![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFR4TDTiqJVzcNwh-YU99opSlJTcurAhuvYj7rAlvKvLs10YCRTEo4qLumYpcf_kMuz6yU4QhhyHogbxQ4kKUBpkRUIE6q3vsTg2cX-ntnKG4A5IuSxZh-I4zUMp-cDFBGtc6puETDAvo/s400/sivathambi.jpg)
இலங்கையின் தமிழ் நாளிதழ்களிலும் இலங்கைத் தமிழர் சார்பான இணையத்தளங்களிலும், தமிழக நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகளிலும் பரபரப்பாக அண்மைக்காலத்தில் பேசப் பட்டார் பேராசிரியர் கா.சிவத்தம்பி. தமிழகத்தில் அடுத்த வருடத்தில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நடத்த உத் தேசித்திருக்கும் உலக செம்மொழி மாநாட்டில் அவர் கலந்து கொள்வாரா, கலந்துகொள்ள மாட்டாரா என்ற விடயத்தை ஒட்டி எதிரும், புதிருமான பல கருத்துகளும், விமர்சனங்க ளும், விளக்கங்களும், வியாக்கியானங்களும் ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் தூக்கியடிக்குமாற் போல ஒன்றுக்கொன்று முரணான அல்லது ஒன்றுக்கொன்று வேறுபட்ட சார்பு நிலையுடைய தகவல்கள் பேராசிரியர் சிவத்தம்பி பக்கத்திலிருந்தே வெளியாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்தவும் தவறவில்லை.
இவற்றையெல்லாம் வாசித்தறிந்த தமிழ் கூறும் நல்லுல கின் பிரமுகர் ஒருவர் தமது தலையைப் பிய்த்தபடி "குழப்பத்தின் குளறுபடியின் வடிவம்தானோ பேராசிரியர் சிவத் தம்பி?'" என்று பலரையும் பார்த்து வினாவும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.
இந்த விவகாரத்தை ஒட்டி அலட்டிக் கொள்ளாமல் அதிக செய்திகளை ஒதுக்காமல் "உதயன்'"நாளிதழ் அதீத மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வியும் கூட வாசகர்களிடமிருந்து வரத் தவறவில்லை. ஆகவே இந்த விடயத்தை ஒட்டி நமது கருத்தை முன்வைப்பது தவிர்க்க முடியாததாகின்றது.
பேராசிரியர் சிவத்தம்பி மூத்த தமிழ் அறிஞர். நமது இலங் கைத் தமிழர் சமூகம் உட்பட அனைத்துத் தரப்பினரதும் மதிப் புக்கும் மரியாதைக்கும் உரியவர். இலங்கை விவகாரங்களை ஒட்டி காலத்துக்குக் காலம் அவர் வெளியிட்ட சில கருத் துகள் அவ்வப்போது அரசியல் ரீதியான சர்ச்சைகளை ஏற் படுத்தி வந்திருந்தபோதிலும் கூட, இலங்கைத் தமிழர் தரப் பில் அரசியல் நிலைப்பாடுகளில் நேரெதிர் கருத்துக் கொண்ட அணிகள் கூட ஒரே சமயத்தில் மதிப்புக்குரிய மாண்புடை யவராக அவரைக் கருதி கௌரவிக்கத் தவறவில்லை என் பது அவருக்குரிய சிறப்பு.
1980 களின் நடுப்பகுதியில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெய வர்த்தனா தலைமையிலான இலங்கை அரசின் படைகளுக் கும் அப்போது தமிழர்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந் திப் போராடிய பல்வேறு தமிழர் இயக்கங்களுக்கும் இடை யில் யுத்தநிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டபோது, அத னைக் களத்தில் நேரடியாகக் கண்காணிக்கும் கண்காணிப் பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படும் அளவுக்கு மதிப்பாய்ந்த பிரமுகராக எல்லோராலும் கணிக்கப்பட்டவர் பேராசிரியர் சிவத்தம்பி என்பதும் மறக்கக்கூடியதல்ல.
இலங்கைத் தமிழர்கள் மத்தியில் தமிழ்த் துறையில் போற் றப்படும் ஒரு பேரறிஞரான பேராசிரியர் சிவத்தம்பிக்கு இந்த விடயங்களில் இரண்டு தளங்களிலே பொறுப்பும், கடமையும், கடப்பாடும் இருப்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஒரு தளத்தில், தம்மைப் பொறுத்தவரை அவர் ஒரு கற்றறிந்த புலமையாளன். தனிப்பட்ட முறையில் அவருக்கென ஒரு வாழ்வு, சிந்தனை, குடும்பம், போக்கு என்பன உள்ளன. அவற்றின் அடிப்படையில் அவர் சிந்திப்பதும், முடி வெடுப்பதும், செயற்படுவதும் வேறு.
மற்றொரு தளத்திலே அவர் இலங்கைத் தமிழ் மக்க ளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதியாக இல்லாவிட்டாலும் கூட கற்றறிந்த இலங் கைத் தமிழ் சமூகத்தின் உயிர்வாழும் கலங்கரை விளக்க மாக விளங்குவதன் மூலம், அந்தப் படித்த சமூகத்தின் ஒரு சுட்டி யாகவும், குறியீடாகவும், பிரதிநிதியாகவும், இலக்கண மாகவும் கூட அவர் திகழ்கின்றார்.
அதாவது, பேராசிரியர் தன்னளவில் தனி மனிதனாக இருந்தாலும், அவர் தான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலங்கைத் தமிழ் அறிஞர் சமூகத்தின் ஒன்றுபட்ட குறியீடாகவும் விளங்குகின்றார் என்பது வெளிப்படை. இந்த இரண் டாவது தள நிலையில் வைத்து அவர் நோக்கப் படுகின்றமையால்தான் இந்த உலகத் தமிழ் மாநாட்டில் அவரின் பங்குபற்றுதல் என்பது சர்ச்சைக்குரியதாகின்றது.
இதற்கு முன்னர், தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த சமயம் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட் டுக்கு சென்றிருந்த பேராசிரியர் சிவத்தம்பி, சென்னை விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பப்பட்டு அகௌ ரவப்படுத்தப்பட்டார்.
ஆனால் அதன் பின்னர் பதவிக்கு வந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, முன்னைய நிகழ்வுக்கு பிராயச்சித் தம் செய்யும் வகையில் பேராசிரியர் சிவத்தம்பியை அழைத்துத் தமது மாநில அரசு மூலம் வி.க.விருது வழங்கி, இந்தியப் பணத் தில் ஒரு லட்சம் ரூபா வெகுமதியும் அளித்து கௌரவித்தார்.
ஜெயலலிதா செய்த அகௌரவமும், கலைஞர் கருணா நிதி தமக்கு முன்னர் செய்த கௌரவம் எனப் பேராசிரியர் சிவத்தம்பி கருதும் வி.க.விருதும், இப்போது அவர் நடத்த உத்தேசித்துள்ள உலக செம்மொழி மாநாட்டில் தமக்கு வழங்க அவர் முன்வந்துள்ள உயரிய இடமும், தனிப்பட்ட முறையில் பேராசிரியர் சிவத்தம்பி என்ற தனி மனிதனுக்கு அறிஞனுக்கு உரியவையா ? அல்லது இலங்கைத் தமிழினத்தின் அறிவுசார் சமூகத்தின் ஒட்டுமொத்தக் குறியீடாக விளங்கும் பேராசிரியர் சிவத்தம்பி என்ற தகைமையாள னுக்கு வழங்கப்படுபவையா? இதைத் தீர்மானிக்க வேண் டியவர் பேராசிரியர் சிவத்தம்பிதான். வேறெவரும் அல்லர்.
இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்த கற்றறிந்த சமூகத்தின் பிரதிநிதியாக அவர் தம்மைக் கருதுவாராயின், தற்போதைய கள நிலைமை விடயங்களில் தமது சமூகத் தின் கருத்து நிலைப்பாட்டை உள்வாங்கி, அதனடிப் படையில் இந்த மாநாட்டைப் புறக்கணிக்கும் தீர்மானத் துக்கு அவர் தாமாகவே வருவார்; வரவேண்டும்.
அப்படியல்லாமல், தம்மைத் தனிப்பட்ட மனிதனாகவும், தமக்கான அழைப்பு தமது அறிவுத் தகைமைக்கே உரிய விசேட விவகாரமே என்றும் அவர் கருதுவாரானால், அதன் அடிப் படையில் அந்த மாநாட்டிலும் அதையொட்டிய செயற்பாடுகளி லும் முழு அளவில் பங்குபற்றக்கூட அவர் தீர்மா னிக்கலாம்.
அப்படித் தம்மைத் தனிப்பட்ட மனிதனாகக் கருதி, இவ்விடயத்தில் அதனடிப்படையில் ஒரு தீர்மானத்தை அவர் எடுப்பாராயின், இலங்கைத் தமிழர்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டின் பின்புலத்திலிருந்து நாம் எப்படி அதைக் குறை கூற முடியும்? அது அவரது தனிப்பட்ட விவகாரம் என்று கருதிப் பார்த்திருப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
எனவே, தாம் தனி மனிதரா அல்லது மூத்த பேரறிஞர் என்ற வகையில், கற்றறிந்த இலங்கைத் தமிழர் சமூகத்தின் கட்டமைப்பைப் பிரதிபலிக்கும் ஒரு சின்னமா என்பதை அவர்தான் தீர்மானித்து அதன் அடிப்படையில் முடிவுசெய்ய வேண்டும்.
0 கருத்துரைகள் :
Post a Comment