புலம்பெயர்ந்த எம்மக்களினை தம்மில் ஓர் அங்கமாக கொண்டுள்ள சுவிஸ் தேசத்தின் பகல் பொழுதுகள் கூட கடுமையான குளிரில் பல் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. உலகத் தமிழர்களின் சர்வதேசங்களுக்கான கோரிக்கைகளுக்கான கவனயீர்ப்பினை அதீதப்படுத்தும் நோக்கில் தன் விடுதலை நோக்கிய பயணத்தினை மிதிவண்டிப் பயணமாக தெரிவு செய்து விரைகின்றான். வைகுந்தன்.
கொண்டையூசிகளின் வளைவுகளோடு, கடுமையான பனிப்பொழிவு மிக்க மலைகள் நிறைந்த ""ஊரி'' மாநிலத்திலிருந்து காலநிலைச் சீர்கேட்டினை கடுமையாக எதிர்த்தபடி இறுக இயங்குகின்றன அவன் கால்கள். மழையும், காற்றும், குளிரும், உயர மலையும் கொண்ட ""கிளவுசன் பாஸ்'' ஊடான வீதியைக் குளிர்காலத்தில் வாகனப் போக்குவரத்துக்காக தடைசெய்வது வழமை.
பாதையில் இந்த மிதிவண்டிக் கொள்கையாளனை மேவிக் கடந்து போகும் சுவிஸ் நாட்டவர்கள் தங்களது வாகனங்களில் அழைத்துச் செல்வதாக வினாவிய போதும் தன் பயணத்தின் கொள்கைகளை விளக்கிக் கூறியபடி பயணம் தொடர்கிறது.
மலைத் தொடரை கடப்பதற்குள்ளாக மழையில் நனைந்த வைகுந்தனது ஆடைகளை மாற்ற உதவியும், தமது குளிராடைகளை கொடுத்தும், இரவுணவுக்கான ஏற்பாடுகளைச் செய்தும், ஓய்வறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தும் எம் மக்கள் வைகுந்தனின் பாதைகளில் கூடவே வந்தார்கள். மங்கலான ஒளிச்செறிவு மீதுறும் பாதைகளில் எம்மவர்களின் "மகிழுந்து'களின் முகப்பு விளக்குகள் சூரியனுக்கு பிரதியிட்டன. "மகிழுந்து' என்கின்ற வார்த்தைகளை மனம் மீள் வாசிக்கின்றது. இன்னமும் ""கார்'' என்பதை கைவிடவில்லை நாங்கள், என்பது இடக்கித் தடக்குகின்றது.
புலம்பெயர்ந்து தமிழர் வாழும் தேசங்களின் அரசியல் கட்டமைப்புக்களினூடாக ஈழத் தமிழர்களின் இன்றைய அவலங்களையேனும் உலகறியச் செய்யும் விழிப்புணர்வுப் பணியில் விரைந்து கொண்டிருக்கும் வைகுந்தனின் உடலின் உறுதிக்கு உரம் சேர்க்க எம் உணர்வுகளை இணைப்போம்.
* * *
இவனும் ஓட்டக்காரன்தான். கரிய, வாளிப்பான, உயரிய உடலமைப்பின் காரணமாக ஓட்டம் இவனிடத்தில் இயற்கையாக வந்தது. இன்றைக்கு 12 வருடங்களுக்கு முன் அகதியாக அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தான். தாய்நாட்டில் சிறுவனாக இருந்த நாள்களில் கரடுமுரடான கற்தரைகளில் வெறுங்கால்களோடு விரைந்தோடியவனின், பயிற்சிகள் அமெரிக்கப் பாடசாலை நாள்களில் இலகுவாகப்பட்டன.
முதலாவது பாடசாலை மட்டப் போட்டியின் போது வெறுங்கால்களோடு ஒடி, முதலிடத்தில் நின்றபோது தன்மீது ஒட்டுமொத்தக் கல்லூரியின் கவனத்தை ஈர்த்தவனின் இன்றைய வளர்ச்சி, ஒலிம்பிக்கில் 42.195 கி.மீ. பந்தய தூரமுள்ள மரதன் வீதியோட்டப் போட்டிக்கான நுழைவு வரை!
28 வயதான "குவோர் மாரியல்' அமெரிக்க வசிப்பிட உரிமையாளனேயன்றி குடியுரிமையாளனல்ல என்பதால் அமெரிக்க அதிகாரிகள் தமது ஒலிம்பிக் அணியில் இடம்தர மறுத்தனர். தென் சூடானில் பிறந்து, புலம்பெயர்ந்த மாரியலுக்கு, சூடான் நாட்டின் சார்பில் ஒலிம்பிக்கில் பங்கு பற்றும் வாய்ப்பினையளிப்பதாக அழைத்தார் சூடானிய அதிபர்.
தென்சூடான் தனிநாடாக பிரிவடைய முன் இடம்பெற்ற புரட்சிகளின் போது மாரியலின், எட்டு சகோதர்களைக் கொன்று வீழ்த்தியது சூடானின் அரசபடை. அந்த நாள்களில் சிறுவனாக, அமெரிக்காவுக்கு அவலம் கொண்டோடியவனின் நெஞ்சில் எஞ்சியிருந்த வன்மம், சூடானின் அழைப்பை உதறி எறிந்தது.
"விலங்கு வணங்கிகள்' என்று மேற்கத்தேயாரால் விமர்சிக்கப்படும் கூட்டத்திலிருந்து குன்றென எழுந்த இந்த வீரனின் குரலுக்கு ஒலிம்பிக் அமைப்பாளர்கள் செவி சாய்த்தனர். நாடில்லாத காரணத்தினால் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டிகளில் பங்கு பற்றும் விசேட அனுமதியினை போட்டிகளுக்கு ஒரு வாரம் முன்னதாக அறிவித்தது லண்டன் ஒலிம்பிக் குழு. 204 நாடுகள் கலந்து கொண்ட அணிவகுப்பில், வெண்வர்ணத்து பஞ்சவளையல்களை தாங்கிய ஒலிம்பிக் கொடியின் கீழ் நிமிர்ந்து நடந்து வந்தான். "குவோர் மாரியல்' அவனை ""நாடற்றவன்'' என்று சொல்ல யாரால் முடியும்? விடுதலை விரும்பிகள் யாவருக்கும் ""எங்க வீட்டுப் பிள்ளை''யல்லவா!
* * *
மரதன் ஓட்டத்தின் சாரமே, "விசுவாசம்'தான். தன் மன்னனுக்கு சென்றடைய வேண்டிய உணவுத் தகவலை 42.195 கி.மீற்றர்கள் தூரம் கால்களினால் தனித்தோடி வந்து, எல்லை வீரனிடம் கொடுத்து விட்டு வீழ்ந்த வீரனொருவனே இந்தப் போட்டிக்கு முன்னோடி.
அவனைப் போலவே ""இடரினும், தளரினம்'' பணியிழைக்காத பலரின் வீரவரலாறுகளால் வனையப்பட்டதே தமிழரின் விடுதலைப்போராட்டமும், முகநூல் "வலைப்பூ' வொன்றில் தமிழ்த்தேசிய போராட்டத்தின் உன்னதமான சாதனைகளில் ஒன்றான ""ஓயாத அலைகள்'' வீசிய காலத்து வீரனொருவனை நினைவேந்தி எழுதியிருந்த பதிவுஇது!
"பாருங்கள்பகிருங்கள்'' எனும் பின்னூட்டலோடு குறிப்பிடப்பட்டிருந்த பக்கங்களிலிருந்து அதே வார்த்தைகளோடு இங்கு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன சில பகுதிகள்.
சிங்கள இராணுவத்தின் போர் முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிக மெலிந்த உடல்வாகுடன், மினுங்கும் கண்களுடனான சிற்றுருவம் ஒன்று நடுநிசிகளில் உலாவித்திரியும். கழுத்தில் ஒரு கண்ணாடிப் பல்லிருக்கும்! ஒரு முறை கண்விட்டு, மறுமுறை பார்த்தால் மறைந்து விடும். சுட்டால் ரவைகள் வீணாகும். வருவது போல் தெரிந்தாலும், எப்படிப்போனதென்று தெரியாது. ஆயிரம் பேர் வைத்து தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாத இப்படியொரு "கொள்கைப் பிசாசு' சிங்கள உள்ளரங்குகளில் உலாவுவதாக கதையிருந்தால் அதுதான் ""வீரமணி''
"சத்ஜெய' இராணுவ நடவடிக்கையின் பின் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய போராளிகளினால் இராணுவத்தின் கிளிநொச்சித் தளத்தின் முன்னரங்க காவல் வேலியைக் கண்டுபிடிப்பதே கடினமாயிருந்தது. தளத்தின் அமைப்பு என்ன? எவ்வளவு படைவலு? எவ்வளவு ஆயுத வலு? பீரங்கிகள் எங்கே? விநியோக வழி எது? என எதுவுமே தெரியாதவாறும், வேவு வீரர்கள் உள் நுழைய முடியாதவாறும் இறுக்கப்பட்டிருந்த தளத்தின் தகவல்களை கச்சிதமாகக் கறந்து வர அன்றைய கட்டளைத் தளபதி பால்ராஜ் தெரிவு செய்தது வீரமணியனை!
சவாலான உத்தியொன்றின் மூலம் அணித் தலைவனான வீரமணியுடன் உள்நுழைந்த வேவுவீரர்கள், இரண்டாம் நாளே அடையாளம் காணப்பட்டு சிதறடிக்கப்பட்டனர். தப்பிவந்த இரு வீரர்கள் தளபதியிடம் நிலவரம் கூற, ""வீரமணி வீரச்சாவு'' என்று தலைமையகத்திற்கு செய்தி அனுப்பப்பட்டது.
பத்து நாள்கள் கழித்து சுண்டிக்குளத்தில், மயங்கிய நிலையில் இரு படையினரை பொதுமக்கள் பிடித்து வைத்திருப்பதாக தகவலறிந்து விரைந்தபோது, அங்கே ராணுவச் சீருடைக்குள் இருந்தவர்கள் வீரமணியும், இன்னொரு போராளியும். பச்சைப் பனம்பழ நாரை அறச்சப்பியும், வடிகட்டிய சிறுநீரைக் குடித்த படியும் தெம்பிழந்த உடலோடு பசியோடும், மயக்கத்தோடும் ஓடிப்பிடித்து விளையாடியபடி கிளிநொச்சிக் களத்தை குறிப்பெடுத்து வந்திருந்தான் வீரமணி.
2,000 பேர் கொண்ட கூட்டுத்தளத்தில் பட்டப்பகலில் இராணுவம் சல்லடைபோட்டுத் தேடியபோது எங்கோவொரு பற்றை ஆழத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி பதுங்கியிருந்திருப்பான் என்றா நினைக்கின்றீர்கள்? வீரமணியை தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் "குஷிக்' குணத்தோடு, தனக்கு தேவையானவற்றை துருவி குறிப்பெடுக்க தொடங்கியிருப்பான் அவ்விவேகன்.
மஞ்சுளா பேக்கரி சந்திக்கு அண்மித்து பழைய சந்தைப் பக்கமாக நாயுண்ணி பத்தைக் காடாய் கிடந்தது. பகல்படுக்கைக்கு அந்த இடத்தைச் தேர்ந்து குடைந்து நடுவில் போய், துவக்கை கழட்டி துப்புரவு செய்த றோட்டால போன ஆமி, வாகனத்தை நிப்பாட்டி இறங்கி பத்தையை நோக்கி வாறான். இந்த மனிசன், அறுவார் நித்திரை கொள்ளவும் விடாங்கள் போல கிடக்கு எண்டபடி குண்டொன்றை கையில் எடுத்து கிளிப்பில் விரல் வைக்கிறார்.
எங்களயே நோக்கி வந்தவர்கள் சுற்றிக்கிடந்த மரந்தடியள இழுத்து விறகுக்கு, ரக்ரரில ஏத்திக் கொண்டு திரும்பிப் போறாங்கள். வீரமணியண்ணை ஒண்டுக்கும் கிறுங்கான். படுத்தால், எழுந்தால், நிண்டால், ஓடினால் ஒரே பகிடி தான். சாவுக்கு கூட சிரிப்புக் காட்டிப் போட்டுத் தான் சாவான் தோள்களில் தலைசாய்த்த தோழனொருவனின் வாக்குமூலம் அது! புலிகளுக்கு இருட்டாக இருந்த கிளிநொச்சி இராணுவத் தளத்தை வெளிச்சமாக்கி விட்டவன் என் வீரமணிதான் தளபதி கேணல் பால்ராஜ் சிலிர்த்துக் கொண்டபோது சொல்லிய வார்த்தைகள் இவை.
* * *
"ஸ்ரற் போர்ட்' சதுக்கத்தில் பிரித்தானிய கொடிக்கு சம அந்தஸ்தோடு புலிக்கொடி பட்டொளி வீசிப் பறந்தததற்கு காரணமாய் பக்கத்தில் பசியோடு துவன்டிருந்தவன் சிவந்தன் கோபி இன அழிப்புக்கு உள்ளாகி வரும் ஈழத்தமிழரின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவே பட்டினிப் போராடுகின்றேன் என்கிறான் படுக்கையில் இருந்தபடி.
மூன்றாவது வாரத்தினை நெருங்கியபடி "சர்வதேச சுயாதீன விசாரணை' "நில ஆக்கிரமிப்பு', "போர்க்கைதிகள் விடுதலை' போன்ற விடயங்களை தாயக உறவுகள் சார்பில் உலக ஊடகங்களுக்கு விளக்கியபடி, சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம், ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை அணியை அனுமதித்திருக்கக் கூடாது எனவும் கண்டிக்கத் தவறவில்லை.
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் தருணத்தில் இவ்வகை கவனயீர்ப்புகள் சென்றடையும் வழியை அகலப்படுத்தவே தன் வயிற்றை சுருங்கப் போட்டிருப்பதாக ஒட்டியுலர்ந்த உதடு பிரிக்கும் சிவந்தனின் விரல் இடைவெளிகளை எம் விரல்களால் நிரவுவோம் உறவுகளே!
வைகுந்தனின் மனவுறுதி, மாரியலின் தேசபக்தி, வீரமணியின் வேகவிவேகம், சிவந்தனின் கொள்கைப்பற்று இவையனைத்தும் இணையும், புள்ளியில் ""நாடற்றவர்களை'' தீர்மானிக்கும் சர்வதேசங்களின் சூக்குமங்கள் புதைந்தழிந்து போகட்டும்! சக்தி கொடு இறைவா!
நன்றி - உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment