இலங்கை- இந்திய சூட்சும அரசியல் நகர்வும் ஈழத்தமிழர் கடமையும்

அண்மையில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகையின் பின்னணியில் இலங்கையின் அரசியல் தொடர்பான பல முக்கிய தீர்மானங்கள் உள்ளடங்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, முன்னாள் இராணுவத் தளபதியின் பதவி விலகல் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரான அரசியல் நிலைமை தொடர்பாகக் கடும் கரிசனை கொண்டுள்ள இந்தியா - பிரணாப் முகர்ஜியின் விஐயத்தின் பின்னணி தொடர்பாக என்னதான் காரணங்களைக் கூறினாலும் - அடிப்படையில் எப்படியாவது தனக்குச் சார்பான ராஜபக்சவின் அரசை மீளக் கொண்டுவருவதில் மேற்கொள்ளும் பகீரதப்பிரயத்தனத்தின் ஓர் அங்கமாகவே முகர்ஜியின் வருகை நோக்கப்படுகின்றது.

நடைபெறவுள்ள அரச தவைலர் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பதில் பிரதானப்பட்டிருக்கும் தமிழ்மக்களின் வாக்குகளை எப்படிக் கவரலாம் என்பதைக்கருத்தில் கொண்ட நகர்வுகளை ராஜபக்சவும் துணைநிற்கும் இந்திய அரசும் போட்டி போட்டுச் செய்கின்றனர். குறிப்பாக அகதிகள் விவகாரம், யாழ் வன்னி மக்களைக் கவரும் விதத்திலான கொள்கைகள், கோட்பாட்டுத் தளர்வுகள் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்துடன் தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் வன்னிப் பிரதேசத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கும், இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீள குடியேற்றப்பட்டுள்ள பிரதேசங்களிற்கும் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டு, போக்குவரத்து வசதிகளையும் வழங்க முன்வந்துள்ளது.


இந்தியாவும் ஈழத்தமிழ் மக்களிடம் இழந்துவிட்ட ஆதரவைப் பெற பலவகைகளில் முயற்சிக்கின்றது. குறிப்பாக கடந்த பத்தொன்பது வருடங்களாக கருத்தில் எடுக்கப்படாமல் இருந்த தமிழகத்தின் ஈழ அகதிகள் தொடர்பாக, அண்மையில் தீடீர் ஆய்வுகள் மேற்கொண்ட தமிழக அரசு 100 கோடி ரூபா ஒதுக்கீட்டில் கொங்கிறீற் வீடுகள் உட்பட சில சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வந்த சில நாட்களிற்குள்ளேயே பிரணாப் முகர்ஜியின் இலங்கைக்கான விஐயமும் இடம்பெறுகின்றது. மாகாண சபைக்கான கூடுதல் அதிகாரங்களை வழங்குதல், அகதிகள் மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்தல், கண்ணிவெடியகற்றலுக்கு மேலதிக உதவிகளை வழங்குதல் போன்ற செய்திகளைத் தாங்கிச்சென்றாலும் அவருடைய உள்நோக்கம் வேறுபட்டதாகவே இருக்கின்றது.

சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தூர வீச்சு எல்லையில் பல பிரதான தளங்களை தென்பகுதியில் நிறுவியிருக்கின்றது இந்தியா. ஆனால் தற்போது தனது பிடரிக்குள் ஆபத்து சூழ்வதைத் தடுப்பது அவர்களது முக்கிய பிரச்சனையாக மாறியிருக்கின்றது. அதற்காக என்ன விலையையும் கொடுக்கத் தயாராகி செயற்பட்டுவருகின்றது. ஏனெனில், இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இருமுனைப்போட்டிக்கான வாய்ப்புகள் பிரகாசமடையத் தொடங்கியுள்ளன. இதில் எதிரணி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் சரத்பொன்சேகா சீனா, பாகிஸ்தான் அபிமானி என அண்மையகால சம்பவங்களிலிருந்து இந்தியா ஊகிக்கின்றது. எனவே சரத்பொன்சேகா பதவிக்கு வருவதை இந்தியா முற்றுமுழுதாக விரும்பவில்லை. எப்படியாவது ராஜபக்சவை வெற்றி பெற வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவே முயல்கின்றது.

ராஜபக்சவிற்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் சந்தர்ப்பத்தில் ஐனாதிபதித் தேர்தலை தற்போது நடத்தாமல் விட்டுவிட்டு பொதுத்தேர்தலை நடத்தி அதன் வெற்றி தோல்வியடிப்படையில் ஐனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான முடிவுகளும் பரிசீலனையில் உள்ளன. என்றாலும் முதலில் ராஜபக்சவின் வெற்றிவாய்ப்பிற்குத் தடையாக வரக்கூடிய காரணிகளை அப்புறப்படுத்தப்படுத்துவதில் இந்தியா முனைப்புடன் செயற்படுகின்றது.

அதாவது -* எதிரணியின் பொதுவேட்பாளராக சரத்பொன்சேகாவை நிறுத்தாமல் செய்வதற்கு ஐ.தே.கட்சியுடன் உடன்பாட்டிற்கு வருதல்.
*ராஜபக்ச மற்றும் சரத்பொன்சேகாவிற்கு இடையில் உடன்பாட்டைக் கொண்டுவருதல்.
*சரத்பொன்சேகாவை தேர்தலில் போட்டியிடவேண்டாம் என நேரடியாக வலியுறுத்தல்.
*எந்த வகையிலாவது தமிழ்மக்களின் வாக்குவங்கியை ராஜபக்சவிற்குச் சார்பாக திருப்புதல் அல்லது *தமிழ்மக்களைத் தேர்தலில் ஆர்வம் காட்டாமல் செய்தல்.
*தமிழ்க்கட்சிகளை சரத்பொன்சேகாவிற்கு எதிரான அரசியல் முடிவுகளை எடுக்குமாறு வற்புறுத்தல் மற்றும் இந்தியாவிற்குச் சார்பான முடிவுகளிற்கு வரக்கூடியதான ஏற்பாடுகளைச் செய்தல்
*ஐனாதிபதித்தேர்தலில் ராஜபக்சவிற்கான வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் ஐனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்தி, தமிழ் மக்களின் மனங்களை வெல்லுதல், சரத்பொன்சேகாவின் முனைப்பை மழுங்கடிக்கச்செய்தல், சிங்கள மக்கள் மத்தியில் அபிவிருத்தியை மேலோங்க வைத்து யுத்த வெற்றி மனநிலை உணர்வைக் குறைத்தல்.


இவ்வாறு இந்தியாவும் இலங்கையும் அரசியல் ரீதியில் பரஸ்பரம் ஆசுவாசப்படுத்தும் முயற்சிகளின் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் ஈழத்தமிழர்கள் இந்த சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதுதான் இன்றைய கேள்வி.

ஈழத்தமிழர், அவர் நலன்பேசும் அரசியலாளர்களின் கடமை

புலிகளின் ஆயுதப்போராட்ட பின்னடைவிற்குப் பின் உள்ள அரசியல் நிலைமையினை கையாள்வது என்பதே இன்று தமிழ்மக்களுக்குள்ள மிகவும் முக்கியமான பிரச்சினை. இதற்கு, தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து பொது அரசியல் தீர்மானத்தை எட்டுதல் வேண்டும். எடுக்கப்படும் அரசியல் தீர்மானம் மக்களின் கருத்துக்கணிப்பிற்கு விடப்பட்டு, பொதுத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் மூலம், தமிழ் மக்களின் வாக்குப்பலத்தைப் பயன்படுத்திக் திருப்திகரமான அரசியல் உரிமைகளை பாதுகாக்க முயற்சிகள் எடுக்கவேண்டும். முக்கியமாக ராஐபக்ச குடும்பத்தை மனித உரிமை மீறல் விசாரணைக்கு முன்னிலைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு ஆட்சியிலிருந்து அகற்றுதல் வேண்டும். இதனூடாக தமிழ்மக்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையை மேலும் சர்வதேச அளவில் பிரபல்யப்படுத்தி சர்வதேச ஆதரவை பலப்படுத்த வேண்டும். அத்துடன் கருணா, டக்ளஸ் போன்ற தமிழின தேசியத்திற்கு எதிராக செயற்படுபவர்களை அரசியல் ஏதிலிகளாக்குவதன் மூலம் தேசியத்திற்கான குரலை வலுப்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம், தமிழ்மக்கள் தமது ஒன்றுபட்ட கோட்பாட்டிலான வாக்குகளின் மூலம் சாதித்துக் கொள்ள முடியும். இதற்கு, தமிழ்மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தக்கொள்ள தீர்மானிப்பவரிடம் பெறவேண்டிய வாக்குறுதிகள் எவை?• 

இணைந்த வடக்கு கிழக்கு தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தீர்வை ஏற்றுக்கொள்ளல்.
* தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் சிங்களக் குடியேற்றங்களைகளை நிறுத்துதல்
* அகதிகள் மீள்குடியேற்றம்
* உயர்பாதுகாப்பு வலயங்களின் மக்கள் மீள்குடியேற்றம்
* போராளிகளுக்கான பொதுமன்னிப்பு
*கைதுசெய்யப்பட்டுக் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களின் விடுதலை
• சுதந்திரமான மக்களின் நடமாட்டம்


வாங்குவங்கியினூடாக அடையக்கூடிய விடயங்களை அடிப்படையாக வைத்து ஒன்றிணைந்து குரல் கொடுத்து, அதற்கு ஆதரவளிக்கும் கட்சியைத் தேர்ந்தெடுப்பதனூடாக திருப்திகரமான அரசியல் அடைவையாவது பெறுதலே தமிழ்மக்களுக்கு தற்போது உகந்தது. எனவே தமிழ் அரசியல்வாதிகள் புத்தியீவிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களை படுகுழிக்குள் விழாமல் தடுக்க தமிழர்களின் அரசியல் அடைவுகள் எவை? அதற்கான வழிமுறைகள் என்ன? என்பதை தீர்மானித்து மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட வேண்டும். கலந்துரையாடப்படும் தீர்மானங்கள் எவை என தாயகமக்கள், புலம்பெயர் சமூகத்தின் கருத்துக்கணிப்பிற்கு விட்டு எல்லோரது ஆதரவின் அடிப்படையில் மக்கள் தீர்மானமாக முன்மொழிவதன் மூலம், மக்களின் வாக்குகள் சரியான முனையில் செலுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளை வேகமாக முன்னெடுத்து தமிழ்மக்களை ஒன்றிணைக்கும், முக்கியமாக தென் இலங்கை சக்திகளின் அரசியல் பிடிக்குள் சிக்கவிடாது தமிழர்களை ஒன்றிணைந்து, அவர்களின் பலத்தை ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய காலமிது. காலத்தின் கடமையைச் சரிவர செய்யாவிட்டால் ஆண்டாண்டு காலமாக ஆண்டு வந்த தமிழினம், சிதைந்து சின்னாபின்னமாகி, அழிந்து அடையாளமில்லாமல் போய்விடும் என்பதை மறந்துவிடக்கூடாது.

தமிழ்மக்களின் அரசியல் பேசுபவர்களின் கடமை மக்களை ஒன்றிணைப்பது. கருத்தியல் ரீதியான தெளிவைக் கொடுத்து விவாதித்து, பொதுமுடிவிற்குள் ஒன்றாவதே தவிர தமிழ்தேசிய உணர்வாளர்களுக்கு 'துரோகி' பட்டம் கொடுத்து அவர்களையும் அவர்கள் சார்ந்த மக்களையும் கூறாக்கிப் பிரித்து பலவீனப்படுவதல்ல தற்போதைய முக்கியமான விடயம். இச்செயற்பாடுகள் தற்போது பலவீனப்பட்டிருக்கும் இனத்தை மேலும் பலவீனமடையச்செய்யும் என்பதை மறந்தவிடக்கூடாது. காலத்திற்குப் பொருத்தமற்ற தீர்மானங்களை எடுத்தல், தேர்தல்களை மட்டும் நடாத்துதலை விடுத்து, காலத்திற்கு பொருத்தமான, அவசரமாக, அடிப்படையாக செய்யப்படவேண்டிய, கவனிக்கப்படவேண்டிய பிரச்சனைகளை முன்னிறுத்திச் செயற்படுவதே சரியான விளைவுகளுக்கான அடிப்படையாக அமைகின்றது.

நீண்டகாலமாக பல அழிவுகளையும் துன்பங்களையும் சந்தித்துக்கொண்டிருக்கும் இனத்தின் ஆயுதபலமே அரசியல் தீர்விற்கான களச்சூழலை வழங்கி இருந்தது. தற்போது இராணுவ ரீதியாகப் பலவீனமடைந்துள்ள நிலையில் மக்களை ஒருங்கிணைத்து அரசியல் ரீதியாக செயற்படுவதே காலத்திற்கு உகந்தது. தமிழ் தேசியத்தைப் பற்றிப்பேசும், செயற்படும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.ஆனால் தற்போதைய தமிழின அவமானமாகவும் வெட்கக்கேடாகவும் இருப்பது தமிழீழ விடுதலைப்புலிகளின் பின்னடைவிற்கு முந்தைய காலம்வரை ஒன்றிணைந்திருந்த புலம்பெயர் தமிழ்சமூகம் இன்று பிரிந்திருப்பதும், பிரிந்திருந்து ஒரேகருத்தை வெவ்வேறு கோணங்களில் பேசுவதும்தான். ஆங்கிலேயன் ஆட்சிசெய்வதற்காகப் பிரித்து ஆட்சிசெய்தான். அன்றிலிருந்து தமிழ் மக்கள் பிரிந்திருப்பதோ அல்லது பிரிக்கப்படுவதே பலவீனமாகவும் அழிவுக்குமான காரணமாக அமைந்துவிட்டது. ஆனால் தமிழர்களுடைய அரசியல் விடுதலை தொடர்பாக கருத்து பேதம் தமிழ்தேசிய உணர்வாளர்களிடையே இருக்க முடியாது.

எனவே சுயநல நோக்கங்களை விடுத்து, நிம்மதியான வாழ்க்கைக்காக ஏங்கியிருக்கும் தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் திருப்திகரமான ஒரு அரசியல் தீர்விலிருந்து ஒருமுடிவை நோக்கி நகர ஒன்றிணைய வேண்டும் அல்லது விலகி வழிவிட வேண்டும். இல்லையேல் மக்கள் தூக்கியெறியும் காலம் தூரத்தில் இல்லை.

சந்தர்ப்பங்கள் அரிதாகவே அமைவதால் வாய்ப்புள்ள போதே சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்த வேண்டும்.என்பதைப்போல தற்போதிருக்கும் பிராந்திய அரசியல் போட்டியையும் மனித உரிமை விடயத்தில் சிக்கியிருக்கும் ராஜபக்ச குடும்ப அரசை, தற்போது தமிழ்மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைக்களிற்கு சாதகமாக இருக்கும் மேற்குலக அரசியல் போக்கின் சூழலை தமிழ் மக்களிற்குச் சாதகமாக்குவதும் அதற்காக ஒன்றிணைந்து உழைப்பதுமே இன்றைய காலத்தின் மிகமுக்கியமான செயற்பாடு.

முக்கியமாக தமிழ், முஸ்லீம், மலையக்கதமிழர்கள் என எல்லோரும் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். தற்போதிருக்கும் பிரதான கட்சிகளின் அரசியல் போட்டியில் தமிழ் மக்கள் தமக்கு சாதகமான, கிடைக்கக்கூடிய அரசியல் முடிவுகளை முன்வைத்து அவற்றை அடைவதற்கான வழிவகைகளை பார்ப்பது அவசியமாகும்.

எனவே கருத்து பேதங்களை விடுத்து ஒன்றிணைந்து செயற்படும் இந்த அரிய இறுதிச்சந்தர்ப்பத்தை சரியாகவும் நேர்த்தியாகவும் பயன்படுத்துமாறு தமிழ் மக்கள் சார்பாக தமிழ்த்தேசிய உணர்வாளர்களை கேட்டுக்கொள்ள வேண்டியது காலத்தின் கடமையாகின்றது.
Share on Google Plus

About அபிஷேகா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment