Saturday, March 24, 2012

ஐ.நாவின் தீர்மானத்துக்கு தமிழ் மக்கள் வரவேற்பு; உரிமை மீறல்களை இனித் தடுக்கும் எனக் கருத்து


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கை மீதான தீர்மானம் நிறைவேறியிருப்பது குறித்து தமிழ் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இனிவரும் காலங்களிலாவது இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படாமல் இருப்பதற்கு இந்தத் தீர்மானம் ஊக்கியாக அமையும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

"அமெரிக்கா, இந்தியா ஆகியன இணைந்து தமது நலன்களுக்காக இயற்றியதாக இருந்தாலும் இந்தத் தீர்மானம் தமிழ் மக்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கிறது. இனி வரும் காலங்களிலாவது மனித உரிமை மீறல்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு இது துணைபுரியும் என்று நம்பலாம்'' என்கிறார் கல்வியங்காட்டைச் சேர்ந்த எஸ்.மால்மருதன்.

விவசாயத்தை முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ள 48 வயதான மருதன், பகுதிநேரமாக வர்த்தகத்திலும் ஈடுபடுகிறார். இந்தத் தீர்மானம் போன்றே, இறுதிப் போரின் போது உயிரிழந்தவர்கள் விவரங்களைக் கணக்கெடுக்கவும் காணாமல்போனவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தவும் சர்வதேச அழுத்தங்கள் கொடுக்கப்படவேண்டும் என்றும் அவர் கேட்கின்றார்.

இந்த விடயத்தில் அமெரிக்காவுக்குக் கிடைத்த வெற்றி என்பது தமிழர்களுக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பம் என்று வர்ணிக்கின்றார், பெயர் குறிப்பிட விரும்பாத முல்லைத்தீவு வலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர்.

பொதுவாகத் தமிழ் மக்கள் இந்தத் தீர்மானத்தை வரவேற்றாலும், இறுதிப் போரில் நிகழ்ந்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து அறுதியான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் காணமுடிகின்றது.

"முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய இனப்படுகொலை, இன்று சர்வதேச சமூகம் முன்னிலையில் பார்வைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேறி இருப்பதை அப்படித்தான் பார்க்க வேண்டும். காலம் கடந்தாயினும் சர்வதேசம் அந்தப் படுகொலைகள் பற்றிய உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளது'' என்கிறார் துணுக்காயைச் சேர்ந்த ஆசிரியர். அச்சம் காரணமாக அவரும் தனது பெயரை வெளியிட வேண்டாம் எனக்கேட்டுக்கொண்டார்.

வழக்கமாகப் பேச்சோடு முடிந்துவிடும் விடயங்கள் இந்த முறையே தீர்மானம் வரைக்கும் வந்துள்ளது என்று நிம்மதி அடைகிறார் சீலன். 38 வயதான சீலன் இப்போது கனரக வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். "இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சொல்ல முடியாத துன்பங்களையும் சித்திரவதைகளையும் அனுபவித்திருக்கிறார்கள். இவையெல்லாம் இப்போதுதான் உலகின் கண்களுக்குத் தெரியவந்திருக்கிறது. முதல் தடவையாகத் தமிழர்களின் பிரச்சினையை இந்த உலகம் ஏற்றுக்கொண்டது போல நடந்த குற்றங்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்'' என்கிறார் அவர்.

தமக்கு ஒருபோதும் நீதி கிடைகாதா என்று ஏங்கிக் கிடந்த தமிழர்களுக்கு இந்தத் தீர்மானம் ஒரு மன நிம்மதியை அளித்திருப்பதாகக் கூறுகிறார் கொக்குவிலைச் சேர்ந்த மஞ்சுளா. "ஆனாலும் இத்தகைய தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு மீண்டும் ஓர் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயமும் அடிமனதில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது'' என்றும் அவர் கூறினார்.

இதே போன்று, இந்தத் தீர்மானத்தால் தமிழ் மக்களுக்குப் பயன் ஏதும் இல்லை என்று கூறி நிராகரிக்கும் தமிழர்களும் இருக்கவே செய்கிறார்கள். அமெரிக்கத் தீர்மானம் முழுக்க முழுக்க சுயநலமிக்கது என்கிறார் அருள்நேசரத்தினம் ரவிக்குமார். யாழ்.மாவட்ட தமிழ் பௌத்த சங்கத்தின் தலைவரான அவர், "சீனாவைச் சமாளிப்பதற்காகவே அமெரிக்க இந்தத் தீர்மானத்தை இலங்கை மீது கொண்டு வந்தது'' என்று வாதிடுகிறார்.

"இந்த நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட அமெரிக்காவுக்கு உரிமை இல்லை. ஆசியாவில் அதற்கு இடமில்லை. இங்கு சீனாவே பிரதான சக்தி. அதை அறிந்து ஆசியாவில் தனது மூக்கை நுழைக்க இடம்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கா தமிழர்களின் பிரச்சினையைப் பயன்படுத்திக் கொண்டது. அது தவிர அதற்குத் தமிழர்கள் மேல் எந்த அக்கறையும் இல்லை'' என்றார் அவர்.

எப்படி இருந்தாலும் பெரும்பாலான தமிழர்களின் கருத்துக்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகவே இருக்கின்றன. கடந்த காலங்களைவிட எதிர்காலத்திலாவது இப்படி நடக்காமல் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்தத் தீர்மானம் உதவ வேண்டும் என்று அவர்களில் அதிகமானோர் விரும்புகின்றனர்.

"தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை நல்லது. எதிர்காலத்தில் அது ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரலாம். ஒரு வருட காலத்தினுள் அவர்கள் (அரசு) ஏதாவது செய்துதானே ஆகவேண்டும். குறிப்பாக வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தையாவது குறைக்க வேண்டும். இந்தத் தீர்மானம் இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்த உதவ வேண்டும்'' என்கிறார் திருகோணமலையைச் சேர்ந்த அரச அதிகாரியான பிரணவன்.

உதயன்

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment