இந்தியாவினால் ஒருபோதும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாத "புதிய அச்சுறுத்தல்"


இரண்டு சீன மீன்பிடிப் படகுகளை கடந்தவாரம் இலங்கைக் கடற்படை தடுத்து வைத்த விவகாரம் பெரும் குழப்பத்தையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தி விட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கிழக்குக் கடற்பரப்பில், அறுகம்பைக்கு 15 கடல் மைல் தொலைவில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே, இரண்டு சீனப் படகுகளையும் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று இடைமறித்துக் கைப்பற்றியது. அதையடுத்து இரு சீனப் படகுகளும் திருகோணமலைக் கடற்படைத் தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. அந்த இரண்டு படகுகளிலும் மொத்தம் 39 மீனவர்கள் இருந்தனர். ஒரு படகில் 19 சீனர்களும், ஒரு இலங்கையரும், மற்றொரு படகில், 18 சீனர்களும் ஒரு இலங்கையரும் இருந்தனர். இந்த இரண்டு படகுகளுக்கும் இரண்டு விதமான இலக்கங்கள் இடப்பட்டிந்தன. 

ஒரு படகில் IMUL-A-0054-KMN மற்றும் YU 6177 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் 20 பேர் இருந்தனர். மற்றப் படகில் IMUL-A-0055- KMN மற்றும் YU 6178 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் 19 பேர் இருந்தனர். IMUL என்று தொடங்கும் தொடரிலக்கம், இலங்கையில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சினால், ஆழ்கடலில் மீன்பிடிக்கும் பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு வழங்கப்படுபவை. YU என்று தொடங்கும் தொடரிலக்கம், சீனாவில் இந்தப் படகுகளுக்கு வழங்கப்பட்டவை. கடற்படையால் பிடிக்கப்பட்ட இரண்டு படகுகளுமே சீனாவில் கட்டப்பட்டவை. இவற்றின் உற்பத்திப் பெயர் TCS-46.68 ஆகும். உருக்கினால் தயாரிக்கப்பட்ட இந்தப் படகுகள் 46.68 மீற்றர் நீளத்தைக் கொண்டவை. இவற்றை பலநாள் மீன்பிடிப் படகுகள் (Multi-day fishing boats) என்று அழைத்தாலும், சிறிய கப்பல் என்று கூறுவதில் தப்பில்லை.¨ 

இலங்கையைப் பொறுத்தவரையில் 28 அடிக்கு மேற்பட்ட நீளம் கொண்ட மீன்பிடிப் படகுகள் பலநாள் மீன்பிடிப் படகுகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. அதனுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் உள்ள இத்தகைய படகுகளின் ஆகக்குறைந்த நீளத்தை விட, சீனப் படகுகளின் நீளம் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும்.640 தொன் எடை கொண்ட இந்த சீனப்படகுகளை மீன்பிடித் தேவைகளுக்கு மட்டுமன்றி, பொருட்களைக் கொண்டு செல்லவும் பயன்படுத்தக் கூடியவை. இந்தப் படகுகளில் 20 பேர் தங்குவதற்கான வசதிகள் உள்ளன. விடுதலைப் புலிகள் முன்னர் இத்தகைய படகுகளை தமது ஆயுதக்கடத்தல்களுக்குப் பயன்படுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கைப்பற்றப்பட்ட இரண்டு சீனப் படகுகளுக்கும், இலங்கையின் பொருளாதார கடல் எல்லைக்கு வெளியே மீன்பிடிக்கவே அனுமதிக்கப்பட்டிருந்ததாக கடற்படை கூறியிருந்தது. ஆனால் அவர்கள் 15 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே பிடிக்கப்பட்டதாகவும் கடற்படை கூறியது. இலங்கையின் பொருளாதார கடல் எலலை என்பது கரையில் இருந்து 200கடல்மைல் தொலைவு வரையாகும். அதற்கு அப்பால் மீன்பிடிப்பதற்கே இந்தப் படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. சீனாவில் பதிவு செய்யப்பட்ட இந்தப் படகுகளை இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் குத்தகைக்கு எடுத்திருந்ததாகவும் முதலில் தகவல்கள் வெளியிடப்பட்டன. பின்னர், அவற்றை இலங்கை நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்கியிருந்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்தப் படகுகளை சீனாவில் குத்தகைக்குப் பெற்றிருந்தாலும் சரி, விலைக்கு வாங்கப்பட்டதாயினும் சரி- சீனர்கள் எதற்காக அதில் பணிக்கு அமர்த்தப்பட்டனர் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. 

இலங்கையில் போதியளவு மீனவர்கள் இருக்கும் போது, சீனர்களை அழைத்து வந்து அவர்களுக்கு டொலரில் சம்பளம் கொடுக்க முனைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த விவகாரத்தில் எல்லாமே முன்னுக்குப்பின் முரணாகவும், குழப்பமாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டன. சீனர்கள் அறுகம்பையில் இருந்து 15 கடல்மைல் தொலைவில், மீன்பிடித்ததாகவும் அது சட்டவிரோதம் என்றும் முதலில் கூறியது கடற்படை.பி்ன்னர், அதே கடற்படை, சீனர்களில் எந்தத் தவறும் இல்லை என்றது. படகுகள் இரண்டும் சீனாவிடம் குத்தகைக்கு பெறப்பட்டது என்று கூறப்பட்டது, பின்னர், இலங்கை நிறுவனத்துக்குச் சொந்தமானது என்று கூறப்பட்டது. இறுதியாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சு, அது முதலீட்டுச் சபையின் திட்டம் ஒன்றுக்காக அரசின் அனுமதியுடன் மீன்பிடித்ததாக கூறப்பட்டது. சீனர்களை நீதிமன்றத்தில் நிறுத்தப் போவதாக கூறிவிட்டு, பின்னர் தூதரக அதிகாரிகளிடம் கடற்படை ஒப்படைத்தது. அதே படகில் இருந்த உள்ளூர் மீனவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். இலங்கையின் பொருளாதார கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கும் உரிமை அவர்களுக்கு இருந்த போதும், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். ஆனால் அந்த உரிமையைக் கொண்டிராத சீனர்கள் விடுவிக்கப்பட்டனர். 

பழைய சின்னங்கள் இந்தப் படகுகளில் இருந்ததால் தான் உள்ளூரில் அவற்றை இனங்காண்பதில் குழப்பம் ஏற்பட்டதாக சீனத் தூதரக அதிகாரி கூறியிருந்தார். விலைக்கு வாங்கப்பட்ட படகில் சீனச் சின்னங்களோ, சீனர்களோ இருந்திருக்க வாய்ப்பில்லை. மொத்தத்தில் இந்த விவகாரத்தில் ஏராளமான குழப்பங்களும் கேள்விகளும் மிஞ்சியுள்ளன. அரசாங்கம் எதையோ மறைக்கப் போய் எதை எதையோ உளறிக் கொட்டியிருப்பதாகவே தோன்றுகிறது. இந்த விவகாரம், சீனா்கள் இலங்கையை தளமாக கொண்டு செயற்படுவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும், இந்த விவகாரம் இந்தியாவை அதிகமாகவே, யோசிக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

காரணம், சீனா பற்றி அதிகம் அச்சம் கொண்டுள்ள நாடு இந்தியா தான். 

இந்தியாவின் கிழக்குக் கடற்பரப்பில் மீன்பிடிப் படகு போன்று தரித்து நின்று வேவு பார்த்த சீனக் கப்பல் ஒன்று பற்றிய செய்தி பல மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்தியக் கடற்படை அதைத் துரத்திச் சென்றபோது கொழும்புத் துறைமுகத்தினுள் சென்று ஒளிந்து கொண்டதாகவும், ஆனால் சீனப் படகுகள் எதற்கும் தாம் அடைக்கலம் கொடுக்கவில்லை என்று இலங்கை கூறி விட்டதாகவும் இந்தியாவில் பரபரப்பாக செய்திகள் வெளியாகின. இந்தநிலையில் சீன மீன்பிடிப் படகுகள் அகப்பட்டது இந்தியாவின் சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சீனர்கள் இலங்கையை தளமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனரா என்ற வலுவான கேள்வியை இந்தியாவுக்கு ஏற்படுத்த இந்தச் சம்பவம் ஒன்றே போதுமானது. அதைவிட, தடுத்து வைக்கப்பட்டிருந்த சீனர்கள் நடத்தப்பட்ட விதத்துக்கும், இந்திய மீனவர்கள் கைதாகும் போது நடத்தப்பட்ட விதத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருந்தது. 

ஒரு கட்டத்தில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவில் இந்த விவகாரம் விரிசலை ஏற்படுத்துமோ என்ற கருத்தும் ஏற்பட்டிருந்தது. ஆனால், இலங்கைக் கடற்படை சீனர்களை நீதிமன்றில் நிறுத்தாமல் – அவர்களை நிரபராதிகள் என்று கூறி விடுவித்ததன் மூலம் அந்த விரிசல் ஆபத்து தவிர்க்கப்பட்டது. இந்தியர்களை விட சீனர்களிடம் இலங்கை மென்போக்கைக் காண்பிக்கிறது, இலங்கையைத் தளமாகக் கொண்டு செயற்படுவதற்கு அவர்களை அனுமதிக்கிறது என்ற உண்மையை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா வெளிப்படையாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. அதற்காக இந்தியா, இந்த விவகாரத்தை சாதாரணமானதொன்றாக ஒதுக்கித் தள்ளி விட்டுள்ளதாகக் கருதமுடியாது. 

கட்டுமானத் தொழிலாளர்களாகவும், பொறியியலாளர்களாகவும் சீனர்கள் இலங்கைக்குள் நுழைந்துள்ள விபரம் தான் இதுவரை வெளியே தெரியவந்தது. இப்போது தான் முதல்முறையாக மீனவர்கள் வடிவத்திலும் சீனர்கள் இலங்கையில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.எவ்வாறாயினும், இந்தியாவுடன் கடல் எல்லையைக் கொண்டுள்ள இலங்கைக் கடற்பரப்பில், சீனர்கள் சுதந்திரமாக நடமாடுவதை இந்தியாவினால் ஒருபோதும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.



கட்டுரையாளர் சத்ரியன் இபோதமிழ் குழுமம் 

Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment