உணவுக்காகவும் நிவாரணத்திற்காகவும் பாலியல் உறவு; தடுப்பு வதைமுகாம் கொடுமைகள்

வன்னிக் கொடும் போரில் இருந்து தப்பி வந்த பின்னர் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண்கள் சிறிலங்காப் படையினரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

ஒருவேளை உணவுக்காகக் கூட படையினருடன் உறவு கொள்ளும் நிலைக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டனர் என்று கூறுகிறார் ஒரு பிரிட்டிஷ் மருத்துவப் பணியாளர்.
வாணி குமார் என்ற இந்த மருத்துவப் பணியாளர் நான்கு மாதங்களாக இந்தத் தடுப்பு முகாமில் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
தமிழ் கைதிகள் சுட்டெரிக்கும் சூரிய வெய்யிலின் கீழ் முழங்காலில் மணிக் கணக்காக நிற்க வைக்கப்படுகி்ன்றனர்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் படையினரால் கொண்டு செல்லப்பட்டவர்களை - பின்னர் ஒருபோதுமே அவர்களது குடும்பங்களால் பார்க்க முடிந்ததில்லை என்றும் விபரிக்கிறார் வாணி.

வாணி கடந்த செப்டெம்பர் மாதமே விடுவிக்கப்பட்டார்; ஆனால், முகாம்களில் நடந்த கொடுமைகள் பற்றிய முழு விபரங்களையும் வெளியிடுவதற்கு அவர் இவ்வளவு காலமாகக் காத்திருந்தார்.

ஏனெனில், தான் வெளியிடும் தகவல்களால் ஆத்திரம் அடையும் படையினர் முகாமில் தன்னுடன் இருந்த தனது உறவினர்களையும் நண்பர்களையும் பழிவாங்கிவிடுவார்களே என்ற பயமே அதற்குக் காரணம்.

அனைத்துலக அழுத்தங்களைத் தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கம் இந்த மாதத் தொடக்கத்தில் முகாம்களைத் திறந்து விட்டதனால் வாணியின் உறவினர்களும் நண்பர்களும் இப்போது விடுவிக்கப்பட்டு விட்டனர்.

முகாம்களில் உடலியல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் சபை அமைப்புக்களின் அறிக்கைகள் தமக்குக் கிடைத்துள்ளன என்பதை சிறிலங்கா அரசு உறுதிப்படுத்தி உள்ளது.

ஆனால், அத்தகைய குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதற்கான வழிகள் ஏதும் இல்லை என்று அரசு தொடர்ந்து கூறி வருகின்றது; முகாம்களில் மக்கள் காணாமல் போனார்கள் என்பதையும் அரசு முற்றாக நிராகரிக்கிறது.

ஆனால், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலை குறித்த தகவல்கள் வெளியில் வருவதைத் தடுப்பதற்குத் தன்னால் முடிந்த அனைத்தையும் கொழும்பு செய்கிறது என ஐ.நா. பேச்சாளர் குற்றஞ்சாட்டுகின்றார்.

தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தவறாக நடத்தப்பட்டார்கள் என்பதை சிறிலங்கா அரசு தொடர்ந்து, உறுதியாக மறுத்து வருகின்றது.

ஆனால் - கொழும்பு அரசைத் திரும்பத் திரும்ப விமர்சித்து வரும் மனித உரிமை அமைப்புக்களுக்கு வாணியின் குற்றச்சாட்டு புதிய ஊக்கத்தைத் தரும்.

“அந்தத் தடுப்பு முகாம்கள் கொடுமையானவை; அங்கு மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதற்குக்கூட அனுமதி இல்லை.

முட்கம்பி வேலிக்கு வெளியே செல்ல முடியாது; அவர்கள் வெளி உலகத்தில் இருந்து முற்றாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

படையினரால் கொண்டு செல்லப்பட்டவர்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி அந்த மக்கள் யாருக்கும் சொல்ல முடியாதிருந்தது.

வெளியில் யாரும் அது பற்றி அறிந்து கொள்வதை அரசு விரும்பவில்லை.

பாலியல் துன்புறுத்தல்கள் அங்கு சாதாரணமானவை; அதனை நான் நேரடியாகவே பார்த்துள்ளேன்.

படை ஆட்கள் பெண் பிள்ளைகளின் மீது கைகளைப் போடுவார்கள்; அடுத்தவர்கள் முன்னிலையிலேயே அவர்கள் இதைச் செய்வார்கள். அது மாதிரியான சிலவற்றை நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன்.

தமிழ்ப் பெண் பிள்ளைகள் பொதுவாகவே பாலியல் முறைகேடுகள் பற்றிப் பேச விரும்புவதில்லை. அப்படி அவர்கள் ஏதாவது பேசினால் முகாம்களில் அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

அதே நேரம் - நிவாரணப் பணத்திற்காகவும் உணவிற்காகவும் தம்முடன் பாலியல் உறவு கொள்ளும் நிலைக்குத் தமிழ்ப் பெண்களை சிறிலங்காப் படை அதிகாரிகள் உட்படுத்தினர்கள்; அந்த மக்கள் விரக்தியின் விளிம்பிற்குப் போய்விட்டார்கள். அவர்கள் எல்லாவற்றிலுமே நம்பிக்கையிழந்து போய் இருக்கிறார்கள்.

தாம் நடத்தப்படும் விதம் குறித்து யாராவது முறையிட்டால் அவர்கள் படையினரால் தனிமைப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள்.

ஒரு தடவை - ஒரு வயதான நபரை படை அதிகாரி ஒருவர் உதைந்து தள்ளியதை நான் நேரில் பார்த்தேன். அவர்களுக்கு இடையில் என்ன வாக்குவதாம் நிகழ்ந்தது என்பது எனக்குத் தெரியாது; ஆனால் அந்த மூத்தவரை படை அதிகாரி பின்னால் இருந்து உதைத்தான்.

அதே பகுதியில் சுட்டெரிக்கும் சூரியனின் கீழே மக்கள் மண்டியிட்டு நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள்; தமது உணவுக்காக படை அதிகாரிகளுடன் வாக்குவாதப்பட்டதே அவர்கள் செய்த குற்றம்.

சில சமயங்களில் மணிக்கணக்காகக் கூட அவர்கள் இவ்வாறு நிறுத்தப்பட்டார்கள்” என்று நிலைமையை விபரிக்கிறார் வாணி.

சில சமயங்களில் "வெள்ளை வான்"கள் முகாமிற்குள் தோன்றும். அதில் ஆட்களை அவர்கள் பிடித்துச் செல்வார்கள். "வெள்ளை வான்" என்பது சிறிலங்காவில் ஒரு பயங்கரத்தின் குறியீடு.

கொலைகாரக் கும்பல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பங்களுடன் அவற்றுக்குத் தொடர்புகள் உண்டு.

“விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருந்தால் கூறுமாறு படையினர் கேட்பார்கள்; அப்படியானவர்களின் பெயர்களைக் குறித்துக் கொள்வார்கள்; அதன் பின்னர் - "வெள்ளை வான்" வந்து குறிப்பிட்ட நபர்களைக் கொண்டு சென்றுவிடும்.

அதன் பின்னர் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாது. இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட தமது குடும்ப உறுப்பினர்கள் ஏராளமானோரை மக்கள் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்” என வாணி கூறுகிறார்.

“முதல் இரண்டு மூன்று நாட்கள் முகாமி்ல் நான் தனியாக இருந்தேன்; இப்போது நினைத்தாலும் பீதியாக இருக்கிறது. அந்த முகாமை வந்தடைந்ததும்,என் பைகளைக் கீழே எறிந்துவிட்டு நான் கதறி அழுதேன். அந்த உணர்வுகள் என்றும் என்னை விட்டுப் போகாது.

முகாமில் இருந்த நாட்களில் எனக்கு என்ன நடக்கப் போகிறது என நினைத்து நான் பயந்ததை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கவே நான் தயாராயில்லை.

முதல் சில நாட்கள் - இது கனவா அல்லது உண்மையிலேயே நடக்கிறதா என்று கூட நினைத்துக் கொண்டேன். எனது முகாம் வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று நான் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை” என்கிறார் வாணி.

கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பிப் பிழைக்க மெல்லிய நெகிழிக் கூரைகளின் கீழ் லட்சக்கணக்கான மக்கள் நெரிசல்பட்டுக் கிடந்தனர்.

கழிவறைகளிலும் தண்ணீர் வசதி தேவைக்கு ஏற்ற அளவில் இருக்கவில்லை; உணவும் குடிதண்ணீரும் கூட மிகக் குறைவாகவே வழங்கப்பட்டன.

“திறந்த வெளியில் மற்றவர்களின் முன்பாகவே தான் குளிக்க வேண்டும்; எனக்கு அது பெரும் சங்கடமாக இருந்தது.

எனது கூடாரம் படையினரின் ஒரு நிலைக்கு அருகே இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் நான் குளிக்கும் போது படையினர் பார்த்துக் கொண்டிருப்பார்கள்; யார் குளித்தாலும் அப்படித்தான்.

அதனால் நான் அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து குளித்து விடுவேன்; ஏனென்றால் அப்போது இருட்டாக இருக்கும். நாம் குளிப்பது அடுத்தவருக்குத் தெரியாது” என வாணி தனது வேதனையைக் கொட்டினார்.

“அந்த முகாம்களுக்குள் மனிதர்கள் வாழவே முடியாது. அதற்கான அடிப்படைகள் எதுவுமே அங்கு இல்லை. அடிப்படைத் தேவைகளான உணவுக்கும் தண்ணீருக்கும் எப்போதுமே பிரச்சினைதான்.

பெரும்பாலான நேரங்களில் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டும்.

கழிப்பிடங்களோ மிகப் பயங்கரமானவை; அங்கு கூட போதிய தண்ணீர் கிடையாது; அவற்றைத் துப்பரவு செய்வது முடியாத காரியம். அதனால் நோய்க் கிருமிகள் எங்கும் பரவின.

ஒரு கட்டத்தில் - இரண்டு மூன்று நாட்கள் பெய்த மழையில் மலக் கழிவுகள் அனைத்தும் தண்ணீரில் கலந்து கூடாரங்களுக்குள் புகுந்துவிட்டன

முழங்கால் அளவுக்கு இருந்த அந்த மலக் கழிவுத் தண்ணீரில் தான் அனைவரும் நடந்து செல்லவேண்டும்” என்கிறார் அவர்.

முகாம்களில் நடந்த முறைகேடுகள் பாலியல் கொடுமைகள் மற்றும் தண்டனைகள் குறித்துத் தான் அறிந்திருப்பதாகக் கூறும் சிறிலங்கா அரசு, இருப்பினும் அவை பெருமளவில் நிகழவில்லை என்று மறுக்கிறது.

அந்த தடுப்பு முகாம்களுக்கு உள்ளே “பெருமளவு பாலியல் உறவுகள் நடந்துள்ளன” என்கிறார் பேரிடர் முகாமை மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ராஜீவ விஜேசிங்க [ Rajiva Wijesinha, the permanent secretary to the Ministry of Disaster Management and Human Rights ].

ஆனால், பெரும்பாலான பாலியல் கொடுகைள் முகாம்களுக்குள் இருந்தவர்களாலேயே அடுத்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“அங்கே எதுவும் நடக்கவில்லை என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியாது; ஏனெனில் நான் அங்கு இல்லை. அங்கொன்று இங்கொன்றாக சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம்.

அப்படி ஏதாவது நடந்திருந்தால் அதனை அறியத் தாருங்கள், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என அவர் மேலும் கூறினார்.

ஐ.நா. அமைப்பு ஒன்றிடம் இருந்த கிடைத்த அறிக்கை மூலமாக தான் ஒரு சம்பவத்தை அறிந்ததாக அவர் கூறினார்.

“படை ஆள் ஒருவர் கூடாரம் ஒன்றிற்குள் இரவு 11 மணிக்குச் சென்று அதிகாலை 3 மணக்குத்தான் திரும்பி வந்தார் என்று எமக்கு ஒரு அறிக்கை கிடைத்துள்ளது.

அது இரு தரப்பினரும் மகிழ்ச்சிக்காக உறவு கொண்ட சம்பவமாக இருக்கலாம்; அல்லது, ஏதாவது தேவை கருதிய ஒரு பாலியல் உறவாகக் கூட இருக்கலாம்; அதுவும் இல்லாவிட்டால் - பண்டைய கிரேக்கத் தத்துவங்கள் பற்றி அவர்கள் இரவு முழுவதும் விவாதித்தும் இருக்கலாம். எங்களுக்குத் தெரியாது” என்று எகத்தாளமான பதில் வருகிறது அவரிடம் இருந்து.

நன்றி: தி ஒப்சேர்வர் [ The Observer ]
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment