யுத்தப் பேரழிவுகளிலும், பிற அனர்த்தங்களிலும், அடக்கு முறையின் அரூபக் கரங்களிடையேயும் சிக்கி, சிதைந்து, சின்னாபின்னமாகிக் கிடக்கின்றது இலங்கைத் தமிழினம்.
வலு ரீதியிலும், வள ரீதியிலும் பலமிழந்து தடுமாறும் தமிழினத்துக்கு இன்று சரியான வழிகாட்டல் அரசியல் வழிப்படுத்தல் அவசியமாகத் தேவைப்படுகின்றது.
இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இவ்விடயத்தில் அதிக சிரத்தையும், கவனமும் காட்ட வேண்டிய கட்டம் இது. தடுமாறி நிற்கும் தமிழினத்தின் தலையைத் தூக்கி நிமிர்த்தித் தன்மானத் தமிழினமாக மீண்டும் நிலை நிறுத் தச்செய்வதற்கான வழிகாட்டலைச் சரியான முறையில் வழங்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உள்ளது.
பல பிரிவுகளாக, பல அணிகளாக, பல குழுக்களாக, பல கட்சி களாகப் பிளவுண்டு கிடக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டாலேயே ஓரணியில் திரண்டாலேயே தமிழர் களுக்குப் பிரயோசனமான எதனையும் சாதிக்க முடியும்.
தமிழினத்தைத் துண்டுபடுத்தி, கூறாக்கி, எலும்புத் துண்டு எறிவது போல சில குழுக்களுக்கு ஓரிரு சலுகைகளையும் வாய்ப்பு, வளங்களையும் வழங்கி, அக்குழுக்களைத் தன் பக்கம் வளைத்துப் போடுவதன் மூலம், தன் விவகாரத்தைச் சாதுரியமாகச் சாதித்துக் கொள்வதில் தென்னி லங்கை பௌத்த சிங்களத் தலைமை முனைப்பாக இருக்கின்றது. அற்ப, சொற்பச் சலுகைகளிற்காகச் சோரம் போகும் சில தமிழ்த் தலைமைகளால் தென்னிலங்கையின் அந்த எண்ணம் கனகச்சிதமாய் ஈடேற, தமிழினத்தின் தலைகுனி வாழ்வு தொடர்கின்றது.
நாடாளுமன்றத்தில் இருபதுக்கும் அதிகமான எம்.பிக் களைக் கொண்டிருந்தும் தமிழினத்தின் தலைவர்களால் ஏதும் செய்ய முடியாத கையறு நிலைமை. உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்து, முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் முடக்கப்பட்டு, சுமார் ஆறு மாதங்களுக்கு மேல் சிறை வைக் கப்பட்டிருக்கும் தமது மக்களைக் கூட அந்த மக்களினால் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தாங்கள் இருந்தும் கூட நேரில் சென்று பார்க்கவும் சந்திக்கவும் வக்கற்ற நிலையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
இலங்கையின் எந்தச் சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எந்தக் கைதியைக் கூட சந்திக்கும் அதிகாரம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு உள்ளதாக இலங்கைச் சட்டம் கூறுகின்றது. ஆனால் நலன்புரி மையங்கள் என்ற பெயரில் இயங்கும் தடுப்பு முகாம்களில், எவ்வித காரணமுமின்றி முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் முடக்கப்பட்டிருக்கும் தமது மக்களை லட்சக் கணக்கான மக்களை மட்டும் தமிழ் எம்.பிக்கள் சந்திக்க முடியாத வகையில் விபரீதமான முறையில் இலங்கை யில் ஒழுங்கு விதிகள் இருக்கின்றன.
தேசிய அரசியலில் ஒழுங்கமைவான முறையில் பங் களிக்காமல், வடக்கு கிழக்கு அரசியல் பற்றிய ஒரு குறு கிய வட்டத்துக்குள் தமிழ்த் தலைமைகள் நின்றமையே, அவை இப்படி ஒதுக்கப்படுவதற்கும், புறந்தள்ளப்பட்ட சில அரசியல் தலைமைகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உள் நுழைந்து, தம்மை முன்னிலைப்படுத்தி, அந்த வெற்றிடங்களில் தம்மை நிலை நிறுத்தி குளறு படித்தனம் பண்ணுவதற்கும் சந்தர்ப்பம் வழங்குவதாகவும் சில விமர் சனங்கள் உண்டு. இவை ஆராயப்பட வேண்டிய விடயங்கள்.
சரியோ, பிழையோ, தமது உரிமைகளுக்கான கௌ ரவ வாழ்வுக்கான வாழ்வா, சாவா போராட்டத்தில் ஆயுதரீதியான வலுவில் பெரும் தளர்வையும், பின்னடைவையும் கண்டு நிற்கும் இலங்கைத் தமிழினம், அதனால் ஏற்பட்ட பாதிப்பைச் சமாளித்து, மீள எழுந்து நிமிர்வதற்கு, குறைந்த பட்சம் தனது அரசியல் வலிமையையாவது அவசரமாக அவசியமாக செப்பனிட்டு மேம்படுத்த வேண் டிய ஒரு கட்டாயம் இப்போது அதற்கு எழுந்துள்ளது.
அப்படி நிமிர்வதற்கு அரசியல் வலிமையை விரிவுபடுத்தி, பலப்படுத்தி, மேம்படுத்துவதற்கு இலங்கை தேசிய அரசியலில் இலங்கைத் தமிழினத்தின் தலைமைகள் காத்திரமான அளவு ஊடுருவி முக்கியத்துவம் பெறுவது அவசியமாகின்றது.
இலங்கையின் தேசிய அரசியலில் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் என்று தேசிய மட்ட ஜனநாயக நிகழ்வுகள் கட்டவிழ்கின்றமை இதற்கான உகந்த சந்தர்ப்ப சூழ் நிலையை இந்தத் தலைமைகளுக்குத் தந்து நிற்கின்றது என்பது கண்கூடு.
தமிழ்த் தலைமைகளின் இசைவோடும், இணக்கத் தோடும்தான் சில நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்ற நிலைமை தென்னிலங்கைத் தேசியக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், அதை வாய்ப்பாகப் பற்றிக் கொண்டு உரிய காய் நகர்த்தல்களை உரிய முறையில் செய்வதற்கும் அதன் மூலம் நாட்டின் தேசிய அரசியலில் தங்களின் முக்கியத்துவத்தை நிலை நிறுத்தி ஸ்தாபிப்பதற்கும் தமிழ்த் தலைமைகள் முன்வர வேண்டும்.
வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகள் போன்றவை குறித்து மட்டும்தான் கவனிப்போம் என்று குறுகிய வட்டத்துக்குள் தங்களை மட்டுப்படுத்திக் கொண்டு, "குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை"விடுத்து, முழு இலங்கைத் தீவின் தேசிய அரசியலின்பாலும் சிறிது கவனத்தைத் திருப்பி, அதில் முக்கிய இடத்தையும், பங்கையும் வகித்து அதில் செல்வாக்குச் செலுத்துவதன் மூலம், தமிழர் தாயக மக்களின் நலன் விவகாரத்திலும் தங்களின் ஈடுபாடு தவிர்க்க முடியாதது என்ற கட்டாயத்தைச் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு உணர்த்த தமிழ்த் தலைமைகள் முன்வரவேண்டும்.
இலங்கைத் தீவின் தேசிய அரசியலில் தங்களின் பங்களிப்பு ஈடுபாட்டை உறுதி செய்து நிலை நிறுத்துவதன் மூலம் தமிழர் தாயகம் சம்பந்தமான விடயங்களில் தாம் தவிர்க்க முடியாத வலுவான சக்தி என்பதை தென்னிலங் கைத் தரப்புக்கு உணர்த்துவது தமிழ்த் தலைமைகளின் இன்றைய கடமையாகும்.
0 கருத்துரைகள் :
Post a Comment