ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள பூகோள கால மீளாய்வு கூட்டத்துக்கு முன்னதாக, இந்தியாவுடனான உறவுகளை சீர்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இலங்கை அரசாங்கம் இருக்கிறது. ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அடுத்து, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் ஒரு தேக்கம் உருவாகியுள்ளது. இந்தியாவுடன் எமக்கு எந்தப் பனிப்போரும் இல்லை, பனிக்காதல் தான் உள்ளது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியிருந்தாலும், அது எந்தளவுக்கு உண்மை என்பதை, நடப்பு நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானிக்கின்ற ஒருவரால் புரிந்து கொண்டு விடமுடியும்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், இந்தியாவுடனான நெருக்கத்தைக் குறைக்கத் தொடங்கிய இலங்கை, கடந்த மார்ச் மாதத்துக்குப் பின்னர் கணிசமான தூரம் விலகியே நிற்கிறது. முன்னரெல்லாம் அடிக்கடி, புதுடெல்லிக்குப் பறந்த இலங்கையின் அமைச்சர்கள் யாரும், ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னர் அங்கு செல்லவேயில்லை. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக, அமைச்சர் பசில் ராஜபக்ஷ புதுடெல்லிக்கு செல்வதற்கு முயன்ற போதும், சட்டமன்றத் தேர்தல்களைக் காரணம் காட்டிஇ சந்திக்க நேரம் இல்லை என்று சொல்லியிருந்தது இந்தியா. இந்தநிலையில் வரும் 24ம் திகதி பசில் ராஜபக்ஷ தலைமையில், கோட்டாபய ராஜபக்ஷ, லலித் வீரதுங்க ஆகியோரைக் கொண்ட குழு புதுடெல்லி செல்வதற்கு திட்டமிட்டிருந்தது. இந்தப் பயணத் திட்டத்தையும் கூட இந்தியா, காரணம் கூறாமல் நிறுத்தி விட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்தியாவை நெருங்குதல் என்பது இலங்கைக்கு பெரும் பிரச்சினையாகவே உருவெடுக்கிறது. ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது இலங்கை அரசுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சீற்றம் இன்னமும் தணியவில்லை. ஆனாலும் இந்தியாவிடம் கோபம் பாராட்ட முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. அண்மையில் 'ரைம்ஸ் ஒவ் இந்தியா'வுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் முடிவின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெனிவா தீர்மானம் தொடர்பான கருத்தின் ஒரு கட்டத்தில் அவர், 'இந்தியா எமக்கு ஆதரவாக நின்று, மேலும் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கைக்கு ஆதரவளித்திருந்தால், அவ்வாறான தீர்மானமே இல்லாமல் போயிருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பதை விட, அந்தத் தீர்மானமே வராமல் இந்தியா தடுத்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு அவரது கருத்தில் தொக்கி நிற்கிறது. இது இந்தியாவில் இருந்து இலங்கை எட்ட விலகி நிற்பதற்கான முக்கியமான காரணம். அதேவேளை, தனது சொல்லை இலங்கை கேட்காமல் ஏமாற்றுகிறது, சீனாவின் பக்கம் சார்ந்து செல்கிறது என்று கருத்து இந்தியாவிடம் ஆழமாக உறைந்து விட்டது.
எவ்வாறாயினும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் இருந்து வரும் இந்த இடைவெளியை எப்படியேனும் குறைத்தேயாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இலங்கை அரசாங்கம். காரணம் இன்னும் இரண்டரை மாதங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் - பூகோள கால மீளாய்வு கூட்டத்தை இலங்கை சந்திக்கப் போகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் இந்த மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கையின் மனிதஉரிமைகள் நிலையை மதிப்பீடு செய்வதற்கு மூன்று நாடுகளைப் பொறுப்பாக நியமித்துள்ளார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை. இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய அந்த மூன்று நாடுகளுமே இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தவை. எனவே இந்த மூன்று நாடுகளிடம் இருந்தும் இலங்கைக்குச் சார்பான நகர்வுகளை எதிர்பார்க்க முடியாது. எனினும், இலங்கைக்கு மிகவும் வேண்டிய நாடு இந்தியா. அதைவிட இந்தியா நினைத்தால் ஜெனிவாவில் தனக்கு எதிரான எந்தப் பிரச்சினையையும் சமாளித்து விடலாம் என்று இலங்கை நம்புகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேட்டியில் அதைத் தெளிவாகவே உணர முடிகிறது. இதற்கு, இலங்கைக்கும் இடையில் எழுந்துள்ள தடைகளை உடைத்தாக வேண்டும். இதற்கு,உயர்மட்டக் குழுவை புதுடெல்லிக்கு அனுப்ப வேண்டும். அத்தகைய குழுவொன்றை அனுப்பி சிக்கல்களை தீர்க்கும் முயற்சிகளும் கூடத் தடைப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது. அமைச்சர்கள் மட்டத்தில் தொடர்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அற்றுப்போனால், இருக்கின்ற ஒரே வழி அதற்கும் உயர்மட்டத்தில் உள்ளவர்களின் சந்திப்புத் தான். அதாவது, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்க வேண்டும். அத்தகையதொரு சந்திப்புக்கு இப்போது வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் இடையிலான சந்திப்புக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன.
ஒன்று- மன்மோகன்சிங் கொழும்பு வரவேண்டும். இரண்டு- மஹிந்த ராஜபக்ஷ புதுடெல்லி செல்ல வேண்டும். மூன்று- இரு நாடுகளுக்கும் வெளியே இருவரும் சந்திக்க வேண்டும். இதில் முதலாவது தெரிவுக்கு அறவே வாய்ப்பில்லை. ஏனென்றால், மன்மோகன்சிங் இப்போதைக்கு கொழும்புக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளும் உத்தேசம் ஏதுமில்லை. மன்மோகன்சிங் இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பின்னர், இலங்கைக்கு அதிகாரபூர்வ ராஜாங்க விஜயத்தை இதுவரை மேற்கொண்டதில்லை. சார்க் மாநாட்டுக்காக 2008இல் ஒருமுறை கொழும்பு வந்தார். அவ்வளவு தான். அவரைக் கொழும்புக்கு வருமாறு 2010 இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்தார். அவர் சம்புத்வ ஜெயந்திக்கு கொழும்பு வருவார் என்ற எதிர்பார்ப்பு ஒன்று இருந்தது, ஆனால் வரவில்லை. புதுடெல்லியின் எதிர்பார்ப்பை கொழும்பு நிறைவேற்றினால், புத்தரின் புனிதச் சின்னங்கள் இந்தமாதம் கொழும்புக்கு கொண்டு வரப்படும் போது, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கொழும்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் புதுடெல்லி இராஜதந்திர வட்டாரங்கள் கூறியிருந்தன. ஆனால், அடுத்தவாரம் புத்தரின் புனிதப் பொருட்கள் வரப்போகின்றன. ஆனால் மன்மோகன்சிங் வரப் போவதில்லை. இரண்டாவது தெரிவு, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடெல்லி செல்வது. தற்போதைய நிலையில், இந்தியாவுடன் உள்ள இடைவெளியை குறைப்பதற்கு இது ஒன்றே மிகப்பொருத்தமான வழியாக இருக்கக் கூடும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உலகம் எங்கும் பயணங்களை மேற்கொண்டு வருகின்ற போதும் அண்டை நாடான இந்தியாவின் பக்கம், அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக எட்டிக் கூடப் பார்க்கவில்லை. ஆனாலும், தற்போதைய இடைவெளியை குறைக்க இதுவே மிகப் பொருத்தமான தீர்வாக அவர் முன் உள்ளது. அண்மையில் இந்தியாவின் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கொழும்பு வந்தபோது, தான் விரைவில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அவரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். ஆனால் எப்போது என்று அவர் கூறவில்லை. அவர் புதுடெல்லிக்கான பயணம் ஒன்றை மேற்கொள்வதற்குத் திட்டமிடுவாரேயானால், அது ஒக்ரோபர் மாதத்துக்கு முற்பட்டதாகவே இருக்கும். ஏனென்றால் அதன் மூலம் தான் அவர் உயர்ந்த பலனைப் பெறமுடியும். புதுடெல்லிக்கான பயணம் ஒன்றின் மூலம் இந்தியாவுடனான இடைவெளியைக் குறைக்க அவர் நிச்சயம் திட்டமிடலாம். இதற்கிடையே, மூன்றாவது தெரிவான, இருநாடுகளுக்கும் வெளியே சந்திக்கின்ற வாய்ப்புகள் குறித்தும் பார்க்க வேண்டும்.
அண்மைக்காலமாகவே, மஹிந்த ராஜபக்ஷவும், மன்மோகன்சிங்கும் சர்வதேச மாநாடுகளில் தான் சந்தித்து வருகின்றனர். இப்போதெல்லாம் சர்வதேச மாநாடுகளில், நாடுகளின் தலைவர்கள் தனியாகச் சந்திப்பதற்கேற்ற- பக்க நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்படுகின்றன. அந்த வகையில் மஹிந்த ராஜபக்ஷ வுக்கும் மன்மோகன்சிங்கிற்கும் சார்க், கொமன்வெல்த், றியோ 20 பிளஸ், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டம் என்பனவே கைகொடுத்துள்ளன. கடைசியாக பிறேசிலில் நடந்த றியோ 20 பிளஸ் மாநாட்டில் தான் இருவரும் சந்தித்தனர்.
வரும் நவம்பர் முதலாம் திகதிக்குள் இலங்கை, இந்திய தலைவர்கள் பங்கேற்கும் இரண்டு உயர்மட்ட சர்வதேச கூட்டங்கள் நடக்கவுள்ளன.
அடுத்தமாதம் 25ம் திகதி நியுயோர்க்கில் தொடங்கும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டம் ஒன்று. அடுத்தது, இந்தமாதம் 26ம் திகதி தெஹ்ரானில் தொடங்கும் அணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு.
ஐ.நா பொதுச்சபைக் கூடடத்தில் இரண்டாவது நாள் செப்ரெம்பர் 26) மாலை அமர்வில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார். ஆனால் இந்தக் கூட்டத்துக்கு மன்மோகன்சிங் வரப் போவதில்லை. அவரது சார்பில் ஐ.நா பொதுச்சபையில் அமைச்சர் ஒருவரே உரையாற்றவுள்ளார். எனவே, அந்தக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினை பற்றிப்பேச வாய்ப்பில்லை. அடுத்து இருப்பது, வரும் 26ம் திகதி தெஹ்ரானில் தொடங்கும் அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு தான். இதில் இரு தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். ஆனால், பக்க நிகழ்வாக சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்குமா என்பது உறுதியாகவில்லை. அப்படிச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தாலும், அதில் ஆழமாக கலந்துரையாடுவதற்கு ஏற்ற சூழல் இருக்குமா என்பது சந்தேகம் தான். எனவே, இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு, மஹிந்த ராஜபக்ஷ எந்த வழியைத் தெரிவு செய்யப் போகிறார்- எப்படி அணுகப் போகிறார்? இந்தக் கேள்வி முக்கியமானதாக உள்ளது.
கட்டுரையாளர் கே. சஞ்சயன் இன்போ தமிழ் குழுமம்
0 கருத்துரைகள் :
Post a Comment