்பார்க்க முடியாது. 
 
1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தில் ஈழத்தமிழர்கள், சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்ட போது இனப்படுகொலையைக் கண்டித்து ஐ.நா. துணைக்குழுக் கூட்டத்தில் இதயமுள்ள நாடுகளின் தலைவர்கள் பலர் பேசினர்.
 
 ஐ.நா. இந்தியப் பிரதிநிதி சையத் மசூத் இலங்கையில் உள்ள நிலைமைகள் குறித்து ஐ.நா. அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று பேசினார். அப்போதைய உலக முக்கியத்துவமுள்ள பிரச்சினைகள் பற்றி ஐ.நா. அவையில் பேசிய அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி கூட ஜூலை இனப்படுகொலை குறித்து எதுவும் பேசவில்லை. 
 
இதுபோன்ற தொடர்ச்சியான நம்பிக்கைத் துரோகங்களின் முடிவில்தான் இந்தியாவை நம்பிச் செயற்பட்டால் முதலையின் முதுகில் பயணித்த குரங்கின் கதையாகிவிடும் என்று பிரபாகரன் கூறியதாகத் தெரிகிறது.
 
இது இந்தியா பற்றிய அவருடைய போராளிகளினுடைய கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியைக் கொல்ல வந்த சிங்களவரின் நம்பிக்கையைப் பெறுவதில் காட்டிய அக்கறையில் நான்கில் ஒரு பகுதியைக் கூட நண்பர்களாகக் கருதப்பட்ட தமிழர்கள் மீது இந்தியா காட்டத்தயாராயில்லை.
 
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப் போரில் தமிழர்களை முழுமையாக அழிப்பதற்குத் துணைபுரிவதன் மூலம் சிங்களவர்களின் நேசத்துக்குரியோராக மாறிவிடலாம் என்று இந்திய ஆட்சியாளர்கள் நினைத்து விட்டிருப்பார்கள் போலிருக்கின்றது.
 
 இப்போதும் கூட தன்னுடைய புவியிட முக்கியத்துவத்துக்கும் பாதுகாப்புக்கும் ஈழத்தமிழரின் ஆதரவு முக்கியமென்பதையும் ஈழத்தமிழர் வாழும் புவிப்பரப்பும் கடற்பரப்பும் இந்தியாவுக்கும் பாதுகாப்பு என்பதையும் இந்தியத் தலைமைகள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவே எல்லாம் என்ற கூவல் ஆபத்தானது. இது அமெரிக்காவே எல்லாம் என்பதற்குச் சமமானது.
 
இந்தியாவை நம்பியும் அமெரிக்காவை நம்பியுமே வன்னி இறுதிப்போர் மூர்க்கத்தனமாக மேற்கொள்ளப்பட்டு பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஈழத்தமிழர் தமது தேசிய விடுதலைப் போரைத் தொடர்ந்து முன்னெடுப்பது தவிரவேறு வழியில்லை. இந்தியாவையும் இந்தியா போன்ற வல்லரசுகளையும் உலக அரசியல் போக்குகளையும் கூர்மையாக அவதானித்து எப்படி அதைக் கையாள்வது என்ற ராஜதந்திரத்துடன் நகரவேண்டும்.
 
ஈழத்தமிழர், புலம்பெயர் தமிழர், தமிழ்நாட்டுத் தமிழர் ஆகிய மூன்று தரங்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகள்தான் விடிவுக்கு வழி. ஒவ்வொரு தரத்துக்கும் தனித்தனி கடமைகள் உண்டு. ஆனால் இந்திய சரணாகதி அரசியல் எவருடைய கடமையாகவும் இருக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம்.
 
எந்த விடுதலை இயக்கமும் இறப்புக்களை, தியாகங்களை, அர்ப்பணிப்புக்களை, இழப்புக்களை எதிர்கொள்ளாமல் தனது இலட்சியத்தை அடையமுடியாது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உலகில் உள்ள எந்த விடுதலை இயக்கத்துக்கும் சளைத்ததல்ல என்று வரலாற்றில் நிரூபித்து இருக்கின்றது. இருப்பினும் இன்று பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது. 
 
முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு கடந்துபோன மூன்றாண்டுகளை மீள்பார்வை செய்தால் சில அசைவுகளைத் தவிர பெரும் மாற்றங்கள் ஏதும் மூன்று ஆண்டுகளில் நடைபெறவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான் அரசுகளின் உதவியுடன் சிங்கள பாசிச அரசு ஈழத்தின் மீது ஈவு இரக்கமற்ற போரை நடத்தி முடித்தது.
 
விடுதலைப் புலிகளின் தலைமையையும் அவர்களின் இராணுவ சமூக அரசியல் கட்டமைப்புக்களையும் சிதைத்து அழித்து ஈழத்தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து பல லட்சம் மக்களை முள்வேலி முகாம்களில் சிறைப்பிடித்து இரத்த வெள்ளத்தில் ஈழம் மூழ்கடிக்கப்பட்டது. இந்தப் போரில் உடல் உறுப்புக்கள் சிதைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களும் அனாதையாக்கப்பட்ட பல்லாயிரம் குழந்தைகளும் விதவையாக்கப்பட்ட ஒரு லட்சம் பெண்களும் தொடர்ந்துபடும் அவலங்களும் துயர்களும் ஈரமுள்ளவர்களின் நெஞ்சுக்குலைகளை பதற வைப்பதாக இன்றும் உள்ளன. 
 
சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை முகாம்களில் உள்ள போர்க் கைதிகள் கதி என்ன ஆயிற்று? அவர்களில் எத்தனை பேர் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்? சர்வதேச சட்டங்களும் மனித உரிமைகளும் போர்க் கைதிகள் விடயத்தில் கடைப்பிடிக்கப்பட்டதா என்று பெரும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. 
 
ஜனநாயக கம்யூனிச முகமூடிகள் அணிந்த இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா என அனைத்து அரசுகளும் தங்களுக்குள்ள முரண்பாடுகளை தள்ளி வைத்துவிட்டு ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முதலில் முறியடித்தன. 
  
கடந்த ஆண்டு அமெரிக்கா சீனா முரண்பாட்டால் மீண்டும் ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஏற்கப்பட்டுள்ளது. 
 
தற்போது மஹிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க எழுந்த தமிழக மக்களின் போராட்டங்கள் படிப்படியாக வடிந்து வருகின்றன. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் போன்றவர்களுக்கான தூக்குத்தண்டனை ரத்துச் செய்ய எழுந்த எழுச்சியும் தற்காலிக ஒத்திவைப்பிற்குப் பின் தணிந்துள்ளது. 
 
மூன்றாண்டுகள் முடிந்த பின்னும் எந்த சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் முள்ளிவாய்க்காலுக்குள் சென்று உண்மை நிலையை அறிய முடியவில்லை என்பது யதார்த்த  உண்மை. முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்று முழுமையான தகவல்கள், தகவல் தொடர்பு வசதிகள் நிறைந்த உலகில்  வெளிவராமல் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ளன.
 
இந்திய இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்தவர் சதீஸ்நம்பியார். இவர் மேஜர் ஜெனரலாக இருந்த போது இலங்கையின் உயர் பாதுகாப்பு வலயங்களைப் பற்றி ஆய்வு செய்து அது பற்றி இந்தியாவுக்கு கருத்துச் சொல்வதற்காக 2003 இல் அனுப்பப்பட்டார். 
 
வடக்கு, கிழக்கு மக்களின் மீளக்குடியமர்வு மற்றும் அவர்களின் பாதுபாப்பை உறுதி செய்ய வேண்டுமென்றால் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் களையப்படவேண்டும் என்பது அவர் அளித்த அறிக்கையின் சாரம். இந்தச் சதீஷ் நம்பியார், இலங்கையரின் நட்பைப் பெற்ற பின் இலங்கையின் இராணுவ ஆலோசகராக பணிபுரிந்தார். 
 
விடுதலைப்புலிகளையும் மக்களையும் அழிக்கும் இந்தியாவின் திட்டத்தைச் செயற்படுத்தவே அவர் அங்கு அனுப்பப்பட்டார் என்பதும் இவரது சகோதரர் விஜய்நம்பியார்  ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனின் சிறப்புச் செயலர் என்பதும் விஜய் நம்பியார் முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது கொழும்பில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்ற பின் தடயங்கள் இல்லாமல் அளிப்பதில் இந்த இரு நம்பியார்களும் பின்னிருந்து செயற்பட்டார்கள் என்பதும் உண்மை. அப்படிப்பட்ட இந்தியா பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீது அக்கறை கொள்ளும் என்பது பொய்க்கனவு.       

நன்றி - உதயன்                        
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. வணக்கம் ஐயா எங்கள் குழு இம்மாத 26ம் தேதி சென்னையில் தமிழ் சார்ந்த பெரு ஓன்று நடத்த இருக்கிறோம். இதற்கு வெளிநாடு வெளியூர்களில் இருந்து தமிழ் சார்ந்த அறிஞர்கள் பலர் ஆர்வம்யுள்ளவர் கலந்து கொள்கிறார்கள் நீங்களும் வரவேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள 9566661215 இந்த எண் அழைக்கவும் தமிழ் பற்று கொண்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் சொல்லவும் ஐயா........

    ReplyDelete