மூன்றாம் உலகப்போருக்கு முன்னுரை - தினமலர் ஆய்வு


ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் வெற்றிபெற்றுள்ளது. இந்த தீர்மானத்தை ஆதரித்த 24 நாடுகள் : அமெரிக்கா, இந்தியா, நார்வே, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கேமரூன், சிலி, கோஸ்டாரிகா, செக் குடியரசு, குவாதமாலா, ஹங்கேரி, லிபியா, மொரீஷியஸ், மெக்ஸிகோ, நைஜீரியா, பெரு, போலந்து, மோல்டோவா குடியரசு, ருமேனியா, உருகுவே. 

எதிர்த்த 15 நாடுகள் : சீனா, ரஷ்யா, வங்கதேசம், காங்கோ, கியூபா, ஈக்வடார், இந்தோனேஷியா, குவைத், மாலத்தீவுகள், மாரிடானா, பிலிப்பைன்ஸ், கத்தார், சவுதி அரேபியா, தாய்லாந்து, உகாண்டா. 

ஓட்டெடுப்பில் பங்கேற்காத 8 நாடுகள் : அங்கோலா, போட்ஸ்வானா, புர்கினோ பாஸோ, டிஜிபோட்டி, ஜோர்டான், கிர்கிஸ்தான், மலேசியா, செனகல். 

இந்தப் பட்டியலில் உள்ள ஆதரவு மற்றும் எதிர்ப்பு அணிகள், இலங்கை தீர்மானத்தின் அடிப்படையிலானவை மட்டுமே என்று நினைக்க வேண்டாம்...

இப்படி உலக நாடுகள் இருதரப்பாகப் பிரிந்து நிற்பதற்கான அடிப்படை, இலங்கைத்தமிழர் பிரச்னையையும் தாண்டிய உலகளாவிய பிரச்னை!

இந்த உலகளாவிய பிரச்னை? : அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் நடக்கும் பனிப்போர்! 

இந்த உலகளாவிய பிரச்னையின் உச்சகட்டம்? : 3வது உலகப் போர் அல்லது உலகின் பல பகுதிகளிலும் சிறு சிறு போர்கள்! 

*** 
ரஷ்யா தலைமையில் சோவியத் யூனியன் 1922ல் உருவானதும், உலக நாடுகள் 2 அணிகளாகப் பிரியத்தொடங்கின : சோவியத் யூனியன் தலைமையில் ஒரு அணி, அமெரிக்கா தலைமையில் இன்னொரு அணி. 

இது தவிர, இந்த இரு அணிகளையும் சாராமல், பிரச்னைகளின் அடிப்படையில் அவ்வப்போது இந்த இரண்டில் ஏதாவது ஒரு அணியை ஆதரித்த சில நாடுகள் தனித்து இயங்கிவந்தன. இப்படிப்பட்ட நாடுகள், 1961ல் ‘அணிசேரா நாடுகள்’ என்ற புது அணியாக மாறின. இந்த 3வது அணியை உருவாக்கியதில் அப்போதைய யூகோஸ்லேவிய அதிபர் டிட்டோ, இந்தியப் பிரதமர் நேரு, எகிப்து அதிபர் நாசர், இந்தோனேஷியப் பிரதமர் சுகர்ணோ, கானா அதிபர் குவாமே என்க்ருமா ஆகியோர் முக்கியப் பங்கு வகித்தனர். 

1991ல் சோவியத் யூனியன் பல நாடுகளாகச் சிதறியது. இதன் விளைவுகள்? 

1. சோவியத் யூனியன் தலைமையிலான அணி சிதறியது; 

2. அமெரிக்கா தலைமையிலான அணி விரிவடைந்து, அமெரிக்காவின் சர்வதேச அரசியல் பொருளாதார முக்கியத்துவம் அதிகரித்தது; 

3. அணிசேரா நாடுகளின் சர்வதேச முக்கியத்துவம் குறைந்தது. 

இந்த 3 விளைவுகளை விட மிக முக்கியமான 4வது விளைவு : சோவியத் யூனியன் சிதறியதால் உலக அரசியல் அரங்கில் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப, சீனா அசுர வேகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தது! 

சீனாவின் இந்தப் பாய்ச்சலை, அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. நெருக்கம், ஒதுங்கல், எதிர்ப்பு என மூன்று விதமான அணுகுமுறைகளையும் பயன்படுத்தி, சீனாவைக் கட்டுப்படுத்தி வைக்க அமெரிக்க கூட்டணி நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. 
சுருக்கமாகச் சொன்னால் - 

அமெரிக்கா, உலகின் நம்பர் 1 நாடு என்ற அந்தஸ்தைத் தக்கவைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது; சீனா , உலகின் நம்பர் 1 நாடு என்ற அந்தஸ்தைக் கைப்பற்ற போராடிக் கொண்டிருக்கிறது. 

இந்த போராட்டங்கள்தான், இந்த இரு நாடுகள் இடையில் நடந்துவரும் பனிப்போரின் பின்னணி. இந்த பனிப்போர், நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நாடுகளில் சாதகங்களையும் பாதகங்களையும் ஏற்படுத்தி வருகின்றன! 

இலங்கை, சீனா, இந்தியா 

இலங்கையில் தமிழர் பகுதியில் பல ஆண்டுகளாகப் புலிகள் ஆட்சி நடந்தது. இலங்கையில் முன்னர் இருந்த அரசுகள், பேச்சுவார்த்தை மூலம் சமரசத் தீர்வை ஏற்படுத்த முயற்சித்து வந்தன. ஆனால், ராஜபக்சே அரசுதான் கொடூரப் போரால் புலிகள் ஆட்சியை அகற்றும் பெயரில், இலங்கைத் தமிழினத்தையே கொன்று குவிக்கும் இனப்படுகொலையில் இறங்கியது. இதற்கு ராஜபக்சேவுக்குத் துணிச்சல் அளித்தது, சீனாவின் பக்கபலம்தான். 

இலங்கையுடன் சீனா திடீர்நெருக்கத்தை வளர்த்தது ஏன்? 

முதல் காரணம் : சீனாவைப் போல், இந்தியாவும் மிகப்பெரிய நாடு. ஆசிய அரசியலில் சீனாவின் ஏகாதிபத்தியம் ஏற்படுவதற்கு, இந்தியா ஒரு தடைக்கல்லாக இருந்துவருகிறது. 

2வது காரணம் : அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கமாக இருந்துவருகிறது. அணிசேரா நாடுகள் அமைப்பில் இந்தியாவுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. இது, சீனாவின் ‘உலகின் நம்பர் 1 நாடு’ லட்சியத்தை நிறைவேற்ற தடைக்கல்லாக இருக்கிறது. 

இந்த தடைக்கல்லை உடைக்க வேண்டுமானால், இந்தியாவை சர்வதேச அரசியலில் கவனம் செலுத்த முடியாத வகையில் தனது உள்நாட்டு விவகாரங்களிலேயேத் திணறடிக்க வேண்டும் என்பதுதான் சீனாவின் ராஜதந்திரம். 

இதைச் செயல்படுத்த- 

வங்கதேசம், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் என இந்தியாவைச் சுற்றியுள்ள நிலப்பகுதி நாடுகளுடன் சீனா நெருக்கத்தை வளர்த்துள்ளது. இதன்மூலம், நிலப்பகுதியில் இந்தியாவைச் சுற்றி சீனா ‘செக்’ வைத்துள்ளது. 

இதுபோல், கடல்பகுதியில் ‘செக்’ வைக்க முடியாமல் சீனா திணறிக் கொண்டிருந்தது. இந்தியாவுக்கு கடல் பகுதியில் ‘செக்’ வைக்க வேண்டுமானால், இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள இலங்கை மற்றும் மாலத்தீவுகளுடன் சீனா நெருங்கியாக வேண்டும். 

அதற்கான ராஜதந்திர திட்டத்தின் முதல்கட்டமாகத்தான், இலங்கையுடன் சீனா நெருங்கியது! 

‘புலிகளின் ஆட்சியை ஒடுக்க உதவுகிறோம். இலங்கையில் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவுகிறோம்; இதற்குப் பதிலாக, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தை நாங்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’ என ராஜபக்சே அரசுடன் சீனா பேசி முடித்தது. 

சீனாவின் இந்த நோக்கம் நிறைவேறினால், இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதை மத்திய அரசு அலட்சியப்படுத்தியது, மிகப்பெரிய தவறு. ‘சீனாவுடன் நெருங்கவேண்டாம், புலிகளுடன் சமரசத் தீர்வு ஏற்படுத்த நாங்கள் உதவுகிறோம்’ என்று இலங்கை அரசிடம் மத்திய அரசு பேசிமுடித்து, அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அந்த ராஜதந்திர அணுகுமுறை மத்திய அரசிடம் இல்லாமல் போனது, இலங்கையில் இனப்படுகொலைக்கு காரணமாக மாறியதோடு, இந்தியப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலையும் வரவழைத்திருக்கிறது. 

சரியான ராஜதந்திர அணுகுமுறைக்குப் பதிலாக, ‘புலிகளை ஒழிக்க நாங்களும் உதவுகிறோம்’ என்ற பத்தாம்பசலித்தனமான அணுகுமுறையை மத்திய அரசு பின்பற்றியது. இது, ராஜபக்சே அரசுக்கு மிகப்பெரிய சாதகமாக மாறியது. சீனாவுடன் நெருங்கிவிடுவோம் என்ற கருத்தை ஏற்படுத்தியபடி இந்தியாவிடம் பல உதவிகளைப் பெற்ற ராஜபக்சே அரசு, தனது படுபயங்கரங்களை தட்டிக்கேட்பார் இல்லாமல் நிறைவேற்றி முடித்தது. இந்தியாவும் இலங்கையின் பக்கம் நின்றதால், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற மேல்நாடுகளால் இலங்கைப் போரில் தலையிட்டு இனப்படுகொலைக்கு முடிவுகட்ட முடியவில்லை. 

போர் முடிந்தபிறகு, இந்தியாவுக்கு ‘பெப்பே’ காட்டிய இலங்கை, மீண்டும் சீனாவுடன் நெருக்கமாகிவிட்டது. இலங்கையின் கடலோரப் பகுதிகள் சீனாவின் கடற்படை தளங்கள் போல் மாறிக் கொண்டிருப்பது, இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகியிருக்கிறது. 

இதுபோல்- 

கடல்பகுதியில் அடுத்த ‘செக்’ நடவடிக்கையையும் சீனா சமீபத்தில் நிறைவேற்றியது... 

இந்தியாவின் மிகநெருங்கிய நட்பு நாடாக, இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்த மாலத்தீவுகள் இருந்துவந்தது. இந்த நாட்டையும், சீனா வளைத்துவிட்டது. அங்கு சமீபத்தில் ஏற்பட்ட புரட்சியில் அதிபர் நசீத் அரசு கவிழ்ந்தது. துணை அதிபராக இருந்த வாகீத், புதிய அதிபராக மாறியிருக்கிறார். இந்தப் புரட்சியின் பின்னணியில் இருந்தது, சீனாதான். 

*** 

இப்படி- 

நிலத்திலும் நீரிலும் ராஜதந்திர வலையால் இந்தியாவைச் சீனா சுற்றிவளைத்துவிட்டது. 

இந்த வலையை அறுத்தெறிய முடியாமல் மத்திய அரசு திணறிவருகிறது. ஆனால், இந்த வலையை அறுக்க, அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த முயற்சிகளில் சில : 

* சீனாவுடன் நெருக்கமாக இருக்கும் மியான்மரை, அமெரிக்க கூட்டணி நாடுகள் மெல்ல மெல்ல வளைத்து வருகின்றன. அங்கு ராணுவ ஆட்சி இருந்தது. கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்த மியான்மர் அரசிடம், ‘ஜனநாயக ஆட்சிமுறையை அமல்படுத்தினால், பொருளாதார நிதியுதவிகள் தாராளமாக வழங்கப்படும்’ என அமெரிக்க கூட்டணி நாடுகள் கூறியுள்ளன. இதை ஏற்ற ராணுவ ஆட்சி, ‘பாதி’ ஜனநாயக அரசை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய அரசில் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 60 சதவீதம், ராணுவத்தால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள் 40 சதவீதம் இடம்பெற்றுள்ளனர். இதையடுத்து, பொருளாதார உதவிகள் வழங்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. 

* பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் நடுவில் உள்ள பகுதி, பலுசிஸ்தான். இந்தப் பகுதிக்கு, 1947 ஆகஸ்ட் 11ல் பிரிட்டிஷ் அரசு விடுதலை வழங்கியது. இந்தியாவுடன் இணைய பலுசிஸ்தான் மன்னர் விருப்பக் கடிதம் எழுதி அப்போதைய பிரதமர் நேருவுக்கு அனுப்பினார். ஆனால், அதை நேரு ஏற்கவில்லை. இதனால், பாகிஸ்தானுடன் அந்த மன்னர் ராணுவக்கூட்டணி ஒப்பந்தம் செய்தார். ஆனால், 1948 மார்ச் 27ல் அதிரடிப் படையெடுப்பால் பலுõசிஸ்தானை பாகிஸ்தான் இணைத்துக் கொண்டது. 

பலுசிஸ்தான் பூர்விக மக்களை ஒடுக்க, அங்கு பழமைவாதத் தீவிரவாதிகளை பாக். அரசு குடியேற்றியிருக்கிறது. அந்த கும்பல்கள்தான், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் மற்றும் அல்கய்தா தீவிரவாதிகளின் மிகப்பெரிய பக்கபலமாகச் செயல்பட்டு வருகின்றனர். மேலும், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள இந்திய எதிர்ப்பு தீவிரவாதிகளுக்கும் இதே கும்பல்கள்தான் ஆயுதப்பயிற்சிகளையும் ஆயுத தளவாடங்களையும் வழங்கிவருகின்றனர். 

சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள தலிபான் மற்றும் அல்கய்தா தீவிரவாதத்துக்கு முடிவுகட்ட, பலுசிஸ்தானைப் பிரித்து ஐநா கட்டுப்பாட்டின் கீழ் தனி நிர்வாகத்தில் வைக்க வேண்டும் என அமெரிக்காவில் சில முயற்சிகள் தொடங்கியுள்ளன. பலுசிஸ்தானைப் பிரித்து தனி நாடாக்க வேண்டும் என அமெரிக்க பார்லி.யில், கடந்த பிப்ரவரியில் குடியரசுக் கட்சி எம்பி டானா ரோராபேக்கர் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். பாக். எதிர்ப்பால் அந்த தீர்மானம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த வேளையும், அந்த தீர்மானம் மீண்டும் உயிர்பெறலாம்! 

*** 

சர்வதேச அரங்கில்... 

சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெறுவதற்காக, ஆப்ரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுடன் சீனா நெருக்கத்தை வளர்த்து வந்தது. ஆப்ரிக்க நாடுகளுடன் வைரச் சுரங்க ஒப்பந்தங்கள், தாது சுரங்க ஒப்பந்தங்களைச் செய்த சீனா, வளைகுடா நாடுகளுடன் எண்ணை இறக்குமதி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி ஒப்பந்தங்களை செய்துள்ளது. இதோடு, ஆப்ரிக்க நாடுகளின் சர்வாதிகார ஆட்சிகளைத் தொடர்வதற்கான ஆயுத தளவாடங்கள் மற்றும் போர் பயிற்சிகளையும் வழங்கிவந்தது. 

சீனாவின் இந்த ராஜதந்திரத்தை, அமெரிக்கக் கூட்டணி நாடுகள் பதிலடி ராஜதந்திர நடவடிக்கைகளால் முறியடித்து வருகின்றன: 

சமீபத்தில் துனிஷியா, எகிப்து, லிபியா ஆகிய நாடுகளில் மக்கள் புரட்சியால் ஆட்சிமாற்றம் நடந்துள்ளது. சிரியாவிலும் புரட்சி உச்சகட்டமாகியிருக்கிறது! 

வடகொரியாவுடன் சீனாவும் ரஷ்யாவும் மிக நெருக்கமாக இருந்துவந்தன. அந்த நாட்டில் கடுமையான உணவுத்தட்டுப்பாடு. இந்தப் பிரச்னையையே, சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் செக் வைக்கும் நடவடிக்கைக்கு அமெரிக்க கூட்டணி நாடுகள் பயன்படுத்தியுள்ளன. 

‘உணவுத்தட்டுப்பாட்டை நீக்க முழு உதவி அளிக்கிறோம். அதற்குப் பதிலாக, தென்கொரியாவுடன் மோதல் போக்கை கைவிட வேண்டும். அணுஆயுதப் போட்டியையும் கைவிட வேண்டும்’ என்று அமெரிக்கக் கூட்டணி நாடுகள் கூறியதை வடகொரியா ஏற்றுள்ளது. 

தைவான் (சீன மக்கள் குடியரசு) மற்றும் ஜப்பானுடன் சீனாவுக்கு ‘பரம்பரை’ பகை உள்ளது. அந்த இரு நாடுகளுடன் அமெரிக்க கூட்டணி நாடுகள் நெருக்கத்தை மிக வேகமாக வளர்த்து வருகின்றன. வியட்னாமுடன் ஒரு காலத்தில் நட்பாக இருந்த சீனா, இப்போது தென்சீனக்கடல் பகுதி உரிமைப் போட்டியால் மோதலைத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில், வியட்னாமை அமெரிக்கக் கூட்டணி நாடுகள் ஆதரித்து வருகின்றன. 

*** 

இழுபறி... புது ‘செக்’ 

அமெரிக்கக் கூட்டணி நாடுகளின் அதிரடிகளால், பல பகுதிகளிலும் சீனாவின் ஆதிக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. 
இதன் அடுத்தகட்டமாகத்தான், ஐநா மனிதஉரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது... 

முதலில் தாக்கல் செய்யப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தில், ‘இலங்கைத் தமிழர்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளில், சர்வதேச அறிவுரை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இலங்கை அரசு ஏற்க வேண்டும்’ என்று திட்டவட்ட நடவடிக்கை குறிப்பிடப்பட்டிருந்தது. 

இது திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டிருந்தால், இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கையையும், இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையையும் மிக வேகமாகச் செயல்படுத்த அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கும். 
ஆனால், அதைச் செயல்படுத்த இலங்கையும் சீனாவும் அனுமதிக்காமல் முரண்டு பிடித்திருக்கும். அதன் விளைவாக, ஐநா அனுமதியுடன் இலங்கையில் அமெரிக்க கூட்டணி நாடுகளின் அதிரடி நடவடிக்கை பாய்ந்திருக்கும்! 

இந்த அதிரடியை, தீர்மானத்தில் இந்தியா இணைத்த ‘திருத்தம்’, தற்காலிகமாகத் தள்ளிவைத்துள்ளது... 

அமெரிக்காவின் தீர்மானத்தில், ‘மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளை இலங்கை அரசின் ஒப்புதல் பெற்று செயல்படுத்த வேண்டும்’ என ஒரு திருத்தத்தை இந்தியா கொண்டுவந்தது. இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காக, இந்தத் திருத்தத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது. 

இந்தத் தீர்மானத்தின் விளைவு..? 

இலங்கைத் தமிழரின் மனிதஉரிமை நடவடிக்கைகள் தொடர்பான ஐநா மனிதஉரிமைக் கவுன்சிலின் பரிந்துரைகளை இலங்கை ஏற்கும் என எதிர்பார்க்க முடியாது. ‘எங்கள் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்றுதான் தீர்மானத்திலேயே கூறப்பட்டுள்ளது’ என்று இலங்கை முரண்டு பிடிக்கும். அதை சீனாவும் ஆதரிக்கும். 

எத்தனை காலத்துக்குத்தான், அந்த ‘இழுபறி’ தொடர முடியும்?! எனவே, ஐநாவில் அமெரிக்க கூட்டணி நாடுகள் இன்னொரு அதிரடி தீர்மானத்தைக் கொண்டுவந்து, இலங்கைக்கும் சீனாவுக்கும் அதிரடி ‘செக்’ வைக்கும். இலங்கையின் திரிகோணமலை பகுதியில் அமெரிக்க கூட்டுப்படைகள் அதிரடியாக முகாம் அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! 

அந்த அதிரடி ‘செக்’ நடவடிக்கையின் பக்கவிளைவாக, உலகின் பல பகுதிகளிலும், அமெரிக்க கூட்டணிக்கும், சீனா தரப்புக்கும் சிறுசிறு போர்கள் வெடிக்கும். இந்த சிறுசிறு போர்கள் பெரிதாக வளர்ந்தால், 3வது உலகப் போரே வெடிக்கலாம். 

2வது உலகப்போருக்கு முன்பு இருந்த அதே பதட்ட சூழ்நிலை இப்போதும் தொடங்கியுள்ளது. அன்று, ஜெர்மனியின் மேலாதிக்க ஆசை; இன்று, சீனாவின் மேலாதிக்க ஆசை என்பது மட்டுமே வித்தியாசம். 

2வது உலகப்போரின் விளைவாக, பல நாடுகள் காலனிஆதிக்க ஆட்சிகளில் இருந்து விடுதலை பெற்று, இந்தியா, பாகிஸ்தான் என பல புதிய நாடுகள் பிறந்தன. இப்போதைய பதட்ட சூழல் உச்சகட்டத்தை எட்டினால், அதுபோல் பல புதிய நாடுகள் பிறக்கலாம்! 

விளைவு எப்படி அமைந்தாலும் இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்பது மட்டும் உறுதி!
தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமலர் 25.3.2012 ஞாயிற்றுக்கிழமை இதழில் வெளியான இக்கட்டுரை நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது
Share on Google Plus

About அகிலன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment