ஏற்றுக்கொள்ளக்கூடிய - அமைதியான - மதிப்பார்ந்த வழிகள் ஊடாக நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை அடைவதற்கான முயற்சியில் கூட்டாக ஈடுபடுவது என இலங்கையின் தமிழ் கட்சிகள் கூட்டாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
சிறிலங்காவில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஒற்றுமையும் கருத்து ஒருமைப்பாடும் வேண்டும் என்பதை தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
சுவிட்சர்லாண்ட், சூரிச் நகரில் அண்மையில் நடைபெற்ற தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சில பிரச்சினைகள் தொடர்பிலும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்தும் கருத்து வேறுபாடுகள் இருப்பதைக் குறிப்பிடும் அதேசமயம், தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஒற்றுமையும் கருத்து ஒருமைப்பாடும் வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு வலியுறுத்துகின்றோம்” என அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்:
தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாகிய நாங்கள் - ஒருமனதாக - எமக்கு இடையிலான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், எமது முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தவுமான வரலாற்று வாய்ப்பை - ஒரு பொது மேடையை - இந்தக் கூட்டம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
மூன்று வகையான தெளிவான பிரிவுகளை - தமிழர்கள், முஸ்லிம்கள், இந்திய வம்சாவழி தமிழர்கள் ஆகியோரை - உள்ளடக்கியோரே 'தமிழ் பேசும் மக்கள்' என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
எமது தமிழ் கட்சிகள் இடையில் காணப்படும் வேறுபாடுகள், தனி அடையாளங்கள், கருத்துக்கள் நோக்கங்கள் என்பவற்றை நாம் ஏற்றுக்கொள்ளுகின்றோம்.
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஒற்றுமையும் கருத்து ஒருமைப்பாடும் வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு நாம் வலியுறுத்துகின்றோம்.
ஏற்றுக்கொள்ளக்கூடிய - அமைதியான - மதிப்பார்ந்த வழிகள் ஊடாக - நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை அடைவதற்கான முயற்சியில் அனைத்து சமூகத்தினரையும் ஈடுபடுத்துவதில் முனைப்புடன் செயல்படுவோம்.
மேலும் - இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து நடத்தவதற்கும் அதில் ஈடுபாடு காட்டுவதற்கும் நாம் இணங்குகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து இயங்கும் 'தமிழர் தகவல் மையம்' [Tamil Information Centre - TIC] என்ற அமைப்பே தமிழ்க் கட்சிகள் இடையிலான இந்தக் கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருந்தது.
அநேகமாக - இலங்கைத் தீவில் செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளினதும் பிரதிநிதிகள் இந்தக் கலந்தரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
திடீரென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்துரையாடல் மிகவும் முக்கியமான இன்றைய திருப்புமுனைக் காலகட்டத்தில் தமிழ் கட்சிகள் எடுத்துவைத்திருக்கும் உருப்படியான ஒரு முதற்படி தான்.
இருந்தாலும் - இந்தத் தொடர் கலந்துரையாடல் செல்லக் கூடிய திசை பற்றி மாறுபட்ட உணர்வுகளே தமிழர் மத்தியில் நிலவுகின்றது.
"ஏற்றுக்கொள்ளக் கூடிய மதிப்பார்ந்த அரசியல் தீர்வு" என இந்தக் கட்சிகள் எதனை அர்த்தப்படுத்துகின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப - காலத்துக் ஒவ்வாத கற்பனைகளை வளர்க்காமல் - உலக மற்றும் பிராந்திய ஓட்டத்திற்கு ஏற்ப - நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வு ஒன்றை நோக்கி நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்.
ஆனாலும் - அந்த "ஏற்றுக்கொள்ளக் கூடிய" அரசியல் தீர்வு என்பது - தமிழரது தாயகக் கோட்பாட்டைப் பலவீனப்படுத்துவதாகவோ, அல்லது அவர்களது தன்னாட்சி உரிமையை விட்டுக்கொடுப்பதாகவோ இருந்துவிடக் கூடாது என்பதுவே தமிழ் தேசிய இனத்தின் எதிர்பார்ப்பாகும்.
Home
/
அரசியல்
/
இலங்கை
/
தமிழ்க்கட்சிகள்
/
"ஏற்றுக்கொள்ளக்கூடிய மதிப்பார்ந்த அரசியல் தீர்வு": தமிழ் கட்சிகள் அர்த்தப்படுத்துவது எதனை?
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 கருத்துரைகள் :
Post a Comment