Friday, March 2, 2012

ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் ஒரு கண்டன தீர்மானமே தவிர, தண்டனை விதிப்பதற்கான தீர்மானம் அல்ல


போரின்போது இடம்பெற்ற குற்றங்கள், மீறல்கள் குறித்து நம்பகமான- சுதந்திரமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழர் தரப்பினால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கு கனடா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பல நாடுகளின் ஆதரவு இருந்தாலும், சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு போதிய ஆதரவு இன்னும் கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதாயின், அதற்கு இன்னும் நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும். போர் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்தே, இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை ஜெனிவாவில் கொண்டு வரும் முயற்சிகள் தீவிரம் பெற்றுள்ளன. இந்தத் தீர்மானமானது இலங்கையை சர்வதேச விசாரணைப் பொறிக்குள் தள்ளி விடும் என்றோ, அரச மற்றும் இராணுவத் தலைவர்கள் போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் நிலை உருவாகும் என்றோ எவரும் தவறாகக் கற்பனை செய்யக் கூடாது. ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் முதலில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அதுவும் இது ஒரு கண்டன தீர்மானமே தவிர, தண்டனை விதிப்பதற்கான தீர்மானம் அல்ல. 

இலங்கை அரசை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துமாறும், பொறுப்புக்கூறும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்துகின்ற ஒரு தீர்மானமே இது. சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதற்கான தீர்மானமாக இது இருக்காது. ஆனால் ஒன்று இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடைபெறுகின்ற போது, இலங்கைக்கு எதிரான கருத்துகளும், பல போர்க்குற்ற ஆதாரங்களும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படும் நிலை உள்ளது. இது இலங்கை அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்குமே தவிர, தண்டனைக் களத்துக்குள் இலங்கையை இழுத்துச் செல்லப் போவதில்லை. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவையும், இலங்கையின் இராணுவ, அரசியல் தலைவர்களையும் மின்சாரக் கதிரையில் ஏற்றுகின்ற காரியத்தில் இறங்கவில்லை. ஆனால் சர்வதேச சமூகத்தின் நோக்கம், இலக்கு என்பனவற்றை தவறாக திரிபுபடுத்திக் கொள்கிறது அரசாங்கம். இப்போதைய நிலையில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் இலக்கு சர்வதேச சமூகத்திடம் இல்லை. அதற்காக அத்தகைய திட்டம் அவர்களிடம் சிறிதும் இல்லை என்று கருத முடியாது. 

அது அவர்களிடம் இரண்டாவது தெரிவாக மட்டுமே இப்போது உள்ளது. 

அப்படியானால் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமுகத்தின் முதலாவது தெரிவு என்ன என்று கேள்வி எழுகிறது. 

அதுதான், நம்பகம் வாய்ந்த உள்ளக விசாரணைப் பொறிமுறை. 

கொழும்பு வந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஒ பிளேக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகளுக்கான கீழ்நிலைச் செயலர் மரியா ஒரேரோவும், தமது பயணத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமானதும்- நம்பகமானதுமான விசாரணைகளை மேற்கொள்ள, அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் திட்டம் ஏதாவது அமெரிக்காவிடம் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பிளேக், தற்போது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானம் தொடர்பாகவே அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது. சிறிலங்கா அரசாங்கம் நம்பகமான உள்ளகப் பொறிமுறையை ஏற்படுத்தும் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்த அவர், “உள்நாட்டுப் பொறிமுறையை ஏற்படுத்துவதில் ஏதாவது குறைகள் காணப்படுமாயின், அனைத்துலக விசாரணைக்கான அழுத்தங்கள் நிச்சயம் இருக்கும்.“ என்று தெரிவித்தார். 

இதிலிருந்து இப்போதைக்கு சர்வதேச போர்க்குற்ற விசாரணை அழுத்தம் ஏதும் கொடுக்கப்படாது என்பது உறுதியாகி விட்டது. 

அமெரிக்கா இந்த நிலைப்பாட்டில் தான் இருந்து வருகிறது. 

முன்னர் இத்தகைய நிலைப்பாட்டில் இருந்தாலும் கூட, இப்போதைய சூழலில் அமெரிக்கா அத்தகையதொரு முடிவுக்கு உடனடியாக வருவதற்கான வாய்ப்பில்லை. காரணம், ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவாக இரண்டு முக்கிய நாடுகள் இருக்கின்றன. 

முதலாவது ரஸ்யா, இரண்டாவது சீனா. 

இந்த இரண்டு நாடுகளையும் தன் கைக்குள் போட்டு வைத்துள்ள இலங்கை அரசாங்கம், ஐ.நாவில் எத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வந்தாலும் அவற்றை வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு தடுத்து விட முடியும். 

இந்த உண்மை அமெரிக்காவுக்கோ, மேற்குலகிற்கோ தெரியாததல்ல. 

கடந்தவாரம் சிரியா விவகாரத்தில் ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட பிரேரணையை ரஸ்யாவும், சீனாவும் வீட்டோ மூலம் தடுத்து விட்டன. இதுபோன்ற சூழல் இலங்கை விவகாரத்திலும் ஏற்பட்டு விடக் கூடாதென்பதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் மிகக் கவனமாக இருக்கும். சர்வதேச விசாரணைப் பொறிமுறை என்ற ஆயுதத்தைக் கொண்டு, இலங்கையை வழிக்குக் கொண்டு வருவது சிரமமானது என்பதால் தான் அமெரிக்கா மிகத் தந்திரமாக இன்னொரு பாதை ஊடாக நகர முனைகிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும், உள்ளக விசாரணைப் பொறிமுறை மூலம் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதே அந்த வழி. இதன்மூலம், அரசாங்கத்துக்கு நம்பகமான விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த அழுத்தம் கொடுக்க முனைகிறது அமெரிக்கா. நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்ட போதும், அது நம்பகமான விசாரணைகள் நடத்த வேண்டும் சர்வதேச தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியது. ஆனால் அது போதியளவில் மீறல்கள், குற்றச்சாட்டுகள் குறித்து கவனிக்கத் தவறியுள்ளதாகவும், அதன் அறிக்கைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் அமெரிக்கா இப்போது சொல்கிறது. 

இந்தக் கட்டத்தில் தான் இதையே சாக்காக வைத்து அமெரிக்கா ஜெனிவாவில் தீர்மானத்தை கொண்டு வரப் போகிறது. 

நல்லிணக்க ஆணைக்குழுவை அரசாங்கம் வைத்து எப்படி இதுவரை தன்னைப் பாதுகாத்ததோ அதையே அரசின் மீது திருப்பி விடப் போகிறது. அதுமட்டுமன்றி இன்னொரு நம்பகமான விசாரணைக்கும் அது கோருகிறது. இதைச் செய்யாது போனால் தான் அடுத்து சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் முயற்சிகளில் சர்வதேச சமூகம் இறங்கும். ஜெனிவாவில் ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வரவே மூன்று ஆண்டுகளாகியுள்ளன. அடுத்து உள்ளக விசாரணைப் பொறிமுறை அழுத்தங்கள், அதன் பின்னர் ஏற்படக் கூடிய மாற்றங்கள் என்பன திருப்தி தராது போனால், சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதற்கு இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படலாம். அதற்குள் அரசாங்கம் நம்பகமாக விசாரணையை நடத்த கால அவகாசம் கிடைக்கும். இல்லையேல், ஏற்கனவே, பிளேக் கூறியது போல, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கை இழுத்து வரப்படும் என்ற எச்சரிக்கை தான் உண்மையாகும். 

அமெரிக்காவினதும் மேற்குலகினதும் இப்போதைய இலக்கு இதுவாக இல்லாது போனாலும், அதுவே இறுதியானதாக இருக்காது. முதலாவது தெரிவு தோல்வியடைந்தால், இரண்டாவது தெரிவை அமெரிக்கா நாடுவது தவிர்க்க முடியாத விடயமாகி விடும்.ஆனால் அது உடனடியாக நிகழும் ஒன்றாக இருக்காது.

நன்றி இன்போதமிழ்

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment