அசைந்து கொடுக்காத தமிழர்களின் எழுச்சி


நாட்டின் ஏனைய பகுதி மக்கள் தம் கவனத்தில் எடுத்துக் கொண்டிராத ஓர் அரசியல் பண்பாட்டு வளர்ச்சிப் போக்கு வடக்கில் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதி மக்கள் தம் கவனத்தில் எடுத்துக் கொண்டிராத ஓர் அரசியல் பண்பாட்டு வளர்ச்சிப் போக்கு வடக்கில் காணப்படுகின்றது. 
 
"கிறீஸ் மனிதன்" அச்சுறுத்தல் எழுந்தபோது அத்தகைய சந்தேகநபர்களைப் பிடிப்பதற்கும் சிறைப்படுத்திக் கொள்ளவும் அவர்கள் முயன்றனர். அவ்வாறான முயற்சியின்போது அந்த மர்மமனிதர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி அபயமளித்து வைத்திருந்தனர் எனத் தாம் கருதிய இராணுவத்தினரையும் வடக்கு மக்கள் திடமாக எதிர்கொண்டனர். 

எதிர்ப்பைக் காட்டும் மக்கள்
 
"கிறீஸ் மனிதன்" விவகாரத்தில் பெருவாரியாக மக்கள் வீதிகளில் இறங்கியிருந்த பல சந்தர்ப்பங்களை நாம் கண்டோம். நாவாந்துறையில் மோசமாக தாக்கப்பட்ட பின்னரும்கூட, படையினரால் திருப்பித் தாக்கப்படக் கூடிய ஆபத்தை தாமாக முன்வந்து எதிர்கொள்வதற்கு மக்கள் தயங்கியதில்லை. 
 
ஒரு ஆண்டுக்கு முன்னர், அதாவது 2011 ஜூன் மாதம் 16ஆம் திகதி அளவெட்டியில் நடைபெற்றுக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கூட்டம் இலங்கை இராணுவத்தினால் பலாத்காரமாக குழப்பப்பட்ட வேளையிலும் மக்கள் மத்தியில் இதேபோன்ற மனப்போக்கு காணப்பட்டிருந்தது. 
 
கூடியிருந்த மக்கள் பொல்லுகளால் அடித்து தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். எனினும் இரு நாள்கள் கழித்து மேலும் ஒரு கூட்டத்தைக் கூட்டமைப்பினர் நல்லூர் பகுதியில் கூட்டியிருந்த போது பலநூற்றுக்கணக்கில் மக்கள் அங்கு கூடவே செய்தனர். 
 
இவை மட்டுமன்றி வேறும் பல எதிர்ப்பு நோக்கிலான செயற்பாடுகள் ஊடாக கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் ஏனையோர் தாம் அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிர்ப்பைக் காட்டுவதற்குத் தயாராக இருக்கும் சமிக்ஞைகளை எற்கனவே காண்பித்துள்ளனர்.
 
மக்களிடம் பயப்பீதி
 
பல தசாப்தங்களாக தமிழ் மக்களைப் பீடித்திருந்த அரச வன்முறை பற்றிய பயத்தை எவராலும் புரிந்துகொள்ள முடியும். எமது உரிமைகளுக்காக நாம் துணிச்சலுடன் எழுந்து நிற்போமாயின் வன்முறைகள் எம்மைச் சூழ்ந்து கொள்ளும் என்னும் பயம் எமது மக்களின் ஒட்டுமொத்த மனச்சான்றின் அடித்தளத்தில் வலுமிக்கதாக எப்போதும் நிலைபெற்று நிற்கிறது. அப்படி அந்தப் பயம் மக்கள் மனங்களில் நிற்கும்படி செய்யப்பட்டுள்ளது. 
 
இத்தகைய பயவுணர்வு நாம் தினந்தோறும் சந்திப்பதேயாகும். ஆனால் அனேகரது வாழ்வில், குறிப்பாக படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்கள் கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்வில் அன்றாடம் இடம்பெறும் அத்துமீறல்கள், இழிசெயல்கள் ஊடாக அத்தகைய அச்ச உணர்வு தீவிரமாக நிலைபெறச் செய்யப்பட்டுள்ளது. 
 
இத்தகைய அச்ச உணர்வு சிங்கள, முஸ்லிம், பறங்கி, மலே இனத்து நண்பர்கள் பலருக்கும் இருக்கிறது. அவர்களும் நம்பவே முடியாத துணிச்சலான முறைகளில் இதனை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர். ஆயினும், தமிழ் சமூகத்தினரை பொறுத்தவரை வரவிருக்கின்ற கொடூரங்கள் பற்றிய அபசகுனமானது திட்டமிட்ட முறையில் 1956, 1958, 1977, 1981, 1983 ஆம் ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் மூலமும், போர்ப் பேரழிவுகள் மூலமும் பெற்றிருந்த அனுபவங்கள் வழியாக நினைவுபடுத்தப்படுவதாக உள்ளது.
 
கடும்போக்கில் அரசு
 
தமிழர்கள், முஸ்லிம்கள் மரபு வழியாக வாழ்ந்து வந்த பிரதேசங்கள் இராணுவ மயமாக்கப்படுவதும் சிங்கள மயமாக்கப்படுவதும் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையிலும், ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதில் உருப்படியான ஒரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையிலும், அரசியல் கைதிகள் விடயத்தில்  அவர்கள் மிருகத்தனமாகவும், இழிவுபடுத்தப்பட்டு வருகின்ற நிலையிலும், வடக்கு கிழக்கின் ஆட்சிமுறை பற்றிய எமது நிலைப்பாடு மீண்டும் மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டுவரும் ஒரு பின்னணியிலும் அரசு இவற்றில் அக்கறை காட்டாமலும், கபடத்தனத்துடனும், இசைவிணக்கமற்ற கடும்போக்கிலும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. 

இதேவேளை, சர்வதே\ அரங்கில் நட்பு நாடுகளின் அபிப்பிராயங்களைப் புறக்கணித்து அதன் மூலம் தன்னை ஓரங்கட்டியும் வருகின்றது இலங்கை அரசு. அத்துடன் எமது மக்கள் மீதான அடக்குமுறைப் பாணியிலான நடத்தைகளும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. 
 
எவ்வாறாயினும், மேற்படி நிலைமைகள் யாவற்றிற்கும் அப்பால், வெளியுலகும் அவ்வளவாக ஊன்றி அவதானிக்காத வகையில் வடக்குகிழக்கின் மக்கள் பிரமாதமாகக் குறிப்பிடக்கூடிய வகையிலான அரசியல் நடத்தைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.

வடக்கில் போராட்டங்கள்
 
வடக்கு  கிழக்கு வாழ் மக்களின் மீது நடைமுறைப்படுத்தப்படும் பாரதூரமான அநீதிகளில் ஒன்று அவர்களுக்குச் சொந்தமான வீடுகளில் வசிப்பதற்கும், அவர்களின் சொத்துகளை அவர்கள் வளப்படுத்தி வாழ்வதற்கும், அத்துடன் தத்தமது பிரதே\ங்களில் கடல் வளங்களை பயன்படுத்துவதற்கும் அவர்களுக்கு உள்ள உரிமை பறிக்கப்பட்டிருப்பதாகும். 
 
வடக்கு, கிழக்கில் "உயர் பாதுகாப்பு வலயம்" எனப்படும் ஒன்று ஆயிரக்கணக்கானவர்களைப் பலாத்காரமாக சொந்த இடங்களைவிட்டு விரட்டி அடித்திருக்கின்றது. பல இடங்களில் குடிமக்களின் வீடுகளில் இராணுவத்தினர் தம்மை இருத்தி வைத்துக்கொண்டு வீட்டு உரிமையாளர்களை அவற்றில் வாழவிடாது தடுத்து வருகின்றனர். 
 
சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் வடமாகாணத்தில் இராணுவத்தினர் மேலும்  நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததை அறிந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எனப்படும்  சில வேளைகளில் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பை புண்படுத்தும் விதமாக விமர்சனங்களை முன்வைத்து வரும் ஓர் அரசியல் கட்சியின் செயற்பாட்டாளர்கள் குழு ஒன்று யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதனில் இணைவதற்கு உடன்பட்ட நிலையில் எமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தோம். இந்த எதிர்ப்பு நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருக்கக்கூடிய வேறும் பல எதிர்ப்பு நிகழ்வுகளை விடவும் வித்தியாசமானது அல்ல. 
 
ஆனால், இந்த முறை யாழ்ப்பாணப் பொலிஸார் அரசமைப்பு ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளுக்கு முரணாகச் செயற்பட்டு, எதிர்ப்புப் போராட்டத்தைத் தடைசெய்யும் நீதிவான் உத்தரவைப் பெற்றிருந்தனர். 
 
இதற்கு மறுதினம், தெல்லிப்பழையில், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா முன்னின்று நடத்தினார். 
 
25 ஆண்டுகளாக மீள்குடியமர்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட மக்களின் அந்த ஆர்ப்பாட்டம் தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தைவிட்டு முன்னேற விடாத வகையில் தடுக்கப்பட்டது. பிரதேச செயலாளரிடம் மனு ஒன்றை கையளிப்பதற்கு ஒரு சிறு குழுவினர் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 
 
போராட்டம் முடிந்து திரும்புகையில், இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வாழும் மக்கள் பலர் உள்ளிட்ட எதிர்ப்பாளர்கள் மீது மோட்டார் சைக்கிள்களில் விரைந்த சிலர் கற்களால் தாக்குதல் நடத்தினர். அவர்கள் பயணம் செய்த பஸ்ஸும் சேதமாக்கப்பட்டு பயணிகள் மீது கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டது.
 
தம்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி வயதில் மூத்தவர்களான இடம்பெயர்ந்தவர்கள் கூறிய சோகக் கதைகள் வீடியோக் காட்சிகளாக வெளிப்பட்டிருந்தனவாயினும், அந்நாளில் இருந்து குறிப்பிட்டு கூறத்தக்கதான திருப்பங்கள் நடைபெறவே செய்கின்றன.
 
எதிர்ப்பைக் கைவிடாத மக்கள்
 
பின்னர் 2012 ஜூன் 26 இல் நாம் திட்டமிட்ட முறையில் திருமுறிகண்டியில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தபோது, அரச படையினர் தமது முழுப்பலத்தையும் பயன்படுத்தி அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு நிகழ்வில் பங்குபற்றக்கூடாது என எச்சரித்தனர். 

முறிகண்டியில் மீளக்குடியமர்வுக்காக மெனிக்பாமில் இருந்து அழைத்து வந்து அங்கிருந்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களம் எதிர்ப்பு நிகழ்வில் பங்குபற்றுவதற்கு எதிர்பார்த்திருந்தவர்களுமான இடம்பெயர்ந்தவர்கள் முதல் நாள் இரவே இரகசியமான முறையில் அங்கிருந்து அகற்றப்பட்டு மெனிக்பாம் முகாமுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
 
அதன் பின்னரும், இராணுவத்தினர் சுற்றிவர குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இந்த எதிர்ப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர். முதல் நாளில் இரவோடு இரவாக இடம்பெயர்ந்த மக்கள் மெனிக்பாம் முகாமுக்கு அப்புறப்படுத்தப்படாமல் இருந்திருப்பின் கலந்து கொண்டோர் எண்ணிக்கை இன்னும் பெருமளவாக இருந்திருக்கும்.  
 
அச்சத்திலிருந்து விடுபடல்
 
அடுத்து, மன்னாரில் 2012 ஜூன் 30 இல் நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றியிருந்தனர். "எம்மிடமிருந்த அச்ச உணர்விலிருந்து நாம் விடுபட்ட நிலையிலேயே எமது பிரசன்னம் இயல்பாகவே பலரையும் விடுதலை பெறச் செய்கிறது'' என்று நெல்சன் மண்டேலா குறிப்பிட்டிருந்தார். மன்னார் வரைக்குமான தொடர் நிகழ்வுகள் இதனையே காட்டுகின்றன.
 
இன்றைய நிலையில் தமிழர்கள் மத்தியில் ஒருவித உற்சாகமும், வைராக்கியமும் மீளவும் முனைப்புப் பெற்றிருப்பதுடன் செயற்பாட்டில் ஈடுபடுவதில் இருந்த தயக்க நிலையிலிருந்து படிப்படியான முறையில் தம்மை விடுவித்துக் கொண்டும் உள்ளனர். 

புலப்படும் வகையிலும் புலப்படா வகையிலும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கும் அப்பால், எம்மக்களின் செயற்பாடுகளில் மெதுவான ஆனால் நிச்சயமான ஒரு தயார் நிலை தோற்றம் பெற்று வருவது கண்கூடு. எமது எதிர்ப்பு நடவடிக்கைகளிலிருந்து ஊற்றெடுக்கும் மீள்எழுச்சி நிலையானது இலகுவில் அசைந்து போகக் கூடியதல்ல. இது மாற்றமொன்றை வேண்டி நிற்கும் எழுச்சி நிலையாகும். அது ஜனநாயக உரிமைகளைக் கோரி நிற்கிறது. இது உண்மையில் மனித ஆன்ம நிலையின் அழகிய உறுதிப்பாடு ஆகும்.
 
காணி பற்றிய விவகாரங்களுக்கு மேலதிகமாக தமிழ் அரசியல் கைதிகள் நடத்தப்படும் விதம் மற்றும் காணாமற் போனோர் தொடர்பான விவகாரங்கள் விடயத்தில் எமது மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் தாக்கப்பட்டமையும் அதில் நிமலரூபன் கொல்லப்பட்டமையும் மக்களின் எதிர்ப்பு அலைகளை மீண்டும் வலுப்பெறச் செய்தன. 

முற்போக்கு சக்திகளுடன் கூட்டு
 
தென்னிலங்கையின் முற்போக்கு சக்திகள் பலவும் இப்பொழுது எமது சாத்வீக போராட்டங்களுடன் இணைந்து கொண்டுள்ளன. அதேபோன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டு மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களில் அவர்களுடன் இணைந்து செயலாற்றுகிறது.
 
அப்படியானால் எமது (கூட்டமைப்பு) நிலைதான் என்ன? என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. எதிர்ப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக நாம் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஏனைய சாத்வீக_தந்திரப் போராட்டங்களிலிருந்து பெற்ற பாடங்களை எமக்கு நாமே போதித்துக் கொள்கின்றோம். 
 
இந்த நிலையில், இன்று நாம் எதிர்காலத்தினை எவ்வாறு அணுகுவது என்பது பற்றிய விடயத்தை நடுநிலையான மதிப்பீட்டு ஆய்வு ஒன்றிற்கு உட்படுத்தும் தொடர் செயற்பாட்டுக்குள் பிரவேசிக்க வேண்டியவர்களாக உள்ளோம். அதாவது, எமது போராட்டத்தை வீதிகளில் நடத்தப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றிற்கு அப்பால் எடுத்துச் சென்று மேலும் காத்திரமானதும் ஒத்திசைவுள்ளதுமான சாத்வீக முறையிலான எதிர்ப்புப் பிரசார நடவடிக்கைகளாக முன்னெடுக்க வேண்டியவர்களாக உள்ளோம். 
 
அப்படியான சந்தர்ப்பங்களில் ஏனைய சாத்வீக போராட்டங்களிலிருந்து நாம் கற்ற பாடங்களை எமது போராட்டப் பாதையில் எவ்வாறு உள்வாங்கிக் கொள்வது? என்பது முக்கியமானது. மட்டுமீறிய நடவடிக்கைகளில் இறங்காமலும், வெறுப்புணர்வையும் அவசரப் போக்கினையும் மனங்களில் கொண்டு செயற்படாமலும், ஆனால் செயற்படக்கூடிய தயார் நிலையில் இருந்தபடியே, உண்மையான விடுதலையை நாம் பெறக்கூடிய அந்த நாளை முழுமையான பிரக்ஞையுடன் எதிர்பார்த்தபடியே, எமது இலட்சியங்களுக்கு ஏற்ற செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும்.
 
விழிப்பு நிலை தேவை
 
நாம் பீதியினால் அச்சுறுத்தப்பட்டு அடங்கிவிடும் நிலையில் இல்லை. ஆனால் சூழவுள்ள ஆபத்து நிலைகள் பற்றி விழிப்புடன் இருப்பது அவசியம். எம்மைப் பொறுத்தவரை நாம் தாக்கப்படுவதாயினும்கூட நாம் வன்முறைகளில் ஈடுபடுவதில்லை என்று திடசங்கற்பம் பூண வோண்டும். 
 
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் ஒன்றுபட்ட மனச்சான்றினை உலுப்பிய பயங்கரக் குருதிப் பெருக்கினை தவிர்ப்பதில் நாம் தோல்வி கண்டோம் என்பதைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
 
ஜனநாயக முறையிலான எதிர்பார்ப்புகளை வன்முறை மூலமாக ஒடுங்குவது சகித்துக் கொள்ளப்படமாட்டாது என்று இலங்கை அரசுக்குக் கூறப்படவேண்டும். அதனை நாம் செய்ய வேண்டும். அது ஒரு மாற்றுத் தீர்வு அல்ல. 
 
அதேசமயத்தில் இலங்கை மக்களும் சர்வதேச சமூகமும் இலங்கை அரசிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறவேண்டும். அதற்காக நாம் உழைக்க வேண்டும். இந்த ஆட்சிக்கும் நாம் தெளிவான தெரிவொன்றை வழங்க வேண்டும். கடந்த கால போக்குகளிலிருந்து உடனடியாக விடுபடுதல் என்பதே அது. அல்லது உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் எழக்கூடிய இகழ்ச்சிகள் புறக்கணிப்புகளுக்கு முகம்கொடுப்பதற்கு அவர்கள் தயாராகுமாறு அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

நன்றி - உதயன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment