மனித உரிமை கூட்டத்தொடரில் இந்தியா தனக்கான நல்வாய்ப்பை தவறவிடுமா?

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடான இந்தியா தற்போது முன்வைக்கப்படவுள்ள பிரேரனைக்கு சார்பாக வாக்களித்து தனது இருப்பை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான நல்வாய்ப்பை இந்தியா தவறவிடக் கூடாது. இவ்வாறு இந்தியாவில் இருந்து வெளிவரும்  Indian Express ஆங்கில நாளேட்டில் Maja Daruwala* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். 


தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இந்தியாவானது தனது தலைமைத்துவத்தை மிகச் சரியாக, உறுதியாகப் பிரயோகிப்பதுடன், சிறிலங்கா விவகாரம் தொடர்பில் உறுதியான தீர்வையும் நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும்.

மனித உரிமை விவகாரம் தொடர்பில் இந்தியாவானது அனைத்துலக மட்டத்தில் துணிச்சல்மிக்க, மிக நம்பிக்கையான நிலைப்பாட்டை எடுப்பதற்கான தகுந்த நேரம் வந்துவிட்டது. 
 
அனைத்துலக விவகாரங்களில் இந்தியாவின் தலையீடு செய்வதானது அதிகரித்து வரும் நிலையில், சிறிலங்காவின் மனித உரிமை விவகாரங்களிலும் இந்தியா தனது தலைமைத்துவ அதிகாரத்தைக் கொண்டு கோரிக்கையை விடுக்கவேண்டும். 

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவானது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தனது வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் முன்னேற்றத்தைக் காண்பிப்பதற்கான சிறந்த நல்வாய்ப்பைக் கொண்டுள்ளது. ஆகவே இந்தியாவானது இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள பிரேரனையை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். 

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக 2009 ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அவசர கூட்டத் தொடர் ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத் தொடரில், இந்தியாவானது, சிறிலங்கா மீதான அனைத்துலக குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதன் மீதான அனைத்துலக விசாரணைகளிலிருந்து சிறிலங்காவைப் பாதுகாத்தது. 

ஆனால் இக்கூட்டத் தொடர் இடம்பெற்று மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், சிறிலங்காவானது தனது நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட யுத்த மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான மீறல்களை வெளிக்கொணர்வதில் மிகச் சிறியளவிலான நகர்வை எடுத்துள்ள நிலையிலேயே தற்போது மீண்டும் அடுத்த கூட்டத் தொடர் இடம்பெறுகின்றது.

சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் போதுமான அளவு பொறுப்பைக் கூறவில்லை என்பதையும், அது தொடர்பில் அனைத்துலக சட்டங்களை மீறியுள்ளதுடன், சுயாதீன அனைத்துலக விசாரணை ஒன்றுக்கு சிறிலங்கா முகங்கொடுக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டும் விதமாகவே மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான பிரேரனை ஒன்று முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புக் கூறுதல் தொடர்பில் சிறிலங்காவானது செயற்திட்டம் ஒன்றை வரைந்து அதனை மனித உரிமைகள் பேரவையிடம் அறிக்கையிடுவதுடன் அதனை செயற்படுத்த வேண்டும் எனவும் இப்பிரேரனை மூலம் சிறிலங்காவிடம் கோரிக்கை விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேறு வழியில் கூறுவதானால், சிறிலங்காவானது தனது நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதில் மேலும் பல சிறந்த நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறான நகர்வுகளை உலக நாடுகள் கண்காணிக்கும். 

கெடுவிளைவாக, தற்போது சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ள பிரேரனையானது உண்மையில் போதியளவானதாக இருக்கவில்லை. சிறிலங்காவில் அனைத்துலக விசாரணைகள்  மிக வேகமாக மேற்கொள்ளப்படவேண்டும் என இப்பிரேரனை மூலம் அழைப்பு விடுக்கப்படாமையானது அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. 

இந்நிலையில், இனிவருங் காலங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் எடுக்கப்படும் முயற்சிகளில் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த கால மீறல்கள் தொடர்பில் நீதி, பொறுப்பளித்தல், அனைத்துலக விசாரணை போன்றவை உள்ளடக்கப்படவேண்டும். ஆகவே சிறிலங்காவுக்கு எதிராக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இப்பிரேரணைக்கு சார்பாக வாக்களிக்க வேண்டும்.

இது சிறிலங்கா விவகாரம் தொடர்பில் சரியான திசை நோக்கி நகர்வதை எடுத்துக் காட்டும். ஆனால் சிறிலங்கா விவகாரத்தில் உடனடியாக தேவைப்படும் நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமிடத்தே அது இறுதியான, உறுதியான நகர்வாக இருக்க முடியும். 
 
இந்தியாவானது சிறிலங்காவிடம் தனிப்பட்ட ரீதியாகவோ அல்லது வெளிப்படையாகவோ அதன் மீறல் விவகாரங்களில் எதனையும் கேட்டுக் கொள்வதற்கேற்ற முறையில் இப்பிரேரனை தயாரிக்கப்படவில்லை என்பதே இந்தியாவின் கருத்தாகும். இந்தியாவானது தனது பிராந்திய நலனையே அதிகம் கருத்திற் கொள்கின்றது. ஆனால் மிக உறுதியான, நல் ஆட்சியை நடாத்துகின்ற, பிராந்திய சக்தியாக சிறிலங்காவின் அயல்நாடாக இந்தியாவே உள்ளது. 

சிறிலங்கா தொடர்பில் இந்தியாவானது இரு விடயங்கள் தொடர்பாகக் கவனத்திற் கொண்டுள்ளது. அதாவது சிறிலங்காவில் பொருளாதார மற்றும் நிதி முதலீடுகளை சீனா மேற்கொண்டுள்ள இந்திலையில், சிறிலங்கா மீதான தனது செல்வாக்கை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இந்தியாவுக்கு உண்டு. அதேவேளையில், இந்தியாவில் 70 மில்லியனுக்கும் மேற்பட்ட சனத்தொகையைக் கொண்டுள்ள தமிழ்நாடானது சிறிலங்காத் தமிழர்களின் நெருங்கிய இரத்த உறவுகளாகக் காணப்படுகின்றனர். இதனால் சிறிலங்காத் தமிழர்களின் அரசியல் அவாக்களை இந்தியாவானது தட்டிக்கழித்து விடமுடியாது. இதனையும் இந்தியா கவனத்திலெடுக்க வேண்டியுள்ளது. 
 
சிறிலங்கா பொறுப்புக் கூற வேண்டும் என்பதற்கு ஆதரவாக இந்தியாவானது தீர்மானம் எடுத்துக் கொள்ளுமானால் மேற்கூறிய இரு தரப்புக்களையும் சமப்படுத்த முடியும். நீண்ட கால அடிப்படையில் நோக்கில், குறிப்பாக உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவானது, அனைத்துலக மட்டத்தில் சிறந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளுமிடத்தில் சிறிலங்காவில் தற்போது காலூன்றியுள்ள சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்கான நல்வாய்ப்பையும் பெற்றுக் கொள்ளும். குறுகிய கால அடிப்படையில் நோக்கில், சிறிலங்கா விவகாரத்தில் சாதகமான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துக் கொள்ளுமிடத்தில் தனது சொந்த மக்களின் கோரிக்கையை நிறைவுசெய்து கொள்ள முடியும். 

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவினர், யுத்த கால மீறல்கள் தொடர்பிலான உண்மைகளைக் கண்டறிந்து கொண்டதுடன், உள்நாட்டு யுத்தத்தில் பங்குகொண்ட சிறிலங்காப் படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினரும் மீறல்களை மேற்கொண்டிருந்தனர் என்பதை ஆதாரப்படுத்தி 2011ல் அறிக்கை வெளியிட்டிருந்தனர். 

இந்த யுத்தத்தின் போது 40,000 வரையான ஆண்கள், பெண்கள், சிறார்கள் என பலதரப்பட்டவர்களும் கொல்லப்பட்டதாக வல்லுனர் குழுவினர் ஆதாரப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் சிறிலங்காவில் அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இவ் வல்லுனர் குழுவினர் கோரிக்கை விடுத்திருந்தனர், ஆனால் இக்குற்றச்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் ஏற்க மறுத்ததுடன், தான் சொந்தப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி விசாரணை மேற்கொள்ளுமாறு காத்திருக்குமாறு அனைத்தலக சமூகத்திடம் தெரிவித்தது. இதன் பின்னரே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவால், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. 

இவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு 18 மாதங்களின் பின்னர் தன்னால் கண்டறியப்பட்ட பாடங்கள் தொடர்பிலான அறிக்கையை சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பித்தது. இவ் அறிக்கையில் சில முக்கிய பரிந்துரைகள் குறிப்பிடப்பட்ட போதிலும், யுத்த காலத்தில் இடம்பெற்ற மிக மோசமான சில மீறல்களை இது கவனத்திற் கொள்ளத் தவறியுள்ளது. 

இராஜதந்திர ரீதியில் நோக்கில், இந்தியாவின் பதிலானது மறைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் சிறிலங்கா விவகாரம் தொடர்பான செய்தி தெளிவாக உள்ளது. அதாவது சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான சுயாதீன அனைத்துலக பொறிமுறை ஒன்று காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட வேண்டியிருக்கும். இது விடயத்தில் சிறிலங்கா அரசாங்கமானது மேலும் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். 

கடந்த ஜனவரியில் சிறிலங்கா அரசாங்கமானது, தனது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான நீதிமன்றம் ஒன்றை அமைத்திருப்பதாக அறிவித்தது. இந்நீதிமன்றுக்கான உறுப்பினர்களை வன்னி யுத்த களத்தில் முன்னர் கட்டளைத் தளபதியாக செயலாற்றிய ஒருவரே நியமித்துள்ளார். ஆனால் இதே கட்டளைத் தளபதியின் கண்காணிப்பின் கீழேயே அதே வன்னியில் சிறிலங்காப் பாதுகாப்புப் படையினரால் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்களும் சாட்சியங்களும் உண்டு. 

இந்நிலையில், இந்தியா உட்பட உலக நாடுகள் சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஆதரவாக இருக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. 
 
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அண்மையில் ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை நிறுத்தியிருந்ததுடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் பிரேரனையில் சிறிலங்காவுக்கு சார்பாக வாக்களிக்குமாறு சில உலக நாடுகளிடம் கோரிக்கை விடுக்க முயற்சி செய்தும் அந்த முயற்சிகள் இடையில் கைவிடப்பட்டதானது, சிறிலங்காவானது தனது நாட்டில் இடம்பெற்ற யுத்த கால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதையே  தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. 

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடான இந்தியா தற்போது முன்வைக்கப்படவுள்ள பிரேரனைக்கு சார்பாக வாக்களித்து தனது இருப்பை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான நல்வாய்ப்பை இந்தியா தவறவிடக் கூடாது. 

*The writer is director of the Commonwealth Human Rights Initiative.

புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment