சிறிலங்காத் தீவில் உண்மையான மீளிணக்கப்பாட்டு முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகின்ற போதிலும், இவ்வாறான தமிழ் மொழிப் புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதன் கருத்து என்ன? இவ்வாறு கேள்வி எழுப்புகிறார் 2009ம் ஆண்டுக்கு பின் முதல்தடவையாக முல்லைத்தீவுப் பகுதிக்கு இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட பிபிசி செய்தியாளர் Charles Haviland.
சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் வடுக்களை இன்றும் பார்க்க முடிகிறது. சிறிலங்காவில் அரங்கேற்றப்பட்ட, மிகக் கொடூரமான யுத்த நடவடிக்கை இடம்பெற்ற இடத்தில் நாம் நின்றிருந்தோம். அங்கேயிருந்த மிக உயரமான பனைமரங்களின் தலைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. தமிழ்ப் புலிகள் மற்றும் சிறிலங்கா இராணுவத்திற்கும் இடையில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் அகப்பட்டனர்.
இவ்வாறு அகப்பட்டுக் கொண்டவர்களில் வயது குறைந்த சிறார்களை புலிகள் அமைப்பு பலாத்காரமாக படையில் இணைத்துக் கொண்டதுடன் தப்பிக்க முயன்றவர்கள் சுடப்பட்டனர். அத்துடன் சிறிலங்கா இராணுவமானது இந்த மக்களைக் குறிவைத்து குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டது. போரின் பின்னர் எஞ்சியிருந்த கட்டடங்களில் பெரும்பாலானவை பாதுகாப்பற்றனவாகவும், அழிக்கப்பட வேண்டிய நிலையிலும் காணப்படுகின்றன.
பெரும்பாலான கட்டடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் தற்போது காணப்படும் பேருந்துகளும் அழிவடைந்துள்ளன. மக்கள் பயன்படுத்திய உடைகள், கதிரைகள் போன்ற பல்வேறு பொருட்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன.
சேதமடைந்திருந்த கத்தோலிக்க தேவாலயம் ஒன்றை நான் பார்த்தேன். இத்தேவாலயத்தைச் சூழ புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருந்தன. சிங்கள இராணுவத்தினன் ஒருவன் என்னை அத்தேவாலயத்திற்கு கூட்டிச் சென்றான். "நான் ஒரு றோமன் கத்தோலிக்கன்" என அந்த இராணுவத்தினன் என்னிடம் தெரிவித்தான். சிறிலங்காவில் வாழும் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் குறிப்பாக சிறிலங்கா இராணுவத்தில் இவ்வாறான கத்தோலிக்கர்கள் இருப்பது மிகக் குறைவாகும்.
நான் முன்னர் சந்தித்திருந்த ஒரு மனிதன் தனது சகோதரன் ஒருவரையும், சகோதரி ஒருவரையும் யுத்தத்தில் இழந்திருந்ததாக என்னிடம் தெரிவித்தார். "நாங்கள் மனித உடலங்களின் மேலால் ஏறிச் செல்ல வேண்டியிருந்தது" என அந்த மனிதர் கூறினார்.
யுத்தம் இடம்பெற்ற இந்தப் பகுதியில் விதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டதன் பின்னரே, இதுவரை காலமும் இடம்பெயர்ந்தோர் முகாங்களில் தங்கியிருந்த மக்கள் திரும்பி வரத்தொடங்கியுள்ளனர். கட்டங்கள் சில எஞ்சியுள்ள போதிலும் கூட அவை மீளக் கட்டவேண்டிய நிலையில் காணப்படுகின்றன.
முன்னரை விட தற்போது இந்த மக்களது வாழ்வு இயல்பானதாக இருப்பது போன்று தெரிகிறது. தமிழ் மீனவர் ஒருவர் நந்திக்கடல் நீரேரியில் மீன்பிடியில் ஈடுபட முடியும். இங்கே இறங்குதுறைமுகம் மற்றும் படகுகள் காணப்படுகின்றன.
2009ல் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மக்கள் நந்திக் கடல்நீரேரியின் ஊடாக சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தப்பிச் சென்றிருந்தனர். நந்திக் கடலின் கரையிலேயே கொல்லப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலமும் காணப்பட்டதாக ஒளிப்படங்கள் வெளிப்படுத்தின.
இந்த நிலத்தில் யுத்தம் இடம்பெற்றதற்கான சாட்சியங்கள் குறைவாகக் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் அறிவுறுத்தல்கள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. இந்தப் பகுதியின் உள்ளுர் மக்களின் மொழியாக காணப்படும் தமிழ் மொழி இவ்வாறான அறிவுறுத்தல்களில் பயன்படுத்தப்படவில்லை. போரின் போது பெருமளவானவற்றை இழந்த இந்த மக்களின் சொந்த மொழியான தமிழ் மொழி இங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்றே கைப்பற்றப்பட்ட புலிகளின் கருவிகள் வைக்கப்பட்டுள்ள இடம், பிரபாகரனின் பதுங்குகுழி மற்றும் சுற்றுலா மையம், நந்திக்கடல் நீரேரி போன்றவற்றிலும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளிலேயே அறிவுறுத்தல்கள் தொங்கவிடப்பட்டுள்ளன.
பிரபாகரனின் பதுங்குகுழியைப் பார்வையிடுவதற்காக பாடசாலை மாணவர்கள், ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சிலர் வந்திருந்தனர். தமிழ் மொழியில் பேசக்கூடிய சிங்கள இராணுவத்தினன் ஒருவன் இவர்களிற்கு வழிகாட்டினான். இது வரவேற்கப்படக் கூடிய விடயமல்ல. அங்கு தமிழ் வார்த்தை ஒன்றைக் கூட காணமுடியவில்லை.
இது தொடர்பாக இரு இடங்களில் நாம் சிறிலங்கா இராணுவத்திடம் வினாவினோம். "தமிழ் மொழியைப் பேசக் கூடிய ஒருவரும் இங்கில்லை. ஆனால் விரைவில் தமிழ் மொழி மூல அறிவுறுத்தல்களை வழங்க நாம் விரும்புகிறோம்" என இராணுவத்தினன் ஒருவன் தெரிவித்தான். இது தொடர்பாக தான் மேலாதிகரிகளிடம் எடுத்துக் கூறியபோதிலும் அவர்கள் இதில் ஆர்வங்காட்டவில்லை என பிறிதொரு இராணுவத்தினன் குறிப்பிட்டான்.
தமிழ் மக்கள் தாம் இரண்டாந்தர மக்களாக நடாத்தப்படுவதாக உணர்ந்ததன் பெறுபேறாகவே யுத்தம் பல பத்தாண்டுகளாக தொடரப்பட்டது. சிறிலங்காத் தீவில் உண்மையான மீளிணக்கப்பாட்டு முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகின்ற போதிலும், இவ்வாறான தமிழ் மொழிப் புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதன் கருத்து என்ன?
சிறிலங்கா அரசாங்கமானது உடனடியாக கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளன. தொழில் வாய்ப்பு பிரச்சினைகளும் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் காணப்படுகின்றன. முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரைச் சந்திக்கின்ற சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. தொழில் வாய்ப்பை பெற முடியாதிருப்பதாகவும், ஆனால் யுத்தம் ஒன்று மீண்டும் தொடர்வதை தான் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் தற்போதும் இராணுவ நிலைகள் அதிகம் காணப்படுகின்றன. சிறிலங்காவின் வடக்கில் பயணிக்கும் போது இதனை உணரமுடிகிறது. அத்துடன் இராணுவத்தால் நிர்வகிக்கப்பட்ட பல உணவகங்கள், கடைகள் போன்றன தற்போது மூடப்பட்டுள்ளன.
தமிழ் புலிகள் மீண்டும் தோன்றி வன்முறை உருவகலாம் என்பது தொடர்பில் தாம் அச்சம் கொண்டுள்ளதாக அரசாங்கம் தற்போதும் கூறிவருகிறது. சிறிலங்கா இராணுவப் புலனாய்வுச் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"மக்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் எங்கே போகிறார்கள்? என்பது தொடர்பாக அறிக்கையிடுமாறு நாம் கேட்கப்பட்டுள்ளோம். ஆனால் பாடசாலை மாணவர்களின் நடவடிக்கைகளை நாம் ஒருபோதும் கண்காணிப்பதில்லை. மக்களின் மதிய உணவு என்ன என்பதைக் கூட நாம் அறிந்து வைத்துள்ளோம்"' என அவ் அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
நன்றி - புதினப்பலகை
0 கருத்துரைகள் :
Post a Comment