Thursday, March 1, 2012

நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே!


இருட்டினில் வாழும் உயிர்களுக்கு அந்த இறைவன்தானே கைவிளக்கு. விடிந்த பின்னால் அந்த விளக்கெதற்கு? எல்லாம் முடிந்த பின்னால் அவன் அருள் எதற்கு?’ இது சினிமாப் பாடல் வரிகள். இந்தப் பாடல் வரிகளின் அர்த்தம் மிகவும் அற்புதமானது. பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள இழப்பின் துயரம் இறைவனைப் பார்த்து நொந்து கொள்கிறது. இந்த நிலையில்தான் தமிழ் மக்களாகிய நாங்களும் இருக்கின்றோம். நம்பியிருந்தவர்கள் போரில் தோற்றுப் போனார்கள். நாம் நம்பியவர்கள் யாரை நம்பினார்களோ அவர்கள் எங்களை ஏமாற்றி விட்டார்கள். இப்போது யாருமற்றவர்கள் நாங்கள். எங்கள் மனங்களில் புதையுண்ட சோகங்கள், துன்பங்கள் உலகில் உள்ள அத்தனை அளவைகளுக்கும் உட்பட்டவையல்ல. வெறும் மனித மொழிகளிலும் அவற்றை வர்ணித்து விட முடியாது.

இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்ற தகவலோடு, அதனை ஆதரிக்கின்ற நாடுகள், எதிர்க்கின்ற நாடுகள், ஜெனிவாத் தீர்மானத்தைக் கண்டித்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நடந்த ஆர்ப்பாட்டப் பேரணிகள், அந்தப் பேரணியை முன்னின்று நடத்திய தமிழ் மைந்தர்கள், ஜெனிவாவுக்கு செல்வதில்லை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவிப்புகள், அந்த அறிவிப்புக்கு அமைச்சர்கள் பசில் ராஜபக்­ஷ, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தெரிவித்த பாராட்டுக்கள், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் ஆகியோரின் மனத்தாங்கல் அறிக்கைகள், அரசுக்கு ஆதரவாக அரச பணியாளர்கள் ஒன்று திரள வேண்டும் என்ற கோஷங்கள், அதனை பிரதேச செயலர்களுக்கு அறிவிக்கும் அரச அதிபர்கள். செய்வதறியாது திணறும் பிரதேச செயலர்கள். இப்படியே எல்லாவற்றையும் மெளனமாகப் பார்த்தபடி எல்லாம் பறிகொடுத்த தமிழ் மக்கள். நிலைமையை எப்படி வர்ணிப்பது? 

சஞ்சய் காந்தியின் இறுதிச்சடங்கில் அன்னை இந்திரா காந்தி அசையாது நிற்கின்றார். கண்ணீர் முட்டிக் கொள்கின்றது. ஆனால், விழிநீராய் சொரியவில்லை. இதுபற்றி விபரித்த ஓர் ஊடகம், ‘புத்திரசோகத்தின் பூகம்பம் அன்னை இந்திரா காந்தியின் உள்ளத்தில் நெருப்பாய் எரிய விழிசொரிய வேண்டிய நீர்கூட அந்த பூகம்ப நெருப்பில் வரண்டுபோனது’ என விபரித்துக் கூறியது. இதுதான் எங்கள் நிலையும். இப்போது யாருமற்றவர்கள் நாங்கள். எங்கள் மனங்களில் புதையுண்ட சோகங்கள், துன்பங்கள் உலகில் உள்ள அத்தனை அளவைகளுக்கும் உட்பட்டவையல்ல. வெறும் மனித மொழிகளிலும் அவற்றை வர்ணித்து விட முடியாது. இப்போதெல்லாம் எங்களுக்கு யாரும் பொருளல்ல. இறைவனை மட்டுமே பார்க்கின்றோம். அவனிடம் அதிகம் பற்றில்லை. ஆனால் ஒன்றை மட்டும் அந்த இறைவனுக்கும் கூறிக் கொள்கிறோம்.

எல்லாம் முடிந்த பின்னால் உன் அருள் தேவைப்படாது என்பதுதான் அது. ஜெனிவாவில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு எதிராக பேரணிகள், ஊர்வலங்கள் நடக்கின்றன. வலிமை இழந்த நாங்கள் கேட்பதெல்லாம் உன் தீர்ப்பு என்ன என்பதுதான்? 

நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே!

நன்றி வலம்புரி 

Reactions:

2 கருத்துரைகள் :

வலம்புரி,
நன்றி இந்த வரியை ஞாபகப்படுத்தியதற்கு..இந்த வரியின் மேல் ஒரு காலத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். எது நடந்தால் என்ன எல்லாவற்றையும் செய்வது நீ தானே என்று கடவுளிடம் சொல்வது தான் இந்த பாடல் வரி. ஈழத்தமிழரை சுற்றியும் வெறும் பிழைகளாகவே நடந்துக் கொண்டிருக்கும் போது நீதியையும் தர்மத்தையும் நிலை நாட்டும் கடவுள் என்னும் (கற்பனை) கருத்தாக்கம் உண்மையில் உள்ளது என்று இன்னமுமா நம்புகிறீர்கள்..
நன்றி
சரவணக்குமார்
சென்னை

உண்மைதான் நண்பரே, திட்டமிட்ட வஞ்சத்தினால் ஒடுக்கப்பட்ட இனம் இது. வேதனைகளையும் வலிகளையும் நெஞ்சில் புதைத்து வாழும் இந்த இனத்தின் ஆற்றாமையின் வெளிப்பாடுதான், தவிர நீதி இல்லாத இந்த உலகில் கடவுள் என்னும் கற்பனையை வேண்டி அல்ல.

Post a Comment