இலங்கை அரசாரங்கத்தின் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில், சரணடையச் சென்ற புலிகளின் மூத்த தலைவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இப்போது பூதாகாரமாகி உள்ளது.
இதன் ஆரம்பத்தில் இத்தகைய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் கசிந்தபோது வெளியான சமாச்சாரங்களைவிட, ஜனாதிபதித் தேர்தல் களச்சமர் தொடங்கிய பின்னர் அதாவது இப்போது அந்த நிகழ்வு குறித்த சர்ச்சைகள் மிகச் சூடுபிடித்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் அது தரக்கூடிய பலன்கள், பிரதிபலன்கள் குறித்து, போட்டியில் ஈடுபட்டிருக்கும் பிரதான தரப்புக்கள் இரண்டும் உசார் அடைந்துள்ளன. காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். தமிழ்மக்களின் வாக்கு வங்கியைத் தம தாக்கிக் கொள்வதில் இருதரப்புக்களுக்கும் உள்ள சாதகபாதக நிலைகளே.
அதற்கும் மேலாக, இந்த விவகாரம் சர்வதேச ரீதியில் பல பாதிப்புகளைக் கொண்டுவரும் என்பதால் இப்போது அந்த மட்டத்திலும் சர்ச்சை தோன்றியுள்ளது.
உண்மைக்குச் சாவில்லை. காலம் பல கழிந்தாலும் அது தன்னை ஏதோ ஒரு வகையில், ஒரு வடிவில் வெளிப்படுத்திக் கொள்ளும்.
ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான முன்னாள் இராணுவத் தளபதி வெளிப்படுத்திய தகவல்கள், ஐக்கிய நாடுகள் சபை இது விடயத்தில் விளக்கம் அளிக்குமாறு இலங்கை ஜனாதிபதி யிடம் கேட்டிருப்பது, இலங்கைப் படையினர் வெளிநாடு சென்றால் அங்கு வைத்துக் கைது செய்யப்படும் ஆபத்து உண்டு என்று அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் எடுத்துக் காட்டியிருக்கும் அம்சம், வன்னியில் நடைபெற்ற இறுதிப் போர் குறித்து, ஐக்கிய நாடுகள் சபையினர் மூத்த அதிகாரியான விஜய் நம்பியாரிடம் விளக்கம் கேட்காமல் இருப்பது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் கேள்வி என்பன இந்த விவகாரத்தை மேலும் பெருப்பித்துள்ளன.
போர் வரன் முறைகளின் பிரகாரம், தன் உயிரைக் காப்பாற்றும் முழு நோக்கத்துடன் சரண் அடையும் எந்தவொரு போர் வீரனையும் கொல் லக்கூடாது என்பது பொது விதி.இன்று நேற்றல்ல, அரசர்களின் ஆட்சி நிலவிய சரித்திர காலத்தில் இருந்தே இந்த விதி நடைமுறையில் இருந்தது. சரண் அடைய வருவோரைச் சிறைப்பிடிப்பது தான் காலம் காலமாக உலகின் கிழக்கிலும்சரி மேற்கிலும்சரி கடைப்பிடிக்கப்பட்ட, கடைப்பிடிக்கப்படும் மனித தர்மம்; மனுநீதி. இதனை உலகின் பன்மொழி இலக்கியங்களிலும் மிகப் பரவலாகக் காணலாம்.
நவீன உலகிலும் இன்றைய உலகிலும் இந்த மனுநீதி கடைப்பிடிக்கப்பட்டே வருகிறது. சர்வ தேச சாசனங்களிலும் அது மிகத் துலக்கமாக, ஊன்றி எழுதப்பட்டிருக்கிறது.
வன்னி இறுதிப் போரின் இறுதி வேளை விவகாரம், இந்த அளவுக்குப் பூதாகாரமாகமாட்டாது என்று அரசாங்கம் சிலவேளை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இது என்றோ ஒருநாள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெளிக்கிளம்பும் என்பதனை இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமன்றி ஏனைய பல மக்களும்பலசாராரும் எதிர்பார்த்தனர்.
இப்போதைய முயற்சி அல்லது செயற்பாடு உண்மையை வெளிக்கொணர்வதில் வேண்டிய பலனைத் தராவிட்டாலும் உரிய நேரத்தில் அது வெளிவரும். இது தர்மத்தின் நீதி என்பதை இப்போது உள்வாங்கப் பின்நிற்போர் முரண்படுவோர் அல்லது மறைக்க முயல்வோர் உணர்வர்.
உண்மை என்றும் நிரந்தரமாக மறைந்து போவதில்லை.
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 கருத்துரைகள் :
Post a Comment