ஜெனீவா அமர்வில் தமிழ்க் கூட்டமைப்பு பங்கேற்காததற்கான காரணம் என்ன? யாழ்.நகரில் சுரேஷ் விளக்கம்


இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் தமிழ்க் கூட்டமைப்பு பங்குபற்றுவதில்லையென எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் செயலாளரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் விளக்கமளித்திருக்கிறார். யாழ்.நகரில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நீண்ட விளக்கமொன்றையும் அவர் அளித்தார். இந்த  விளக்கத்தை அளிப்பதற்கான நோக்கம் தமிழ்க் கூட்டமைப்பை பலவீனப்படுத்தவோ அல்லது மற்றவர்கள் மீது குற்றம்  சுமத்துவதற்கோ அல்ல என்றும் அழுத்தியுரைத்திருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்ததாவது

ஜெனீவா மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாமையை இட்டு மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்கள் உருவாகியுள்ளன. இந்த விமர்சனங்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஓர் அங்கமான தமிழரசுக்கட்சி தனது நியாயங்களை வலியுறுத்தி வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவன் என்ற வகையில் சில விடயங்களை மக்களின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டியது எனது கடமை. மாசி மாதத்தின் முதல் வாரத்தில் நடந்த பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஜெனீவா மாநாட்டில் பங்குபற்ற வேண்டும் என்பதே பல பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது. இந் நிலையில் மீண்டும் ஓர் கூட்டத்தைக் கூடி ஆய்வு செய்யாமல், மாசி 25 ம்  திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா மாநாட்டில் கலந்துகொள்ளாது என சம்பந்தன் கையெழுத்திட்டு ஓர் அறிக்கை வெளியிட்டார். அறிக்கை வெளியிடுகின்ற சமயம் நானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களான செல்வம்அடைக்கலநாதன் ,மாவை சேனாதிராசா ஆகியோர் இந்தியாவிலும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதிகளிலும் இருந்தோம். அறிக்கை எழுதிய பின்னர் சுமந்திரன் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அதனை வாசித்தார். அவ்வறிக்கையானது ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மைக் கருத்துக்கு முரண்பட்டதாக இருந்ததால் உடனடியாக வெளியிடவேண்டாம் எனவும் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து மீண்டும் ஒரு முறை அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். செல்வம் அடைக்கலநாதனை தொடர்பு கொண்டபோது, அவர் இவ்வறிக்கை சம்பந்தமாக எதனையும் அறிந்திருக்கவில்லை என்பதால், என்னுடன் சுமந்திரன் பேசிய விடயங்களை அவருக்கு எடுத்துரைத்தேன். செல்வம்அடைக்கலநாதன் உடனடியாக சுமந்திரனைத் தொடர்புகொண்டு பத்திரிகை அறிக்கை வெளியிடவேண்டாம் எனவும், நாங்கள் கலந்து பேசி ஓர் முடிவெடுக்கும்வரை பொறுமையாக இருக்கும்படியும் கேட்டுக் கொண்டதாக என்னிடம் கூறினார். திருச்சியில் இருந்த மாவைசேனாதிராசாவுக்கு இது பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பதை பின்னர் அவர் மூலம் தெரிந்து கொண்டேன்.

ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இத் தகவல் சுமந்திரன் மூலம் தொலைபேசியூடாக தெரிவிக்கப்பட்டது. இறுதியில் பத்திரிகை அறிக்கை வெளியிடவேண்டாம் என்ற எமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, மாசி 25ஆம் திகதி அவ் அறிக்கை வெளியிடப்பட்டது. 

இப் பத்திரிகை அறிக்கையில், ஜெனீவா மாநாட்டில் நாங்கள் கலந்துகொண்டால் வன்முறை, கலவரங்கள் போன்றவை உருவாகலாம் என்பதால் அதனைத் தவிர்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
 
இவ்வறிக்கையை அதிக உச்சபட்சத்துக்கு அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. அமைச்சர்கள் பலரும் இதனை வரவேற்றார்கள். ஜெனீவாவில் இருந்த மகிந்த சமரசிங்கவும் இதனை வரவேற்றார். கூட்டமைப்பின் முடிவை ஏனைய எதிர்க்கட்சிகளும் பின்பற்ற வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டது. திருவாளர்கள் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரது செய்திகளுக்கு அரச ஊடகங்களில் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று கூறப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசுடன் இணங்கிப் போகின்றது என்ற ஓர் தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டது.
அதே சமயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பட்ட கருத்துக்கள் ஏற்படத் தொடங்கின. ஊடகங்களிலும் முரண்பட்ட செய்திகள் வரத் தொடங்கின. தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேல் வைத்திருந்த நம்பிக்கை மோசமாக பலவீனப்பட்டது. அறிக்கை வெளியிடுமுன்பு கூட்ட முடியாத கூட்டமைப்பு எம்.பி.க்களின் கூட்டம் முரண்பாடுகள் தோற்றம் பெற்றபின் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் வற்புறுத்தலால் கூட்டப்பட்டது.

ஆனால் அக் கூட்டத்திலும் சர்வதேச சமூகத்தின் ஆலோசனைக்கிணங்க ஜெனீவா போவதில்லை என்றே சம்பந்தனால் வற்புறுத்தப்பட்டது,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒற்றுமையுடன் முன்னகர்த்திச் செல்ல வேண்டுமாயின் இம்முடிவினை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.

ஆனால் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பணியாற்றி வந்த புலம்பெயர் தமிழ் மக்கள் எமது பிரசன்னம் தேவை என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திய வண்ணம் இருந்தார்கள். ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் சம்பந்தமாக முன்வைக்கப்படும் கருத்துகள் தொடர்பாகவும் சில விளக்கங்களைக் கூறவேண்டியுள்ளது.

ஜெனீவாவின் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் வருடத்தில் மார்ச், யூன், செப்ரம்பர் என 3 முறை கூடுவதுண்டு. இதில் அரசாங்கங்களும், பதிவு செய்யப்பட்ட மனித உரிமை அமைப்புக்களும், ஏனைய தொண்டு நிறுவனங்களும் கலந்து கொள்வதுதான் சம்பிரதாயபூர்வமானது. இங்கு பல்வேறுபட்ட நாடுகளுடைய, இனங்களுடைய, மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் போன்ற பல பிரச்சினைகள் முன்வைக்கப்படுகின்றன. தீர்மானங்களைப் பொறுத்து இவை நிறைவேற்றப்பட வேண்டுமாக இருந்தால் வாக்குரிமை பெற்ற அரைவாசிக்கு மேற்பட்ட நாடுகள் அத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
 
இத் தீர்மானங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு பல்வேறுபட்ட வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அரசுகள், பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு இது இலகுவானது. ஆனால், அரசியல் கட்சி ஒன்றைப் பொறுத்தவரையில் அவர்கள் ஏதாவது ஒரு தொண்டு நிறுவனம் ஒன்றின் ஊடாகவே சென்று இப்பிரச்சாரத்தினை மேற்கொள்ள முடியும். ஐ.நா. மனித உரிமைகள் கட்டிடத் தொகுதிக்குள்ளும் வெளியிலும் இப்பிரசாரங்களை மேற்கொள்ள முடியும். எமக்காதரவான நாடொன்றின் ஊடாக ஏனைய நாடுகளை ஒருங்கிணைத்து எமது கருத்துகளைக் கூறமுடியும். தனிப்பட்ட நாட்டுப் பிரதிநிதிகளை சந்தித்து எமது கருத்துகளைக் கூறமுடியும்.

ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. எமக்கு அழைப்பில்லை, ஆகவே போகவில்லை என்பது அர்த்தமற்ற விளக்கம். எமக்கு தேவை இருந்தால் அதற்கான வழி முறைகளைப் பாவித்து அங்கு சென்று, எமக்கான பிரசாரப் பணிகளை நாம் மேற்கொள்ள முடியும். இதற்கு யாரிடமும் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை.

அதேபோன்று எமது இச் செயற்பாடானது இலங்கையின் இறையாண்மைக்கு எதிரான ஓர் விடயமுமல்ல. நாம் ஓர் அரசின் மனித உரிமை மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக நியாயம் கேட்கப் போகின்றோமே தவிர, இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக பேசுவதற்கு நாம் அங்கு போகவில்லை. எனவே ஜெனீவா போனால் அது இறையாண்மைக்கு எதிரானது. அதனால் பதவி போய்விடும் என்று கற்பனை பண்ணுவதும் அர்த்தமில்லாதது. ஜே.வி.பி வன்முறை உச்ச கட்டத்தில் இருந்த 1988, 89காலப் பகுதிகளில் இப்போதைய ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷ அமைச்சர்; வாசுதேவ நாணயக்கார சிங்கள மக்களின் மனித உரிமைகளை காப்பாற்றக் கோரி இதே ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டனர். அன்று அவர்கள் அரசைச் சார்ந்தவர்கள் அல்ல. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஓர் கூட்டமைப்பு. அதனால்தான் மக்கள் எம்மை அமோகமாக வெற்றி கொள்ள வைத்தனர். அப்படி நாம் வெற்றி பெற்றதால்தான் நாம் அமெரிக்காவாலும், இந்தியாவாலும் அங்கீகரிக்கப்பட்டோம். நாம் அங்கீகரிக்கப்பட்டு விட்டோம். எமது அந்தஸ்து  உயர்ந்துவிட்டது. ஆகவே நாம் வீதிகளில் நின்றோ அல்லது திண்ணைகளில் நின்றோ பிரசாரம் செய்ய முடியாதென்று யாராவது கூறினால் அதுவும் ஓர் பிழையான வாதமே. எமது மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் வரை நாம் சாத்தியமான வழிமுறைகள் எல்லாவற்றையும் பயன்படுத்தி எமது தரப்பு நியாயங்களை எடுத்துச் செல்லவேண்டும்.

நான் இந்த நீண்ட அறிக்கையை வெளியிடுவதன் நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்கோ அல்லது மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்கோ அல்ல. மாறாக எந்த மக்களால் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டோமோ அந்த மக்கள் உண்மைகளைப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே. அவ்வாறு உண்மைகளைப் புரிந்து கொள்ளும்போது மாத்திரம்தான், மக்கள் ஏனையோரைத் தடம்மாறாது சரியான பாதையில் பயணிக்க வைக்க உதவலாம்.

ஜெனீவா மனிதவுரிமை அமர்வுகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாத நிலையில் தமிழ் மக்கள் ஏமாற்றமும், விரக்தியும் அடைந்திருக்கின்றனர். இதுகுறித்து தங்கள் நிலைப்பாடு என்ன? என வினவியபோது பதிலளித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்தேசியக் கூட்டமைப்பு தனது நடவடிக்கைகளை வெளிப்படையாக, மக்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க கூடிய வகையிலும் முன்னெடுக்கவேண்டும். முளுமையாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூட்டமைப்பாக இருக்கவேண்டும், அதிலுள்ள ஒரு கட்சி மட்டும் விரும்பிய முடிவுகளை எடுத்துச் செயற்படுவதென்பது தவறான விடயமாகும் என்பதுடன், தவறான வழிக்கும் இட்டுச் செல்லும், இந்த நிலையில் மக்களுக்கான கூட்டுத்தலைமை என்பது அவசியம், அதன் அவசியத்தை கூட்டமைப்பிலுள்ளவர்கள் உணரவேண்டும் அவ்வகையான கூட்டுத்தலைமை உருவாக்கப்பட்டு கலந்துரையாடல் மூலம் வரக்கூடிய முடிவுகள்தான் ஆரோக்கியமானதும் தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடியதுமான முடிவு, எதிர்காலத்தில் சகல விடயங்களிலும் கலந்துபேசி மக்கள் மனதில் நம்பிக்கையினை ஏற்படுத்தலாம், இவ்வளவு இழப்புகளுக்குப் பின்னரும், தமிழ் மக்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவமளித்து இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படவேண்டும். யுத்தத்தின் பின்னர் ஜெனீவாவில் மனிதவுரிமைகள் அமர்வு 11தடவைகள் கூடியிருக்கின்றது. அப்போதெல்லாம் கேட்காதவர்கள் இப்போது ஏன் கேட்கிறார்க. என சிலர் கேட்கிறார்களே? எனக் கேட்டதற்கு. ஜெனீவா கூட்டத்தொடர் ஒவ்வொன்றிலும் கலந்து கொள்ளத்தேவையில்லை. ஆனால் இம்முறை தமிழ் மக்கள் இனப்பிரச்சினை தொடர்பான தீர்மானம் அங்கு வருகின்றது. அதை ஒரு நாடு கொண்டு வருகின்றது. எனவே நமது பிரச்சினைகளை சொல்லக் கூடியவர்கள் நாம்தான். எனவேதான் நாம் போகவேண்டும் என மக்கள் கேட்கிறார்கள். மேலும் கடந்தமுறையும் இவ்வாறான ஒன்று வரவிருந்தது, நாம்போயிருக்கவேண்டும், ஆனால் போகவில்லை, அழைப்பும் வந்திருந்தது. ஜெனீவாவிற்கு இம்முறை கலந்து கொள்ளவேண்டும் என பல பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பினர், வெளியேயும் சொன்னார்கள். மக்களிடம் நம்பிக்கையும் ஏற்பட்டது. எனவே இதைவிடுத்து 11தடவை கூடியது 13தடவை கூடியது என்பதெல்லாம் தேவையற்றது என்று தெரிவித்தார்.

மேலும், ஜெனீவா மனிதவுரிமைகள் அமர்வு தொடர்பாக கூட்டமைப்பு 47நாடுகளிற்கு எழுதியிருந்த கடிதம் அதனுள் உள்ள கட்சிகளுடைய தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டதா? எனக்கேட்தற்கு இல்லை என அவர் பதிலளித்தார்.

தொடர்ந்து, ஆணைக்குழுவின் அறிக்கை காலத்திற்குக் காலம் வந்த அரசாங்கங்கள் கொடுத்த வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே அதனை நிறைவேற்றுவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் என 47நாடுகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே அதுகுறித்து தங்களுடைய நிலைப்பாடு என்ன எனக்கேட்டதற்கு. அது முற்றிலும் தப்பானதொரு விடயம் அப்படியானதொரு விடயம் ஆணைக்குழு அறிக்கையில் கிடையாது, இராணுவ அகற்றம், குடியேற்றத்தடை போன்ற தமிழரை ஓரளவு திருப்திப்படுத்தலாம் என்ற முயற்சி மட்டும்தான் ஆணைக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது, இதுபோன்று ஆணைக்குழு அறிக்கையில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனவும் அதற்கான வழிமுறைகள் சிலவும் சொல்லப்பட்டுள்ளன. அது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல, பேச்சுவார்த்தை 3ம் தரப்பு மத்தியஸ்த்தத்துடன் இடம்பெறும்போதே தமிழ்மக்களின் தேசியப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் இதனைவிட ஆணைக்குழு அறிக்கையில் எதுவும் கிடையாது. அவ்வாறான கருத்துகள் அர்த்தமற்றவையெனவும் அவர் கூறினார்.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment