நெற்றிக் கண் காட்டினும் குற்றம் குற்றமே


ஜெனிவா தீர்மானத்தை முறியடிக்க - 56 பேர் கொண்ட பெரியதொரு பட்டாளத்தை கொண்டு போனது அரசாங்கம். அவர்களில் தமிழர்கள் பலரும் அடக்கம். பிணங்களின் மேல் நடந்து சென்று சரணடைந்தவர்களும், முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் பிணவாடை வீசிக் கொண்டிருக்க, அங்கே வசந்தம் வீசுவதாக பிரசாரம் செய்தவர்களும் அரசுக்கு ஆதரவு தேட ஓடிப் போனார்கள். இப்படியான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒதுங்கி நின்று கொண்டது. நாங்கள் சொல்ல வேண்டியவர்களுக்கெல்லாம் சொல்லி விட்டோம் என்று கூறித் திருப்திப்பட்டுக் கொண்டது கூட்டமைப்பு. “தற்போதுள்ள நிலையற்ற சூழல் தொடருமேயானால், அது வன்முறைக்கு வித்திடலாம், குடிமக்கள் அதனால் மீண்டும் பாதிக்கப்படலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்சுகிறது. தற்போதைய சூழ்நிலையிலே அமைதி காக்கப்படுவதும், பிரச்சினைகளைத் தவிர்ப்பதும் அவசியமான செயற்பாடுகளென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது. “ இந்தக் காரணங்களால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்பதை தவிர்த்துக் கொண்டதாக, கடந்தவாரம் அதன் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.

ஜெனிவா கூட்டத்துக்குச் செல்வதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவும் சரி, அதற்காக சொல்லப்பட்ட காரணமும் சரி, தமிழர்களில் பலராலும் நியாயமானதாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. தற்போதைய நிலை தொடருமேயானால் வன்முறைகள் தோன்றலாம் என்றும், அதனால் குடிமக்கள் பாதிக்கப்படலாம் என்றும், அமைதி காக்கப்படுவதே அவசியம் என்றும் கூறப்பட்டுள்ள நியாயம் எந்தளவுக்கு சரியானது என்பது சந்தேகம் தான். இன்றைய சூழலில் எந்தவொரு வன்முறைகள் வெடித்தாலும், அது சர்வதேச அளவில் தமிழருக்கு சாதகமாக அமையுமே தவிர, ஒருபோதும் அரசுக்குச் சார்பாக அமையாது. இதை அரசாங்கமும் சரி, சிங்களப் பேரினவாத சக்திகளும் சரி நன்றாகவே புரிந்து கொண்டிருக்கின்றன. 

இன்னொரு 58, 77, அல்லது 83 கலவரத்தை சிங்களப் பேரினவாதிகள் எத்தகைய வடிவத்தில் தோற்றுவித்தாலும், அது தமிழர் தரப்புக்கு தனி ஈழத்தை தங்கத்தட்டில் கொண்டு போய்க் கொடுத்தாகவே அமையும். அதனால் தான் புலிகளின் காலத்தில், சிங்களத் தேசியவாதம் தூண்டிவிடப்பட்ட பல சந்தர்ப்பங்களில் கூட, இனமோதல்கள் பெரிதாக வெடிக்கவில்லை. இந்தநிலையில், இரா.சம்பந்தனின் அறிக்கையில் வன்முறைகள் என்றும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு என்றும், அமைதி காக்கப்படுவது அவசியம் என்றும் கூறப்பட்டிருப்பது காலத்துக்கு ஒவ்வாத- யதார்த்தமற்ற கருத்தாகவே உள்ளது. ஏதோ ஒரு காரணத்துக்காக முடிவை எடுத்து விட்டு, அதை நியாயப்படுத்துவதற்காக- எங்கேயோ தேடிப்பிடித்துச் சொல்லப்பட்டுள்ள நொண்டிச்சாட்டாகவே இது கருதப்படுகிறது. 

இலங்கை இன்று சர்வதேச சமூகத்தினால், உன்னிப்பாக கண்காணிக்கப்படும் நிலையில் உள்ளது. இந்தநிலையில் இனவன்முறைகள் பற்றி சிந்திக்க எந்தத் தரப்பும் தயாரில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா செல்வதால் வன்முறைகள் வெடிக்கும் என்றால், அது எந்தவகையில் என்பது சாதாரண மக்களால் புரிந்து கொள்ள கூடிய விளக்கமாக இல்லை. என்னதான் காரணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொன்னாலும், ஜெனிவாவில் சர்வதேச சமூகத்தின் முன்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை சொல்லுகின்ற வாய்ப்பை அது தவறவிட்டுள்ளது என்பதே உண்மை. இதற்கு எத்தனை நியாயங்களை அவர்கள் கூறினாலும் அது ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருக்க முடியாது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முடிவு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து எடுக்கப்படவில்லை என்பதை சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறிய கருத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு கட்டத்தில் எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் என்று கூறினார்கள். பின்னர், ஒருவருக்கு மட்டும் தெரியாது என்று கூறினார்கள். இன்னொரு கட்டத்தில் சுரேஸ் பிறேமச்சந்திரன் நாடு திரும்பியதும் அதுபற்றி விளக்கமளிக்கப் போவதாக கூறினார் இரா.சம்பந்தன். 

இதிலிருந்து சுரேஸ் பிறேமச்சந்திரனுக்குத் தெரியாமல் தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது உறுதியானது. இந்த முடிவு விடயத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள்ளேயே, ஒற்றுமையில்லாத நிலையில், தமிழ்மக்களுக்கு அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்திருக்கும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது தவறானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையில் எதற்காக இந்த முடிவை எடுத்தது என்பதை வெளிப்படுத்தவில்லை. அதைவிட, செய்தியாளர்கள் துருவித்துருவி கேள்வி எழுப்பினால், “எல்லாவற்றையும் வெளிப்படையாக கூறிக் கொண்டிருக்க முடியாது“ என்று நழுவிக் கொள்ளும் போக்கு இரா.சம்பந்தனிடம் காணப்படுகிறது. அதுபோலவே தான் இதற்கும் பதிலளித்துள்ளார் அவர். அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் நெருக்கமான தொடர்பில் இருக்கும் கூட்டமைப்பு, இந்த முடிவை எடுத்ததற்கு காரணம் யார் என்பதை அல்லது என்ன என்பதை வெளியே சொல்லாத வரை பல்வேறு கேள்விகளும் வதந்திகளும் உலா வரவே செய்யும். 

இலங்கை அரசாங்கம் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எப்படியெல்லாம் பாடுபட்டுக் கொண்டிருக்க, கூட்டமைப்பினால் எப்படி அமைதியாக இருக்க முடிந்தது என்பது கேள்வி தான். 

எல்லாவற்றையும் அமெரிக்கா பார்த்துக் கொள்ளும் என்ற அசட்டைத்தனமா? 

இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் கேள்விகளுக்கு எந்த வகையிலும் நியாயம் கூறவோ தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவோ முடியாது. 

எதிர்காலத் தேர்தல்களில் கூட இது தாக்கத்தை ஏற்படுத்தலாம். 

அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் எச்சரிக்கைக்கு பயந்து கூட்டமைப்பு ஒதுங்கிக் கொண்டதா அல்லது இந்தியாவின் ஆலோசனைப் படி ஒதுங்கிக் கொண்டதா அல்லது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் வேண்டுகோளுக்கு அமைய ஒதுங்கிப் போனதா என்று தான் பலரும் கேள்விகளை எழுப்புகின்றனர். இந்தக் கட்டத்தில் கூட்டமைப்பு சொல்லும் நியாயங்களை எவரும் பெரிதாக எடுத்தாளவில்லை. ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னதாக இரா.சம்பந்தன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைச் சந்திக்கச் சென்றது சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அது தெரிவுக்குழு சார்ந்த சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும், அது கூட்டமைப்பு ஜெனிவா செல்லும் முயற்சிகளைக் கைவிட வைப்பதற்கான சந்திப்பு என்றே பலரும் சந்தேகிக்கின்றனர். 

அரசதரப்பில் மகிந்த ராஜபக்ஸவுடன், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கவும் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் கூட்டமைப்பு சார்பில் இரா.சம்பந்தன் மட்டும் தான் பங்கேற்றிருந்தார். வழக்கமாக, தனிப்பட்ட சந்திப்பு என்றால் உதவியாளர் இன்றியே நடக்கும். ஆனால், இரா.சம்பந்தன் தனியாகச் சென்று சந்தித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளை, தனிப்பட்ட சந்திப்புக்கு அழைத்து விட்டு மேலும் இருவர் ஜனாதிபதியுடன் பங்கேற்ற போது அதற்கு இரா.சம்பந்தன் எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

ஜெனிவா செல்லும் முடிவை முன்னதாகவே கைவிட்டிருந்தால், இந்தச் சந்திப்பை அவர் தவிர்த்திருக்கலாம். 

அது விமர்சனங்களில் இருந்து அவரையும் கூட்டமைப்பையும் காப்பாற்றியிருக்கும். 

கூட்டமைப்பு எந்தக் காரணத்தை முன்வைத்து இதை நியாயப்படுத்தினாலும் அது தமிழ் மக்களின் காதுகளில் ஏறும் போலத் தெரியவில்லை. 

இராஜதந்திர நகர்வுகளில் இரகசியம் பேணுதல் எந்தளவுக்கு முக்கியமோ அதுபோலவே வெளிப்படைத் தன்மையும் முக்கியமானது. நம்பிக்கை உள்ளவரை தான் இரகசியம் முக்கியத்துவம் பெறும். நம்பகத்தன்மை இழக்கப்படும் நிலை தோன்றினால், அங்கே வெளிப்படைத்தன்மை பற்றிய கேள்விகள் எழும். இப்போது வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுமாறு இலங்கை அரசை சர்வதேச சமூகம் கேட்பது போல, கூட்டமைப்பிடமும் தமிழ்மக்கள் கேள்வி கேட்கும் நிலை வந்து விடப் போகிறது. 

புத்திசாலித்தனமும், புத்திசாதுரியமும் தமக்குத் தான் உள்ளது என்று கருதிக் கொள்ளக் கூடாது. கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடித்தால், அது தமக்குத் தாமே சூடு வைத்துக் கொண்டது போலாகி விடும். கடும் நெருக்கடி உருவான நிலையில் தான், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மனிதஉரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கு கடிதம் எழுதினார். அதுகூட முன்னரே திட்டமிட்டிருந்தபடி எழுதப்பட்டதா அல்லது சுமந்திரனின் உருவபொம்மை யாழ்.பல்கலைக்கழகத்தில் தொங்கிய பின்னர் எழுதத் தீர்மானிக்கப்பட்டதா என்ற கேள்வி இருக்கவே செய்கிறது.  எவ்வாறாயினும், இந்தக் கடிதத்தின் மூலம் தமது கறைகளை கழுவிக் கொள்ளலாம் என்று கூட்டமைப்பு கருதுவது தவறானதொரு முடிவாகவே இருக்கும்.

நன்றி இன்போதமிழ்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment