"மேற்குலக நாடுகளின் இலக்கு தலையா - தலைப்பாகையா?"


இப்போதைக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானம் வெறும் தலைப்பாகையை மட்டும் தான் கொண்டு போகும். அதற்குப் பின்னர் தான் தலைக்கு குறி வைக்கப்படும். அதில் இருந்து தப்பிக் கொள்வது தான் சாதாரணமான காரியமாக இருக்காது. இலங்கையில் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்துவது மட்டுமே மேற்குலக நாடுகளின் விருப்பமாக உள்ளது. இதனை வென்றெடுக்கவே தாம் விரும்புவதாக ஜெனிவாவில் உள்ள மேற்கு நாடுகளின் தூதுவர்கள் தன்னிடம் கூறியதாக, ஜெனிவாவுக்கான இலங்கைத் தூதுவர் தாமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்துக்குப் பல்வேறு அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன.தன்னை மின்சாரக் கதிரைக்கு கொண்டு போக மேற்கு நாடுகள் முனைவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அடிக்கடி கூறிவந்தார். அவரது அமைச்சர்களோ மகிந்த ராஜபக்ஸவையும் இலங்கையின் அரசியல், இராணுவத் தலைவர்களையும் அமெரிக்கா சர்வதேச நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்ல முனைவதாக குற்றம்சாட்டி வருகின்றனர். 

அவ்வப்போது ஆட்சி மாற்றத்துக்கு மேற்குலகம் முனைவதாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. அதேவேளை, ஜெனிவாவில் மின்சாரக்கதிரை பற்றியோ, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பற்றியோ கற்பனையான கதைகளை அவிழ்த்து விட முடியாது. இதனால் ஆட்சிமாற்றமே மேற்குலகின் ஒரே இலக்கு என்று அரசாங்கம் பிரசாரம் செய்வது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விவகாரம் அல்ல. அதேவேளை, மேற்குலகம் ஒன்றும் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படவில்லை என்று அடித்துக் கூறவும் முடியாது. 

தமக்கு ஒத்துவராத- தம்முடன் ஒத்துழைக்காத நாடுகளின் தலைவர்களை – அரசாங்கங்களை கவிழ்த்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது மிகவும் பழமையானதோர் இராஜதந்திரம். 

பனிப்போர் காலத்தில் இது மிகத்தீவிரமாக இடம்பெற்றது. 

இதற்கு அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவான சிஐஏ பல இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

கியூபாவின் தலைவர் பிடெல் கஸ்ட்ரோவை பதவி கவிழ்க்க சிஐஏ மேற்கொண்ட ஏராளமான முயற்சிகள் தோல்வி கண்டன. 

இன்று வரையிலும் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவுக்கு அது ஒரு நிறைவேற்றாத கனவாகவே- கறையாகவே உள்ளது. 

ரஸ்யாவின் கேஜிபியும் இதற்கு விதிவிலக்கானது அல்ல. 

இந்த இரு முக்கிய வல்லரசுகளினதும் ஆதிக்கப் போட்டிக்குப் பலியான நாடுகள் பல. 

பனிப்போர் காலத்து நிலைமை இன்றில்லாது போனாலும், ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சிகள் நடவடிக்கைகள் வெவ்வேறு வடிவங்களில் தொடரத் தான் செய்கின்றன. 

குறிப்பாக அண்மைக்காலங்களில் மத்திய கிழக்கிலும், வடஆபிரிக்காவிலும் தோன்றிய மக்கள் கிளர்ச்சிகளின் பின்னணியில் அமெரிக்காவே இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். எகிப்தில், லிபியாவில், யேமனில், டுனிசியாவில், அல்ஜீரியாவில், சிரியாவில் என்று, நீண்டகாலமாக அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களை அகற்றும் முடிவில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் உறுதியான நிலையில் இருப்பது உண்மை. இவ்வாறான நாடுகளுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்த இலங்கைக்கும் மேற்குலகின் மீது இத்தகைய சந்தேகம் வந்திருப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல. 

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்த மேற்குலம் இப்போது அதற்கான நகர்வுகளை மெல்ல மெல்ல எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் நேரடியாக போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்க மேற்குலகம் முனையவில்லை. இலங்கை அரசை இணங்க வைத்து பொறுப்புக் கூற வைக்கவே முனைகின்றன. 

இப்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படும் நகர்வுகளின் நோக்கம் இது தான். அதேவேளை, இது ஆட்சிக்கவிழ்ப்பை மேற்கொள்வதற்காக இருக்கலாம் என்பதே பொதுவான கணிப்பாக உள்ளது. இப்போதைய தீர்மான விடயத்தில் இலங்கை அரசாங்கம் அழுங்குப்பிடியாக இருப்பதற்குக் காரணம் மேற்குலகின் அடுத்த கட்டம் குறித்த அச்சம் தான். மேற்கு நாடுகள் இலங்கையின் மீது பொறுப்புக்கூற அழுத்தம் கொடுத்து வருகின்ற போதும், போரின் கதாநாயகனாக இருந்த சரத் பொன்சேகா இதுபற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை. அவர் இது நாட்டுக்கு எதிரான தீர்மானம் அல்ல, ஆட்சிக்கு எதிரான தீர்மானம் தான் என்று சர்வசாதாரணமாக கூறிவிட்டு இருந்து விட்டார். ஐதேகவும் கிட்டத்தட்ட அதேபாணியில் தான் உள்ளது. ஆனால் அரசாங்கமோ, மேற்குலகம் நாட்டையும் இறைமையையும் கவ்விக் கொண்டு போகப் போகிறது என்பது போல மிரட்டி, எச்சரித்துக் கொண்டிருக்கிறது. 

சரத் பொன்சேகாவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நன்றாகத் தெரியும், அடுத்த கட்டம் என்பது ஆட்சிக் கவிழ்ப்புக்கான எத்தனங்கள் தான் என்பது. இதற்காக மேற்குலகம் இலங்கையில் ஆட்சிக்கவிழப்பை விரும்புகிறது என்று அடித்துச் சொல்ல முடியாது. ஆனால் எதற்காக அவர்கள் ஆட்சிக் கவிழ்ப்பை விரும்பலாம் என்று இங்கு பார்ப்பது பொருத்தம்.இலங்கையில் உள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஆட்சிமுறை மத்திய கிழக்கின், வடஆபிரிக்காவில் பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களின் ஞாபகத்தை அமெரிக்காவுக்கும், மேற்குலகிற்கும் கொடுக்கக் கூடும். குறிப்பாக வரையறையற்ற அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி பதவியில் ஒருவர் இரண்டுமுறைக்கு மேல் இருக்க முடியாது என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டதை மிகப்பெரிய ஆபத்தாக உணர்கிறது மேற்குலகம். 

அரசியலமைப்பின் 18வது திருத்தம் கொண்டு வரப்பட்ட போது, அமெரிக்கா அதைக் கடுமையாக எதிர்த்தது. ஏனென்றால் அது நீண்டகால ஆட்சியை உருவாக்கி விடும் என்ற அச்சம் தான். அதுவும் சாதாரணமாக சந்திரிகா போன்ற ஒருவராக இருந்தால், இத்தகைய பதவி மூன்றாவது முறை செல்வதையிட்டு, அமெரிக்கா அக்கறைப்படாமல் போயிருக்கலாம். ஆனால் மகிந்த ராஜபக்ஸ போன்ற ஒருவரின் கையில் மூன்று தடவைகளுக்கு மேல் ஜனாதிபதி பதவி சிக்கிக் கொள்வதை மிகவும் ஆபத்தானதாக உணரக் கூடும். குறிப்பாக சீனா, ரஸ்யாவின் துணையுடன் இருக்கும் ஒருவர், இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் உள்ள நாடு ஒன்றில், இத்தகைய நீண்டகால ஆட்சி நிலவுவதை ஒருபோதும் மேற்குலகம் விரும்பாது. அதைவிட மேற்குலகுடன் அனுசரித்துப் போகாது, முரண்டு பிடிக்கின்ற ஒரு அரசு நிலைத்திருப்பதை அமெரிக்கா மட்டுமன்றி ஏனைய மேற்கு நாடுகளும் கூட விரும்பாது. ஏன் ஒரு கட்டத்துக்கு மேல் இந்தியா கூட அதனை விரும்புமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் நிலையான ஒருவரிடம் ஆட்சி சிக்கிக் கொள்ளும் போது ஜனநாயகம் செத்து விடும். அதை ஜனநாயக நாடுகளால் இலகுவில் ஜீரணித்துக் கொள்ள முடியாது. 

இலங்கையைப் பொறுத்தவரையில் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டிருப்பதே அதிகம் தான். அத்தகைய பதவியை ஒருவர் இரண்டு முறை தான் வகிக்க முடியும் என்றிருந்த கட்டுப்பாட்டை நீக்கிக் கொண்டது மிகப்பெரிய சிக்கல். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசியலமைப்பில் 18வது திருத்தத்தைச் செய்து கொண்டது தான், தனது இரண்டாவது பதவிக் காலத்தில் செய்த முதலாவதும், மிகப் பெரியதுமான தவறு. அதுதான் மேற்குலகிற்கு அபாயச் சங்கை ஊதியது. எதிர்காலச் சவாலை மேற்குலகிற்கு வெளிப்படுத்தியது. 

பதவியேற்ற வேகத்தில் அரசியலமைப்பில் திருத்தம் செய்தது தனது அடுத்த பதவிக்காலத்தை உறுதி செய்தது போலவே, இனப்பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டிருந்தால் முதலாவது தவறு மறக்கப்பட்டிருக்கலாம். அல்லது மறைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் எதையும் செய்யாமல் வெறும் வாய்க் கோசத்தினால் சாதிக்க முடியும் என்று நம்பியதன் விளைவு தான் இன்றைய நிலை. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை இப்போதைக்கு சுதந்திரமான விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தும் வாய்ப்பைக் கொண்டிருக்கவில்லை. அதுபோலவே மேற்குலகும் ஆட்சிக் கவிழ்ப்புக்கான அடியை இன்னும் போடவில்லை. ஆனால் இவையிரண்டும் நிலையானவை அல்ல. 

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது பதவிக்காலம் நிறைவுக் கட்டத்தை அடையும் போது இந்த இரண்டும் தீவிரம் பெற வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் மூன்றாவது பதவிக்காலத்தை அவரை அடைய விடாமல், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்குலக நாடுகள் தீவிரமாக செயற்படும் வாய்ப்புகள் உள்ளன. அதில் தப்பிப் பிழைத்துக் கொள்வது தான் மிகப்பெரிய விவகாரமாக இருக்கும். இப்போதைக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானம் வெறும் தலைப்பாகையை மட்டும் தான் கொண்டு போகும். அதற்குப் பின்னர் தான் தலைக்கு குறி வைக்கப்படும். அதில் இருந்து தப்பிக் கொள்வது தான் சாதாரணமான காரியமாக இருக்காது.

இன்போதமிழ்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment