தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் நந்திக் கடலில் முற்றுப் பெற்றபோது, தமிழர் மத்தியில் துருத்திக் கொண்டு தெரிந்த ஒரு கேள்வி –அடுத்தது என்ன? ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்ன? விடுதலைப்புலிகளின் அரசியல் முடிவுற்று மூன்று வருடங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் எவராலும், ஒரு தெளிவான அர்த்தபுஸ்டியான பதிலை கொடுக்க முடியாதளவிற்கே நிலைமைகள் இருந்தன. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் - ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமையாக வெளித்தெரிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அன்றைய சூழலில் சாதாரண மக்களைப் போன்றே அடுத்தது என்ன என்னும் கேள்விக்கு விடை தேடிக்கொண்டிருந்தது. ஒரு வகையில் திடீரென்று மின்சாரமிழந்துபோன வீடு ஒன்றில் உள்ளவர்கள், இனி வெளிச்சதிற்கு என்ன செய்வதென்று தெரியாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் ஒரு நிலைமையுடன் ஒப்பிடக் கூடியதொரு நிலையில்தான் கடந்த மூன்று வருடங்களாக ஈழத் தமிழர் அரசியல் இருந்தது.
இத்தகையதொரு சூழலில்தான் அரசு கிழக்கிற்கான மாகாணசபைத் தேர்தலை அறிவித்தது. அரசு தேர்தலை அறிவிப்பதற்கு முன்னரே மாகாணசபையில் ஒன்றுமில்லை என்றவாறான பிரச்சாரங்களை சில தமிழ்தேசிய சக்திகள் ஆரம்பித்திருந்தனர். கூட்டமைப்பு இதில் பங்குகொள்வது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது போன்ற விமர்சனங்களை அவர்கள் முன்வைத்துக் கொண்டிருந்தனர். த.தே.கூட்டமைப்பினை எப்பாடுபட்டேனும் மாகாணசபைக்கு எதிர்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதே அவ்வாறானவர்களின் நோக்கமாகவும் விருப்பமாகவும் இருந்தது. விடுதலைப்புலிகளின் அரசியலற்ற கிழக்கில் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலை அப்போதிருந்த த.தே.கூட்டமைப்பு நிராகரித்திருந்தது. அப்போது த.தே.கூட்டமைப்பு விரும்பியிருந்தாலும் விடுதலைப்புலிகள், கூட்டமைப்பை அனுமதித்திருக்கப் போவதில்லை என்பதுதான் உண்மை.
புலிகள் அனுமதித்திருந்தால் அப்போதே த.தே.கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 1988இல் இடம்பெற்ற முதலாவது வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணசபையில் போட்டியிடாமையானது இன்று திரும்பிப் பார்க்கும் போது ஒரு தவறுதான் - என்று எண்ணுமளவிற்கு யதார்த்தமாக சிந்திக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாணசபைத் தேர்தலை விரும்பி நிராகரித்திருக்க வாய்ப்பில்லை என்றே கணிக்கலாம். எனவே இன்று த.தே.கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையை புறக்கணித்திருக்க வேண்டும் என்று வாதிடுவோர், தெளிவாகவே விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இருந்தது போன்றதொரு த.தே.கூட்டமைப்பையே இப்போதும் விரும்புகின்றனர். விடுதலைப் புலிகளுக்கு பின்னர் இடம்பெற்றுள்ள அரசியல் யதார்த்தங்களையோ பிராந்திய சர்வதேச நிலைமைகளையோ எந்தவகையிலும் புரிந்து கொள்ள முயற்சிக்காத சில தேசியவாத சக்திகள், தங்களைப் போன்றே த.தே.கூட்டமைப்பும் யதார்த்தங்களை புறம்தள்ளி கற்பனையில் சீவிக்க வேண்டுமென்று விரும்புகின்றனர்.
இந்த பின்னணியில்தான் த.தே.கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் கிழக்கு மாகாணசபை தேர்தலில் பங்குகொள்ளும் முடிவை அறிவிக்கின்றார். உண்மையில் த.தே.கூட்டமைப்பின் மேற்படி அறிவிப்பானது - அதுவரை அடுத்தது என்ன என்றதொரு கேள்வியுடன் கழிந்துகொண்டிருந்த ஈழத் தமிழர் அரசியல் சூழலில், ஒரு நம்பிக்கையாகவும் ஒரு முன்னேறிய நகர்வாகவும் அமைந்திருந்தது. இங்கு நிலைமைகள் தொடர்பாக அறிக்கையிடுவதற்கும், குறிப்பிட்ட சூழலில் ஒரு செயல் மூலமாக அரசியலைக் கையாள முயற்சிப்பதற்கும் இடையில் அடிப்படையிலேயே அதிக வேறுபாடுண்டு. இன்று மாகாணசபை தேர்தலில் த.தே.கூட்டமைப்பு பங்கு கொள்வதானது, இரண்டாவது வகையைச் சார்ந்தது. மாகாண ஆட்சியில் பங்கு கொள்வதன் மூலம் கூடுதல் அதிகாரங்களை பெறுவதற்கான ஒரு புதிய அரசியல் களத்தை திறப்பதற்கான முயற்சியிலேயே இப்போது கூட்டமைப்பு களமிறங்கியிருக்கிறது. த.தே.கூட்டமைப்பு இப்படியொரு முயற்சியில் இருக்குமாயின் மட்டும்தான், அது சரியான அரசியலை நோக்கிப் பயணிப்பதாகவும் அர்த்தம் கொள்ளலாம்.
எனவே தமிழ் மக்களின் பிரதான அரசியல் சக்தியான, த.தே.கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையில் போட்டியிடுவதன் மூலம், ஈழத் தமிழ் மக்களின் அரசியல் புதியதொரு கட்டத்திற்குள் பிரவேசித்திருக்கிறது. இதனை பிறிதொரு வகையில் சொல்வதானால், இதுவரை எதிர்ப்பு அரசியல் மட்டுமே செய்து கொண்டிருந்த தமிழர் தரப்பு, முதல் முதலாக மாகாண ஆட்சியில் பங்குகொள்ளும் அரசியலை நோக்கி நகர்ந்துள்ளனர். இங்கு ஆட்சியில் பங்குகொள்ளுதல் என்பது அரசின் அனைத்துப் போக்குகளையும் கூட்டமைப்பு அங்கீகரித்துச் செல்வது என்பதல்ல, ஆனால் ஆட்சியில் பங்குகொள்ளும் அதேவேளை ஆட்சி முறையில் உள்ள குறைபாடுகளை அம்பலப்படுத்தி அதிகாரங்களை அதிகரிப்பதற்கான ஓர் உள்போராட்ட அரசியலையும் கூட்டமைப்பு செய்ய வேண்டியுள்ளது. இந்த இடத்திலேயே சர்வதேச ஆதரவு என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
உண்மையில் மாகாண சபையில் பங்குகொள்வதன் மூலம் த.தே.கூட்டமைப்பு தற்கொலை அரசியலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஈழத் தமிழர் அரசியலுக்கு ஓர் அடித்தளத்தை உருவாக்கியிருக்கிறது. நான் முன்னைய பத்தியொன்றில் குறிப்பிட்டவாறு மாகாணசபை ஈழத் தமிழர் அரசியலுக்கான ஓர் அடித்தளத்தை, வழங்கிக் கொண்டிருப்பதன் காரணமாகவே - தெற்கின் சிங்கள அடிப்படைவாத சக்திகள் மாகாணசபைக்கு ஆதரவாக இருக்கும் 13வது திருத்தச் சட்டத்தையே அரசியல் யாப்பிலிருந்து நீக்க வேண்டுமென்று வாதிட்டு வருகின்றனர். மாகாணசபையில் ஒன்றுமில்லை என்று வாதிப்போர் இதனை கருத்தில் கொள்வது அவசியம். மாகாணசபை என்பது ஒர் அடிப்படையாகும். நாளை இலங்கைக்குள் எத்தகைய தீர்வு குறித்து பேசுவதானாலும், அதற்கான அடித்தளமாக இருக்கப்போவது மாகாண சபையாகவே இருக்க முடியும். இதனை பிறிதொரு வகையில் சொல்வதானால், மாகாணசபை என்பது ஒரு பாத்திரம் - அதனைக் கொண்டு எதனை சமைக்கலாம் என்பதுதான் தீர்வு முயற்சிகள். சாதாரண சோறும் சமைக்கலாம் - பிரியாணியும் சமைக்கலாம். ஆனால் எதை சமைப்பதாயினும் பானைக்குள்தான் சமைக்க வேண்டும் என்னும் தெளிவு அவசியம்.
விடுதலைப் புலிகளுக்கு பின்னரான புதிய சூழலை, முதலில் தமிழ் தேசிய சக்திகள் துல்லியமாக மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் அத்தகையதொரு மதிப்பீட்டை ஏற்படுத்துவதில் அல்லது அத்தகைதொரு ஆரோக்கியமான உரையாடல் சூழலை ஏற்படுத்துவதில் தமிழ் சூழலில் தொடர்ந்தும் ஒரு வெற்றிடமே காணப்படுகின்றது. கடந்த அறுபது வருட கால அரசியல் முன்னெடுப்புக்களை எடுத்து நோக்குவோமானால், ஈழத் தமிழர்களின் அரசியல் என்பது - அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான அரசியலாகவே இருந்தது. அதுவே மூன்று தசாப்தகால மென்முறை தழுவிய போராட்டம் என்றும், பிந்தைய மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டம் என்றும் குறிப்பிடப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளின் அரசியல் நந்திக் கடலில் முற்றுப் பெற்றதற்கு பின்னரான நிலைமைகளில், ஈழத் தமிழர் அரசியல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்வதற்கான ஒரு தேவையை வெளிப்படுத்தி நிற்கிறது. இந்த நிலைமையானது, ஈழத் தமிழர் அரசியல் என்பது - அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான அரசியல் என்பதிலிருந்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான அரசியல் என்னும் நிலைக்கு நகர்ந்துள்ளது. த.தே.கூட்டமைப்பு மாகாணசபையில் பங்கு கொண்டிருப்பதானது அத்தகையதொரு அரசியல் மாறுநிலையின் வெளிப்பாடுதான்.
எனவே ஈழத் தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் என்பது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான அரசியலாகவே இருக்க முடியும். அத்தகையதொரு அரசியலுக்குத்தான் கூட்டமைப்பினர் அடிக்கடி கூறிவரும் சர்வதேசமும் உதவும். அத்தகையதொரு அரசியலுக்குத்தான் சிங்கள மக்கள் மத்தியிலிருந்தும் பாரிய எதிர்ப்புக்கள் எழும்பாது. அத்தகையதொரு அரசியலுடன்தான் அரசுக்கும் முகம் கொடுக்க முடியும். எனவே விடுதலைப்புலிகள் காலத்தில் இயங்கிய, தமிழ் தேசியக் கூட்டமைப்பை இப்போதும் விரும்புபவர்கள் - முதலில் பிராந்திய, சர்வதேச அரசியல் நிலைமைகளை நோக்கி தங்களது பார்வையை திருப்ப வேண்டியது அவசியமாகும். அது ஒன்றும் கடினமான விடயமல்ல. அதற்கு முதலில் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் - குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு, ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் உண்மையிலேயே அக்கறை இருக்க வேண்டும். அடைந்தால் மகாதேவி அல்லது மரண தேவி என்று சிந்திப்பவர்களால் ஒரு போதுமே ஈழத் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய முடியாது. அவ்வாறானவர்கள் இரண்டரை மணித்தியாலங்களில் முடிவடைந்துவிடும் கோடம்பாக்க தமிழ் சினிமாவுக்கு வேண்டுமானால், கதாநாயகர்களாக இருந்துவிட்டுப் போகலாம். ஆனால் ஒரு மக்கள் கூட்டத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசியல் முன்னெடுப்புகளுக்கு அவர்கள் ஒரு போதுமே தலைவர்களாக இருக்க முடியாது. அவ்வாறனவர்கள் எவரேனும் கூட்டமைப்புக்குள் இருப்பினும், அவர்களுக்கும் இது பொருந்தும்.
நன்றி - பொங்குதமிழ்
0 கருத்துரைகள் :
Post a Comment