என்றும் தொடரும் ஓகஸ்ட்-06


தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம், ஆயுதப் போராட்ட வடிவம் பெற்ற காலத்திலிருந்து போர் முடிவடையும்வரை தமிழ் மக்கள் மீதான பொருளாதாரத் தடை கடுமையான முறையில் ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அந்தக் காலைப் பொழுதில் ஜப்பானின் பெருந்தொழில் நகரங்களில் ஒன்றான ஹிரோசிமா வெகு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. வீதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது.

வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். தொழிற்சாலைகள் பெரும் இரைச்சலுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எங்கோ எல்லைப் பகுதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போர்களில் ஜப்பானிய இராணுவம் பின்வாங்கிக் கொண்டிருக்கிறது எனச் செய்திகள் வந்து கொண்டிருந்த போதும் மக்கள் நம்பிக்கையுடன் தங்கள் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
 
அது இரண்டாம் உலகப் போரின் இறுதி நாள்களில் ஒன்று. 1945 ஓகஸ்ட் 06 காலை 8.15 ஹிரோசிமா நகரின் வான் பரப்புக்குள் புகுந்த ஒரு அமெரிக்கப் போர் விமானம் ஏதோ ஒரு பொருளைத் தள்ளி விட்டுப் பறந்து மறைகிறது.
 
அந்தப்பொருள் ஆடி ஆடி வேகமாக நிலத்தை நோக்கி விழுகிறது. என்றுமே கண்டிராத பெரு வெளிச்சமும் பேரோசையும் எழுகின்றன. அது என்னவென்று உணர்ந்து கொள்ளும்  முன்பே எழுபதினாயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. 
 
மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் உட்பட முப்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இருந்த இடமே தெரியாமல் நிர்மூலமாக்கப்படுகின்றன. மேலும் எழுபதினாயிரம் கட்டடங்கள் பாவிக்க முடியாத படி சேதமடைகின்றன. ஒரு சில வினாடிகளுக்குள் ஒரு பெரும் தொழில் நகரம் சுடுகாடாகிறது. 
 
அது மட்டுமல்ல அடுத்த 3 நாள்களில் மேலும் முப்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கதிரியக்கத் தாக்கத்தால் இறக்கின்றனர். எஞ்சியவர்கள் கதிரியக்கம் காரணமாக இரத்தப்புற்றுநோய், அங்கவீனம் போன்ற கொடுமைகளால் பாதிக்கப்பட்டனர். இன்று வரை அந்த அணுக்கதிரியக்கத்தின் தாக்கம் அடுத்தடுத்த பரம்பரையினரையும் பாதித்து வருகிறது.
 
அமெரிக்காவால் வீசப்பட்ட அந்த அணுகுண்டு இவ்வளவு கொடூரமான தாக்கங்களை விளைவித்த போதும் மூன்றாம் நாள் ஜப்பானின் நாகாசாகி என்ற தொழில் நகரின் மேல் இன்னுமொரு அணுகுண்டு வீசப்பட்டு ஹிரோசிமாவுக்கு எவ்விதத்திலும் குறைந்து விடாத பேரழிவுகள் ஏற்பட்டுவிட்டன. 
 
ஜப்பான் சீனாவிலிருந்து பின் வாங்கிக் கொண்டிருந்த அதேவேளையில், ரஷ்யா, மங்கோலியா ஊடாக ஜப்பானை நோக்கி முன்னேறிய சந்தர்ப்பத்தில் ஜப்பான் சரணடையத் தயாராகிக் கொண்டிருந்த போதே இந்தக் கொடூரம் மேற்கொள்ளப்பட்டது. 
 
ஆசிய ஆபிரிக்க நாடுகளைப் பிரிட்டன், பிரான்ஸ், போர்த்துக்கல் போன்ற நாடுகள் கைப்பற்றி அவற்றைத் தமது கைத்தொழில் உற்பத்திப் பொருள்களின் சந்தைகளாக வைத்திருந்ததுடன் அவற்றின் மூல வளங்களையும் கொள்ளையிட்டுக் கொண்டிருந்தன. 
 
அதேவேளையில் கைத்தொழில்துறையில் மிகவேகமாக முன்னேறி வந்த ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் தமக்கான சந்தைகளைத் தேட வேண்டியிருந்தது. ஏற்கனவே உலகம் பங்கு போடப்பட்டதால், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள நாடுகளைக் கைப்பற்ற வேண்டிய தேவை எழுந்தது.
 
இந்த அடிப்படையிலேயே இரண்டாம் உலகப் போர் வெடித்தது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா என்பன நேச நாடுகள் என்ற பேரில் ஒரு பக்கமாகவும் ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஓர் அணியிலும் போரில் குதித்தன.
 
இறுதியில் நாலு கோடி மக்களுக்கு மேல் காவு கொள்ளப்பட்ட இரண்டாம் உலகப் போர் ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தோல்வியுடன் நிறைவு பெற்றது.போரின் இறுதி நாள்களில் ஜப்பான் சரணடையத் தயாராக இருந்த நிலையில் ஒன்றுக்கு இரண்டு அணுகுண்டுகளை அமெரிக்கா ஜப்பான் மீது வீசியமையை  மனிதகுலத்துக்கு விரோதமான ஒரு பெரும் குற்றமாகவே கருதப்படுகிறது.. போர்க் களத்திலிருந்து வெகு தொலைவில் அமைந்திருந்த நகரங்களில் வாழ்ந்த, போரில் எவ்வித சம்பந்தமும் இல்லாத மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரம் அநாகரிகமான போர்க் குற்றம் என்றே கூற வேண்டும்.
 
அமெரிக்காவின் ஜனநாயக மனித நேய முகமூடியைக் கிழிக்கும் இன்னுமொரு ஓகஸ்ட் ஆறாம் நாளும் உண்டு. படிஸ்லா என்ற சர்வாதிகாரியின் ஆட்சியின் கீழ் துன்பதுயரங்களை அனுபவித்த கியூபா மக்கள் பெடல் காஸ்ரோவின் தலைமையில் ஒரு புரட்சியை நடத்தி மக்களாட்சியை நிறுவினர். கியூபாவின் கரும்பு, புகையிலை, கோப்பி போன்ற மூல வளங்களின் பயன்களை படிஸ்லோவின் துணையுடன் கொள்ளையடித்து வந்த அமெரிக்கப் பெரும் முதலாளித்துவக் கும்பல் பிடல் கஸ்ரோவின் ஆட்சியைக் கவிழ்க்கப் பெரும் முயற்சியில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்தது.
 
 ஆனால் கியூபா மக்கள் பிடல் கஸ்ரோவின் தலைமையில் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துத் தங்கள் சொந்தக் கால்களில் நின்று நாட்டைக் கட்டியெழுப்பினர். அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்ததும் ஒரு ஓகஸ்ட் ஆறாம் நாள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஓகஸ்ட் ஆறாம் நாளை ஐக்கிய நாடுகள் சபை உலக சமாதான நாளாகப் பிரகடனம் செய்துள்ளது. ஆனால் உலக சமாதானம் என்பது இன்றுவரை கானல் நீராகவே இருந்து வருகிறது. ஆனால் எங்கெல்லாம் சமாதானம் சீர்குலைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஏதோ ஒரு பக்கத்தில் அமெரிக்காவின் கைகள் நீண்டுகொண்டிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
 
ஈராக், ஆப்கானிஸ்தான், எகிப்து, லிபியா எனத் தொடர்ந்து இந்தச் சமாதான விரோதத் திருவிளையாடல் இப்போது சிரியாவில் நிலை கொண்டுள்ளது. அடுத்து இது ஈரானுக்கும் தாவலாம். ஆனால் அமெரிக்காவின் இந்த மேலாதிக்க வேட்டையில் காவு கொள்ளப்படுவதில் பெரும்பான்மையானவர்கள் போரில் பங்கு கொள்ளாத அப்பாவிப் பொதுமக்களே! அவர்களின் சொத்து சுகங்களே பெரிதும் அழிக்கப்படுகின்றன. 
 
அதைப்பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்களின் ஒரே நோக்கம் உலகம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே, இதற்கு உடன்பட மறுப்பவர்கள் பயங்கரவாதிகளாகவும், ஜனநாயக விரோதிகளாகவும் சித்திரிக்கப்பட்டு அவர்கள் மேல் இரு முனைகளிலும் ஓகஸ்ட்06 பாணம் ஏவப்படுகிறது. அதாவது போர், பொருளாதாரத்தடை என்பன மேற்கொள்ளப்படுகின்றன.
 
இன்று உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கு முறையாளர்கள் உரிமை கோரிப் போராடும் மக்கள் மீது இந்த ஓகஸ்ட்06 அம்பையே ஏவி விடுகின்றனர். இலங்கையிலும் கூடத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் மீது பொது மக்கள் மீதான குண்டு வீச்சு, பொருளாதாரத் தடை ஆகிய அமெரிக்காவின் ஓகஸ்ட்06 நடவடிக்கைகளைப் போன்றே மேற்கொள்ளப்பட்டதை நாமறிவோம்.
 
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம், ஆயுதப் போராட்ட வடிவம் பெற்ற காலத்திலிருந்து போர் முடிவடையும் வரை தமிழ் மக்கள் மீதான பொருளாதாரத் தடை கடுமையான முறையில் ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது. உணவுப் பொருள், எரிபொருள், விவசாய உள்ளீடுகள், மருந்துகள் என்பன தடை செய்யப்பட்டன. சில சமயங்களில் மட்டுப்படுத்தப்பட்டன. 
 
போரில் சம்பந்தப்படாத மக்கள் முகம் கொடுத்த பசி, பட்டினி, நோய் போன்ற நெருக்கடிகள் பற்றி ஆட்சியாளர்கள் எவ்வித அக்கறையும் எடுக்கவில்லை. அதே போன்று ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து பொது மக்கள் மீதான விமானத் தாக்குதல்களும், எறிகணை வீச்சுகளும் தொடர்ந்து இடம்பெற்றன. இதன் காரணமாக ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். நேபாம் குண்டுகள், எரி குண்டுகள், கொத்துக் குண்டுகள் என சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட குண்டுகள் கூடத் தாராளமாகப் பாவிக்கப்பட்டன.
 
போரின் இறுதி நாள்களில் ஐக்கிய நாடுகள் உட்பட சகல தொண்டு நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டன. போர்ப் பகுதிகளுக்குப் பத்திரிகை நிருபர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் நாலு கிலோமீற்றர் நீளமும் ஒரு கிலோமீற்றர் அகலமும் கொண்ட ஒரு சிறு நிலப்பரப்புக்குள் அடக்கப்பட்டனர். சாட்சிகள் யாருமே இல்லாத நிலையில் அந்த மக்கள் மீது தொடர் விமானத் தாக்குதல்களும், எறிகணை வீச்சுகளும் நடத்தப்பட்டு நாற்பதினாயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
 
அமெரிக்காவின் ஓகஸ்ட்06 ஹிரோசிமாவில் ஒரு நாள் பொதுமக்கள் மீதான  கொலை வெறித்தாண்டவம் நடத்தப்பட்டது. ஆனால் இலங்கை அரசால் மூன்று மாதங்களுக்கு மேலான காலப்பகுதியில் ஒவ்வொருநாளும் குண்டு மாரியும், எறிக ணைப் பொழிவும் நடத்தப்பட்டதுடன் நாற்பதினாயிரம் பேர் கொல்லப்பட்டதும் ஏராளமானோர் ஊனமுற்றவர்களாக் கப்பட்டனர். 
 
இன்று அறுபது லட்சம் யூதர்களைக் கொன்றான் என்று ஹிட்லர் தூற்றப் படுகிறான். ஆனால் அணுகுண்டு வீசி இரண்டு லட்சம் மக்களைக் கொன்று தள்ளிய அமெரிக்கா ஒரு பெரும் வெற்றி வீரனாகவும், ஜனநாயகத்தின் பாதுகாவலனாகவும் வலம் வருகிறான்.அதாவது போரில் வென்றவர்களின் குற்றங்கள் மறைக்கப்பட்டு அவர்கள் வெற்றி போற்றப்படுவதும் தோற்கடிக்கப் பட்டவர்கள் தீயவர்களாகக் காட்டப்பட்டு தூற்றப்படுவதும் வழமையாகும்.
 
அந்த வகையில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ஷ வெற்றி வீரனாகத் தன்னைச் சித்திரித்து விடுதலைப் போராளிகளைப் பயங்கரவாதிகளாகக் காட்டி வருகிறார்.அமெரிக்க வரலாற்றில் ஓகஸ்ட்06 ஆம் நாளை ஓர் அழிக்க முடியாத கறையாக மாற்றிய பெருமை ஜனாதிபதி நீஸ் வேல்டுக்கும் யுத்த மந்திரி ஜஸ்னரோவருக்கும் உண்டு. 
 
இலங்கை வரலாற்றில் ஏராளமான ஓகஸ்ட்06 களை உருவாக்கிய பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவுக்கும் உண்டு.    

சந்திரசேகர ஆஷாத்
நன்றி - உதயன்


Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment