சர்வதேச சட்டத்திற்கு முரணாக செயற்பட்ட சிறிலங்கா


எந்தவொரு நாடும் சர்வதேசச் சட்டங்களை உள்வாங்கியே உள்நாட்டுச் சட்டங்களை இயற்றுகின்றன. சர்வதேச சட்ட விதிமுறைகளை புறம் தள்ளிவிட்டு உள்நாட்டுச் சட்டங்களைச் சர்வாதிகார நாடுகளே இயற்றுகின்றன. சீனா சர்வாதிகார நாடாக இருந்தாலும் பல சர்வதேசச் சட்ட வரைமுறைகளைப் பின்பற்றியே நடக்கிறது. சர்வதேச நாடுகளுடன் நட்புறவைப் பேண வேண்டுமாயின் பெரும்பாலான சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொண்ட சர்வதேசச் சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கடந்த முப்பது ஆண்டுகாலப் போரில் சர்வதேசச் சட்ட விதிமுறைகளை மீறியே செயற்பட்டார்கள் சிறிலங்கா அரசுகள்.
சிறிலங்காவில் வாழும் பலருக்கு சர்வதேச சட்டத்தைப் பற்றிய அறிவு இல்லை. சிறிலங்கா அரசு எதனை செய்கிறதோ அதுவே சட்டம் என்கிற மனநிலையிலேயே பெரும்பான்மையான சிங்கள மக்கள் இருக்கிறார்கள். சுதந்திரம் அடைந்த பின்னர் பல வன்முறைகளைச் செய்தே வந்தார்கள் சிங்கள ஆட்சியாளர்கள். தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை சர்வதேசப் படுத்தப்படாத சூழ்நிலை பல காலங்களாக நீடித்ததனால் சிங்கள அரசுகள் வெற்றிகரமாக தமது அராஜகங்களை செய்தார்கள். மே 2009-ஆம் ஆண்டுடன் முடிவுற்ற நான்காம் கட்ட ஈழப் போர் சர்வதேசக் கவனத்தை ஈர்ந்தது.
சிறிலங்கா அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதான ஒப்பந்தம் 2002-இல் இடம்பெற்றது. அக்கால கட்டத்திலிருந்தே ஈழத் தமிழர் பிரச்சினையை நன்கே ஆராய ஆரம்பித்தன பல உலக நாடுகள். விடுதலைப்புலிகளின் இராஜதந்திரத்திற்கு கிடைத்த பெரு வெற்றியாகவே இதனை கருத வேண்டும். விடுதலைப்புலிகள் நினைத்திருந்தால் தமிழீழத்தை அன்றே அடைந்திருப்பார்கள் என்று பலர் அப்போது கூறினார்கள். விடுதலை என்பது இரவோடு இரவாக வருவதில்லை. இரத்தம் சிந்திப் பெறுவதே விடுதலை. அப்போதுதான் விடுதலையின் மதிப்பு என்னவென்று அனைவருக்கும் தெரியும். விடுதலைக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் அதிகமான விலை கொடுத்துள்ளார்கள் என்பது உண்மைதான். விடுதலைக்காக கொடுத்த விலைக்கான அறுவடையைச் செய்யும் காலமே இனிவரும் காலம் என்றால் மிகையாகாது.
கடத்தல், நியாயமற்ற கைதும் தடுப்பும், பயங்கரவாதம்,மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் (கொலை, இனச் சுத்திகரிப்பு, சித்திரவதை, பாலியல் வன்முறைகள்,விமானத் தாக்குதல்கள்) போன்ற விடயங்கள் சர்வதேசச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.எந்தவொரு நாடும் குறித்த சர்வதேசச் சட்டங்களை மதித்தே நடக்க வேண்டும். லிபியா போன்ற நாடுகள் சர்வதேசச் சட்டங்களை மதித்து நடக்கவில்லை. அதனுடைய விளைவு என்னவென்பதை கடந்த வருடம் பலர் அறிந்து இருப்பர். இதைப்போலவேதான் இன்னும் சில நாடுகள் பிரச்சினைகளை இன்றும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதில் சிறிலங்காவும் அடக்கம் என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.
சிறிலங்காவிற்கு சர்வதேச சட்டங்களே பொறியாகியது
சர்வதேச நாடுகள் சிறிலங்காவிற்கு எதிராக எதனையும் செய்யாது என்கிற மமதையில் சிறிலங்கா அரசுகள் செயற்பட்டன. இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் துணையே சிறிலங்காவின் தைரியத்திற்கு காரணம். அதன் அடிப்படையிலேயேதான் சிறிலங்கா அரசு தமிழர்கள் மீதான போரை திணித்து பல்லாயிரம் மக்களைக் கொன்றது. சர்வதேசச் சட்டங்களில் எவைகளெல்லாம் குற்றங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனவையோ அவைகள் அனைத்தையும் மீறியே ஈழத் தமிழர்கள் மீது போரை மேற்கொண்டு வந்துள்ளன சிங்கள அரசுகள்.
விடுதலைப்புலிகளின் தலைமை வைத்த பொறியே 2002-ஆம் ஆண்டில் இடம்பெற்ற சமாதான ஒப்பந்தம். ஈழ விடுதலைக்கான அடுத்த கட்டத்தை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்றது குறித்த ஒப்பந்தத்திற்கு பிற்பாடான காலமே. சர்வதேசச் சட்டத்தில் ஓர் அரசாங்கம் அல்லது பிறர் ஒருவரைச் சிறைப்படுத்துதல், தடுத்து வைத்தல், ஆட்கடத்தல அல்லது வேறு விதத்தில் ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்தல் ஆகிய செயற்பாடுகள் வலுக்கட்டாயமாகக் காணாமல் போகச் செய்தல் எனப்படுகிறது.
காணாமல்போகச் செய்த பின், அதை ஏற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது காணாமல் போனோர் பற்றிய விபரத்தை மறைத்தலானது வலுக்கட்டாயமாக காணாமல் போகச் செய்தலாகும்.பல நாடுகளின் குற்றவியல தொகுப்பில் இதனைச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் அந்த நாடுகளில் இதனை சட்டத்திற்கு மாறாக தடுத்துவைத்தல் அல்லது சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட கைதும் தடுத்துவைப்பும என்று வழக்குத்தொடர முடியும்.
நியாயமற்ற கைதும் தடுப்பும் என்பது எந்தவித தகுந்த ஆதாரங்களும் இல்லாமல், தக்க சட்ட முறை இல்லாமல் ஒருவரைக் கைது செய்வதாகும். பெரும்பாலான மக்களாட்சி நாடுகளில் நியாயமற்ற கைதும் தடுப்பும் சட்டத்துக்கு புறம்பானது. இவை பெரும்பாலும் சர்வாதிகார அல்லது படைத்துறை ஆட்சியுடைய நாடுகளிலேயே நடைபெறுகிறது. சட்டத்திற்கு புறம்பான கொலைகள் என்பது அரசியல், தொழிற்சங்க, சமய தலைவர்களை அல்லது எதிர்ப்புப் போராட்டக்காரர்களை,சமூக செயற்பாட்டாளர்களை அரசு அல்லது அரச படையினர் போன்றோரால் படுகொலைகள் மேற்கொள்வதாகும்.சிறிலங்காவில் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் தொடர்ச்சியாக பல காலங்களாக நடந்து வருகிறது.குறிப்பாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் போன்றோர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இனச் சுத்திகரிப்பு என்பது ஐ.நா நிபுணர் (Commission of Experts Established Pursuant to United Nations Security Council Resolution 780) ஒன்றால் வரையறை செய்யப்படுகிறது. அதாவதுஇ“ஒரு இன அல்லது சமயக் குழு திட்டமிட்ட கொள்கை மூலம், இன்னொரு இன அல்லது சமயக் குழு ஒன்றை வன்முறையாக, பயங்கரவாத வழிமுறைகளால் ஒரு குறிப்பிட்ட புவியியல் நிலப்பரப்பில் இருந்து அழித்தொழிக்கல் அல்லது வெளியேற்றல் ஆகும்.” சிறிலங்கா அரசுகள் பல காலங்களாக இவ்வாறான செயற்பாடுகளை செய்து தமிழ் பேசும் மக்களின் அடையாளங்களை அழிப்பதில் முனைப்புக் காட்டியே வந்துள்ளன.
சித்திரவதை என்பது சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனத்தின்படி: “உடலுக்கோ மனதிற்கோ கடும் வலி அல்லது தாக்கம் ஏற்படுத்துகின்ற செயலை, அவரிடமிருந்தோ அல்லது மூன்றாம் மனிதரிடமிருந்தோ ஏதேனும் தகவலைப் பெறவோ அல்லது ஒப்புமை பெறவோ நடத்தப்படின், அவரோ அல்லது மூன்றாமவரோ செய்த அல்லது செய்ததாகக் கருதப்படும் செயலுக்கு தண்டனையாக வழங்கப்படின், அவரை அல்லது மூன்றாமவரை அடிபணிய வைக்க அல்லது அவமதிக்க அல்லது வேறு ஏதேனும் பாகுபாட்டினுற்காக செய்யப்படின், அதற்கு அரசின் அனுமதியோ ஆணையோ அல்லது அரசு அதிகாரியின் நேரடி அல்லது மறைமுக ஈடுபாடோ இருப்பின் (இந்த சாசனத்தில்)சித்திரவதையாகக் கொள்ளப்படும். சட்டப்படி நிறைவேற்றப்படும் செய்கைகளிலாலான வலியோ துன்பமோ கருத்தில் கொள்ளப்படாது."
அரச பயங்கரவாதம் (state terrorism)எனும் சொல் ஒரு அரசாங்கம் தமது நாட்டில் தமது மக்கள் மீதே கட்டவிழ்த்துவிடப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும். ஒரு அரசு கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை அரச சட்டத் திட்டங்களையும் உலக பொது மனிதவுரிமை சட்டத்திட்டங்களையும் மதிக்கத் தவறி அல்லது புறந்தள்ளிவிட்டு மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகள் அரச பயங்கரவாதம் எனப்படும். மானுடத்திற்கு எதிரான குற்றங்கள என்பது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் கூறப்பட்டுள்ளதாவது: “மனிதரின் தன்மானத்திற்கு எதிரான தீவிரமான தாக்குதல்கள், அவமதித்தல் அல்லது இழிவுபடுத்தல் ஆகியன. இவற்றுள் மேலும் பின்வரும் குற்றங்கள் உள்ளடங்கும்: “கொலை, முழுமையாக அழித்தொழித்தல், சித்திரவதை மற்றும் பாலியல் வன்புனர்வு."
போர்க் குற்றம் எனப்படுவது போர் விதிமுறை அல்லது அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்திற்கு முரணாக செயற்படுவதே போர்க்குற்றங்களாகும். அவ்வாறான சில விதிமுறை மீறல்களில் கொலை, வலிந்து கவரப்பட்ட நிலப்பரப்பில் குடியிருக்கும் அப்பாவி குடிமக்களை சரிவர நடத்தாதல் மற்றும் அவர்களை வதை முகாம்களுக்கு குடியேற்றல், போர் பிணையாளர்களை கொலை செய்தல் அல்லது சரிவர நடத்தாதல், பிணையாளர்களை கொல்லுதல், இராணுவ அல்லது குடிசார் தேவை ஏதும் இல்லாத நிலையில் ஏதேனும் அழிவுகள் மற்றும் நகர்ப்புறங்களையோ அல்லது நாட்டுப்புறங்களையோ அழித்தல் என்பனவும் உள்ளடங்கும். அப்பாவிகள் குடியிருக்கும் மற்றும் பொது இடங்கள் மீது விமானத் தாக்குதல் போர்க் குற்றமாகவே சர்வதேச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இனப்படுகொலை (genocide) என்பது ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது. 1948-இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யபட்ட, தண்டணைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ.நா.சட்ட விதி 2-இன்படி அறிவித்துள்ளது. இதன்படி ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ,மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால்,உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது,இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தை பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது,வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படி குற்றச் செயலாகும்.
சிறிலங்கா அரசு மேற்குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை சர்வதேசச் சட்ட விதிமுறைகளையும் மீறியுள்ளது என்பது தற்போது ஆவணங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளன.காலம் கடந்தாலும் நீதிக்குக் கிடைத்த வெற்றியாகவே சிறிலங்காவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் அத்தனை நடவடிக்கைகளும் சர்வதேச அரங்கில் இடம்பெற்று வருகிறது.
தொடர்ந்தும் உண்மையை மூடிமறைக்க முனையும் சிறிலங்கா
தனது அரசு எந்தவித பாரதூரமான குற்றங்களையும் தமிழ் மக்கள் மீது செய்யவில்லை எனவும், புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே போர் செய்ததாக சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்து வருகிறார். இவருடைய கூற்றையே அவரின் அமைச்சர்களும் மற்றும் அவரது சகோதரர்களும் தொடர்ந்தும் கூறி வருகிறார்கள். இவர்களுடைய கூற்றுக்களை ஏற்கத் தயாராக இல்லையென சர்வதேசச் சமூகம் கூறிவிட்டது. சிறிலங்கா என்னவெல்லாம் சொல்கிறதோ அவற்றை உண்மையெனப் பறைசாற்றியே வந்தது இந்தியா.
இந்திய மத்திய அரசிற்கே வேட்டு வைத்தாற்போல் செயற்பட்டார்கள் இந்தியாவில் வாழும் தமிழர்கள். தமிழகத் தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்களைக் கண்டு கதி கலங்கியது இந்திய நடுவன் அரசு. இந்தியாவும் சிறிலங்காவை கைவிட்டு விட்டது என்று சொல்வதற்கில்லை காரணம் உள்நாட்டு நிலவரங்களுக்கு ஏற்றால்போல்த்தான் இந்தியா செயற்படுகிறது.சிறிலங்கா விடயத்தில் இந்தியா இன்னும் தனது தெளிவற்ற வெளிநாட்டு கொள்கையையே பேணுகிறது.
சர்வதேச மனித உரிமை சட்டங்களைப் பாதுகாப்பதில் சிறிலங்கா அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஐ.நாவின் மனித உரிமைப் பேரவையின் ஆரம்ப தினமற்று ஆற்றிய விசேட உரையில் சிறிலங்காவின் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அவர் தனதுரையில் தெரிவிக்கையில், “யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகளும் ஒன்பது மாதங்களுக்கும் கடந்துள்ள நிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கம் குறிப்பிடத்தக்களவு வெற்றியீட்டியுள்ளது.நிலையான சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்கான மெய்யான அவசியத்தை அரசாங்கம் உலக சமூகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளது. 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது.யுத்தத்தின் பின்னரான சிறிலங்காவில் கிரமமான முறையில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்படுத்தப்படுகின்றது."
மூன்று தசாப்தங்களாக நீடித்த யுத்தம் மக்களை மட்டுமன்றி அவர்களின் வாழ்வாதாரம், உட்கட்டுமான வசதிகள், சமூகக் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பாதித்துள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. பொருளாதார அபிவிருத்தி,மறுவாழ்வு அளித்தல் உள்ளிட்ட காரணிகளை முதனிலைப்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அமர்வுகளின் போது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பணிகளை செவ்வனே மேற்கொள்ள போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென கோரியிருந்தோம். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளதுடன், சில முக்கிய பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது. கடந்த கால சமாதான முனைப்புக்களில் ஏற்பட்ட தோல்வி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் உள்ளடப்பட்டுள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக சாட்சியமளித்த அதேவேளை, 5இ000-திற்கும் மேற்பட்ட எழுத்து மூல சாட்சியங்களும் கிடைக்கப் பெற்றன. சுதந்திரமாகவும், பகிரங்கமாகவும் இந்த சாட்சியங்கள் அளிக்கப்பட்டன. எவ்வாறெனினும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் நிபுணர் குழு அறிக்கை இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. நிபுணர் குழு பகிரங்கமான சாட்சியங்கள் திரட்டவில்லை. உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையிலேயே நிபுணர் இறுதி அறிக்கையை சமர்ப்பித்த அதேவேளை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நம்பகமான மூலங்களின் ஊடாக தகவல்களை திரட்டி யதார்த்தமான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.”
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் உள்ளிட்ட ஒட்டு மொத்தவிடயங்கள் தொடர்பிலும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றல், முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்தல், தடுத்து வைக்கப்பட்ட கைதிகள், சட்டவிரோத ஆயுதங்களைக் களைதல், காணிப் பிணக்குகள், மொழிக் கொள்கைகளை அமுல்படுத்தல், சமூகப் பொருளதார மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், நிர்வாக சர்ச்சைகள் உள்ளிட்ட பலவிடங்கள் தொடர்பில் ஆணைக்குழு பரிந்துரைகளை செய்துள்ளது. இந்தப் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்கனவே அமுல்படுத்த ஆரம்பித்துள்ளது.
திட்டமிட்ட முறையில் மிகவும் கிரமமான இந்தப் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றல், நிலக்கண்ணி வெடிகளை அகற்றுதல், முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளித்தல், வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தல், தமிழ் பேசும் காவல்துறை உத்தியோகத்தர்களை நியமித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.”
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் பேணப்பட்டனவா என்பது குறித்து ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இராணுவ நடவடிக்கைகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் உயிரிழந்த பொதுமக்கள் தொடர்பில் மிகத் துல்லியமானதும், விரிவானதுமான புள்ளி விபரத் தரவுகள் விரைவில் வெளியிடப்படும். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்வோர், ஆயுதமேந்தி உயிரிழந்தோர் உள்ளிட்ட சகல விடயங்கள் பற்றியும் கண்காணித்து அறிக்கை வெளியிடப்பட உள்ளது."
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்கள் அபரிமிதமான கற்பனை என்பதனை அறுதியிட்டு குறிப்பிட முடியும். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் காத்திரமான விசாரணைப் பொறிமுறைமையொன்று உருவாக்கப்படும். குற்றச் செயல்கள் தொடர்பில் முதலில் தரவுகள் திரட்டப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும்.இதற்காக சட்ட மா அதிபரின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளோம். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் குறித்து இராணுவ நீதிமன்றமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.”
சனல்-4 ஊடகத்தின் ஆவணப்படம், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் உயிரிழந்தமை போன்ற விடயங்கள் தொடர்பில் இராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது. நாட்டின் மனித உரிமைகளை மேம்படுத்தும் நோக்கில் தேசிய மனித உரிமை செயற்திட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளது.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சிவில் மற்றும் இராணுவ மட்டத்திலான விசாரணைகள் நடத்தப்படும்," என்று கூறினார் அமைச்சர் மஹிந்த சமரசிங்க.
சர்வதேசச் சட்டங்களை ஒட்டுமொத்தமாகவே உதறித் தள்ளிவிட்டு அடக்குமுறை ஆட்சிகளை மேற்கொண்ட சிங்கள தலைமைகள் இன்று நேற்றல்ல கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களுக்கு இன்னல்களை விளைவித்தார்கள். 2002-ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்திற்கு பின்னரான காலப்பகுதியிலேயேதான் ஈழத் தமிழருக்கு எதிராக எவ்வகையான குற்றங்கள் இடம்பெறுகிறது என்பதனை உலகம் அறிந்தது. சர்வதேசச் சட்டங்களை ஏற்று ஆட்சி செய்வதாக மார்தட்டிக் கொண்ட சிறிலங்கா அரசுகள் அடக்குமுறை ஆட்சிகளையே மேற்கொண்டன.
சர்வதேசச் சட்டங்களில் கூறப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் மீறி சிறிலங்கா அரசுகள் தமிழ் மக்கள் மீது போரை ஏவி ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழ் மக்களை கொன்றார்கள். இன்னும் பல சொல்லொனாத் துயரை தமிழ் மக்கள் மீது ஏவியது சிங்கள இனவெறி அரசுகள். சர்வதேசச் சட்டம் தம் மீது திரும்பும் என்று ஒரு போதும் எண்ணியதில்லை சிங்களத் தலைமைகள். சிங்கள அரசுகள் இயற்றிய உள்நாட்டுச் சட்டங்களிலிருந்து பாதுகாப்பாக இருந்த சிங்களத் தலைமைகள் சர்வதேசச் சட்டங்களிலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது. தான் ஏவிய அம்பு தன் மீதே திரும்பியுள்ளதைக் கண்டு கதி கலங்கியுள்ளது சிங்கள அரசு என்பதுதான் உண்மை. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அனலை நிதிஸ் ச. குமாரன் 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment