பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம் கடந்த 14ம் திகதி வெளியிட்ட பயண எச்சரிக்கை அறிவிப்பு இலங்கை அரசாங்கத்தைப் பெரிதும் சினங்கொள்ள வைத்துள்ளது. இந்த எச்சரிக்கை பிரித்தானியப் பிரஜைகளுக்கானது. இதுபோன்ற எச்சரிக்கைகளை பிரித்தானியா மட்டுமன்றி மேற்குலக நாடுகள் பலவும் கடந்த காலங்களில் வெளியிட்டவை தான். “இலங்கையில் மோதல்கள் இடம்பெறுகின்றன, போர் நடக்கும் பகுதிகளைத் தவிர்க்க வேண்டும், அரசியல் மற்றும் இராணுவ நிலைகளை தவிர்க்க வேண்டும், வடக்கு, கிழக்கு பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்” என்பன போன்ற எச்சரிக்கைகள் கடந்த காலங்களில் மேற்குலக நாடுகளால் விடுக்கப்பட்டன. அப்போதெல்லாம் இலங்கை அரசாங்கம் அதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
காரணம் போர் நடந்து கொண்டிருந்த காலம் அது.
அப்போது வெளிநாட்டுப் பிரஜைகளின் பாதுகாப்பை அசாங்கத்தால் கூட உறுதி செய்ய முடியாதிருந்தது.
எனவே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியாமல் அரசாங்கம் மௌனத்தைக் கடைப்பிடித்து வந்தது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், பெரும்பாலான மேற்குலக நாடுகள் தமது பயண எச்சரிக்கை குறிப்புகளின் கடினத்தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கத் தொடங்கின. தற்போது பல நாடுகள் அவ்வாறான எச்சரிக்கையை முற்றாகவே நீக்கி விட்டன.
திடீரென கடந்த 15 ஆம் திகதி பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது அரசாங்கத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்திவிட்டது. காரணம் அதில் இலங்கையில் தேசிய வாதம் எழுச்சி பெற்றிருப்பதால் மேற்குலக எதிர்ப்பு நடவடிக்கைகள் குறிப்பாக, பிரித்தானியாவுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் வெளிநாட்டவர்கள் குறிப்பாக, பெண் சுற்றுலா பயணிகள் அவதானமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது, பயங்கரவாத எதிர்ப்புக்கான அதிகாரங்களை இலங்கைப் படையினர் பயன்படுத்துவதுடன், அவர்கள் நாடெங்கும் நிலை கொண்டுள்ளனர் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது அந்த அறிக்கை.
இந்த அறிக்கை பொருத்தமற்றது, இதை வெளியிடத்தக்க தருணம் இதுவல்ல என்றெல்லாம் இலங்கை அரசாங்கம் சொல்கிறது. பாதுகாப்பும் உறுதித்தன்மையும் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்தத் தருணத்தில் இந்த அறிவிப்பு நியாயமற்றது என்கிறார் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ். அதைவிட, வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் இன்னொன்றையும் கூறியுள்ளார்கள். இலங்கையின் களநிலவரம் தொடர்பான தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்கின்றனர் அவர்கள். அவ்வாறாயின், பிரித்தானியாவின் குற்றச்சாட்டுகள் பொய்யானதா?
போர் முடிவுக்கு வந்த பின்னர், தீவிரம் பெற்றுள்ள மூன்று விடயங்களை மையப்படுத்தியே பிரித்தானியா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முதலாவது- சிங்கள பௌத்த தேசியவாதம்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் கொஞ்சமேனும் இதன் வீரியம் குறையவில்லை.
சிங்கள-பௌத்த தேசியவாதிகள் போர் முடிவுக்கு வந்த பின்னர், நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை நோக்கி நாட்டை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கவில்லை.
அண்மையில் கூட இந்தியாவில் டெசோ மாநாடு நடந்தபோது இரா.சம்பந்தனின் கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தினர். தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும், சிங்கள பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளும் தாராளமாகவே நடந்து கொண்டுள்ளன. இது ஏனைய இனங்கள் மற்றும் மதங்களின் உரிமைகளில் கை வைக்கின்ற அளவுக்குக் கூட சென்றுள்ளது. பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், கோவில்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் இத்தகையவற்றில் சிலவாகும்.
சிங்கள பௌத்த தேசியவாதத்தின் இந்த எழுச்சி, இலங்கையில் எல்லா மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தக் கோரும் வெளிநாடுகளின் மீது குறிப்பாக, மேற்குலக நாடுகளின் மீதான காழ்ப்பாகவும் வெளிப்படுகிறது. இதன் காரணமாக மேற்குலக எதிர்ப்பு வாதம் என்பது மேலோங்கி வருகிறது. இதற்கு அரசில் உள்ள, அரசஆதரவு பெற்ற அரசியல்வாதிகளும் துணைபோவது ஒன்றும் பிரித்தானியாவுக்கு தெரியாத விடயமாக இருந்திருக்காது. அடுத்து, பெண்கள், சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமைகள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளன. இத்தகைய நெருக்கடிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கூட விதிவிலக்காக இருக்கவில்லை. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இத்தகைய பாலியல் குற்றங்களுக்காக கொலை கூட செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் அரசாங்கம் தனது எதிர்ப்பை தெரிவித்தது. ஆனால், அதற்குப் பின்னர் கூட ரயிலில் வைத்து பிரெஞ்சுப் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார். பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் பாதுகாப்பான நாடாக இலங்கை இதுவரை அடையாளம் காட்டப்படவில்லை. அரசாங்கம் ஏதேதோ புள்ளி விபரங்களைக் கொடுத்தபோதும், அவற்றின் மூலம் குற்றங்கள் குறைந்துள்ளன என்று வெளிநாடுகளை நம்பவைக்க முடியவில்லை.
அடுத்து- வடக்கில் உள்ள படைச்செறிவும், படையினருக்கு உள்ள மிகையான அதிகாரங்களும்.
ஏற்கனவே வடக்கில் இருந்து படைகளை விலக்க வேண்டும் என்று கூறியதால் பிரித்தானியத் தூதுவரை இலங்கை அரசாங்கம் கண்டித்திருந்தது. ஆனால், பிரித்தானிய மகாராணியின் வைரவிழாவுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ செல்ல வேண்டியிருந்ததால், அந்த விவகாரத்துக்கு அப்போது அரசாங்கமாகவே முற்றுப்புள்ளியை வைத்தது. மீண்டும் இந்த அறிக்கையில் பிரித்தானியா படைச்செறிவை நினைவுபடுத்தியுள்ளது. படையினருக்கு உள்ள அதிகமான அதிகாரங்களை வெளிப்படுத்தியுள்ளது. இது ஒருவகையில், படைக்குறைப்பை வடக்கில் மேற்கொள்ளத் தவறியதற்காக, அதை நியாயப்படுத்தியதற்காக, பிரித்தானியாவின் பதிலடியாகக் கூட இதைக் கருதலாம்.
நியாயமான படைக்குறைப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தால், அரசாங்கம் இத்தகைய எச்சரிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்காது. மொத்தத்தில் பிரித்தானியா சுட்டிக்காட்டிய முக்கியமான மூன்று பிரச்சினைகளும் இலங்கையில் இல்லவே இல்லை என்று அரசாங்கத்தினால் அறுதியிட்டக் கூற முடியாது. இந்தப் பிரச்சினைகளின் அடிப்படையில் தான் பிரித்தானியா இந்த அறிவிப்பை வெளியிட்டது. அதுவும் மிக அண்மையில் தான் பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவொன்று இலங்கை வந்து நிலைமைகளைப் பார்வையிட்டுத் திரும்பியது. அதற்குப் பின்னர் தான் இந்த அறிவிப்பு வெளியானது. நிலைமைகளை அறிந்துகொள்ள வந்த பிரித்தானிய நாடாளுமன்றக்குழு திருப்தி வெளியிட்டுள்ளது என்று அரசாங்கம் கொண்டாடிக் கொண்டிருக்க இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் களநிலவரம் தொடர்பாக தவறான தகவல்களின் அடிப்படையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறும் குற்றச்சாட்டு வலுவானதல்ல. ஏனென்றால் பிரித்தானிய நாடாளுமன்ற குழுக்கள் பல இங்கு வந்து சென்றுள்ளன.அவ்வாறாயின் அவையெல்லாவற்றையும் அரசாங்கம் சரியாக வழிநடத்தவில்லை, சரியான தகவல்களைக் கொடுக்கவில்லை என்று தான் கருத வேண்டும். ஆனாலும், பிரித்தானியாவின் அறிவிப்பு இலங்கையை கடுப்பேற்றுவதற்கு காரணம் இருக்கிறது.
இந்த ஆண்டில் 10 இலட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கனவுடன் இலங்கை அரசாங்கம் இருக்கிறது. இந்த ஆண்டில் சுற்றுலாத்துறை மூலம் 1 பில்லியன் டொலரை ஈட்டும் கனவுடன் உள்ளது. அதில் பிரித்தானியா மண் அள்ளிப் போட்டுவிடுமோ என்ற அச்சம் உள்ளது. இந்தியாவுக்கு அடுத்ததாக பிரித்தானியாவில் இருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவது வழக்கம். அதைவிட, இந்த எச்சரிக்கையை அடியொற்றி ஏனைய நாடுகளும் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்தால் என்னவாகும் என்ற கவலை வேறு அரசுக்கு உள்ளது. இப்படிப் பல தொடர்ச்சியான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதால் தான் அரசாங்கம் இந்த அறிவிப்பை எப்படியாவது விலக்கிக் கொள்வதற்கு முயற்சிக்கிறது. ஆனால் பிரித்தானியா இந்த அறிவிப்பை அவ்வளவு இலகுவில் விலக்கிக் கொள்ளுமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் இது ஒன்றும் இலங்கைக்கான அறிவிப்போ, எச்சரிக்கையோ கிடையாது. பிரித்தானியா தனது பிரஜைகளுக்கு விடுத்த அறிவிப்பு. இதை ஒரிரு நாட்களில் மாற்றினால், பிரித்தானிய வெளிவிவகார பணியகத்தின் நம்பகத்தன்மை உடைந்து போய்விடும். பொய்யானதாக கருதப்பட்டு விடும். பிரித்தானியாவின் எச்சரிக்கையால் சிறிலங்கா அதிர்ச்சி – சீனா, ரஸ்யா, இந்தியாவிடம் ஓடுகிறது.
ஹரிகரன் இபோதமிழ் குழுமம்
0 கருத்துரைகள் :
Post a Comment