"அமெரிக்கா தலைமையிலான மேற்குலகினால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவது உறுதியாகியுள்ளது"


ஜெனிவா கூட்டத்தொடர் அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியானதொன்றாக மாறியுள்ள நிலையில், அமெரிக்கா, ஐ.நா மற்றும் மேற்குலகின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, கடந்தவாரம் அரசாங்கமே பேரணிகளை ஒழுங்கு செய்திருந்தது. தெற்கில் மட்டுமன்றி வடக்கு,கிழக்கில் கூட அரசதரப்பின் ஒழுங்கமைப்பில் எதிர்ப்புப் பேரணிகள் நடத்தப்பட்டன. ஆனால் இவையெல்லாம் ஜெனிவாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு காத்திரமானவையாக இருக்கவில்லை. இத்தகைய பேரணிகளை நடத்தப் போவதாக அரசதரப்பு அறிவித்தபோதே அதைக் கேலிக்கூத்து என்று விமர்சித்திருந்தது ஐதேக. அரசுக்கு எதிராக சர்வதேச நகர்வுகள் அமையும் போது இதே தந்திரத்தை கையாள்வது அரசாங்கம் அல்லது அரசில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் வழக்கமான தந்திரோபாயம் தான். இதன்மூலம் ஜெனிவா தீர்மானத்தை தடுத்து விடலாம் என்றோ அல்லது தோற்கடித்து விடலாம் என்றோ அரசாங்கம் கருதியிருக்க வாய்ப்பில்லை. அவ்வாறானதொரு எண்ணம் இருந்திருந்தால், அதை இராஜதந்திர வங்குரோத்து நிலை என்று துணிந்து கூறலாம்.

இந்தத் தீர்மானத்தை எதிர்கொள்ளும் விடயத்திலும் சரி, மனிதஉரிமைகள் நிலையை பேணிக் கொள்ளும் பொறுப்பிலும் சரி அரசாங்கம் தெளிவான நிலையில் இல்லை என்பதே உண்மை. இதனால் தான் மிகச்சுலபமாகவே, அது பொறி ஒன்றை நோக்கித் தள்ளப்படும் நிலை உருவானது. போர் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டில் ஜனநாயகம் ஏற்பட்டு விட்டது, மனிதஉரிமை நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளது என்றெல்லாம் அரசாங்கம் கூறிவருகிறது. ஆனால் இவற்றை எந்த வகையிலும் அரசினால் நிரூபிக்க முடியவில்லை. மனிதஉரிமைகள் நிலைமை குறித்து சர்வதேச அளவில் வருடாந்தம் வெளியிடப்படும் அறிக்கைகள் இலங்கையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. இதனை உறுதி செய்யும் வகையிலும், ஜெனிவாவில் நெருக்கடிகளை கொடுக்கும் வகையிலும் ஏராளமான சம்பவங்கள் நடதேறியுள்ளன. 

குறிப்பாக ஆட்கடத்தல்கள், பொதுமக்களின் போராட்டங்களின் மீது ஏவி விடப்படும் வன்முறைகள், ஊடகங்கள் மீதான அடக்குமுறைகள், பெண்கள், சிறார்கள் மீதான வன்முறைகள், இவற்றில் மிகவும் முக்கியமானவை. 

ஆட்கடத்தல்கள் விடயத்தில் இலங்கை மோசமானதொரு நாடாகவே பதிவாகியுள்ளது. 

போர் நடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஒடுக்குவது என்ற பெயரில், ஆட்கடத்தல்கள் இடம்பெற்றதாக சர்வதேச அறிக்கைகள் பலவும் கூறியுள்ளன. 

வடக்கு, கிழக்கிலும், கொழும்பிலும் கடந்த காலங்களில் ஆட்கடத்தல்கள் மிகமோசமாகவே இடம்பெற்றன. 

போர் முடிவுக்கு வந்த பின்னர், குறைந்து போன போதும், மீண்டும் ஆட்கள் கடத்தப்படுவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் ஜேவிபி மாற்றுக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் காணாமற்போய் மாதக்கணக்காகி விட்டது. 

இன்னமும் அவர்கள் எங்கே என்று கண்டுபிடிக்கப்படவில்லை. 

கொழும்பில் வைத்து வெள்ளை வானில் வந்த ஆயுதக்குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட தமிழ் வர்த்தகர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

கைதி ஒருவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்தே ஆயுதக்குழுவினர் கடத்திச் சென்றனர். 

இப்படி ஆட்கடத்தல்கள் தொடர்கின்றன. 

போர் நடந்த காலத்தில் வர்த்தகர்கள் கப்பம் கோரிக் கடத்தப்பட்டனர். கப்பம் கொடுக்காதவர்கள் கொல்லப்பட்டனர், புலிகள் என்றும் புலி ஆதரவாளர்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டனர். இவற்றின் பின்னால் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஆயுதக்குழுக்களே இருந்தன என்பது எவருக்கும் தெரியாத இரகசியம் அல்ல. இதுபற்றி நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸ்சில் வெளியான அமெரிக்க இராஜாங்க செயலக தகவல் பரிமாற்ற குறிப்புகளிலும் கூட கூறப்பட்டுள்ளன. சிறிது காலம் ஓய்ந்திருந்த இத்தகைய கடத்தல்கள் இப்போது மீண்டும் அதிகரித்துள்ளதானது ஒரு புறத்தில் மக்களை மிரள வைத்தாலும், இதன் விளைவுகள் அரசாங்கத்துக்கே நெருக்கடி கொடுப்பதாக அமையும். ஜெனிவாவில் இவையெல்லாம் புள்ளி விபரங்களாக மாறும் போது அரசின் மீதான சுருக்குக் கயிறு மேலும் வலிமை பெறும். 

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, ஐதேக நடத்திய பேரணி மீது ஏவிவிடப்பட்ட வன்முறைகள் என்பன ஜனநாயக ரீதியான போராட்டங்கள் மீது ஆயுத வன்முறை பிரயோகிக்கப்படுவதை மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது. ஆனால் அரச ஆதரவில் நடத்தப்பட்ட, ஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான பேரணிகளில் எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. யாரும் சுடப்படவில்லை, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்படவில்லை. தடியடி நடத்தப்படவில்லை. இது ஒன்றே எதிரணியினர் மீது ஏவி விடப்படும் வன்முறைகளுக்குப் போதுமான சாட்சியாகும். ஜனநாயக ரீதியான போராட்டங்களை நிராகரிக்கின்ற, ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற போக்கு அரசிடம் தலைதூக்கியுள்ளதையே இது வெளிப்படுத்தியுள்ளது. 

அரசுக்கு முண்டு கொடுக்கும் சிங்கள நாளேடு கூட, போரினால் பெற்ற மதிப்பைக் காப்பாற்ற அரசாங்கத்துக்குத் தெரியவில்லை என்று சினந்து கொண்டிருக்கிறது. சிங்கள ஊடகம் ஒன்றே இப்படிப் பார்க்கின்ற போது, மனிதஉரிமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படும் ஜெனிவா கூட்டத்தொடரில் இது ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கையாகவே பார்க்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஒடுக்குகின்ற போக்கில் இலங்கை அரசாங்கம் இருப்பதாக ஜெனிவாவில் பட்டியல் போடுவதற்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்திருப்பதே அரசாங்கமும் அரசபடைகளும் தான். 

போர்க்குற்ற விவகாரங்களை, சர்வதேச சமூகம் இலங்கைக்கு எதிரான ஆயுதமாக வஞ்சக நோக்கில் பாவிப்பதாக அரசாங்கம் குற்றம்சாட்டுகிறது. ஆனால் அதற்கும் அப்பால், சர்வதேச சமூகம் பரந்துபட்டளவிலான மனிதஉரிமை மீறல்களை பட்டியலிடுவதற்கு சிங்களம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இலங்கை மீது ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வருவதற்கான அறிகுறிகள் தென் படத் தொடங்கி பல மாதங்களாகி விட்டன. ஆனாலும் அரசாங்கம் இத்தகைய ஆட்கடத்தல்களை தடுப்பதற்கோ, ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளைத் தவிர்ப்பதற்கோ முனையவில்லை. தனியே வெளிநாடுகளில் போர்க்குற்றங்கள் நடக்கவில்லை என்று பிரசாரங்களைச் செய்தால் மட்டும் போதும் என்றே கருதியது. 

போருக்குப் பின்னர், மனிதஉரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆட்கடத்தல்களில் இருந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு கிடைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் கடத்தப்பட்டவர்களை கண்டுபிடித்தாவது இருக்க வேண்டும். இவற்றைச் செய்து சர்வதேச சமூகத்தின் வாயை அடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில், மேற்குலகமும், புலம்பெயர் தமிழர்களும், புலி ஆதரவாளர்களும் செய்யும் சதி என்று கூறி அரசாங்கம் நிலைமையின் தீவிரத்தை திசை திருப்ப முனைகிறது. இது உள்நாட்டில் பேரணிகளை நடத்துவதற்கு வேண்டுமானால் கைகொடுக்கலாமே தவிர, சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு உதவப் போவதில்லை.

நன்றி இன்போதமிழ் 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment