ஈழம் மலர மீண்டும் டெசோ: கி. வீரமணி


தமிழீழத் தனிநாடு உருவாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பாக 1985-ல் செயல்பட்ட "டெசோ" அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் கி. வீரமணி கூறியதாவது:

ஜெனிவாவில் நடைபெற்ற ஜ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலின் கூட்டத்தில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இந்தியா உள்பட 24 உலக நாடுகளின் வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டது. ஒரு வரலாற்றுத் திருப்பம் - நல்ல தொடக்கம்.

உலகறிய செய்த ஜெனிவா தீர்மானம்

இதன் மூலம் இனப்படுகொலை இலங்கை அரசால் நடத்தப்பட்டது; போர்க் குற்றம் நடைபெற்றுள்ளது என்பது உலகறியச் செய்யப்பட்டு விட்டது. இலங்கை அரசு நியமித்த விசாரணைக் குழுவே கூட (LLRC) இலங்கையில் நடைபெற்றுள்ள போர்க் குற்றங்களை மறுக்கவில்லை. என்னென்ன நலத் திட்டங்கள் செய்யப்பட்ட வேண்டும் என்றும் கூறியிருக்கிறது என்றாலும் எந்தவிதமான வளர்ச்சித் திட்டம் நோக்கியும் இலங்கை அரசு பயணிக்கவில்லை என்பது கசப்பான உண்மையே.

மனித உரிமைக் கவுன்சிலின் கண்காணிப்பில் ஈழ தமிழர்களுக்கான நலத் திட்டங்கள். அரசியல் தீர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாலும் இலங்கை அரசின் ஒத்துழைப்பு எந்த அளவு இருக்கும் என்பதுகேள்விக்குறியே!

இலங்கையின் தலைமை நீதிபதி சரத் என்சில்வா முள்வேலி முகாம்களில் முடக்கப்பட்டுக் கிடந்த பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டு என்ன சொன்னார்?

"நமது நாட்டின் சட்டத்தின் மூலம் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழர்களின் துயரங்கள் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரவேபடவில்லை. இலங்கையில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற இரண்டு இனம் இல்லை. ஒரே இனம்தான் என்று நாம் சொல்லிக் கொண்டு இருப்பதெல்லாம் பச்சைப் பொய்கள். இவைகளை நான் பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறேன். இந்நிலை நீடித்தால் விடுதலைப்புலிகளின் போர் மீண்டும் வெடிக்கலாம் . இப்படிச் சொல்வதன் மூலம் இலங்கை அதிகாரிகளால் நான் தண்டிக்கப்படலாம், கவலையில்லை" என்று சிங்களவரான தலைமை நீதிபதியே ஒரு தீர்ப்பு போல சொன்னதற்குப் பிறகு இலங்கை அரசின் கீழ் தமிழர்கள் சுயமரியாதையுடன், உரிமைகளுடன் கூடிய குடிமக்களாக வாழ்ந்திட முடியுமா?

இப்பொழுதும் நிலை என்ன?

இப்பொழுதும் நிலைமை என்ன? இலங்கையின் அதிகார பூர்வமான ஆட்சிமொழி சிங்களம் மட்டுமே - தமிழ் கிடையாது, பவுத்த மதத்தைப் பின்பற்றும் சிங்களவர் ஒருவர் மட்டுமே இலங்கையின் குடியரசு தலைவராக வர முடியும் என்று சட்டமாக்கிவிட்ட பிறகு இலங்கைத் தீவில் சிங்கள இன அரசாட்சியின் கீழ் தமிழர்கள் சமத்துவ நிலையில் வாழ முடியுமா?

பிரிட்டன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட படுகொலைக் காட்சிகளைப் பார்த்த பிறகு இலங்கையில் சிங்களவர்களும், தமிழர்களும் ஒன்றிணைந்து இனியும் வாழ முடியும் என்பதை நினைத்துத்தான் பார்க்க முடியுமா?

ஓர் இனத்தையே அடையாளம் தெரியாமல் முற்றிலும் கண்மூடித்தனமாக அழித்து விட்டு, கொஞ்சம்கூட மனசாட்சியின்றி சொல்லுகிறார் ராஜபக்சே.  The Largest Humanitarian Rescue Operation in Human History - மனிதகுல வரலாற்றில் மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்களைக் காக்கும் மகத்தான நடவடிக்கையை ராஜபக்சே மேற்கொண்டாராம். இத்தகைய கொடூரர்களை நம்பி தமிழ் மக்களை மறுபடியும் ஒப்படைக்க முடியுமா? 180 நாட்களில் முகாம்களில் உள்ளவர்களைக் குடியமர்த்துவோம் என்று உத்தரவாதம் கொடுத்தாரே - மூன்று ஆண்டுகள் ஆகியும் முடிக்கவில்லையே!

இந்தநிலையில் தனியீழம் தவிர வேறு வழியே கிடையாது என்பது திட்டவட்டமான தெளிவாகும்.

1985இல் டெசோ

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டேதான் தனியீழம்தான் இதற்குத் நிரந்தரமான தீர்வு என்பதை முடிவு செய்தோம்!

1985ஆம் ஆண்டில் (மே15) டெசோ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினோம். ( Tamil Elam Supporters Organigation). 

தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன்இ திராவிடர் கழகப் பொதுச் செயலாளராகிய நான், பழ. நெடுமாறன் ஆகியோர் உறுப்பினர்களாகக் கொண்ட அந்த அமைப்பு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாபெரும் எழுச்சியை தமிழர்கள் மத்தியில் உருவாக்கியது.

தமிழ்நாட்டில் இருந்து வந்த தமிழீழத் தலைவர்கள் சந்திரகாசன் (தந்தை செல்வா அவர்களின் மகன்) பாலசிங்கம் ஆகியோர் நாடு கடத்தப்பட்டபோது டெசோ அமைப்பு கொடுத்த அழைப்பினை ஏற்று, தமிழர்கள் ஒருமுகமாகத் திரண்ட நிலையில் 24 மணி நேரத்தில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதே!

டெசோ முன்னின்று நடத்திய இரயில் நிறுத்தப் போராட்டம் (30.8.1985) தமிழ்நாட்டையே வெறிச் சோடச் செய்ததே! 1983 டிசம்பர் 17,18 நாட்களில் மதுரையில் உலகத் தமிழர்களை ஒன்று இணைத்து திராவிடர் கழகம் ஈழ விடுதலை மாநாட்டையே நடத்தியதே!

மீண்டும் தேவை டெசோ!

உலக நாடுகள் இலங்கை சிங்கள அரசின்கீழ் தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று உணர வைக்கப்பட்ட இந்தக் கால கட்டத்தில், டெசோ அமைப்பு மீண்டும் தேவைப்படுகிறது.

அய்ந்து முறை முதலமைச்சராகவும், தி.மு.க. தலைவராகவும் இருக்கக் கூடிய மானமிகு கலைஞர் அவர்கள் தனியீழம்தான் ஒரே தீர்வு என்ற கருத்தினை வெளிப்படுத்தியிருப்பது மிகச் சரியான - இக்கால கட்டத்திற்கு அவசியமான கருத்தும் - முடிவுமாகும். எனவே டெசோவை மீண்டும் உருவாக்கவேண்டும் என்று திராவிடர் கழகம் கருதுகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாகூட ஒரு கட்டத்தில் தனியீழம்தான் தீர்வு என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளார்.

பிரிப்பதைத் தவிர்ப்போம்!

இந்தப் பிரச்சினையில் நம்மைப் பிரிக்கும் வேறு சில கருத்துக்களைத் திணிக்காமல் தனியீழம்தான், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான நிரந்தரத் தீர்வு என்பதில் ஒன்றுபடும் தோழர்களை, அமைப்புகளை ஒருங்கிணைத்து, மீண்டும் டெசோவின் நோக்கத்தினை நிறைவேற்ற வேண்டும் என்று திராவிடர் கழகம் கருதுகிறது.

இந்தக் கால கட்டத்தில் ஆற்றப்பட வேண்டிய முக்கிய கடமையாகவும் இதனைக் கருதுகிறது.

அரசியல் கட்சியில்லாத சமுதாய இயக்கமான திராவிடர் கழகம் இதனை முன்னின்று நடத்துவதால் இதில் அரசியல் பிரச்சினைக்கும் இடம் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாச்சரியங்களை மறந்து, இன்னமும் முள்வேலிக்குள் ஈழத் தமிழர்கள் வாடி வதங்குகிறார்கள்; மன ரீதியாக பாதிக்கப்பட்டு, உரிமை இழந்து நிற்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு ஆதரவு தர வேண்டாமா? என்றார் கி. வீரமணி.


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment