மறந்துபோன அல்லது மறக்கடிக்கப்பட்ட இன்னும் சில... இனப்பிரச்சினை தொடர்பான எல்லா உடன்படிக்கைகளும். வெலிக்கடை முதல் வவுனியா வரை நீள்கின்ற சிறைப்படுகொலைகள். செம்மணி, சூரியகந்த, முள்ளிவாய்க்கால் சதுப்பு நிலங்களில் புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உடலங்கள். என்றுமே பிரிக்கப்படமுடியாத வடக்குக் கிழக்கு. தகாத பாலியல் குற்றங்களுக்கு பொட்டு வைக்கப்படும் என்ற பயம்.
மறதி- 01
சண்டை முடிந்துபோய் இருந்தது. கந்தகப் புகையின் வெக்கை இன்னும் அடங்கவில்லை. எரிந்துபோன இடங்களில் புகை கிளம்பியபடியே இருந்தது. "புலியில இருந்த ஆக்கள் எல்லாம் வெள்ளைக் கொடியோட வாங்க. உங்களுக்கு மன்னிப்பு இருக்கு''. தனக்குத் தெரிந்த தமிழில் சொல்லிக்கொண்டிருந்த சிப்பாய்களின் அறிவித்தல் கேட்டு பலர் எழுந்தார்கள். ஒரு கத்தோலிக்க மதகுருவின் வழிகாட்டலில் அவர்கள் படை அதிகாரிகளிடம் சரணடைந்தார்கள். சரணடைந்தவர்களில் பலரை அவர்களின் மனைவி, பிள்ளைகள் கொண்டு சென்று படையினரிடம் ஒப்படைத்தார்கள்.
"எங்கட அப்பாவ விசாரிச்சிட்டு விட்டுவீங்கதானே?''. பயமும் வேதனையும் கொப்பளிக்கும் குரலில் மழலைச் சிறுவன் ஒருவன் கேட்டான்.
"ஆரும் பயம் வேணாம். நாங்க கொண்டுபோற எல்லாரையும் திரும்ப உங்ககிட்ட ஒப்படைப்பம்''. சீருடையில் நிறைய வர்ண விருதுகளை அணிந்திருந்த அதிகாரி நம்பிக்கை தரும் சொற்களை உதிர்த்தார்.
அன்றிலிருந்து தேடலில் அலையும் குடும்பத்தார் எவரும் சரணடைந்தவர்களைக் காணவேயில்லை. தமது உறவுகளை கொண்டுசென்ற படையினரிடம் "நீங்கள்தானே ஐயா கொண்டு போனீங்கள்.விடாட்டிக்கும் பரவாயில்லை. அவ எங்கையெண்டாவது சொல்லுங்கோ''. என்று அவர்கள் கேட்டால், "எங்களுக்கு ஒண்டும் தெரியாது. நாங்க யாரையும் பிடிக்கல. யாரும் எங்ககிட்ட சரணடையவே இல்லை''. என்று அந்த வர்ண விருதுகளைத் தாங்கிய அதிகாரி கைவிரித்துவிட்டு வாகனத்தில் ஏறிப் பறந்துவிட்டார். ஐயோ பாவம்! அவருக்கும் சண்டையில் மூளை குழம்பி மறதி வந்துவிட்டதுபோலும்.
மறதி- 02
"திரும்பவும் நீங்கள் உங்கட சொந்த பந்தத்தோட பழைய வாழ்க்கை வாழலாம். இனி உங்களுக்கு எல்லாம் நல்லதுதான் நடக்கப்போகுது. எல்லாருக்கும் புதுசா வீடு கட்டி, புது வாழ்க்கை தரப்போறம். தொழில் தொடங்க கடனும் தருவம். இனி உங்களுக்கு ஆமியால எந்தக் கரைச்சலும் இருக்காது''.
பளிச்சிடும் கமரா வெளிச்சங்களுக்கு முன்னால் அந்த இராணுவ அதிகாரி தடுப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்று வெளியேறும் முன்னாள் போராளிகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தார். வந்திருந்த வெளிநாட்டு, உள்நாட்டு ஊடகர்கள் அதனை விழுந்து விழுந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அடுத்த நாள் எல்லா ஊடகங்களிலும் போராளிகளுக்குக் கிடைத்த மறுவாழ்வு பற்றிய செய்திகளே பக்கங்களை நிறைத்திருந்தன. மீண்டும் புதிய வாழ்வுக்கு காலடி எடுத்துவைத்த முன்னாள் போராளிகளுக்கு அடுத்த அடியை எந்தத் திசை நோக்கி வைப்பது என்று தெரியவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் இருட்டு. முன்னே சென்று முட்டிமோதி மீண்டும் பழைய புள்ளிக்கே திரும்பவேண்டிய நிலை. வாக்குறுதி கொடுத்தபடி விடுதலையான உடனேயே கடனும் கிடைத்துவிடவில்லை. வங்கிகளும் முன்னாள் போராளிகள் என்றவுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டன.
விரக்தியில் உச்சக்கட்டம். தற்கொலையைத் தவிர வேறுவழி தெரியவில்லை. பழக்கதோசத்தில் அவர்களின் கரங்கள் கழுத்தில் சயனைட் குப்பியைத் தேடித் தோற்றன.
திடீரென ஒருநாள் அவர்கள் வீடுகளில் மீண்டும் நாய்களின் குரைப்பொலி. காதும் காதும் வைத்தது போல முன்னாள் போராளிகள் திரும்பவும் காணாமல் போனோராக மாற்றப்பட்டனர். அவர்களில் வீடு திரும்பியவர்களில் அனேகரின் மூளைகள் கசக்கப்பட்டிருந்தன. உடலில் அடிகாயங்கள். சிலர் மீள வரவேயில்லை.
"உங்களுக்கு ஆமியால இனி எந்தக் கரைச்சலும் இருக்காது''. இந்த வார்த்தைகளைச் சொன்ன அதிகாரியும், அவருக்கு கோரஸ் பாடிய படைகளும் எல்லாவற்றையும் மறந்து போயிருக்க வேண்டும். வேட்டைகள் தொடர்கின்றன.
மறதி- 03
"புலிகள் தோற்கடிக்கப்பட்டவுடன் தமிழர்களுக்கு நிம்மதியாக வாழக்கூடிய தீர்வை நான் வழங்குவேன்'' அட்டதிக்கும் அதிர இந்தச் சிறுதீவின் மா மன்னர் முழங்கியிருந்தார். அப்போது தீவின் எல்லாப் பக்கங்களிலும் போரின் முழக்கம் கேட்டுக்கொண்டிருந்தது. அதையும் மீறி ஒலித்த மா மன்னரின் குரல் கேட்டு ஓடிவந்தன பக்கத்து நாடுகள். பிரச்சினையை தீர்க்க திரைமறைவில்
வந்திறங்கின மாயவாள்கள். வீழ்த்தப்படமுடியாது என்ற பெருவிருட்சம் ஒன்று ஆணிவேரோடு பிடுங்கிஎறியப்பட்டதான பிரகடனம் சில நாள்களுக்குள்ளேயே வெளிவந்தது. காலச் சக்கரம்
பலமுறை சுழன்றும், போருக்கு முன்னர் மா மன்னர் சொன்ன உடனடித் தீர்வு வழங்கும் விடயம் இதுவரை அவருக்கு கனவில் கூட ஞாபகத்துக்கு வரவில்லை. இன்னமும் திரௌபதையின் துகில்போல நீட்சி பெறுகின்றன முரண்கள்.
ஆறா நினைவு
உலகில் உள்ள அனேகருக்கு குறிப்பாக இலங்கைத் தீவில் உள்ளோருக்கு ஞாபகமறதி அதிகரித்துவிட்டது. எல்லாவற்றையும் எல்லோரும் வெகு சுலபமாக மறந்துவிட்டோம். கல்லறைகளின் மேலே கானாப் பாடல்கள். எங்கும் குத்தாட்டமும், கேளிக்கைகளும். போருக்குப் புறப்படச்சொல்லி பாடிய வாய்கள் எல்லாம் அபிவிருத்திகள் என்ற ஆலாபனைக்குள் தமது அராஜகங்களை அரங்கேற்றுகின்ற வீணை மீட்டலுக்கு தாளம் போடத் தொடங்கிவிட்டன. அவைகளுக்கு பழைய சுருதிகள் மறந்துவிட்டன. எல்லோரது நினைவுகளும் மறக்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஓர் நாளில் வர்ண விருதுகளை ஏந்தியிருந்த அதிகாரியின் படமொன்று ஊடகம் ஒன்றில் வந்திருந்தது. அதனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன், இன்னமும் கண்ணீருக்குள் கசங்கிக்கொண்டிருக்கும் தாயிடம் இப்படிக்கேட்டான்.
"அம்மா! இவர்தானே அப்பாவ பிடிச்சுக்கொண்டு போனவர். கெதியா விடுகிறது எண்டு இவர் தானே சொன்னவர். எப்பவம்மா அப்பாவ விடுவினம்? அப்பா வரமாட்டாரோ?'' ஏக்கத்தோடு நூலறா நினைவுகளில் தொங்கியபடி அந்தச் சிறுவன் கேட்டுக்கொண்டே இருக்கிறான். பதில் தெரியாமல் தாய் அழுதுகொண்டே இருக்கிறாள். ஏன் இவர்களுக்கு மட்டும் இந்த நாசமாய்ப்போன மறதி வரமாட்டேன் என்கிறது?
0 கருத்துரைகள் :
Post a Comment