அன்பான உறவுகளே....!
எமதருமை நண்பர்களே...!!
எங்கிருக்கிறீர்கள்...?
எவரையும் காணவில்லை..?
சிங்களவனின் சிரிப்பொலி மட்டுமே
எம்மைச் சுற்றி...!
என்ன ஆயிற்று...?
எப்படி இதெல்லாம்..?
இன்றாவது நீங்கள் வருவீர்கள் என்று
நாமிங்கே தவமிருக்கிறோம்...!
உங்கள் மலர்களுக்காக...
உங்கள் நெய்விளக்கிற்காக...
உங்கள் அன்பான அரவணைப்பிற்காக...
இதற்கும் மேலாக..
அன்பு அண்ணனின் உரைக்காக...
காத்திருக்கிறோம் உறவுகளே...!
ஒன்று மட்டும் உணர்கிறோம்..
ஏதோ நடந்து விட்டது...!
எம்மைச் சுற்றி பற்றைகள்..
எம்மைச் சுற்றி எதிரியின் சலசலப்பு..
அடிக்கடி எம்மைப் பார்க்கும் உறவில்லை
அடிக்கடி வந்து அழும் ஆத்ம நண்பர்கள் இல்லை
எம்மைக் கவனிக்கும் பொறுப்பாளர் இல்லை
மின் விளக்கு இல்லை...
தமிழர் வாழ்வு போல் நாமும் இருளுக்குள்..!
புரிந்து கொண்டோம்...
எம்மிடம் வரும் நிலையில் நீவிர் இல்லை
அதேநேரம்
எம்மை மறந்தும் விடவில்லை..!
எப்படி மறப்பீர்கள்...
தாயகம் வரும்வரை ஓயோம் என
கல்லறை மீது கைகள் வைத்து
சத்தியமல்லவா செய்தீர்கள்...!
எமக்குத் தெரியும்...
நாம் விட்ட இடத்தில் இருந்து
நீங்கள் தொடர்வீர்கள்.
நிலைகள் மாறலாம்...இலக்கிற்கான
பாதைகள் மாறலாம்...பெறுவதற்கான
வடிவங்கள் மாறலாம்...என்றுமே
இலட்சியங்கள் மாறக்கூடாது..!
ஒரு கணம் சிந்தியுங்கள்...!
உங்களுக்காய்....உங்களுக்காகவே
எங்கள் முப்பதினாயிரம் உயிர் தந்தோம்.
செங்களத்தில் நண்பர்கள்
அங்கங்கள் இழந்தனர்...!!
அப்பாவி மக்கள் அரிய உயிரை ஈந்தனர்..!!!
எல்லாமும் உங்களுக்காகவே...!!!
ஒருகணம் கூட ஓயவேண்டாம்
மறுகணம் எதிரி மாய்த்துவிடுவான்
ஊர் உலகெல்லாம் உரத்து
குரல் கொடுங்கள்...!
ஒவ்வொரு கணமும் இந்தக்
கல்லறை உறவுகளை நினையுங்கள்..!!
காலத்தின் கட்டளை எதுவோ
அதனை தொடருங்கள்...!
காலம் தரும் ஆயுதத்தை
கையில் எடுங்கள்...!!
இறுதி வரை இலட்சியத்திற்காக
போராடுங்கள்...!!
ஆண்ட இனம்....மலர்ச்சியாய்
வாழ்ந்த இனம்...மீண்டும்
மானத்தோடு வாழவேண்டும்
சிங்களவன் காலில்தான்
எமது வாழ்வு என்றால் - ஏன்
இத்தனை இழப்புகள்...!
எம்மை அவன் வென்றதாய்
சரித்திரம் இல்லை
இம்முறையும் அவ்வாறே
இருக்க வேண்டும்..!
கல்லறைகளுக்கு நாளை வாருங்கள்
கனிவான வெற்றிச்செய்தியோடு வாருங்கள்
காத்திருப்போம்..!
களத்தில் வெற்றிகளுக்காக...
எல்லையில் எதிரிகளுக்காக
காத்திருந்த எமக்கு இது பெரிதல்ல..!
தாயகக் கனவோடு நாங்கள்
சாவினைத் தழுவினோம்
தாயகம் வரும் வரை நீங்கள்
தளராது போராடுங்கள்.!
எங்கள் நினைவுகள்
எங்கள் பலங்கள்
எப்போதும் உங்களுடன்..!
நாங்கள் காத்திருப்போம்
நீங்கள் களமிறங்குங்கள்
வெற்றி பெற்றோம் என்று
மாலையோடு வாருங்கள்
நெய் விளக்கேற்றுங்கள்
கல்லறை கீதம் இசையுங்கள்...!
எம் இனமே எம் சனமே...
நாம் சொல்வது புரிகிறதா?
வெல்வோம்! வாழ்வோம்!!
வரலாறு படைப்போம்.!
தமிழரின் தாகம்
தமிழீழ்த் தாயகம்...!!
- ஈழபக்கத்திற்காக வாகுகன் -
0 கருத்துரைகள் :
Post a Comment