அமெரிக்க நாடாளுமன்றத்தின் (காங்கிரஸின்) ஒரு பிரிவான சனப் பிரதிநிதிகள் சபை இலங்கை தொடர்பில் மிக முக்கியமான தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கின்றது.
421 வாக்குகளுக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் அமெரிக்க சனப் பிரதிநிதிகள் சபையின் ஏகமனதான தீர்மானம் என்றே கருதப்படக்கூடியது இது.
வவுனியாவில் முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப் பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகல தமிழர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களை விடுவிக்கும் படி அமெரிக்க சனப் பிரதிநிதிகள் சபை இலங்கை அரசை இத்தீர்மானம் மூலம் வற்புறுத்திக் கோரியிருக்கின்றது.
இந்த அகதிகளை விடுவிப்பது தொடர்பில் இலங்கை அதிகாரபீடம் ஆரம்பத்தில் காட்டிய விடாப்பிடிப் பிடிவாத நிலைமை, சர்வதேச அழுத்தம் காரணமாகத் தளர்வுறத் தொடங்கியுள்ள இந்தச் சூழலிலேயே இத்தீர்மானம் அமெரிக்கத் தரப்பிலிருந்து வெளியாகியிருக்கின்றது.
இந்தத் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தி, கட்டாயப் படுத்தி வழிப்படுத்தும் ஒன்றல்ல. இது ஒரு வெறும் கோரிக்கை மட்டும்தான்; வேண்டுகோள் மட்டும்தான்.
என்றாலும், அமெரிக்கத் தரப்பிலிருந்து அதுவும் அமெரிக்க சனப் பிரதிநிதிகள் சபையால் ஏறத்தாழ ஏகமனதான தீர்மானம் என்பது போல இந்த வேண்டு கோள் வந்திருப்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
இந்தத் தீர்மான வாசகங்களில் உள்ளடங்கியுள்ள சில வசனங்கள் நோக்கற்பாலவை.
இப்போது அண்மைக்காலத்தில் பெரும் எண்ணிக்கையான அகதிகள் அவர்களது முகாம்களிலிருந்து தினசரி மீள் குடியேற்றப்படுகின்றனர் என்று செய்திகள் வெளியாகின்றன.
முதலில் பெரும் எண்ணிக்கையானோர் அகதிமுகாம் களிலிருந்து விடுவிக்கப்படுகின்றனரா என்ற கேள்வி எழுகின்றது. அடுத்தது அவர்கள் மீள்குடியேற்றப்படு கின்றனரா என்ற வினா கிளம்புகின்றது.
இப்போது அகதிகள் முகாம்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையானோர் விடுவிக்கப்படுகின்றனர் என்பதே உண்மை. மீள்குடியேற்றப்படுகின்றனர் என்று கூறப்படுவது பெரும்பாலும் வெறும் கண்துடைப்புத்தான்.
மீள்குடியேற்றம் என்பது இடம்பெயர்ந்த அகதிகளை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர வழி செய்வது. அதற்கான கட்டுமானங்களையும், அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பது. வன்னி அகதி களைப் பொறுத்தவரை இப்போது பெரும்பாலும் அது நடை பெறுவதில்லை.
யாழ்ப்பாணத்திலோ, வவுனியாவிலோ அல்லது மன்னாரிலோ, தென்னிலங்கை போன்ற பகுதிகளிலோ உற்றார் உறவினர்கள் இருக்கின்ற அகதிகள் அத்தகைய தரப்புகளுடன் போய்ச் சேர்ந்துகொள்ள வசதியாக முகாம் களிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர் என்பதே பெரும் பாலும் உண்மை. இதனை மீள்குடியேற்றமாகக் காட்ட முயல்வது வெறும் அபத்தமாகும். இப்போது இங்கு அதுதான் நடக்கின்றது.
அமெரிக்க சனப் பிரதிநிதிகள் சபையும் தனது தீர் மானத்தில் இந்த அகதிகள் அனைவரையும் முதலில் முகாம்களுக்குள் முடக்கம் என்ற "சிறைவைப்பில் இருந்து" விடுவிக்கும்படிதான் கோரியிருக்கின்றது.
அதற்கு அடுத்தஇரண்டாவதுவிடயம்தான் மீள்குடியேற்றமாகும்.
எந்தவித காரணமுமின்றி அப்பாவி மக்களைப் பல லட்சக்கணக்கில் முகாம்கள் என்று கூறப்படும் ஒரு சிறிய பகுதிகளுக்குள் முடக்கி சிறை வைத்திருப்பது முதலில் அநீதியானது. இலங்கைச் சட்டங்களுக்கு மாத்திரமல்ல, சர்வதேச மனிதாபிமான நடைமுறைகளுக்கும் முற்றிலும் மாறான நடவடிக்கை இது என்பதால், முதலில் விடுவிப்புக்கான வற்புறுத்தல் முன்வைக்கப்படுகின்றது.
அமெரிக்க சனப் பிரதிநிதிகள் சபையின் தீர்மானத்தில் அடுத்துக் கூறப்பட்டிருப்பது, மேற்படி நாட்டுக்குள் இடம்பெயர்ந்த அகதிகள் தொடர்பில் அவர்களைப் பரா மரித்துப் பேணும் சேவையில் ஈடுபட்டிருக்கின்ற அரச, அரச சார்பற்ற அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவைக்குழு போன்றவற்றின் பிரதிநிதிகள் நாளாந் தம் இந்த அகதி முகாம்களுக்கு நேரில் சென்று இந்த அகதிகளின் நிலைமைகளைப் பார்த்தறிந்து உடனடி நட வடிக்கைகளைத் தேவைப்பட்ட சமயங்களில் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்பதுதான்.
அடுத்தது, இந்த அகதி முகாம்களில் அதிக எண் ணிக்கையில் இறப்புகள், மோசமான தொற்றுநோய்ப் பரவல், சுகாதாரச் சீர்கேடுகள், மருத்துவக் கவனிப்பின்மை போன்ற குறைபாடுகள் நிலவுகின்றன என்ற குற்றச் சாட்டுகள் குறித்து மதிப்பீடு செய்வதற்கு சுதந்திரமான சுயாதீனமான குழுக்களையும் தரப்புகளையும் முகாம்களுக்குள் அனுமதிக்குமாறும் அமெரிக்க சனப்பிரதி நிதிகள் சபை கொழும்பை வற்புறுத்தியிருக்கின்றது.
இதேவேளை, இலங்கைத் தமிழர்களின் அரசியல் கவலைகள் பற்றிய விடயத்தைக் கவனிப்பதற்காக அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகளிலும், விரைந்து முன்னேற்றத்தைக் காட்டுமாறு கொழும்பை இத்தீர்மானம் வற்புறுத்தியிருக்கின்றது.
அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் இக்கேள்வி களுக்குக் கொழும்பின் பதில் என்ன? சரியான பதிலை வழங்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசு கடப்பாடுடையது என்பது மறைக்கப்பட மறுக்கப்பட முடியாத சர்வதேச அரசியல் யதார்த்தமாகும்.
0 கருத்துரைகள் :
Post a Comment