பலாலியில் பதினொரு இராணுவ மினிமுகாம்களை ஒரே தடவையில் அடித்திருந்தார்கள். "பொடியள்'. காயம்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கான வாகனங்களின் வேகத்திற்காக வீதி வளைவுகளிலிருந்த வேலிகள் வெட்டிவிடப்பட்டிருந்தன.
இரண்டொரு நாள்கள் சண்டை நீடிக்கலாம் என்கின்ற அனுமானம், மரவள்ளிக்கிழங்குப் பொரியலை பொலுத்தீன் பைகளில் அடைக்கும் பணியில் மும்முரமாக இருந்த அத்தை, சித்திமாரின் பேச்சுக்களிலிருந்து அப்போது ஆறுவயதுப் புத்திக்கு அவ்வளவாக ஏறவில்லை. பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் எவருமேயில்லை.
போராளிகளாயில்லாத போதிலும் இரத்தம் தோய்ந்து வரும் சீருடைப் பையன்களைத் தூக்கி இறக்கவும், களமுகப்புகளுக்கு விநியோகம் காவும் வாகனங்களை ஓட்டவும், ஏற்றி இறக்கல்களில் ஒத்தாசை புரியவும் என்று எல்லோருக்குமே வேலை இருந்தது.
அன்றைக்குக் கேட்ட ""குண்டுச் சத்தம்'' ஒன்றுக்குக்கூட நெஞ்சில் பயம் ஏறவில்லை.
இன்றைக்கும் பசுமையாக நினை விலிருக்கும் அந்த நாள்களில் யாழ்ப்பாணத்தில் இராணுவ பிரசன்னம் பலாலி எனப் படுகின்ற எல்லைக்குள் மட்டுமே, உட்கார்ந்திருந்தது.
செவ்விரும்புத்துகள்கள் வேகங்கொண்டு பறக்கும், கந்தகப்புகை மூச்சுக்குழல்களில் முட்டும், சிவப்புப் புழுதி மண்ணில் குருதி கொப்பளிக்கும், சமர்க்களமொன்றில் இடுப்பில் இறுக்கிக் கட்டிய சாரத்தோடு அறுந்த செருப்பை தோளிடுக்கில் ஆயுதத்துக்கு மிண்டு கொடுத்தபடி வேகங்கொண்டு நின்றவனின் தூரக்கனவான ""தமிழீழம்'' என்கின்ற சொல், இன்றைக்கு எண்ணற்ற தொலைவில், திராவிட சக்தியை அரசியல் சதியாக்கி கபடத் தாயம் போடும், கருணாநிதியின் ""டெசோ''விடம் ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பது எத்தனை பெரிய முரண்நகை?
"தமிழ்த் தேசியம்'' என்கின்ற சொல்லாடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே "தமிழீழம்'' தமிழரின் தீராக்கனவு. குட்டிமணியின் கண்மணிகளை வெலிக் கடையில் வெளியெடுத்து வைத்தது, சிவகுமாரனை கோப்பாயில் மரவள்ளித் தரவைகளினூடாக மூர்க்கங்கொண்டு ஓடவைத்தது, உமாமகேசுவரன் தான் இனிமேல் தமிழ்த் தலைவன் என்ற அறிவிப்பைச் செய்ய வைத்தது, இன்றைய ஜனநாயக நீரோடும் தேவானந்தாவை, சுரேஸை பொள்ளாச்சியிலும், வேலூரிலும் காடுகளில் பயிற்சியெடுக்க வைத்தது. பத்மநாபா என்றொரு தலைவனைப் பிரிந்து போகச் செய்தது, பால குமாரனை பக்கத்தில் கொண்டு சேர்த்தது, பிரபாகரனுக்கு உலகத் தமிழ்த் தலைவன் என்கின்ற அங்கீகாரத்தை கொடுத்தது வரை, எல்லாமே அந்த மந்திரச் சொல் செய்த மாயங்களே! பெயர் சொல்லத் தெரிந்த மேற்படி சிலரின் பின்னால், தத்தமது கொள்கை வகுப்புக்களுக்கேற்பவும், சுயவிருப்பங்களுக்கேற்பவும் நள்ளிரவுகளில் வீட்டைவிட்டு ""ஓடி வந்த'' எல்லா இளைஞர்களிடமும் சுலபமாக கொடுக்கக்கூடியதாக இருந்ததாகம், தமிழீழம் பற்றியது மட்டுமே!
வெளிச்செல்ல முடியாத துர்நாற்ற காரணங்களுக்காக, அகாலத்தில் பிரிந்துபோன கட்சிகளும், இயக்கங்களும் இன்றும் தம் பெயரோடு ""உ'' இனைச் சுமப்பது, வெறு மனே பூசிமெழுகிவிட முடியாத எம் தீராக் கனவுகளின் ஆங்கில அடையாளம்.
வெள்ளைக்கு மாறிவிட்ட முன்னாள் புரட்சியாளர்களின் முன்னிருபது வருடங்கள் உண்மை மட்டும் பேசும் வல்லமையுடையனவாயின், மேலே பெயர் குறிப்பிட்டவர்களின் சுயசரிதைப் பக்கங்களின் முதல் அத்தியாயங்களைத் தனித்தனியே எழுதும் தேவை எதுவுமே இருக்காது!!
தத்தமது வசதிகளுக்காக இயக்கம் என்கின்ற நீண்ட நதியிலிருந்து கட்சிக் குளங்களுக்குள் குதித்தவர்களின் எதிர்ப்பாற்றல் திறன், வேகமாக மட்டுப்படுத்தப்பட்டு குறுகிப்போனது. தனக்கு மூக்குப் போனாலும், எதிரிக்கு சகுனப்பிழை ஆனால் போதுமென்ற பொன் விளையும் (?) மனங்கொண்டவர் களின் ஆயுதங்களையும், ஆக்ரோசத்தையும் ஆளுமினமும், துரோகங்களையும், துண்டான நாக்குகளையும் வீழ்ந்த மண்ணும் ஆழப் புதைத்துக்கொண்டன. "பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த கோவணத்தையும் களவு கொடுத்தவர்கள்'' என்ற நீளவசனத்தைப் பெரிதூன் விரும்பிகளிடம் மட்டுமே விதைத்து விழல் வேளாண்மைக்கு முயன்றவர்கள், இணக்க அரசியல் என்கின்ற வெள்ளைப் பச்சையரிசி தடையறக் கிடைக்கும் லொறிகளுக்காக மட்டும் அகலவாசல் வைத்து, இராணுவக் காவலும் வாங்கியிருந்தனர். மேற்சொன்ன "பட்டு வேட்டி எதிர் கட்டிய கோவணம்'' வசனம் கூட அவர்கள் சுயமாகத் தேடியதில்லை என்பது, காலம் தாழ்த்தியோ, சற்று முன்னரோ வெளிவந்த வேடிக்கைகளில் ஒன்று.
1982.04.14 ஆம் திகதியிட்ட முன்னுரையோடு, வைரமுத்துவின் "இன்னொரு தேசிய கீதம்'' என்கின்ற வெளியீட்டின் 107 ஆம் பக்கத்திலிருந்து உருவி எடுக்கப்பட்டிருந்ததும் இந்தியாவின் சுதந்திர தினத்தை எள்ளி நகையாடியிருந்ததுமான அந்தக் குறுங் கவிதை இவ்வளவும்தான்.
""அவன் ஒரு
பட்டுவேட்டி பற்றிய
பட்டுவேட்டி பற்றிய
கனவில் இருந்த போது
கட்டியிருந்த கோவணம்
களவாடப்பட்டது''
எழுதப்பட்ட காலமும், தமிழகத்தின் பாண்டி பஜாரின் வீதிகளில் குறுந்தூர குறிபார்த்துச் சுடும் போட்டிகளில் ஈடுபட்டிருந்த முன்னாள் விடுதலை மேதாவிகளின் காலமும் ஒத்துப்போவதால், ""சுட்டது'' தமிழக இளைஞர்களை மட்டுமல்லாது, தமிழகத்து வரிகளையும் தான் என ஏகத்துணியலாம்.
"இதிலயும் இரவலா தோழரே!'' சிபாரிசுக் கடிதம் கொடுத்த ஒற்றைக் காரணத்துக்காய் பிரபாகரனையும் அவன் பின்னால் திரண்ட ஒட்டுமொத்த தமிழினத்தையும் இளக்காரமாய் ஏளனம் வழியப் பார்க்கும் உங்களில் எவரேனும் இதைப் படிக்க நேர்ந்தால், நிலைக் கண்ணாடி முன்பாக நின்று இப்படிச் சொல்லிப் பாருங்களேன் ""மறுபடியும் நான் தான் "அவுட்'டா?''
"பற்று' என்ற தூய தமிழ்ச் சொல்லை, நாசிக்கமலத்திலிருந்து ஆழ்ந்து அனு பவித்து உச்சரித்து, அதன் அழகையுணர்ந்து பின்பற்றுபவர்கள் எல்லோரது சமயலறைகளிலும் ""உப்புக் கிண்ணம்'' அடிக்கடி நிரவலேற்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றது என்பதை, ஆழ்ந்த அனுதாபங்களுடன் அறியத்தரக் கடமைப்பட்டுள்ளோம்.
"தமிழீழம்'' என்கின்ற சொல்லைப் பிரசவித்த பெருமை வல்வெட்டித்துறைக் கல்லாது வட்டுக்கோட்டைக்கே சேரும்! ஈழத்தந்தை செல்வா போட்ட விதையை மரமாக்கிப் பார்க்க எண்ணிய ஆசையை முள்ளிவாய்க்கால் வரை நீடித்த பெருமையை, வல்வையின் நெருப்பைச் சுமந்த கருப்பை தாங்கும். சொல்லும் போது உடலின் உரோமங்கள் விறைத்து நிற்கின்றனவாயும், என் தேசம் என்கின்ற சிலிர்ப்பு இறுமாந்து எழுகின்றதாயும் பிரயோகத்திலிருந்த ""அந்தக் கனவை'' புதைக்க முயற்சித்த குழியை வெட்டியவர்களைக் கொண்டே நிரப்ப எத்தனித்த பேரினத்தின் பொறிக்குள் ஒட்டுமொத்த இனமும் வசமாகச் சிக்கினோம் என்பதே உண்மை.
இன்றைய நாள்களில் "டெசோ' வர்ண ஜாலத்தைத் தோற்றுப்போன தனது திராவிடக் கிண்ணங்களுக்குள் கரைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதியையும், மாநாட்டில் தமிழீழத் தீர்மானம் நிறைவேற்றக்கூடாதென்ற சொக்கத்தங்கம் சோனியாவின் அன்புக்கட் டளை(!)யைச் சுமந்து வந்த சிவகங்கைத் தமிழன் ப.சிதம்பரத்தையும், மீண்டுமொருமுறை ராஜ்டிரபதி பவன் பார்க்கும் ஆசையில், ""சோனியாவை பிரதமராக்கவும் தயாராக விருந்தேன்'' என்று டெல்லி வீதிகளில் மடிப்பிச்சை கேட்குமளவுக்கு தன் அறிவியல் விம்பத்தை ஒரே நொடியில் போட்டுடைத்த அணு விஞ்ஞானி அப்துல்கலாமையும், ""பிரபாகரனைக் கொன்ற பின்னரே ராஜீவ் காந்தியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்துவேன்'' என்ற சபதத்தை, அவசரக் குடுக்கைத்தனமாக நிறைவேற்றிய நிழலில் வாழும் சுப்பிரமணிய சுவாமியையும் ""மண்ணெத்தித் தூற்றும் அளவுக்கு'' எம் கைகளும், பொல்லாத நாவுகளும் சுத்தமானவை தானா?
இவர்கள் யாவரினதும் மெய்நிறம் எதுவென்று கண்டுபிடிக்க மட்டுமே தமிழனின் தற்காலிக வீழ்ச்சி எமக்கு உதவியிருக்கின்றது. மெல்லக் கண்மூடி, நெற்றிப் பொட்டில் சிந் தனை கூட்டிச் சொல்லுங்கள் எம்மவர் களே, கருணாநிதிமட்டுமா தமிழீழத்தை மறுதலித்த மனித மிருகம்?
"வடக்கு கிழக்கு தமிழரின் தனித்த தாயகம்'' என்கின்ற சுலோகத்தை, கட்சி அலுவலகத்துச் சுவரில் வர்ணம்பூசி மறைத்துவிட்டவர்களை ஏன் மறந்தீர்கள்?
"ஜெனிவா', "ஒஸ்லோ' நகரங்களில் கோட், சூட் கம்பீரத்தில் புலம்பெயர் தமிழர்களின் முன்னால் மேடையேறி ""பிரபாகரன் மட்டுமே ஒரே தீர்வு'' என்று தன்னளவில் புளுகிவிட்டு, பிரதியமைச்சரானவனை எப்படி மன்னித்தீர்கள்? மாகாண முதலமைச்சராக்கி ஏன் மணியடித்தீர்கள்?
பனியிலும், குளிரிலும் கழுத்து மூடிய கம்பளிகளோடு எம்மவர்கள் வியர்வை வெளித் தெரியாமல் சிறுகச் சேமித்த அந்நிய நாட்டுப் பணத்தை, ஆயுதமாக்கி அனுப்புவதாகக் கூறிவிட்டு, ""ஆனை வருமுன்னரே மணியோசையை அனுப்பி'' ஆப்பு வைத்த தொப்பித் தலையன்களின் கண் ணீருக்கு ஏன் அனுதாபிக்கின்றீர்கள்?
வாக்கு வாங்கும் வரை, ""வீழ்ந்து விடாத வீரம், மண்டியிடாத மானம்'' என்று வீர வசனம் பேசிவைத்துவிட்டு, அலரிமாளிகையின் தேநீர்க் கோப்பைகளை கையில் வாங்கியவுடன் ""தனிநாடு கேட்பவனை நாங்களே தோற்கடிப்போம்'' என்பவனை எல்லாம் எப்படி அனுசரிக்கின்றீர்கள்?
அவரவர் எடுத்து கைப்பக்குவம் காட்டுவதற்கு, தமிழீழம் என்ன தாளி தச் சரக்கா?, ""இலங்கைக்குள் இன்னொரு நாட்டை அனுமதிக்கப்போவதில்லை'' என்று யாருமில் லாத கடையில் "ரீ' போட்டு வைத்தி ருக்கும் ""பற்றீசியா புட்டினிஸ்''சுக்கு, "கணியன் பூங்குன்றனாரை' பார்க்கவோ, கேட்கவோ சந்தர்ப்பமில்லைத்தான். ஆயினும் ""யாதும் ஊரே யாவரும் கேளீர்'' என்று உலகப் பெருவெளிக்கே சமத்துவம் கேட்ட பழந்தமிழ்ப் புலவன் பச்சைப் பேயனா?நெஞ்சுக்கினிய துரோகிகளே! தூங்குவது போல் நடிக்கும் வரலாறு, "புரண்டு' படுப்பதில்லை! கடன் புத்தகத்தில் உங்களின் பக்கம் இடமின்றி வழிகின்றதுநிச்சயம் திருப்புவோம்!
வெற்றி பெற்ற பின்னர் மட்டுமே, எம் அனுபவ அவலங்களைப் பாடமாக வேனும் பதிவேற்றிக்கொள்ள உலகம் தயாராகவிருக்கின்றது. ""போராடியவன் தோற்றுப் போனால் தீவிரவாதி'' என்ற சினிமா வசனங்களை "ஸ்விங்கம்' போல் துப்பிவிடுங்கள். லட்சோப லட்சம் உயிர்த்தியாகங்கள் எந்தக்கணத்திலும் தோற்கப் போவதில்லை என்ற நம்பிக்கை ஒன்றே போதும் எம் விடு தலைத் திரியின் விளக்கினை ஏற்ற,பல போரா ளிகளின் நெஞ்சிலும், சில கோமாளிக ளின் மேலாடைகளிலும் இன்னும் உயிர்ப்புடன் வாழும் சேகுவேரா கூட வெற்றியோடு சாக வில்லை! உயிர்துறந்த பின்னும் அவன் கண்கள் மூடியிருக்கவில்லை!
நன்றி - உதயன்
நன்றி - உதயன்
Thanks for remembering our destination. sathi
ReplyDelete