Friday, March 9, 2012

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்தியா யார் பக்கம் ?


ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்கா அதை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது. இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதில் இலங்கையும் உறுதியாக உள்ளது. இந்த இருவேறு முரண்பட்ட சூழலுக்குள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் கூட இரு அணிகளாகி நிற்கின்றன. சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வெளியிட்டுள்ளன. இன்னும் பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அரசாங்கம் கூறினாலும், வாக்கெடுப்பு ஒன்று வரும் போது தான் எந்தப் பக்கம் வெற்றிபெறப் போகிறது என்பது தெரியவரும். யார் யார் எந்த அணியில் நிற்கிறார்கள் என்பதும் உறுதியாகும். 

இந்தத் தீர்மானம் விடயத்தில் அயல் நாடும் இந்து சமுத்திரத்தின் வல்லரசுமான இந்தியாவின் நிலை என்ன என்ற கேள்வி இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்றும் ஆதரிக்காது என்றும் நடுநிலை வகிக்கலாம் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தீர்மானம் ஒன்றை எதிர்கொள்வதற்கு இந்த மூன்று தெரிவுகளும் தான் உள்ளன. அவை மூன்றையும் ஊடகங்கள் அவ்வப்போது செய்திகளாக்குகின்றன.இந்தியா அதிகாரபூர்வமாக எந்த முடிவையும் அறிவிக்காமல் - பூடகமாகப் பேசி வருவது தான் இந்தக் குழப்பத்துக்கு முக்கியமான காரணம். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படும் போது இது பற்றி முடிவு செய்யலாம் என்று முன்னர் ஒரு முறை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியிருந்தார். இப்போது இந்தளவில் கூட இந்தியா எதையும் கூறவில்லை. இந்தத் தீர்மானத்துக்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு அமெரிக்காவும் முயற்சிகளை மேற்கொண்டது. இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் அமெரிக்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகளுக்கான சார்நிலைச் செயலர் மரியா ஒரேரோ இந்தியாவின் வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாயை சந்தித்துப் பேசி விட்டே கொழும்புக்குப் புறப்பட்டார். இதனால் இந்தியாவும் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் என்று முன்னர் தகவல்கள் வெளியாகின. அதற்குள் இலங்கை அரசும் தன் பங்கிற்கு புதுடெல்லிக்கு தூது அனுப்பியது. பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இந்த விவகாரம் குறித்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுடன் தொலைபேசியில் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகின.எனினும், இந்தியா எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இலங்கைக்கு அத்தகைய வாக்குறுதிகளை கொடுக்கவும் இல்லை என்றே தெரிகிறது. ஆனாலும், மனித உரிமைகள் விவகாரத்தை கவனிக்கும் அமைச்சர் மகிந்த சமரசிங்க, தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும் என்று கூறியிருந்தார். அது அவரது நம்பிக்கையா அல்லது இந்தியா கொடுத்துள்ள வாக்குறுதியா- என்பதை உறுதி செய்ய முடியவில்லை. 

இந்தத் தீர்மானம் இலங்கைக்கு மட்டும் சிக்கலைக் கொடுக்கவில்லை. இந்தியாவையும் கூடத் தான் தடுமாற வைத்து விட்டது. 

இலங்கைக்கு ஆதரவு கொடுப்பதா- இல்லையா என்பதே அதற்குள்ள முக்கியமான பிரச்சினை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடந்து கொண்டிருந்த போது, போரை நிறுத்துமாறும், தமிழர்களைப் பாதுகாக்கும் படியும் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தின. கடுமையான அழுத்தங்கள் எல்லாம் கொடுக்கப்பட்ட போதும் இந்தியா மசியவேயில்லை. போரை நிறுத்துவதில் அது ஆர்வம் காட்டவேயில்லை. இலங்கை அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பைக் கொடுத்தது. அதன் விளைவாக போர் முடிவுக்கு வந்தது. விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டது. இந்தப் போரில் ஏற்பட்ட அழிவுகளும், அதன் தொடர்ச்சியும் தான் இப்போது அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கான மூல காரணம். அப்போது போருக்கு ஆதரவாக- இலங்கைக்கு துணையாக நின்ற இந்தியாவினால், இப்போது அதே போன்று நிற்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

2009ம் ஆண்டில் இந்தியா எதிர்கொண்டதைப் போன்றில்லாமல், இப்போது கடுமையான அழுத்தங்களைச் சந்திக்கிறது மத்திய அரசு. தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கருணாநிதி அறிக்கையோடு நிற்காமல் ரி.ஆர்.பாலுவை அனுப்பி மன்மோகன்சிங்கை சந்திக்க வைத்து அழுத்தம் கொடுத்துள்ளார். தீர்மானத்தை ஆதரிப்பதை விட வேறு எந்த சமரசத்தையும் ஏற்க முடியாது என்று திமுக கூறியுள்ளது. இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் பேரணிகள், போராட்டங்கள் உண்ணாவிரதங்கள் என்று அறிவித்துள்ளன. இவையெல்லாம் ஏற்கனவே நடந்தது தான். இப்போது கொஞ்சம் வித்தியாசம். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் கூட இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் முடிவில் உள்ளது தான் அது. இது தான் ஆச்சரியமானது. அதேவேளை இந்திய அரசு அழுத்தமாகவும் உள்ளது. 

பிரதமர் அலுவலகத்துக்கான மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி இதுபற்றி தாம் பிரதமருடன் பேசியுள்ளதாகவும் தீர்மானத்தை இந்தியா கண்டிப்பாக ஆதரிக்கும் என்றே நம்புவதாகவும் கூறியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் தமிழர்களை இந்தியா காப்பாற்றும் கைவிடாது என்றும் அவர் கூறியிருக்கிறார். 

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனும் இது விடயமாக மன்மோகன்சிங்குடன் பேசியுள்ளார். அவரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

குமரி ஆனந்தனும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு இத்தாலிக்கு சென்றிருந்த போது, முசோலினி அவரைச் சந்திக்க விரும்பினார். ஆனால் ஹிட்லருக்கு துணைபோன அவரை சந்திக்க நேரு மறுத்து விட்ட உதாரணத்தையும் குமரி அனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இந்த விவகாரம் புயலைக் கிளப்பி விட்டுள்ளது. 

இந்தகைய சூழல் 2009 இல் இருக்கவில்லை. அப்போது தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் எல்லாம் போரை நிறுத்துவதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்த போதும் காங்கிரஸ் மட்டும் அதை கண்டுகொள்ளவில்லை.மத்தியில் காங்கிரஸ் கட்சி போருக்கு ஆதரவு வழங்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மௌனமாக இருக்கவும் விடுதலைப் புலிகள் மீதான வெறுப்புத் தான் முக்கிய காரணம். ராஜிவ்காந்தியைக் கொன்ற புலிகளை- பிரபாகரனை எப்படியாவது பழிதீர்த்து அழித்து விட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்தது. இப்போது அவர்களின் அந்தக் கனவு ஈடேறி விட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி தமிழரின் அழிவுகளுக்கு துணை போனது என்ற கருத்து தமிழ்நாட்டில் வலுவாகவே உள்ளது. தமிழ்நாடு சட்டச்சபைத் தேர்தலில் இதை உணரவும் முடிந்தது. இதனால் கூட இப்போது காங்கிரஸ் தலைவர்கள் கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்திக்கத் தொடங்கியிருக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோரியிருப்பதும் அழுத்தம் கொடுப்பதும் மத்திய அரசுக்கு பிடிக்காமலும் போகலாம். ஆனால் அவர்களால் இந்த அழுத்தங்களை இலகுவில் உதறி விட முடியாது. 

தமிழக முதல்வர், ஏனைய கட்சிகள் மட்டுமன்றி தமது கட்சித் தலைவர்கள் சொல்வதையும் புறக்கணித்து ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவு கொடுப்பது இந்திய அரசுக்கு சவால் தான். 

இப்போது இந்தியா தனது வெளிவிவகாரக் கொள்கையை சார்ந்து முடிவு எடுக்கப் போகிறதா அல்லது மத்திய அரசின் மீது செல்வாக்குச் செலுத்தும் காரணிகளின் அடிப்படையில் முடிவை எடுக்கப் போகிறதா என்ற கேள்வி எழுகிறது. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி, நாடுகளுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்கள், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களைப் பலவீனப்படுத்தும் என்று கூறியிருந்தார்.சிரியாவுக்கு எதிரான கண்டனத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பிலும் இந்தியா நடுநிலை வகித்தது நினைவிருக்கலாம். மனிதஉரிமைகள் பேரவையில் இந்தியா வெளியிட்ட கருத்து இலங்கைக்கு சாதகமாக இருக்கும் என்றே கருதப்பட்டது. ஆனால் அதற்கிடையில் மத்திய அரசுக்கான நெருக்கடிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்தக்கட்டத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவுடன் பேசி பொருத்தமான முடிவை எடுப்பதாக கூறியுள்ளதாகவும் தகவல். இந்தியா இந்த விடயத்தில் குழப்பத்துக்குள்ளாகியுள்ளது என்பதை உணரமுடிகிறது. இப்போது இந்தியா எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு சிக்கல்கள் வரவே செய்யும். 

இலங்கையைக் கைவிட்டால் தற்போதைய வெளிவிவகாரக் கொள்கையில் இருந்து தடம் புரண்டதாகி விடும். இன்னொரு பக்கத்தில் சீனா இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலங்கையுடன் இன்னும் நெருக்கமாகி விடுமோ என்ற பயமும் அதிகரிக்கும். 

இலங்கைக்கு முண்டு கொடுத்தால் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்று இரண்டாவது தடவையும் பழிச்சொல்லை ஏற்க வேண்டியிருக்கும். விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளப் போகின்ற நிலையில் காங்கிரசுக்கு அது பலமான நெருக்கடியாக அமையும். 

அதைவிட, இப்போது இலங்கையைக் கைவிட்டால் புலிகளை அழிக்க வேண்டும் என்ற பழியுணர்ச்சியால் தான் இந்தியா முன்னர் போருக்கு ஆதரவு கொடுத்தது என்பதும் உறுதியாகும். இப்படியாக இந்தத் தீர்மானம் இந்தியாவை பல தொடர்ச்சியான நெருக்கடிகளுக்குள் தள்ளி விட்டுள்ளது. 

எந்த முடிவை எடுத்து காங்கிரஸ் காய்களை நகர்த்தினாலும், இலங்கையை விடவும் இந்தியாவுக்கே அதிகம் தலைவலியைக் கொடுக்கும் போலுள்ளது.

கட்டுரையாளர் கே.சஞ்சயன்

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment