ஜெனிவா வாக்களிப்பு: பிராந்திய அரசியலில் புதிய அணுகுமுறையை வகுக்கின்றதா இந்தியா?


இந்தியாவானது தனக்கு தெற்கே அமைந்துள்ள சிறிலங்காவுடன் நட்பைப் பேணவேண்டிய நிலையிலும், தனது பிராந்திய ஆதிக்கத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிலையிலும் இருக்கவேண்டும் என்கின்ற இருதலைக் கொள்ளி நிலையில் இந்தியா மாட்டிக்கொண்டது. இவ்வாறு Global Spin வலைத்தளத்தில் AMANTHA PERERA எழுதியுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2009ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் அதாவது சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்த போது, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் கடமையாற்றிய சிறிலங்கா இராஜதந்திரிகள் கொழும்புடன் தீவிர தொலைபேசி தொடர்பாடல்களை மேற்கொண்டனர். 

தமிழ்ப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட யுத்த நடைமுறைகள் தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தமது அதிருப்திகளை வெளியிட்டு வருவதுடன் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஒருதலைப்பட்ச நடவடிக்கையை எடுப்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக, சிறிலங்கா அதிபரை நேரடியாக எச்சரிக்கும் பாணியில் தொலைபேசி அழைப்புக்கள் எடுக்கப்பட்டதாக மூத்த சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

சிறிலங்காவில் மூன்று பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்து யுத்த வெற்றியைப் பிரகடனப்படுத்தும் மமதையிலிருந்த ராஜபக்ச அரசாங்கம், ஐ.நா வில் பணியாற்றிய சிறிலங்கா இராஜதந்திரிகளால் விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கையை ஒரு பொருட்டாக கருதவில்லை. 

சிறிலங்கா விடயத்தில் காண்பிக்கப்படும் எந்தவொரு வெளிநாட்டுத் தலையீடுகளையும் இந்திய மத்திய அரசாங்கம் எதிர்த்து நிற்கும் என சிறிலங்காவின் பழைய விசுவாசியும் கூட்டாளியுமான இந்தியா அறிவித்திருந்தது. மே 2009 நடுப்பகுதியில், அதாவது ஐ.நா தலைமையகத்திலிருந்து தொடர்ச்சியான அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு சில மாதங்களின் பின்னர், சிறிலங்காவில் யுத்தம் நிறைவுக்கு வந்ததுடன், புலிகள் முற்றாக அழிக்கப்பட்டனர். 

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த மாதம், ஜெனீவாவில் மேற்கொள்ளப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு நீண்ட காலமாக மிகப் பலமான ஆதரவை வழங்கி வந்த சிறிலங்காவின் அயல் நாடான இந்தியா, அமெரிக்காவின் ஆதரவுடன் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது. 

அதாவது சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த கால மீறல்களை விசாரணை செய்து சிறிலங்கா அதிபரிடம் நவம்பர் 2011ல் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்திருந்த கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் காலதாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே நோக்காகக் கொண்டே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அமெரிக்காவின் தலைமையில் முன்வைக்கப்பட்ட இத்தீர்மானத்துக்கான வாக்கெடுப்புக்கள் மார்ச் 22 அன்று இடம்பெற்றது. இவ்வாக்கெடுப்பில் இத்தீர்மானத்தை ஆதரித்து 24 நாடுகளும் எதிர்த்து 15 நாடுகள் வாக்களித்ததுடன், எட்டு நாடுகள் இவ்வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 

இவ்வாக்கெடுப்பில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்த பின்னர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சிறிலங்கா அதிபர் ராஜபக்சவுக்கு எழுதிய கடிதத்தில் "பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் நோக்கத்தில் சமநிலையைப் பேணி அதனை முன்வைப்பதற்கான முயற்சிகளைக் கூட இந்தியா கைக்கொண்டது" என குறிப்பிட்டிருந்தார். 

இருப்பினும், இந்தியாவானது தனக்கு தெற்கே அமைந்துள்ள சிறிலங்காவுடன் நட்பைப் பேணவேண்டிய நிலையிலும், தனது பிராந்திய ஆதிக்கத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிலையிலும் இருக்கவேண்டும் என்கின்ற இருதலைக் கொள்ளி நிலையில் இந்தியா மாட்டிக்கொண்டது. 

இந்நிலையில் "இந்தியாவானது மோசமான இராஜதந்திரத் தவறைச் செய்துள்ளது" என Macquarie பல்கலைக்கழகத்தில் கொள்கைத் திட்டமிடல், நுண்ணறிவு மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்தல் என்பவற்றுக்கான விரிவுரையாளராகக் கடமையாற்றும் சானக ஜெயசேகர தெரிவித்துள்ளார். 

ஜெனீவாவில் இந்தியா வாக்களிப்பதற்கு முன்னர், இதன் தென் மாநிலமான தமிழ்நாட்டை ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழர் விவகாரத்தில் ஒரே தீர்வைக் கொண்டிருந்ததுடன் மத்தியில் ஆட்சி செய்த சிங் அரசாங்கம் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும் தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தன. 

அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்ததால், இந்திய மத்திய அரசாங்கமானது தனது முக்கிய கூட்டணியுடன் விரோதத்தை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தை சந்திக்க விரும்பவில்லை என ஜெயசேகர தெரிவித்துள்ளார். 

மறுபுறத்தில் இந்தியாவானது தனது நீண்ட நாள் நண்பனுடன் பகைமையை ஏற்படுத்திக் கொண்டதை முக்கிய இராஜதந்திர நகர்வாக வேறு பல அரசியல் அவதானிகள் பார்க்கின்றனர். 

அதாவது தற்போது இந்தியாவானது தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்ததன் மூலம், சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்கின்ற இந்திய மத்திய அரசின் முக்கிய கோரிக்கையை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு மன்மோகன் சிங் அரசாங்கம் சமிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாக, 1990 களின் ஆரம்பத்தில் சிறிலங்காவின் வடக்கில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படைகளுக்கான புலனாய்வுத் துறைக்கான முன்னாள் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஆர். ஹரிகரன் தெரிவித்துள்ளார். 

"ராஜபக்சவால் மழுப்பி பேசப்பட்ட விடயத்துக்கு இந்திய அரசாங்கம் தருணம் பார்த்து பதிலடி கொடுத்து விட்டதாகவே நான் கருதுகிறேன். இந்தியாவில் இப்பதிலடி மூலம் ராஜபக்ச தான் இந்தியாவிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது விட முடியாது என்பதை மீளவும் நினைவுபடுத்துவதாக உள்ளது" என ஹரிகரன் மேலும் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் இத்தீர்மானமானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்தும் இரு வல்லரசுகளுக்கு இடையில் மேலும் முரண்பாடுகள் வலுப்பெறும் என்பதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைத்த போதிலும் கூட, சீனாவானது ராஜபக்ச அரசாங்கத்துக்கான தனது ஆதரவை வழங்குவதில் எந்தவொரு தளர்வையும் காண்பிக்கவில்லை. இதேபோன்று ஜெனீவாவில் அமெரிக்கா ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை சீனாவானது விமர்சித்ததுடன் அதனை எதிர்த்து வாக்களித்தது. 

இந்நிலையில் சீனாவானது சிறிலங்காவுக்கான அரசியல் ஆதரவை மட்டும் வழங்கும் நாடாக இருக்கவில்லை. கடந்த ஆண்டில் சிறிலங்காவுக்கு நிதி வழங்கிய நாடுகளில் சீனா முதன்மை இடத்தை வகிக்கின்றது. அதாவது போருக்குப் பின்னான அபிவிருத்தி நடவடிக்கைகள் சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நிலையில், கடந்த ஆண்டு சீனாவானது 790 மில்லியன் அமெரிக்க டொலர்களை சிறிலங்காவில் முதலிட்டிருந்தது. ஆனால் இதேகாலப்பகுதியில் இந்தியாவானது சீனாவின் முதலீட்டின் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான தொகையையே வழங்கியிருந்தது. 

2009ம் ஆண்டிலிருந்து சீனாவானது சிறிலங்காவின் கட்டுமானத் திட்டங்களுக்காக 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக, லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ஆய்வு அமைப்பான Safeworld  வெளியிட்ட புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போதும் சிறிலங்கா மீதான சீனாவின் செல்வாக்கானது இராணுவ மற்றும் அரசியல் அதிகாரத்தை விட பொருளாதார நடைமுறைகளை மையப்படுத்தியே பிரயோகிக்கப்படுகின்றது. சிறிலங்காவின் கேந்திர முக்கியத்துவம் உள்ள இந்து சமுத்திரத்தின் ஊடாக சீனாவின் 60 சதவீதமான வல்லுனர்களும், 90 சதவீதமான அதிகார வலுவும் நகர்த்தப்பட்டதாக Safeworld அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பின் கேந்திர முக்கியத்துவத்தைப் பயன்படுத்த வேண்டிய நடைமுறைத் தேவை சீனாவுக்கு இருக்கலாம் என்றும் ஆனால் இது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா கொண்டுள்ள அதிகாரத்தையும் செல்வாக்கையும் குலைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். 

"சீனா தனது செல்வாக்கை உயர்த்துவதற்கான தருணம் கனிந்திருக்கலாம். சீனர்கள் யதார்த்தமாக சிந்திப்பவர்கள். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா கொண்டுள்ள செல்வாக்கை முற்றுமுழுதாக தோற்கடிப்பதற்கான திட்டத்தை சீனர்கள் கொண்டிருக்கலாம் என நான் எண்ணுகிறேன்" என ஹரிகரன் மேலும் தெரிவித்துள்ளார். 

தற்போது சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானமானது சிறிலங்காவில் குறிப்பிட்ட ஓரிரவில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடும் எனக் கருதமுடியாது. இதனை அரசாங்கம் எதிர்த்துள்ளது. சிறிலங்கா அரசாங்கம் இதனை எதிர்த்திருக்கா விட்டாலும் கூட, அடுத்த ஆண்டின் ஆரம்பத்திலேயே இது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டும். ஆகவே அதுவரை சிறிலங்கா இது தொடர்பில் பேரவைக்கு பதிலளிக்க தேவையில்லை. 

"இத்தீர்மானத்தின் விளைவானது குறியீடாக காணப்படுகின்றது" என தேசிய மனித உரிமைகள் அமைப்பான சட்டம் மற்றும் சமூக நிதியத்தை சேர்ந்த செயற்பாட்டாளரான றுக்கி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். "சிறிலங்கா மீது அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுப்பதில் ஆர்வம் காட்டுவதையே இத்தீர்மானம் எடுத்துக் காட்டுகின்றது. இது எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்வி நிலவுகின்றது" என றுக்கி பெர்னான்டோ மேலும் தெரிவித்துள்ளார். 

சிறிலங்கா அரசாங்கத்தின் முன்னகர்வுகள் காலந் தாழ்த்தப்பட்டு மேற்கொள்ளப்படுமா என்ற சந்தேகமும் நிலவுகின்றது. சிறிலங்காவானது தனது உள் விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டைத் தவிர்க்க வேண்டுமாயின், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை காலந்தாழ்த்தாது நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட திட்ட வரைபின் படி தனது நகர்வுகளை மேற்கொள்வதுடன், அனைத்துல மனித உரிமைகள் மற்றும் யுத்தச் சட்டங்களை மீறி யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மீறல்களை விசாரணை செய்து பொறுப்பளிப்பதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. 

இந்த விடயத்தில் ராஜபக்ச விரைவாக செயற்பட வேண்டும் எனக் கருதினாலும் கூட, யுத்தத்துக்கு பின்னர் தற்போது மீளெழுந்து வரும் சிறிலங்காவானது தற்போது சந்திக்கும் சவால்கள் ராஜபக்சவுக்கு தடையாக இருக்கும். சிறிலங்காவின் பொருளாதாரமானது தற்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி மிக மோசமாக சரிவடைந்துள்ளது. இதனால் ராஜபக்ச அரசியல் ரீதியான ஆபத்துக்களை, சவால்களை சந்திப்பதில் தயக்கம் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

"தற்போது சிறிலங்காவில் பெற்றோலிய வளத்தின் விலை அதிகரித்துள்ளது. அத்துடன் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. சிறிலங்கா அதிபர் நாட்டில் அதிகாரப் பகிர்வை அறிமுகப்படுத்துவதற்கான அரசியல் மூலதனத்தை கொண்டிருக்காது இருக்கலாம்" என விரிவுரையாளர் ஜெயசேகர தெரிவித்துள்ளார். "யுத்தம் முடிவடைந்தவுடன் இதற்கான சந்தர்ப்பம் அதிகம் இருந்தது" எனவும் விரிவுரையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment