வெலிக்கடைச் சிறைச்சாலையில் 1983ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 52 அரசியல் கைதிகளின் 29வது ஆண்டு நினைவு நாள் கடந்த மாதம் அனுஷ்டிக்கப்பட்டது. இது தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டுவதை, யாழ்ப்பாணத்தில் பொலிசார் தடை செய்திருந்தனர். இனக்கலவரம் தொடர்பான சுவரொட்டிகள் போன்ற பிரசாரங்களின் மூலம் குழப்பங்களை ஏற்படுத்த சில அரசியல் சக்திகள் முனைவதாக புலனாய்வுப் பிரிவு எச்சரித்திருந்ததாகவும், அதன்படி விழிப்புடன் இருந்த பொலிசார் சுவரொட்டிகளைப் பறிமுதல் செய்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் கொல்லப்பட்ட அரசியல் கைதிகள் எவருமே விடுதலைப் புலிகள் அல்ல. ரெலோவின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி போன்றவர்களும், வேறு சில அமைப்புகளின் தலைவர்களும் சாதாரண தமிழ்க் கைதிகளும் தான் வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்டனர். இதுவரை வடக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் நாளைத் தான் நினைவு கூரக் கூடாது என்ற தடை இருந்தது. இம்முறை வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளையும் யாரும் மீள நினைக்கவும் கூடாது, நினைவு கூரவும் கூடாது என்ற வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டது இலங்கையின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய கறை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது. அது ஒரு இனக்கலவரத்தின் அடையாளமாக வரலாற்றில் எப்போதும் பதிவாக இருக்கும். அந்தப் படுகொலைகளுக்காக சிங்களப் பேரினவாத சக்திகள் என்றைக்கும் தலைகுனிந்தேயாக வேண்டும். 1983இல் சிங்களப் பேரினவாதிகள் திட்டமிட்டுச் செய்த படுகொலைகளை மிஞ்சும் வகையில்- அதை நினைவு கூருவதற்கான தடை இப்போது போடப்பட்டுள்ளது. அதுவும் போர் முடிந்து மூன்றாண்டுகள் கழித்து - மூன்று தசாப்த போரின் வடுக்களை ஆற்றுவதற்காக நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை வெளியிடுகின்ற சூழலில் தான் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, மகர சிறைச்சாலையில் கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதியான நிமலரூபனின் உடலைப் பெறுவதற்காக அவரது பெற்றோர், பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.
தமது ஒரே பிள்ளையையும் பறிகொடுத்த – வறுமையில் வாடும்- அந்தப் பெற்றோர், தமது மகனின் இறுதிக்கிரியைகளை சொந்த வீட்டில் நடத்துவதற்காக - நீதிமன்றப் படிக்கட்டுகளையெல்லாம் ஏறிக் கடக்க வேண்டியிருந்தது. இது போரில்லாத அமைதிச் சூழலில் தான் நடந்தது. போர் முடிந்து விட்டது, வடக்கில் வசந்தம் வீசுகின்றது என்றெல்லாம் அரசாங்கம் சொன்னாலும், போரின் வடுக்களை அரசாங்கம் ஆற்றவும் இல்லை, ஆற்ற முனையவும் இல்லை என்பதே உண்மை. அதற்குப் பதிலாக போரின் வடுக்களை இன்னும் இன்னும் கிளறிக் காயங்களைப் பெருப்பித்துக் கொண்டிருக்கிறது. மரக சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதியான நிமலரூபன் கொல்லப்பட்டதற்காக அரசாங்கம் வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. ஏதேதோ காரணங்களைச் சொல்லி அதனை நியாயப்படுத்துவதிலேயே குறியாக இருந்தது. நிமலரூபனை அடித்துக் கொல்வதற்கு காரணம் ஒன்றும் இருக்கவில்லை. அவர் ஆயுதம் ஏந்திச் சண்டையிடவில்லை. யாரையும் கொன்று போடவில்லை.வவுனியா சிறையில் சிறைக்காவலர்களை தடுத்து வைத்திருந்தது தான், சிறைக்கைதிகள் செய்த மிகப்பெரிய குற்றம். இதற்குத் தான் அந்த உயர்ந்தபட்ச தண்டனை கொடுக்கப்பட்டது. தமிழர்களை படுகொலை செய்வதற்கு எவருக்குமே நியாயமான காரணம் தேவையில்லை என்ற உண்மையை இந்தச் சம்பவம் மீண்டும் உணரவைத்தது.
வெலிக்கடைச் சிறையிலும் அது தான் நடந்தது.
வவுனியா சிறையில் நடந்தது போல அவர்கள் யாரையும் தடுத்து வைக்கவில்லை.
எங்கோ நடந்த சம்பவத்துக்காகவே பலிவாங்கப்பட்டனர்.
அன்றைய நிலை இன்றும் மாறவில்லை என்பதையே மகர சிறைப்படுகொலை நிரூபித்துள்ளது.
வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைக்காக எந்த நீதி விசாரணையும் நடத்தப்படவில்லை.
அதுபோலவே, மரக சிறைச்சாலைப் படுகொலைக்கு நீதி வழங்கவும் நடவடிக்கை ஏதுமில்லை.
போரின் போது நடந்த குற்றங்களுக்காக விசாரணை கோரிய எவருமே, போருக்குப் பின்னர் நடந்த படுகொலைக்காக வாய் திறக்கவில்லை.
போர்க்களத்துக்கு அப்பால் இடம்பெற்ற அநீதிகளுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். ஏனென்றால் போர்க்களத்துக்கு அப்பால் தான் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதனால், தமிழர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் ஆற்றப்பட வேண்டியவை. அந்த உண்மை போர் முடிந்த மூன்றாண்டுகளுக்குப் பின்னரும் ஆட்சியாளர்களால் உணரப்படவில்லை. தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூரவும் கூடத் தடுக்கப்படும் நிலை தான் இன்னும் உள்ளது. இது தமிழர்களின் காயங்களை இன்னும் அதிகப்படுத்துமே தவிர ஒரு போதும் குறைக்காது. இன்னொரு பக்கத்தில் தமிழர்கள் தமக்கு நேர்ந்த அவலங்களை நினைவு கூரக் கூடாது என்று தடைவிதிக்கும் அரசாங்கம். புலிகளால் நிகழ்த்தப்பட்ட கொலைகளைத் தானே நினைவு கூருகிறது. விடுதலைப் புலிகள் செய்த கொலைகளை பயங்கரவாதச் செயலாக காட்டி, பிரசாரம் செய்யும் அரசாங்கம் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அதே அநீதிகளை மூடி மறைக்க முனைகிறது. இதுபோன்ற தடைகளால் நாட்டில் நல்லிணக்கம் உருவாகப் போவதில்லை. எங்கு அழுத்தம் அதிகரிக்கிறதோ அங்கு வெடிப்பு நிகழும் என்பது தான் பொதுவான விதி. அதுபோலத் தான் அடக்குமுறைகள் அதிகரிக்கும் போதும் நிகழும். அதை அரசாங்கம் நினைவில் கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை.
கட்டுரையாளர் சத்ரியன் இன்போ தமிழ் குழுமம்
0 கருத்துரைகள் :
Post a Comment