சிறிலங்காவில் சட்டத்துக்குப் புறம்பாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தி உள்ளது.
வன்னி தடுப்பு முகாம்களில் உள்ள மக்களுக்கு டிசெம்பர் முதலாம் திகதி முதல் நடமாட்ட சுதந்திரம் வழங்கப்படும் என சிறிலங்கா அரசு சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. அரசின் இந்த நடவடிக்கையை “சாதகமான நடவடிக்கை” என வரவேற்றுள்ளது மனித உரிமைகள் கண்காணிப்பகம்.
அதேசமயம், விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் அனைத்துலக சட்டங்களுக்குப் புறம்பாகப் பலரை அதிகாரிகள் எழுந்தமானமாகத் தடுத்து வைத்திருப்பது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது ஆழந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளது.
முகாம்களில் உள்ளவர்களில் அதிகாரிகளால் அவதானிக்கப்படும் சிலர் விடுவிக்கப்படுவதற்குப் பதிலாக வேறு தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள் என்று தனக்குத் தெரிய வந்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.
அதற்கும் மேலாகத் தற்போது, 11,000க்கும் மேற்பட்டவர்களை எந்தவிதக் குற்றச்சாட்டுக்களும் இன்றி விடுதலைப் புலிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் அரசு தடுத்து வைத்திருக்கிறது எனத் தெரிவித்திருக்கும் கண்காணிப்பகம், “இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துங்கள் அல்லது விடுவியுங்கள்” என அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
“நீண்ட காலத்தின் பின்னராக இருந்தாலும் முகாம்களில் இருந்து மக்களை விடுவிப்பதாக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பல தமிழர்களை அரசு இன்னும் தடுத்து வைத்திருக்கிறது.
சிறிலங்கா அல்லது அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட வழங்கப்படவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய இயக்குநர் பிரட் அடம்ஸ்.
“மக்களை விடுவிப்பதான அறிவிப்பு எழுந்தமாக இடம்பெறும் தடுத்து வைப்புக்களை எந்தவிதத்திலும் மன்னிப்பதாக அமைந்து விடக்கூடாது” எனவும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்த அறிக்கையின் விபரம்:
:
கண்காணிப்பகத்திற்கு கிடைத்த தகவல்களின்படி, முகாம்களில் உள்ள மக்களில் சிலர் டிசெம்பர் முதலாம் திகதி விடுவிக்கப்படமாட்டார்கள். அவர்களை அதிகாரிகள் இப்போதே அடையாளப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் விடுவிக்கப்படுவதற்குப் பதிலாக மெனிக் பாமில் உள்ள சிறப்பு தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட உள்ளார்கள். அந்த சிறப்பு முகாம்கள் புனர்வாழ்வு நிலையங்கள் என அழைக்கப்படுகின்றன.
மெனிக் பாம் முகாமில் இருந்து ஆனந்தன் என்பவரும் இன்னும் பத்திற்கும் மேற்பட்டவர்களும் ஒக்டோபர் 5ஆம் திகதி அன்று அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர் என ஆனந்தனின் மனைவி மனித உரிமைகள் கண்காணிப்பகத்திடம் தெரிவித்திருப்பது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
“ஒக்டோபர் 5ஆம் திகதி அவர்களைப் பிடித்துச் செல்ல வந்தவர்கள் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் சொன்னதெல்லாம் - அவரிடம் விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது, அது முடிந்ததும் ஓரிரு நாட்களில் திரும்பி வந்துவிடுவார் என்பதுதான்.
“ஆனால் அவரிடம் இருந்து எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில் நான் குற்றப் புலனாய்வுப் பிரிவுக் காவல்துறையினரிடம் சென்றேன். அவரை என்னிடம் திருப்பித் தந்துவிடுமாறு நான் அழுதேன், கெஞ்சினேன். ஆனால், என்னை அங்கிருந்து போகும்படி மட்டுமே அவர்கள் சொன்னார்கள்” என்றார் ஆனந்தனின் மனைவி.
பிடித்துச் செல்லப்பட்டு 15 நாட்களின் பின்னர் ஆனந்தன் எழுதிய கடிதத்தின் மூலமாக அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் அவரது மனைவிக்குத் தெரியவந்தது. அந்த நேரத்தில் ஆனந்தனின் மனைவி மெனிக் முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.
அத்துடன் பம்மைமடு முகாமுக்குச் சென்று ஆனந்தனைப் பார்வையிட்டவும் அவரால் முடிந்தது.
“அவர் அந்த முகாமில் எவ்வளவு காலம் தங்கி இருக்க வேண்டி இருக்கும் என்பது குறித்து ஆனந்தனுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் (அதிகாரிகள்) அவரிடம் எதுவும் சொல்லவில்லை. நான் அங்கு செல்லும் வரையில் அவர் நீதிவான் முன் கொண்டு செல்லப்படவில்லை. அத்துடன் சட்டவாளர் ஒருவரைத் தனக்காக அமர்த்திக் கொள்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை” என மேலும் கூறினார் ஆனந்தனின் மனைவி.
இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து பாதுகாப்புடனும் மதிப்புடனும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதை சிறிலங்கா அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோருகின்றது.
மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை அல்லது விரும்பவில்லை என்றால் விரும்பும் இடத்தில் அவர்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். அல்லது திறந்த முகாம்களில் தங்குவதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 140,000 மக்கள் அதிகாரிகளால் தமது வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் அல்லது நலன் விரும்பிகள் குடும்பங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால், அவர்கள் விடுவிக்கப்படும் போது செல்ல வேண்டிய இடங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்குத் தரப்படவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு தெரிய வந்திருக்கிறது. அவர்களில் சிலர் வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட இடங்களுக்கு ஏனையவர்கள் செல்ல அரசு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பாகக் கவலை கொண்டுள்ளது.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்குச் செல்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களுக்கு அரசு அனுமதி வழங்கி இருக்கின்ற போதும், அனைத்துலக மனிதார்ந்த நிறுவனங்கள் அங்கு செல்வதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
இருப்பிடங்கள், உணவு, தண்ணீர் சுகாதார வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான தேவைகள் பெருமளவில் இருந்த போதும் இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
“தமது வீடுகளுக்குத் திரும்பி உள்ள மக்களிடம் செல்வதற்கு அனைத்துலக உதவி அமைப்புக்களுக்குத் தடை விதிப்பதன் மூலம், அந்த மக்களின் நலன்களையும் சுகாதார நிலையையும் அரசு மேலும் ஆபத்திற்குள் தள்ளுகிறது” என்கிறார் அடம்ஸ். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய இயக்குநர் அவர்.
“மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளை, மீள்கட்டுமானத்திற்கான உதவிகளை வழங்கும் நிதியாளர்கள் நிராகரித்துள்ளனர் என்பதுடன் சுயாதீனக் கண்காணிப்பாளர்கள் அந்த மக்களை சுதந்திரமாகச் சென்றடைவதையும் வலியுறுத்துகின்றனர்” என்றும் அவர் கூறினார்.
Home
/
இலங்கை
/
மனித உரிமைகள்
/
தமிழர்களை தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்கு உட்படாதது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 கருத்துரைகள் :
Post a Comment