Sunday, March 4, 2012

இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக வாக்களித்த பல நாடுகள் தடம்புரளலாம்?


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர் மிகவும் பரபரப்பான ஒரு சூழலில் ஆரம்பமாகியுள்ளது. நீண்ட காலமாகவே சர்வதிகார ஆட்சியாளர்களாக விளங்கிய எகிப்தின் அதிபர் முபாராக், லிபிய அதிபர் கேணல் கடாபி ஆகியோரின் ஆட்சிகள் வீழ்த்தப்பட்டு ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட அதேவேளையில் சிரிய அதிபரின் ஆட்யைக் கவிழ்க்கப் போராட்டங்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இன்னும் பல மத்திய கிழக்கு நாடுகளில் போராட்டங்கள் சர்வதிகார ஆட்சிகளுக்கு எதிராக இடம்பெற்று வருகின்றன. இப்படியான சர்வதிகார ஆட்சிகள் இடம்பெறும் நாடுகளில் மனித உரிமைகளும் ஏனைய சுந்திரங்களும் பறிக்கப்படுவதாக மக்கள் போராட்டங்கள் தொடரும் இவ்வேளையிலே மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத் தொடரை ஆரம்பித்து உரையாற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை தமது உரையில் சிரியாவில் இடம்பெறும் படுகொலைகள் தொடர்பாகவும் மனிதகுல விரோத நடவடிக்கைகள் தொடர்பாகவும் காரசாரமான கண்டனங்களைத் தெரிவித்தார். இலங்கையில் போரில் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாகவும் மனித உரிமைகள் தொடர்பாகவும் தனது உரையில் குறிப்பிடுவார் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த போதிலும் அவர் அவை பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. எனினும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரமே சிரியா, ஈரான் போன்ற நாடுகளின் பிரச்சினைகளைப் பின் தள்ளிவிட்டுத் தற்சமயம் முக்கிய பிரச்சினையாக வெளிப்பட்டு நிற்கிறது. 

சகல நாடுகளும் அதாவது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்க தகுதி பெறாத சில நாடுகள் உட்பட இலங்கை விவகாரத்தில் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்படுகின்றன. இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கையின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி உரையாற்றினார். அதையடுத்து தாய்லாந்து பிரதிநிதியும் இலங்கைக்கு ஆதரவாகத் தனது கருத்துக்களைத் தெரிவித்த போதிலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் சிபார்சுகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தத் தவறவில்லை. மேலும் ரஷ்யப் பிரதிநிதி இலங்கைக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்காத போதிலும் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் சிறிய நாடுகளில் உள் விவகாரங்களில் தலையிடுவதைக் கடுமையாகச் சாடினார். 

இலங்கைக் குழுவினர் அந்தப் பேச்சு தமக்குச் சாதகமாக வெளியிடப்பட்ட கருத்து என்றே கூறிக் கொண்டனர். 

கியூபா தனது ஆதரவைப் பூரணமாக இலங்கைக்கு வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. இது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை கியூபா ஏற்றுக்கொண்டு வழங்கும் ஆதரவு என நாம் கருதிவிட முடியாது. மூன்றாவது உலக நாடு ஒன்றின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது என்ற அடிப்படையிலேயே கியூபா இலங்கைக்கு ஆதரவு வழங்குகிறது என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். அதுமட்டுமன்றி எப்போதுமே அமெரிக்காகவுக்கு எதிராகக் கியூபாவும், கியூபாவுக்கு எதிராக அமெரிக்காவும் நிலைப்பாடுகளைக் கொண்டவை என்பதும் ஒரு முக்கிய விடயமாகும். இப்படியாகக் கூட்டத் தொடரில் உரைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில் கூட்டத் தொடருக்கு வெளியே ஒரு பெரும் ராஜதந்திரப் போர்க்களம் விரிவடைந்துள்ளது. இலங்கைத் தரப்பும் அமெரிக்கத் தரப்பும் தமக்கு ஆதரவு திரட்டுவதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

சந்திப்புக்களும் கலந்துரையாடல்களும் விவாதங்களும் மாறி மாறி தீவிரமாகவும் அடிக்கடியும் இடம்பெற்று வருகின்றன. இலங்கைக் குழுவினர் வெவ்வேறு நாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்து தங்கள் விளக்கங்களைக் கொடுத்து வருகின்றனர். குறிப்பாகச் சிறுபான்மை இனத்தைச் சார்ந்த அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், ஹிஸ்புல்லா ஆகியோர் முஸ்லிம் நாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர். அதேபோன்று ஆபிரிக்க நாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்து வருகின்றனர். அல்ஜீரியா, மனித உரிமைகள் பேரவையில் ஒரு உறுப்பு நாடாக இல்லாத போதும் ஏனைய முஸ்லிம் நாடுகளை இலங்கைக்கு ஆதரவாகத் திரட்ட முயற்சிகளைச் செய்வதாக இலங்கைக்கு வாக்களித்துள்ளது. அதேவேளையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆபிரிக்க நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டு ஆதரவு தேடி வருகிறார். தற்சமயம் தென்னாபிரிக்காவில் தங்கியுள்ள அவர் பல தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தி வருகிறார். இதுவரை அவருக்கு எவ்வித சாதகமான பதிலும் கிடைத்ததாகத் தெரியவில்லை. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் ஆகியோரும் இலங்கைக் குழுவில் சென்றிருந்த போதிலும் அவர்கள் எவ்வித முயற்சிகளிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. அவர்களை யாரும் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை

மறுபுறத்தில் இலங்கைக்கு எதிராக நாடுகளை அணிதிரட்டுவதில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் நோக்குடன் அமெரிக்காவிலிருந்து 15 பேர் கொண்ட ஒரு குழுவும் பிரிட்டனிலிருந்து 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜெனிவா வந்திறங்கியுள்ளனர். இந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு மிகத் தீவிரமான முறையில் ஆதரவு திரட்டி வருகின்றனர். ஏற்கனவே இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த தாய்லாந்து உட்படச் சில நாடுகள் எதிர்ப்பக்கம் மாறக் கூடிய வாய்ப்புக்கள் தோன்றக் கூடும் எனக் கருதப்படுகிறது. இதன் காரணமாக இலங்கைத் தூதுக்குழுவினர் மீண்டும் அந்நாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்க முயற்சிகளைச் செய்து வருகின்றனர். அதேவேளையில் இந்தியா, ஜோர்தான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் இன்னும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. ஜோர்தான், சவூதி அரேபியா போன்ற நாடுகள் கடைசி நேரத்தில் அமெரிக்காவின் பக்கமே நிற்கும் எனக் கருதப்படுகிறது. ஏற்கனவே ஈரானிடம் எண்ணெய் கொள்முதல் செய்வது சம்பந்தமாக அமெரிக்காவின் கசப்புணர்வைச் சந்தித்த இந்தியா மீண்டும் ஒரு முறை அமெரிக்காவுடன் இலங்கைக்காக முரண்படும் என எதிர்பார்க்க முடியாது. எனவே இந்தியா வாக்கெடுப்பில் பங்கு கொள்ளாதெனவே எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் ஜெனிவாவுக்கான இந்தியத் துணைத்தூதுவர் கேவாபட்டாச்சார்யா அமெரிக்க அழுத்தம் காரணமாக இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக வாக்களித்த பல நாடுகள் தடம்புரளலாம் எனவும் இலங்கைக்குழு அதற்கேற்ற வகையில் வியூகங்களை வகுத்துச் செயற்பட வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார். 

அவரது ஆலோசனையில் பிரதிநிதிகளைச் சந்திப்பதைவிட அந்தந்த நாட்டுத் தலைவர்களைச் சந்திப்பதே பயன்மிக்கது எனக் கூறப்படுகிறது. இன்னொரு புறம் புலம்பெயர் தமிழ் மக்களின் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் மனித உரிமை நிறுவனங்களும் வெவ்வேறு நாட்டுப் பிரதிநிதிகளையும் தனித்தனியாகவும் கூட்டாகவும் சந்தித்து தமிழ் மக்கள் தொடர்பான நியாயங்களை விளக்கி வருகின்றனர். 

அதாவது இன்று ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வளாகம் ஒரு பெரும் ராஜதந்திர யுத்தகளமாக மாறியுள்ளது. இலங்கை ஒரு புறமும், இலங்கையில் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களைக் கண்டிப்பவர்கள் மறுபுறமுமாக வியூகங்களை வகுத்து களத்தில் இறங்கியுள்ளனர். அமெரிக்கா அமைதியாகவும் தந்திரமாகவும் தனது காய்களை நகர்த்த இலங்கை அதற்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. இதில் முக்கியமான பிரச்சினை என்னவெனில் போரில் பாதிக்கப்பட்ட, பேரழிவுகளைச் சந்தித்த இலங்கைத் தமிழர்களாகிய எம்மைக் கருவூலமாகக் கொண்டே இந்தக் களம் விரிந்திருக்கிறது. போரின் இறுதி நாள்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக கண்டனத் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படுவது தொடர்பாகவே இந்த ராஜதந்திரப் போர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகிறது. இதைக் கொண்டு வருவதில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முன்னின்று உழைக்கின்றன. அவர்களைப் பொறுத்த வரையில் பொதுவாகவே மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சினையே! ஆனால் இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இது ஒரு ஜீவாதாரப் பிரச்சினையாகும். 

இந்தப் போரின் இறுதி நாள்களில் கொல்லப்பட்ட 40,000 மக்களின் உறவுகள், விதவைகளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்கள், உடல் உறுப்புக்களை இழந்து அங்கவீனர்களாகி விட்டவர்கள் ஆகியோர் தொடர்பான நியாயங்களைக் கோரும் ஒரு நடவடிக்கையாகும். அதுமட்டுமன்றி போர் முடிந்த பின்பும் இலங்கை அரசால் தொடரப்படும் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளை அம்பலத்துக்குக் கொண்டு வரும் ஒரு அத்தியாவசிய முயற்சியாகும். மனித உரிமைகள் பேரவையில் இந்தக் கண்டனப் பிரேரணை வெற்றிபெறுமானால் தமிழ் மக்கள் மேல் நடத்தப்பட்ட பேரழிவுக்கு இலங்கை பதில் சொல்லியாக வேண்டும். தொடர்ந்து இன ஒடுக்குமுறையைத் தொடர முடியாத ஒரு நிலையும் ஏற்படும். ஆனால், இந்தக் கண்டனப் பிரேரணை தோல்வியடையுமானால் எமக்கிழைக்கப்பட்ட அநீதிகள் மூடி மறைக்கப்படும். இலங்கை அரசு புதிய உற்சாகத்துடன் மேலும் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் இன அழிப்பு நடவடிக்கைகளையும் தொடரும்.

எனவே இந்தக் கண்டனப் பிரேரணை வெற்றிபெற ஒவ்வொரு தமிழனும் தன்னால் இயன்ற முழு முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்தநிலையில் தமிழ் மக்களின் தலைமைச் சக்தியாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் கடமையை உணர்ந்து ஜெனிவா மனித உரிமைகள் பேரவைத் தொடரில் பங்குகொள்ள வேண்டும். அங்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்து எமது நிலையைத் தெளிவுபடுத்துவதுடன் இலங்கை அரசின் பொய்மைகளை அம்பலப்படுத்த வேண்டும். இந்தக் கடமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்யத் தவறினால் ஒரு முக்கிய கடமையைச் செய்ய வேண்டிய தருணத்தில் செய்யத் தவறிய வரலாற்றுத் தவறைச் செய்த பழிக்கு ஆளாக வேண்டி வரும்.

நன்றி இன்போ தமிழ் 

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment