'இசோ'வாகிய 'டெசோ'... 'சோ'வாக மாறும்


டெசோ (TESO) மாநாடு இசோ (ESO) மாநாடாக மாறிவிட்டது. பெயர்ப் பலகையில் தொங்கிக் கொண்டிருக்கும் ‘தமிழ்’ அகற்றப்பட்டு இந்திய அரசின் அச்சுறுத்தலின் மத்தியிலும் ‘ஈழம்’ என்கிற சொல் மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளது. ‘ஈழம்’ என்பது இலங்கையைக் குறிக்கும் வார்த்தையென, இரண்டாம் அலைக்கற்றை ஊழல் புகழ், கனிமொழி விளக்கமளிக்கிறார். 

‘டெசோ’ வில் இருக்கும் ‘தமிழீழம்’ என்பது எதனைக் குறிக்குமென்பதை, ஊடகவியலாளர்களும் கேட்கவில்லை, அவரும் விளக்கவில்லை.

மத்தியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டாளிகளை சினங்கொள்ள வைக்கக் கூடாதென்பதில் கருணாநிதி குடும்பம் கவனமாகத்தான் இருந்துள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிற தீர்மானத்தை இணைத்துக் கொள்ள வேண்டுமென, அதில் கலந்து கொண்ட சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர் வேண்டுகோள் விடுத்தபோது, சுப வீரபாண்டியனும், கனிமொழியும் அதனை எதிர்த்துள்ளார்கள். 

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்திய மத்திய அரசு, அரசியல் தீர்வாக முன்மொழியும் 13ஆவது திருத்தச் சட்டத்தினை நிராகரிக்கும்படி கூறினால், தி.மு.க. அதனை ஏற்றுக் கொள்ளுமா என்பது தான். காங்கிரஸ்-தி.மு.க. உறவின் அடிமடியில் கைவைக்கும் விடயமல்லவா அது. 

நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள், பொதுவாகப் பார்க்கும்போது, கடுமையானவை போன்று காட்சியளிக்கலாம். இருப்பினும், போர்க்குற்ற விசாரணை, பொதுசன வாக்கெடுப்பு என்கிற விடயங்களை நடைமுறைப்படுத்த, இந்த தமிழீழ ஆதரவாளர் அமைப்பு என்ன வேலைத் திட்டத்தை வைத்திருக்கிறது என்கிற சந்தேகம் எழுகிறது.

தீர்மானங்களை நிறைவேற்றுவது அரசியல் சடங்காக நிகழும் இக்காலகட்டத்தில், இதற்காகப் போராட முன்வருபவர்கள் குறைந்தளவிலே காணப்படுகின்றனர்.

அரசியல் கோஷங்கள் ஊடாக, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றப் போடும் நாடகங்களாக இவை மாறிவிட்டன. 

இந்திய முதலாளித்துவ 'கார்ப்பரேட்’ வடிவமெடுத்துள்ள கருணாநிதியின் குடும்ப உயர்குழாம், இழந்துபோன அரசியல் செல்வாக்கை மீட்டெடுப்பதற்கு, ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் அவலப்படும் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை துருப்புச் சீட்டாக பயன்படுத்த முனைகிறது. 

அதேவேளை இந்திய மத்திய அரசின் அதிகார மையத்தோடு முரண்பாடுகளை ஏற்படுத்தாதவாறு, மிகக் கவனமாக தமது காய்களை நகர்த்துகிறார் கருணாநிதி. 

இவை தவிர, கருணாநிதியா, இராஜபக்சேவா, தமிழ் மக்களின் எதிரி? என்கிற திராவிடக் கழகத் தலைவர் வீரமணியின் அனல்பறக்கும் உரையாடல்களும் அம்மாநாட்டில் இடம்பெற்றிருந்தன. 

இருப்பினும் நண்பராக இருந்து, எதிரியாக மாறியவர்களே மிகவும் ஆபத்தானவர்கள் என்பதை வரலாறுகள் சுட்டிக் காட்டி வருகின்றன. 

நினைவில் இல்லாத கனவுகள் போல் ஆகிவிட்டது, கருணாநிதி குறித்தான தமிழ் மக்களின் பார்வை என்பது தான் நிஐமானது. 

2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்திய பொதுத் தேர்தலிற்கு முன்பாக, இன்னும் பல ‘இசோ’ மாநாடுகள் வரும்.

‘கார்ப்பரேட்’ சொத்துக்களை பாதுகாக்க வேண்டுமாயின் தமிழ் நாட்டில் ஆட்சியை இழந்தாலும், மத்திய ஆட்சியிலாவது தமது பங்கு இருக்க வேண்டுமென கருணாநிதி குடும்பம் நிர்ப்பந்திக்கப்படுகிறது.

ஆகவே, தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களில், அதிகளவு எண்ணிக்கை தி.மு.க.விற்கு கிடைக்க வேண்டும் என்பதே கருணாநிதியின் எதிர்பார்ப்பு.

அடுத்த தேர்தலின் போது, வட மாநிலங்களில் காங்கிரஸின் செல்வாக்கு வீழ்ச்சியடையுமாயின், மாற்றுத் தெரிவான பாரதீய ஐனதா கட்சியோடு கூட்டுச் சேர முயற்சிப்பார்கள்.ஏற்கனவே இவ்வாறான நகர்வுகளை மேற்கொண்டவர்தான் கருணாநிதி.

அவ்வாறானதொரு நிலை ஏற்படுமாயின், காங்கிரசோடு சேராமல், ஏனைய சிறிய கட்சிகளோடு இணைந்துதான் தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அப்போது தமது சொந்த வாக்கு வங்கிலேயே தி.மு.க. தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதனை முன்கூட்டியே உணர்ந்துள்ள, தேர்தல் வியூகம் அமைப்பதில் கில்லாடியான கருணாநிதி, டெசோ ஊடாக தனது முதல் நகர்வினை மேற்கொண்டுள்ளார்.

தமது அரசியல் எதிரியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருந்தாலும், 2009க்குப் பின்னர் இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ள சீமானின் ‘நாம் தமிழர்’ இயக்கத்தை இரண்டாவது எதிர்நிலையில் வைத்துப் பார்க்கின்றது தி.மு.க.

கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களுக்குச் சென்று, அதற்கெதிரான தீவிர பரப்புரையில் ஈடுபட்டு, அதன் படுமோசமான பின்னடைவிற்குக் காரணகர்த்தாவாக விளங்கினார் சீமான்.

தற்போது சீமானின் பார்வை கருணாநிதியின் பக்கம் திரும்பியுள்ளது. 

இவைதவிர, ‘பெரியார்’ வழிகாட்டி, ‘பிரபாகரன்’ எனது தலைவன் என்கிற சீமானின் நிலைப்பாடு, ஈழ ஆதரவு திராவிடக் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் மத்தியில் ‘நாம் தமிழர்’ இயக்கத்தோடு முரண்பாடுகளை உருவாக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

இருப்பினும், முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பிற்கு உதவிபுரிந்த காங்கிரசையும், அதற்கு ஆதரவளித்த கருணாநிதியின் தி.மு.க.வையும் தமிழக அரசியலில் இருந்து தூக்கி எறிவது தான் தனது முதன்மையான தேர்தல் அரசியல் வேலைத் திட்டமென சீமான் கூறுகின்றார்.

ஆகவே, கருணாநிதியின் தேர்தல் வியூகத்தின் முதன்மைத் தெரிவாக, ஈழ ஆதரவுப் போராட்டங்களினூடாக இளைஞர்களைப் பெருமளவில் திரட்டும் சீமான் இருப்பது ஆச்சரியமான விடயமல்ல. 

ஈழ ஆதரவு நிலைப்பாட்டின் மூலம் அதனை உடைக்கலாமென்று மேற்கொள்ளப்படும் நகர்வு தான் டெசோ மாநாடு. 

அதேவேளை, இம்மாநாடு, சர்வதேச அரங்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிற விளக்கங்கள் எல்லாம் பொருத்தமானதல்ல. கருணாநிதியின் அடுத்தகட்ட நகர்வு, தமிழகத்தை விட்டு விரிந்து செல்லப்போவதில்லை.

அவ்வாறு நகர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமேன விரும்புவொர், கருணாநிதியின் பலவீனமான அரசியல் நிலையையும், அதிகாரத்தை தக்க வைக்க அவர் போடும் 'மனோகரா’ நாடகங்களையும் புரிந்து கொள்ளவில்லை என்று நம்பலாம்.

முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்கள் இணைந்து ஈழ ஆதரவு அரசியல் மையமொன்றினை உருவாக்க வேண்டுமென சிலர் விரும்புகிறார்கள். ஆயினும், தமிழக அடித்தட்டு மக்களின் போராட்டங்களையும், ஈழ மக்களின் விடுதலையையும், இணைத்து செயற்படும் அமைப்புகளின் ஒன்றியமே பலமாக இருக்கும்.

இதயச்சந்திரன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment