போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும் விழுந்த துரையப்பாவும் – பகுதி 4


1975யூலை 20திகதி ஞாயிற்றுக்கிழமை இறுதியாக துரையப்பாவின் நடமாட்டங்களை கிருபாகரன் உறுதிசெய்தநிலையில் அடுத்துவரும் 27.7.1975  ஞாயிற்றுக்கிழமை அன்று துரையப்பாவின் மீதானதாக்குதலை நடத்துவது எனத்தீர்மானித்தார். இந்நிலையில் அடிக்கடி கலாபதியையும் நண்பனையும் சந்தித்து தாக்குதலிற்கான திட்டங்களை வகுக்கஆரம்பித்தார். இவ்வாறு ஒருநாள் தலைவரும் கலாபதியும் நெற்கொழு மைதானத்திற்கு அருகாமையில் தாம்செய்யப்போகும் தாக்குதலைப்பற்றி கதைத்துக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் சிலநாட்களிற்கு முன்பாக விளக்கமறியலில்  இருந்து விடுதலையாகி  ஊருக்கு வந்திருந்த குட்டிமணி அவ்விடத்திற்கு வந்தார். எதிர்பாராமல் இவர்களிருவரையும் கண்டவுடன் ‘கள்ளப்பயல்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்திருக்கிறியள் என்னமோ ஆ…..ஆ’ என நகைச் சுவையுடன் கூறியவாறு சென்றார். பாம்பின்கால் பாம்பு அறியுமல்லவா!….யூலை 27ந்திகதி காலை 8மணிக்கு யாழ்பஸ்நிலையத்தில் கிருபா கரனையும பற்றிக்iயும் சந்திப்பதாக கூறிவிட்டு 26.07.1975 சனிக்கிழமை நண்பகலுக்கு சற்றுப்பின்னாக வல்வெட்டித்துறைக்கு வந்த தலைவர் கலாபதியிடம் தனது திட்டத்தைக்கூறி அடுத்தநாள் தாம்நடத்த இருந்த தாக்குதலிற்கான இறுதித்தயாரிப்பு வேலைகளில் இறங்கினார். பலநாட்கள காத்திருந்த இலக்குத்தயார் ஆனால் தாக்குதலிற்குத் தேவையான குண்டுகள்தான் போதாது.

ஆனால் கலாபதியின் தொழில்நுட்பத் திறமையில் தலைவர்பிரபாகரன் எப்பொழுதும் பெருநம்பிக்கை கொண்டிருந்தார். தாம்முன்னரே கொள்வனவு செய்துவைத்திருந்த 38ம் இலக்க ரக துப்பாக்கிக்கான வெற்றுக்குண்டுகளினை நிரப்பி அவைகளைக்கொண்டே துரையப்பாவைத் தாக்கும் முடிவினை இருவரும் செயற்படுத்த முனைந்தனர். அதற்கேற்ப தம்மிடம் இருந்தபழைய வேட்டைத்துப்பாக்கிக் குண்டுகளின் உள்ளீடுகளான வெடிமருந்துகளினை 38இலக்க கைத்துப்பாக்கி குண்டுகளில் நிரப்புவதன் மூலம்  அவைகளை பாவிக்கக்கூடிய குண்டுகளாக மாற்றமுடியும் என நம்பினர்.யாழ்ப்பாணக்குடாநாடே அன்று இரவு அமைதியாக  உறங்கிக் கிடந்தது. ஆனால் தலைவரும் கலாபதியும் நண்பனும் மட்டுமல்ல காத்தலிங்கம் மகேந்திரதாஸ் என்ற ஆயக்கிளியும்கூட அந்த இரவு உறங்கவில்லை. ஏனெனின் ஆயக்கிளியின் பொறுப்பிலிருந்த காணியின் கார்கராஜ்  உடன் இணைந்திருந்த அறையிலேயே பிரபாகரனும் கலாபதியும் அடுத்தநாள் தாக்குதலுக்கான குண்டினைத தயார்செய்து கொண்டிருந்தனர். விளாம்பத்தையென முன்அத்தியாயங்களில் விபரிக்கப்பட்ட காணியின் வடக்குப் பகுதியினை ஆயக்கிளியின் சகோதரன் முருகுப்பிள்ளை விலைகொடுத்து வாங்கியிருந்தார்.

அதற்குரிய சுற்றுமதிலை அமைத்ததுடன் கார்க்கராஜ் உடன்கூடிய ஒருஅறையையும் அவ்விடத்தில் அமைத்து  தனது சகோதரனா னான ஆயக்கிளியிடம் அக்காணியை ஒப்படைத்திருந்தார். இதனால் ஆயக்கிளியின் நண்பர்களும் மற்றும் பல இளைஞர்களும் சுதந்திரமாக தமது பொழுதுகளை கழிப்பதற்காக அவ்விடத்தில் கூடுவர்.  சில இளைஞர்கள் இரவில் அங்கேயே படுத்துஉறங்குவதும் உண்டு. மேற்படி இடத்தினையே அன்றைய இரவில் துப்பாக்கிக்குண்டுள் தயாரிப்பதற்காக தலைவரும் கலாபதியும் நண்பனும் பயன்படுத்திக்கொண்டனர். தாக்குதலின் பின் துரையப்பாவின் காரினைப் பயன்படுத்தி அவ்விடத்தைவிட்டு தப்பிச் செல்வதே இவர்களின் திட்டங்களிலொன்றாகும்.  ஆனால் பிரபாகரனுக்கோ அல்லது கலாபதிக்கோ கார் ஓட்டத்தெரியாதிருந்தது.  பற்றிக் இன்னமும் பழக்கநிலையிலேயே இருந்தார். ஆனால் ஆயக்கிளி இவரைவிட முன் அனுபவமுள்ள சாரதியாக காணப்பட்டார்.  இதன் காரணமாக அடுத்தநாள் தாம் செய்யப்போகும் தாக்குதலில் ஆயக்கிளி யையும் இவர்கள் தம்முடன் இணைத்துக்கொண்டிருந்தனர். முன்பு ஒருதாக்குதல் முன் முயற்சிக்காக வல்வெட்டித்துறை ‘ஈஸ்வரி நகை மாளிகை’ உரிமையாளரான புவனேஸ்வரராஜாவுடைய காரினை   கையகப்படுத்தி யாழப்பாணம்   கொண்டுசெல்ல முயன்றனர் அப்பொழுதும் ஆயக்கிளியே சாரதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

பலாலி இராணுவமுகாமிற்கு அண்மையில் பெற்றோல் போதாமையினால் கார் நின்றுவிடவே நள்ளிரவு வேளையிலும் சிறுதுதூரம் தள்ளிச்சென்றபின்னர் வசாவிளான் வீதியில் அக்காரினை   சமயோசிதமாக இவர்கள் கை விட்டுச்சென்றிருந்;தமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. இம்முறையும் கார் ஓட்டுவதில் ஆயக்கிளிக்கு ஒருசிக்கல் காணப்பட்டது.  பழைய சோமசெற் காரைமட்டுமே  இலாவகமாக ஓட்டத்தெரிந்த ஆயக்கிளிக்கு துரையப்பாவின் புத்தம் புதிய  போஜோ 404  காரில் கியர் எங்கிருக்கும் என்பதே தெரியாது. இதனால் தமக்கு எப்பொழுதும் உதவக்கூடிய ‘பவன்’ என்னும் அயலிலிருந்த நண்பனிடம் போஜோ ரக காரினை எவ்வாறு இயக்குவது எனும் ஆலோசனைகளையும் கேட்டுப்பெற்றுக்கொண்டனர்.
இரவிரவாக தம்மிடம் இருந்த 12வெற்றுக்குண்டுகளையும் புதிய குண்டுகளாக உருமாற்றி இரண்டு கைத்துப்பாக்கிகளிலும் ஆறு ஆறாக நிரப்பிக் கொண்டனர். சிறுகச்சிறுக  மிகநுணுக்கமாக குண்டுகளினை    நிரப்பிமுடித்து பின்னிரவில் உறங்கமுயன்றபோதும் தலைவராலும் கலாபதியாலும் உறங்கமுடியவில்லை. விடிந்ததும் தாம் நடத்தப்போகும் ‘துரோகத்தினை துடைக்கும்’ செயலினைச்சுற்றியே அவர்களின் சிந்தனைகள் சுழன்று கொண்டிருந்தன. உறங்காதஇரவு விடிந்ததும்  காலை ஆறுமணிக்கு அங்கிருந்து  புறப்பட்டு   வல்வெட்டி வன்னிச்சிஅம்மன்    கோவிலடிக்கு இருவரும் நடந்துவந்தனர்.

இவர்கள் இரவு  இருந்த ஆயக்கிளியின் காணியில் இருந்து மிகக் கிட்டிய தூரத்திலேயே வல்வெட்டித்துறை ஆலடிபஸ்தரிப்பிடம் அமைந்தி ருந்தது.  இப்பஸ்தரிப்பிடத்துடன் இணைந்தே தலைவர் பிரபாகரனுடைய வீடும் காணப்பட்டது.  ஆனால் ஆலடிபஸ்தரிப்பிடத்தில் மட்டுமல்ல வல்வெட்டித்துறையின் வேறு எந்த பஸ்தரிப்பிடத்திலும்  இவர்கள் பஸ்சிற்காக காத்திருக்கமுடியாது. ஏனெனின் இவ்வாறு காத்திருக்கும் வேளையில்   ஒருவரை   ஒருவர் நன்கு அறிமுகமான ஊர் மக்களின் பார்வையில் சிக்கிவிடலாம் அதன்மூலம் எங்கு செல்கின்றீர்கள்?   எனும் கேள்வி எழும் என்பதாலேயே  ஒருமைலிற்கு அதிகமானதூரத்திற்கு இவர்கள் அன்று நடந்து சென்றிருந்தனர்.

1972இன் ஆரம்பம்முதல் மாணவர்பேரவையின் செயற்பாடுகளில் அதிக ஈடுபாட்டுடன் செயற்படத்தொடங்கிய பொழுதே பிரபாகரன் வல்வெட்டித்துறை என்ற சுயவட்டத்திற்கு வெளியே வரத்தொடங்கினார். அப்பொழுதே ஊரின் சனநடமாட்டமுள்ள பகுதிகளைத்தவிர்த்தும் ஊருக்கு வெளியே இருந்தும் தனது  பயணங்களை மேற்கொள்வதில் அவர் திடமாயிருந்தார். அதுபோலவே அன்றும் வல்வெட்டி வன்னிச்சிஅம்மன்   கோவிலடிக்குவந்து அங்கிருந்தே யாழ்ப்பாண பஸ்நிலையம் செல்ல முடிவெடுத்தார். இவர்கள் பஸ்நிலையம் வந்து ஒருபஸ் சென்றபின்பும் இவர்களைத் தொடர்ந்து தன்னுடைய காணியைப்பூட்டிவிட்டு வருவதாகக்கூறிய ஆயக்கிளி இன்னும் வந்து சேரவில்லை. மேலும் ஒருபஸ் சென்றபின்னும் ஆயக்கிளி வராமல் போகவே முன்வைத்தகாலை பின்வைக்கமனமின்றி அடுத்துவந்த 751 இலக்கபஸ்சின் மூலமாக காலை எட்டுமணியளவில் யாழ்நகரம் வந்துசேர்ந்தனர்.  இவர்கள் பஸ்நிலையத்திற்குவந்த சிறிதுநேரத்திலேயே முன் திட்டமிட்டவாறு கிருபாகரனும் பற்றிக்கும் இவர்களை வந்து சந்தித்தனர். தேவையின்றி நேரத்தைக் கடத்தாமல் பஸ்நிலையத்திற்கு எதிரிலிருந்த ‘அம்பாள் கபே’  என்னும் உணவுச்சாலையில் நால்வரும் காலைஉணவாக இடியப்பம் உண்டனர். நண்பகல் 12மணிக்கு   துரையப்பா கோவிலிற்கு வருவதால் அதற்குமுன்பாக அவ்விடத்திற்கு சென்றுவிடவிரும்பினர். அதற்கேற்றாப்போல் பொன்னாலை செல்லும் பஸ்நிலையத்திற்குச்சென்று தமக்குரிய பஸ்சின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.


                                                     அன்றைய பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலயம்

பஸ்சிற்காக காத்திருந்த இவ்வேளையில் இவர்களிடம் இருந்துபிரிந்துசென்ற கிருபாகரன் பஸ்நிலையத்திற்கு அண்மையில் இருந்த ஆடைவிற்பனை நிலையத்திற்கு சென்று மேலாடை(சேட்) மடித்துவரும் கடதாசிஅட்டை ஒன்றைப்பெற்றுவந்தார். கழிவென குப்பையில்ப்போடும் அந்தஅட்டையை யாரோ தேடிவந்ததை அறிந்த அவ்வியாபாரிக்கும் சிறுஆசை துளிர்விட்டது போலும். எறியும் அந்த அட்டையை  25சதவிலைக்கு  கிருபாகரனிடம் கொடுத்திருந்தார். பாவம் அந்த அப்பாவி காலைநேரத்தில் ஏதோ வெற்றிகரமாக தனது வியாபாரத்தை தொடங்கியதாக எண்ணி மகிழ்வடைந்திருப்பார். ஆனால் அந்தஅட்டையை வேண்டுபவர் யார்?  எதற்காக வெண்டுகின்றார் என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது.  ஆனால் செப்டெம்பர் மாதத்தில்  நடந்த பஸ்தியாம்பிள்ளையின் விசாரணையின் போதுதான் அந்த ஈனச்செயலிற்கான விலையை அவர் கொடுக்க வேண்டியிருந்தது.

தமதுதிட்டங்கள் ஒவ்வொன்றையும் நிரையாக செயற்படுத்திய அவர்கள் முற்பகல் பதினொருமணியளவில் ஊர்காவற்துறை கீரிமலை பிரதானவீதியில் அமைந்திருந்த பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவிலடிக்கு வந்துசேர்ந்தனர்.  என்றும் போலவே அன்றும்  கோவிலும் கோவில்சுற்றாடலும் அமைதியாக காணப்பட்டன. கடலை சோடா என சிறுவியாபாரம் செய்யும் கண்ணகை (கண்மணி) என்ற  மூதாட்டிஒருவரின் சிறுவிற்பனைச்சாலையைத் தவிர வேறெவ்வித விற்பனைச்சாலைகளும் அங்கிருக்கவில்லை. இடையிடையே கோவிலுக்கு வந்துபோவோர் தவிர வேறு எவ்வித சனநடமாட்டமுமின்றி அப்பகுதி அமைதியாக காணப்பட்டது. கோவிலின் முன்வீதியின் இடதுபுறம் தேர்க்கொட்டகையுடன் கூடிய தேர்மூட்டியும் வலதுபுறம் வைரவரின் வழிபாட்டிடமும் அமைந்திருந்தன. கோவிலின்; நேரெதிரே வடக்குநோக்கிய  வீதியின் வலதுபுறமாக காணப்பட்ட சிறியமடத்தில் நால்வரும் ஆவலுடன் காத்திருந்தனர். இவர்களில் கிருபாகரன் மட்டும் வரப்போகும் காரினை எதிர்பார்த்து இடையிடையே வீதியில் அங்குமிங்குமாக நடைபோட்டுக்கொண்டிருந்தார். நண்பகல் 12மணியளவில் கார்வரும் நேரமாதலால் அனைவரும் பரபரப்பாகினர். ஆயினும் இவர்கள் எதிர்பார்த்ததுபோல் கார் வரவில்லை. எத்தனைமணிநேரம் காத்திருந்தாலும்  தமது நோக்கத்தை நிறைவேற்றாமல் அன்று திரும்புவதில்லை என்னும் உறுதியுடன் கார்வரும் தென்மேற்குத் திசையில் வைத்தவிழிவைத்தவாறு பார்த்திருந்தனர்.


நண்பகல் வெய்யில் வேறு கொதித்துக்கொண்டிருந்தது. காலையில் சாப்பிட்ட உணவின் பின் யாரும் எதையும் சாப்பிடவில்லை ஆனால் யாருக்கும் பசிக்கவில்லை. அவர்களின் நோக்கமெல்லாம் துரையப்பாவின் காரைப் பார்ப்பதிலேயும் அவரைத்தாக்கும் சிந்தனையிலுமே கழிந்து கொண்டிருந்தது.  இந்நிலையில் வீதியில் நடமாடிக்கொண்டிருந்த கிருபாகரன் என்ன நினைத்தாரோ தலைவரிடம் அனுமதி பெற்றதுடன் பற்றிக்கையும்  உடனiழைத்துக் கொண்டு கோவில்வீதிக்குச் சென்றார். அங்கு கடலை மற்றும் சோடா எனபவற்;றை விற்றுக்கொண்டிருந்த மூதாட்டியிடம் இருவரும் சோடா வேண்டிக்குடித்துவிட்டு காரின்வரவை எதிர்பார்த்து அசையாமல் காத்திருக்கும் பிரபாகரனுக்கும் கலாபதிக்கும் சோடா கொண்டு வந்து கொடுத்தனர். ஆனால் இவர்களிருவரின் தாகமெல்லாம் துரையப்பாவைத் தாக்குவதிலேயே இருந்ததனால் சிரத்தையின்றிக் குடித்துவிட்டு தமது நோக்கத்தினை   நிறைவேற்றும் தருணத்திற்காக ஆவலுடன் காத்திருந்தனர்.


போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 2
போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 1
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment